தொடர்புடைய படைப்புகள்

அக்டோபர் 10 'ஞானேஷ்குமார் பதவி விலகு' போராட்டத்தை ஒடுக்குவதற்கு ஆக தொடர் வண்டிகள், மெட்ரோ தொடர் வண்டிகள் மற்றும் இணையச் சேவைகளை ரத்து செய்தும், காவிக் குண்டர்களை ஏவி தாக்கியும், வானூர்தியில் வந்த போராட்டத் தலைவர்களைக் கைது செய்தும், பெண் போராளிகளை வன்முறைக்கு ஆள் ஆக்கியும் மற்றும் சிபிஐ (எம்) நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாசை நிலைகுலையும் வண்ணம் கடுமையாகத் தாக்கியும் சனநாயகத்தின் குரல்வளையை நெரித்து மக்களாட்சியின் மாண்பை பாசக அரசு சிதைத்து உள்ளது! 30,000-க்கும் மேலான துணை இராணுவத்தினர் மற்றும் காவல் துறையினரைக் கொண்டு இந்த அட்டூழியங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன! இது ஓர் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலையே!

இப் போராட்டத்தை ஆதரித்து தமிழ்நாட்டில் சென்னையில் ஆங்காங்கே போராட்டம் செய்த போராளிகளைத் தாக்கியும், கைது செய்தும் போராட்டத்தை ஒடுக்கி இருக்கிறது தமிழ்நாடு காவல்துறை; திருச்சியில் தொடர்வண்டி நிலையத்துக்கு முன்பாக போராடிய இடதுசாரி இளைஞர்களும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்; கோவை பியூசிஎல் 13-10-2026 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி காவல் நிலையத்தில் விண்ணப்பம் கொடுத்து இருந்தது; ஆனால் காவல்துறை போக்குக் காட்டி கடைசி நேரத்தில் மறுத்து விட்டது.

இது மற்றும் மேற்கண்ட அனைத்துமே அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 19(1)(a), 19(1)(b), 21 நல்கும் கருத்துச் சுதந்திரம், அற வழியில் கூடி எதிர்ப்பைத் தெரிவித்தல் மற்றும் வாழுரிமைச் சுதந்திரம் ஆகியவற்றுக்கு முற்றிலும் எதிரானதாகும். இதை வலியுறுத்தி "Mazdoor Kisan Shakti Sangathan (MKSS) Vs Union of India (2018)" என்ற வழக்கில் "அற வழியில் போராடுவது மக்களாட்சியின் அடி கட்டுமானத்தின் ஒரு பகுதி" என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. எனவே மேற்கண்ட சனநாயக உரிமைப் பறிப்புகள் அனைத்தையும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்கள் சிவில் உரிமைக் கழகம் (பியூசிஎல்) வன்மையாகக் கண்டிக்கிறது!

தேர்தல் ஆணையத்தின் மற்ற இரு ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்துவும், விவேக் ஜோஷியும் கடந்த பத்து மாதங்களில் 14 முறை தங்களின் எதிர்ப்புக் கருத்துகளைப் பதிவு செய்து இருக்கிறார்கள். இது அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 324 கூறும் "ஒருமித்த கருத்து அல்லது பெரும்பான்மை கருத்துப்படியே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்" என்பதற்கு எதிரானதாகும். இதை வலியுறுத்தி "TN.Seshan Vs Union of India (1995)" என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆனால் "தேர்தல் தலைமை ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர் சட்டம் 2023 பிரிவு 16"-ன் படி எந்த ஒரு சட்டமும் இவர்களின் நடவடிக்கைகள் மற்றும் இவர்களுக்கு முன் இருந்தவர்களின் நடவடிக்கைகளைக் கேள்வி கேட்க முடியாது எனக் கூறி இவர்களுக்குச் சட்டங்கள் தீண்ட முடியாத "பாதுகாப்பு அரணை" வழங்கி இருக்கிறது!

உச்சநீதிமன்றம் "ஜந்தர் மந்தர் பகுதியை போராட்ட களப் பகுதி என்பதிலிருந்து நீக்கி பரந்து விரிந்த பகுதிகளை போராட்ட இடங்களாக அறிவிக்க வேண்டும்" என்று கூறியவுடன், இதற்காகவே காத்திருந்த தில்லி காவல்துறை ஜந்தர் மந்தரை போராட்டக் களப் பட்டியலில் இருந்து உடனே நீக்கி அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது! முப்பது ஆயிரத்துக்கும் மேலான துணை இராணுவம் மற்றும் காவல்துறையினர் குறித்து உச்ச நீதிமன்றம் "ஈயை அடிப்பதற்கு சுத்தியலா?" என்று கேள்வி எழுப்பியது.

ஆனால் மாற்றுக் கருத்துகள் மற்றும் எதிர்ப்புகளைப் பதிவு செய்யும் "மாற்றுக் கருத்துகளின் மாண்பாகத் திகழ்ந்த ஜந்தர் மந்தரைப்" பறித்து மக்களின் குரல்வளையை நீதித் துறையும் காவல்துறையும் ஒருங்கிணைந்து நசுக்கி உள்ளன! "மக்களின் சனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் இடமாக உச்ச நீதிமன்றம் இல்லை" என்று உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் கூறியிருப்பது இங்கு நினைவுகூரத்தக்கது!

12-10-2026 அன்று உச்சநீதிமன்றத்தை நோக்கிய பேரணி போராட்டம் மக்கள் கடலாகவே காட்சி அளித்தது. மக்கள் அணிதிரள் போராட்டங்கள் வாயிலாகவே வாக்குத் திருடர்களையும் அவர்களின் சூத்திரதாரிகளையும் பதவியிறக்கம் செய்ய முடியும்!

போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பது, கைது மற்றும் தாக்குதல் வாயிலாக போராட்டங்களை ஒடுக்குவது முதலிய அறத்துக்கு எதிரான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்கள் சிவில் உரிமை கழகம் தமிழ்நாடு அரசைக் கோருகிறது!

- இரா.முரளி, தலைவர் & து. சேகர் அண்ணாதுரை, பொதுச் செயலாளர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பியூசிஎல்.

 

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.