இந்திய அரசியல் அமைப்பு சட்டம் கொடுத்திருக்கும் தனிமனித உரிமைகளை அவர்களது ரகசியங்களை ஆட்சியாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பறித்துக் கொண்டு வரும் நிலை மிகவும் ஆபத்தான ஒன்றாக முடியக்கூடும், இப்போது நடைமுறையில் ஒருவரை பொருளாதார ரீதியாக முடக்கிவிட அந்த நபரின் கைபேசி, கணினி இவற்றைப் பறிமுதல் செய்தாலே போதுமானது. ஆனால் இப்படி ஒருவரை முடக்குவது என்பது சட்டவிரோதம் என்பதை உணராமலே பல்வேறு விசாரணை அமைப்புக்கள் இதை செய்து வருகிறது.
ஆதார் கார்டு
ஆதார் கார்டு என்ற திட்டத்தை குறிப்பாக தனி நபர் விஷயங்களை அதாவது கை ரேகைகள், கண் குறியீடுகள் ஆகியவற்றை வைத்து தயாரிக்கப்படும் ஆதார் அடையாள அட்டைகளை சென்ற மன்மோகன் சிங் ஆட்சியின் போது கொண்டு வந்தார்கள். அதை இடதுசாரிகள் எதிர்த்தது. அப்போது பாரதிய ஜனதா கட்சியும் எதிர்த்தது. அதே நேரம் பாஜக ஆட்சிக்கு வந்ததும் அதி தீவிரமாக இந்த ஆதார் திட்டத்தை அமல்படுத்தியது அப்போதும் இப்போதும் தனிமனிதன் பற்றிய ரகசிய தகவல்கள் அனைத்தும் வெளியே செல்ல கூடும் என்று தொடர்ந்து ஒரே நிலைப்பாட்டில் எதிர்த்து வருபவர்கள் கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமே.
ஆதார் விபரங்கள் கசிவு
கொரோனா காலத்தில் ஆதார் விபரங்கள் அனைத்தும் தனியார்களிடம் சென்று இருப்பதாக பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் ஒருபக்கம் வருகிறது. ஒவ்வொரு தனி நபருக்கும் தன்னைப் பற்றிய தகவல்களைப் பாதுகாக்கவும் ரகசியம் காக்கவும் உரிமை உண்டு. அது வெளியே கசிகிறது என்றால் தனிமனித சுதந்திரம் பாதிக்கப்படுகிறது.
பிகாசுஸ் உளவு செயலி
கடந்த காலங்களில் பீகாசுஸ் மூலம் ஓட்டுக்கேட்பு மற்றும் உளவு பார்த்தல், மற்றவர்களின் கைபேசி, கணினி இவற்றுள் ஊடுருவுதல் என்பது அரசே செய்யும்போது அது இந்திய ஜனநாயகத்திற்கும் அடிப்படை உரிமைக்கும் மிகப் பெரிய ஆபத்தாக மாறிவிடும்.
தனிப்பட்ட விபரங்கள்
ஒவ்வொருவரும் தங்கள் தனிப்பட்ட தகவல்களான தங்களது ATM PIN, வங்கி PIN, தனது மின்னஞ்சல் ரகசிய குறியீடு போன்றவற்றை ரகசியமாக பாதுகாத்து வருவதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. தங்கள் தொலை பேசி, கணினி இவற்றில் சேமித்து வைப்பது என்பது அவரவர்கள் உரிமை. இது போக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள், பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் அவர்களது படைப்புகளை ஆய்வுகளை, அறிவியியல் கண்டுபிடிப்புகளை சேமித்து வைக்க அவர்களுக்கு முழு உரிமை உண்டு.
மின்னணு சாதனங்கள் பறிமுதல்
இந்த மோடி அரசு தான் நினைத்த உடன் ஏதாவது ஒரு குற்றச்சாட்டை கூறிக் கொண்டு மின்னணு பொருட்களை பறிமுதல் செய்வது என்பது நம் ஒவ்வொருவரின் ரகசியங்கள் வெளியே கசிவதற்கு வாய்ப்பாக அமைகிறது. அதோடு பொருளாதார ரீதியாக அவர்களின் G-PAY, வங்கி செயலிகள் ஆகியவை இயங்குவதை தடுத்து நிறுத்தி நிர்கதியாக நிற்க வைக்கும் முயற்சியை செய்து வருகிறது.
