காலச்சுவடு வெளியீடான பெண்ணியப் பார்வையில் விவிலியம் (டிசம்பர் 2006, ஆசிரியர்: ஜெய சீலி), என்ற நூலுக்கான விமரிசனமாக இக்கட்டுரை / கடிதம் எழுதப்படுகிறது. புனித நூல்களை பன்முக வாசிப்புக்கு உட்படுத்த வேண்டும் எனும் குரல்கள் உலகெங்கிலும் கேட்க ஆரம்பித்துள்ளன. குறிப்பாக ஒடுக்கப்பட்டவர்களின் பார்வையில், பெண்ணிய, தலித்திய நோக்கில் வாசிக்கப்பட வேண்டும் என அவை வலியுறுத்துகின்றன. பன்னெடுங்காலமாக அவை ஆண்களின் பார்வையிலேயே வாசிக்கப்பட்டுள்ளன. ஆதிக்க சக்திகளின் கையில் அவை பெண்களை, தலித்துகளை ஒடுக்க, ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இயேசு கிறிஸ்துவின் போதனைகள் அதிகார மையங்களுக்கு எதிரானாதாக இருந்தது. அவை அதிகாரங்களின் மையமாகிப் போனதுதான் வரலாறு. இந்நிலையில், பெண்ணிய நோக்கில் விவிலியத்தை வாசிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் இந்த நூல், தமிழுக்கு மிக முக்கியமாகிறது. ஆசிரியர் ஜெயசீலியையும், அதனை வெளியிட்ட காலச்சுவடு பதிப்பகத்தையும் பாராட்ட வேண்டும்.

bible
ஜெயசீலி அவர்களின் "பெண் எழுச்சி இறையியல் பார்வையில் பெண்ணிய விவிலியப் பொருள்கோளியியல்", என்ற ஆய்வேடுதான் இங்கு, பெண்ணியப் பார்வையில் விவிலியம் என்ற நூலாக வெளியிடப்பட்டுள்ளது. பொருள் கோளியல் (Hermeneutics)
என்பது ஒரு பிரதிக்கு (text) பொருள் கொள்ளுதலைக் குறிக்கிறது. விவிலியத்தை பெண்ணிய நோக்கில் வாசித்து பொருள் கொள்ள வேண்டுமென நூல் பெரிதும் வலியுறுத்துகிறது. அதற்கான பல்வேறு அணுகுமுறைகளையும் விரிவாக பட்டியலிட்டு விவரிக்கிறது. பெண்களுக்கேயான தனியான விவிலியப் பொருள்கோளியல் பற்றியும் ஒரு கட்டுரை (அதிகாரம்) உள்ளது. ஜெயசீலி, இந்நூலின் நோக்கத்தின் அடிப்படையில் விவிலியத்திலிருந்து ஒரு சில உதாரணங்களையும், அதற்கான அவரது பொருளையும் முன்வைக்கிறார்.

நூலின் மீதான மிக முக்கிய விமர்சனம்: நூலின் தலைப்பு "பெண் எழுச்சி இறையியல் பார்வையில் பெண்ணிய விவிலியப் பொருள்கோளியியல்" என்றிருப்பதே சரியாகும். ஏனெனில் அதைப்பற்றித்தான் நூல் பேசுகிறது. பெண்ணியப் பார்வையில் விவிலியம் என்றிருப்பது சரியில்லை. இது வாசகர்களை ஏமாற்றுகிறது. தவறாக பொருள் கொள்ள வைக்கிறது.

