கலைஞர் வழி வந்த திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தளபதி அவர்கள் தமிழக முதலமைசராகப் பொறுப்பேற்றவுடன் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை என்றப் பெயரை “சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை” எனப் பெயர் மாற்றம் செய்தார். இதன் மூலம் முதலமைச்சர் அவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் பாதுகாப்பின் மீது அக்கரை கொண்டு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.

stalin 323முதலமைச்சராகப் பொறுப்பேற்ற அன்றே அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமலே பயணிக்கிலாம் என்று கோப்பில் கையொப்பமிட்டார். பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் கடந்த ஆட்சியில் 18 வயது பூர்த்தியடைந்த பெண்களுக்கு முதிர்வுத் தொகை வழங்கப்படாமல் இருந்தது. முதிர்வுத் தொகை வழங்கப்பட வேண்டிய பெண்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டு, 73 ஆயிரம் பெண்களுக்கு முதிர்வுத் தொகை வழங்கப்படாமல் இருந்தது. அடையாளம் கண்டு மாநில அளவில் மாவட்ட அளவில் பெற்றோர்களுக்கு 28 ஆயிரத்து 950 ருபாய், பெண்களுக்கு தோராயமாக 60 கோடி ரூயாய் முதிர்வுத் தொகையாக வழங்கப் பட்டுள்ளது.

 மக்கள் தொகையில் சரி பாதி உள்ள பெண்கள் பாதுகாப்பற்றச் சூழலில் உள்ளனர். உதாரணத்திற்கு, 2013 ஆம் ஆண்டு 419 ஆக இருந்த பாலியல் குற்றங்கள், 2014-ல் 1,055 ஆக உயர்ந்துள்ளது. இது 2015-ல் 1,546 ஆகவும் 2016-ல் 1,585 ஆகவும் 2018-ல் 2,052 ஆகவும் 2019-ல் 2,410 ஆகவும் அதிகரித்து வருவது ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது. வருடத்திற்கு வருடம் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறன.

விஷாகா குழுவின் முன்னோடி என்றால் அது பன்வாரி தேவி ஆவார். பன்வாரி தேவி ராஜஸ்தான் மாநிலத்தில், ஜெய்பூரிலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பத்தேரி என்ற கிராமத்தில் வசித்துவந்தார். இவர் கும்ஹார் (குயவர் - potter) என்ற சாதியை சேர்ந்தவர். இவர் ஒரு சமூக சேவகி. அதனால் ராஜஸ்தான் மாநில அரசால் பெண்கள் மேம்பாட்டுத் திட்டத்தில் பணியமர்த்தப்பட்டார்.

1992 ஆம் வருடம் குஜ்ஜார் சாதியில் (Gujjar) 9 வயது குழந்தைக்குத் திருமணம் செய்து வைக்க முயற்சி நடப்பதை அறிந்த பன்வாரி அக்கிராமத்திற்குச் சென்று அவர்களுக்குத் தக்க ஆலோசனை கூறினார். ஆனால் அவர்கள் கேட்பதாக இல்லை.

உயர்சாதியினரின் ஆதிக்கச் சக்தியை அறிந்த பன்வாரி “9 வயது பெண்ணுக்கு திருமணம் செய்கிறார்கள், அதைத் தடுப்பது என் பணி என போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த போலீசிடம், கிராமத்தினர் இது சாதாரண விழா, திருமணம் ஏதுமில்லை என நாடகம் நடத்தி அனுப்பிவிட்டனர்.

22, செப்டம்பர், 1992 அன்று அக்குழந்தையின் குடும்பத்தைச் சேர்ந்த 5 ஆண்கள் பன்வாரியை அடித்ததுடன், பன்வாரியை அவர் கணவர் முன்னிலையில் பாலியில் பலாத்காரம் செய்தனர். அப்போது அவருக்கு வயது 26. பன்வாரியும், அவரது கணவரும் இந்தப் பிரச்சினையை அப்படியே விட்டுவிடக் கூடாது என முடிவு செய்து நீதிமன்றத்தை அணுகினர். இவ்வழக்கு நடந்த 1995 வருடம் வரை 5 முறை நீதிபதிகளை மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும், குற்றவாளிகளைப் பின்வரும் காரணங்களை மேற்கோள் காட்டி நீதிபதி விடுவித்தார் :