தலித் பெண்ணிய விவிலிய முன்னோடிகளின் கீழ் காணிக்கையிடும் கைம்பெண் சம்பவம் (பக்கம் 75) பற்றியும், அதற்கான, அவரது பொருள் கோளியல் அடிப்படையில், பொருளையும் தருகிறார். மாற்கு நற்செய்தியில் (மாற்கு 12: 41- 44) இச்சம்பவம் குறிப்பிடப்படுகிறது. தனக்குண்டான மிகுதியான பொருளில் ஒரு சிறு பகுதியை காணிக்கையாகக் கொடுக்காமல், தனக்கிருந்த (வாழ்வுக்கென இருந்த) எல்லாவற்றைமே காணிக்கையாக்குகிறார் அக்கைம்பெண். இச்சம்பவத்திற்கு ஜெய சீலி, அப்பெண்ணின் வாழ்வைக் கொண்டே, இயேசு, "வானத்து பறவைகளைப் பாருங்கள், அவை விதைப்பதும் இல்லை, அறுப்பதுவும் இல்லை," போன்ற போதனைகளை மக்களுக்கு ஆழமாக எடுத்தியம்புகிறார், என பொருள் கொள்கிறார்.

பல்வேறு பெண்ணிய, விவிலிய பொருள் கோளியல் அணுகுமுறைகளை நூலில் கூறும் ஆசிரியர், மேற்குறிப்பிட்ட சம்பவத்திற்கு எந்த அணுகுமுறையை பின்பற்றினார்? எனக் குறிப்பிடவில்லை. பல வரலாற்று, அறிவியல் ஆய்வுமுறைகளை பின்பற்ற வேண்டும்
என வலியுறுத்தும் அவர், அவைகளை, நூலில் குறிப்பிட்டுள்ள உதாரணங்களுக்கு பின்பற்றினாரா? என்பது பற்றி எதுவும் அவர் கூறவில்லை. மேற்கண்ட சம்பவத்திற்கான அவர் கூறும் பொருள், அவரது அனுமானாகவே உள்ளது.

மேற்குறிப்பிட்ட சம்பவம் நடந்த காலம் ஆய்வாளர்களின் கணிப்புப்படி கி.பி.30 ஆம் ஆண்டு, அவரது வாழ்வின் கடைசி வாரத்தின் செவ்வாய்க் கிழமை. வெள்ளிக் கிழமையன்று அவர் சிலுவையில் அறையப்படுகிறார். அதற்கு முன்பு, அவரது அனைத்து போதனைகளும் முடிந்துவிட்டன என்பதே உண்மை (ஏறக்குறைய கி.பி. 27-ல் அவர் போதிக்க ஆரம்பித்தார்). எனில் அவர் அக்கைம்பெண்ணின் வாழ்வினால் அவர் எவ்வாறு தூண்டப்பட்டிருக்க முடியும்?

அடுத்தபடியாக ஆசிரியர் குறிப்பிடும் உதாரணம் சீரோ என்ற பிறப்பால் பெனிசீயரான கிரேக்கப் பெண் சம்பவம் (மாற்கு 7:20-30). அப்பெண் இயேசுவிடம், பிசாசு பிடித்த தன் மகளை குணமாக்கும்படி கேட்க, அவரோ "பிள்ளைகளின் அப்பத்தை நாய்களுக்கு கொடுப்பது தவறு", எனக் கூறி மறுக்கிறார். அப்பெண்ணோ, "பிள்ளைகள் சாப்பிட்டு மீதியான துணிக்கைகளை, நாய்கள் தின்னுமே", என மறு மொழி கூறுகிறார். இயேசு, பின்பு, அவளின் மகளைக் குணப்படுத்துகிறார். "யூதர்கள் தாங்கள் கடவுளால் தெரிந்து எடுக்கப்பட்டவர்கள் ஆகையால், மற்ற இனங்களை காட்டிலும் உயர்ந்தவர்கள், சிறப்பானவர்கள், என இன தன்முனைப்புக் கொண்டவர்கள். அதே சிந்தனைப்
பிண்ணனியில், இனமுற்சார்பு கொண்டு, யூதரான இயேசு அப்பெண்ணிடம் பேசுகிறார், இருப்பினும் அப்பெண் சாதுர்யமாகப் பேசி இயேசுவைப் பணிய வைக்கிறார்"', என ஜெயசீலி பொருள் கொள்கிறார். இதுவும் அவரது அனுமானாகவே உள்ளது.

இயேசுவைப் பற்றிய சிறு குறிப்பு இதனை அணுக உதவும். கிறிஸ்துவின் மக்கள் பணி (வேதாகமப்படி திருப்பணி) மூன்றாண்டுகள் மட்டுமே. அப்போதனைகள் இன்றளவும் நிலைத்துள்ளன. பேசப்படுகின்றன. விவாதிக்கப்படுகின்றன. பெரும்பாலானோரால் பின்பற்றப்படுகின்றன. கிறிஸ்துவின் போதனைகள் அதிகார மையங்களுக்கு எதிரானதாக இருந்தன. இயேசுவுக்கு இருந்த முதன்மையான
நோக்கமே, மக்களை யூத அதிகார மையங்களின் (குருமார்கள் மற்றும் பிற) பழமைவாத பிற்போக்குப் பிடியில் இருந்து மீட்டு எடுப்பதும், இறைவனின் ஆட்சியை (Kingdom of God) நிறுவுவதுமே ஆகும். இதை அன்பின் அரசு என்கிறது வேதாகமம். இதனை இறையாட்சி, விண்ணரசு என்றும் கூறுவர்.

அவர், காலம் கடந்து, இனம், மொழி கடந்து மனிதனை நேசித்தவர். அவர் போதித்த அன்பின் அரசை, ஒரு கடுகு விதைக்கு ஒப்பிடுகிறார். "அது வளர்ந்து பெரிய மரமானது (அவர் வாழ்ந்த அப்பகுதியில் கடுகு செடி பெரிய மரமாய் வளரும் இயல்புடையது). வானத்து பறவைகள் அங்கு வந்தடைந்தன", என்கிறார். இது உலகெங்கிலும் இருந்து பல்வேறு மக்களும் இறையாட்சியில் பங்கு கொள்வதை குறிக்கிறது. ஒரு பெண் கைபிடியளவு புளித்த மாவை, ஒரு மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுதும் புளிப்பேறியது. இதுவும் அத்தகையப் பொருளையே குறிக்கிறது. காந்தி, தனது அஹிம்சை தத்துவத்தை கிறிஸ்துவிடமிருந்து பெற்றதாக கூறப்படுகிறது. மார்டின் லூதர் கிங்கும் கிறிஸ்துவின் போதனைகளிலிருந்து உந்துதல் பெற்றதாகக் கூறப்படுகிறது.

இயேசு தனது போதனைகள் மேல் கொண்டிருந்த நம்பிக்கை அளப்பரியது. காலம், இனம், மொழி கடந்து தனது போதனைகள் மக்களை சென்றடைய வேண்டுமென விரும்பினார். அதற்காக தனது சீடர்களை தயார் செய்தார். அதனாலேயே, அவர் காலம் கடந்து நிற்கும் குறியீட்டு மொழியில் பேசினார். (கிறிஸ்து மொத்தம் 39 உவமைகள் அல்லது கதைகள் கூறியுள்ளார் என ஆய்வுகள் ( நான்கு நற்செய்தி நூல்களின் படி) தெரிவிக்கின்றன)). மேலும், கதைகள், மக்கள் மனதில் எளிதில் பதிந்துவிடுவதும், ஒருவரிடமிருந்து, மற்றொருவருக்கு எளிதில் பரவுவதற்கும் உகந்ததும் ஆகும். அதனாலேயே அவை காலம் கடந்து நிற்கின்றன.

அவர் பாவிகளுடனும், வரி தண்டுவோரிடமும் பழகினார். தாழ்த்தப்பட்ட சமாரியப் பெண்ணிடம் தண்ணீர் வாங்கி அருந்தினார். சமாரியர்களுடன் தங்கியிருந்தார். (அது மற்ற யூதர்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்று, சமாரியர் பயன்படுத்தும் பாத்திரத்தைக்கூட யூதர்கள் பயன்படுத்தமாட்டார்கள்). அவரின் சீடர்கள், செம்படவர்கள் மற்றும் சாதாரண மக்கள். 'கிறிஸ்து மக்களினிடையே, மக்களுக்காக வாழ்ந்தார்' என்றால் மிகையில்லை. பெரும் மக்கள் கூட்டம் அவரைப் பின் தொடர்ந்தது. சில பெண்களும் அவரின் சீடர்கள்
என்பது ஆச்சரியத்திற்கும், ஆய்வுக்கும் உள்ள விபரமாகும்.