ஒரு கிராமத் தலைவர் கற்பழிக்க முடியாது பல்வேறு  சாதியைச் சேர்ந்த ஆண்கள் கும்பலாகக் கற்பழிப்பில் பங்கேற்க முடியாது.60-70 வயது முதியவர்கள் பாலியல் பலாத்காரம் செய்ய முடியாது.உறவினரின் முன்னால் ஒரு மனிதன் கற்பழிப்பதில்லை; போரி வழக்கில் (Bhori’s case) குற்றம் சாட்டப்பட்டவர்களில் இரண்டு பேர் ஒரே குடும்பத்தினர் - மாமா மற்றும் மருமகன். உயர் ஜாதி உறுப்பினர், தூய்மைக்கான காரணங்கள் காரணமாக குறைந்த சாதி பெண்ணை கற்பழிக்க முடியாது.

அதன்பின், ஜெய்ப்பூர் மற்றும் டில்லியைச் சார்ந்த அரசு சாரா அமைப்புகளின் சார்பில் சமூக ஆர்வலர்கள் மற்றும் மகளிர் குழுக்கள் ”விஷாகா” கூட்டுத் தளத்தின் கீழ் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொது நலன் மனு தாக்கல் செய்தனர். பணியிடங்களில் பெண்களைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றும், பெண்களின் பாதுகாப்புக்கு முதலாளிகள் பொறுப்பேற்க வேண்டும், குறிப்பாகப் பெண்களின் பாதுகாப்புக் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.

விஷாகா மற்றும் பலர் Vs ராஜஸ்தான் மாநிலம் வழக்கில் 13, ஆகஸ்ட்,1997 அன்று உச்சநீதிமன்றத் தீர்ப்பில் சில வழிமுறைகளை வகுத்தது. (AIR 1997 SUPREME COURT 3011)

உச்சநீதிமன்றம் வகுத்துள்ள விதிகள்...

  1. இந்த விஷாகா கமிட்டியின் தலைவராக பெண் அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும்.
  2. கமிட்டியில் மொத்த உறுப்பினர்களில், 50 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
  3. ஓரு உறுப்பினர் நிறுவன ஊழியராக இல்லாமல், தன்னார்வுத் தொண்டு அமைப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
  4. இந்தக் கமிட்டி ஆண்டுதோறும் அதன் செயல்பாடுகளைத் அறிக்கையாக தயாரித்து அரசிடம் வழங்க வேண்டும்.

பெண் ஊழியரைத் தொட்டுப் பேசுவது, அவரைப் பாலியலுக்கு அழைப்பது, அதிகாரத்தை வைத்து மிரட்டுவது, பாலியல் ரீதியான வார்த்தைகளைப் பேசுவது, ஆபாசமானப் படங்களைக் காட்டுவது உள்ளிட்டவை பாலியல் தொல்லைகளாக வரையறுக்கப் பட்டுள்ளன.

உச்ச நீதிமன்ற உத்தரவை மேற்கொண்டு பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் 2013 (the Sexual Harassment of Women at Workplace (Prevention, Prohibition and Redressal) Act, 2013) இயற்றப்பட்டு அதன் படி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரியும் பெண்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சினைகள் பற்றி புகார் தெரிவிக்க விஷாகா கமிட்டி அமைக்கப்பட வேண்டும். பத்து ஊழியர்களுக்கு மேல் பணி புரியும் அனைத்து நிறுவனங்களிலும், அலுவலகங்களிலும் விசாகா கமிட்டி அமைக்கப்படுவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

அரசுத் துறை, தனியார்த் துறை மட்டுமில்லாமல், பாதிக்கப்படும் தினக் கூலிப் பெண் பணியாளர்களும் புகார் தருவதற்கு வசதியாக, ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலும், ‘விஷாகா’ குழு அமைக்க வேண்டும். ஆனால் இதுவரை அமைக்கப்படவில்லை.

பெண்களின் பாதுகாப்பில் அக்கரை காட்டும் மாண்புமிகு முதல்வர் அவர்கள், பெண்களுக்குப் பாதுகாப்பான சூழல் ஏற்படுத்திக் கொடுக்க விரைந்து, போர்கால அடிப்படையில் விஷாக கமிட்டி அமைத்துப் பெண்களின் அரணாக இருக்க வேண்டும்.

- சேலம் அப்பாவு புவனேஸ்வரி