இத்தகைய இயேசு, அப்பெண்ணிடம் அவ்வாறு பேசினார், என்பதே அதிர்ச்சியான ஒன்று. எனது கருத்துப்படி இயேசு அவ்வாறு பேசியிருக்கமாட்டார் என்பதே. இங்குதான் ஜெய சீலி கூறும் பொருள் கோளியல் அணுகுமுறைகளை பின்பற்ற வேண்டும். அவரது நூலின் அவசியம் அல்லது முக்கியத்துவம் உணரப்படுகிறது. பரிசுத்த வேதாகமத்தில், புதிய ஏற்பாட்டின் கீழ் புனித மத்தேயு, புனித மாற்கு, புனித லூக்கா மற்றும் புனித யோவான் ஆகியோரின் நற்செய்தி நூல்கள் (Gospels) உள்ளன. இவை கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் அவரது போதனைகளை கூறுகின்றன. இந்த நூல்கள் பெரும்பாலும் யூதர்களாலேயே எழுதப்பட்டன. மேற்குறிப்பிட்ட பகுதியின் ஆசிரியரும் ஒரு யூதரே.


இவர்கள் இனச்சார்புடன், இன தன்முனைப்புடன் செயல்பட்டிருக்கவும் கூடும். அவை அவர்களது எழுத்தில் வெளிப்பட்டிருக்கவும் கூடும். அவரது போதனைகளை மாற்றியும் அவர்கள் பொருள் கொள்கிறார்கள், எழுதுகிறார்கள். மொழி பெயர்ப்பு, திருத்தங்கள் என பல மாற்றங்களுக்குப் பிறகே நம்மை அவை வந்தடைகின்றன. உ.ம்: அவரது போதனைகளை பரப்பும் பவுல், பெண்களை சமத்துவத்துடன் நடத்திய இயேசுவின் போதனைகளை மாற்றி, "ஆணுக்கு கட்டுப்பட்டவள் பெண்", என்கிறார் (1 கொரி 11:9). மற்றொரு உதாரணம்: தலித் பெண்ணிய விவிலிய முன்னோடிகளின் கீழ் ஆசிரியர் குறிப்பிடும் மகதலா மரியா (பக்கம் 73), விபசாரத்தில் பிடிபட்ட பெண் ஆவார். இச்சம்பவம் யோவான் நற்செய்தியில் (யோவான் 7:53 - 8: 11) உள்ளது. ஆனால் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, அப்படி ஒரு சம்பவமே மூலப் பிரதியில் (Original text) இல்லை. எனில் இது பெண்ணான மகதலா மரியா மேல் கற்பிக்கப்பட்ட அவதூறு.

ஆகவே, இயேசுவை யூத இனமுனைப்புக் கொண்டவர் என்பது சந்தேகத்துக்குரிய பொருள் கொள்ளுதல் என எண்ண இடமுண்டு. எனினும் இது ஆய்வுக்குரிய ஒன்றாகும் என்பதில் அய்யமில்லை.

மிகவும் academic ஆக உள்ள மொழி பெரிதும் சலிப்பையே தருகிறது. நூலின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள நோக்கீட்டு அட்டவணை (references) ஆய்வாளர்களுக்கும், பொதுவான ஆர்வலர்களுக்கும் பெரிதும் பயன்படக்கூடியது. பெண்ணிய நோக்கில் விவிலியத்தை வாசிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது இந்த நூல். அதற்கான சாதகமான சூழல் இங்குள்ளதா? என்பது நம்முன் உள்ள பெரிய கேள்வி. எனினும், அதற்கான ஆரம்ப முயற்சி எடுத்த காலச்சுவடையும், ஜெயசீலியையும் மீண்டும் ஒருமுறை பாராட்டுவோம்.

Pin It