பீமா கோரேகாவ் – ஸ்டேன்ஸ் சுவாமி
கடந்த காலங்களில் பாதிரியார் ஸ்டேன்ஸ் சாமி எனும் 84 வயதுடைய சமூக ஆர்வலர், பீமா கோரேகாவ் வழக்கில் இவரது கணினியில் ஸ்டேன்ஸ் சாமிக்கும் எல்கர் பரிஷத் மாவோயிஸ்ட் இயக்கத்தினருடன் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்கள் இருந்ததாக கூறி அவரை UAPA, NIA ஆகிய கொடும் சட்டங்களின் கீழ் சிறையில் அடைத்து, அவரை சித்தரவதை செய்து சிறைக்குள்ளே இறந்து போகும் நிலை உருவானது நம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த பாதிரியாருடைய வழக்கறிஞர்கள் அவரது கணினியை FORENSIC LAB மூலம் ஆய்வுசெய்து அறிக்கை தேவை என்ற வேண்டுகோள் விடுத்த அடிப்படையில் பல மாத கால தாமதத்திற்கு பின்னர் நீதிமன்றம் அவரது கணினியை ஆய்வுக்கு அமெரிக்காவில் இருக்கும் ARSENAL LAB அறிக்கையை அளித்தது. அதில் குற்றம் சாட்டப்பட்டவரின் கணினியில் இப்படியான தரவுகளை திட்டமிட்டு திணிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.
பாஜக ஊழல்களை எழுதுவோர் மீது நடவடிக்கை
பாஜக அரசின் ஊழல்களை, முறைகேடுகளை விமர்சிக்கும் பத்திரிகைகள் மீதும் பத்திரிக்கையாளர்கள் மீதும் தொடர் தாக்குதலில் ஈடுபடுவதோடு அவர்களின் கணினி, கைபேசி போன்ற மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்து இருக்கிறது.
நியூஸ் கிளிக் விவகாரம்
சமீபத்தில் நியூஸ் கிளிக் செய்தி நிறுவன பத்திரிக்கையாளர்கள் 90 க்கும் மேற்பட்டோரின் டிஜிட்டல் சாதனங்களை பறிமுதல் செய்து வைத்து இருப்பதோடு கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் அவர்களை சிறையில் அடைத்து இருக்கிறது.
ஆப்பிள் நிறுவன எச்சரிக்கை.
சமீபத்தில் கூட ஆப்பிள் நிறுவனம் எதிர்க்கட்சி தலைவர்கள் பலருக்கும் எச்சரிக்கை செய்தியை அனுப்பியது மிகவும் கவனிக்கத்தக்க ஒன்று. அந்த எச்சரிக்கைக்கு இந்திய கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பொது செயலாளர் தோழர் சீதாராம் எச்சூரி அவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்
சீத்தாராம் எச்சூரி கடிதம்
அன்புள்ள பிரதமர் ஜி,
நேற்றிரவு நான் பெற்ற எச்சரிக்கை இணைக்கப்பட்டுள்ளது, அதில் "உங்கள் ஆப்பிள் ஐடியுடன் தொடர்புடைய ஐபோனை தொலை தூரத்தில் இருந்து இயக்க அரசாங்கத்தின் மூலம் முயற்சி எடுக்கப்பட்டு தாக்குபவர்களால் நீங்கள் குறிவைக்கப்படுகிறீர்கள் என்று ஆப்பிள் நம்புகிறது" என்று வெளிப்படையாகக் கூறுகிறது.
இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் உத்திரவாதம் செய்து இருக்கும் குடிமக்கள் அனைவருக்கும் இருக்கும் அடிப்படை உரிமைகளை முற்றிலும் மீறுவதாகும். ரகசியமாக குடிமக்களை கண்காணிப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது.
என் வேலை ஒரு திறந்த புத்தகம் மற்றும் மறைக்க எதுவும் இல்லை. எனவே, இதுபோன்ற செயல்கள் மற்றும் நான் பயன்படுத்தும் கருவிகளை தொலைதூரத்தில் இருந்து கண்காணிப்பது என்பது எனது சாதனங்களில் சில தகவல்களை தொலைநிலையில் உள்ளே புகுத்தி, பின்னர் அத்தகைய புகுத்தப்பட்ட புனையப்பட்ட பொருட்களின் தகவல்களின் என்னைக் குற்றம் சாட்டுவதாகும். உங்கள் தலைமையிலான இந்த அரசாங்கம் மத்திய விசாரணை அமைப்புகளை மோசமாகப் பயன்படுத்துவதைப் பார்க்கும்போது, அத்தகைய வாய்ப்பு ஏற்பட சாத்தியம் இருக்கிறது
உங்களது இச்செயல்கள் பிரதமராக இந்தியா அரசியலமைப்பின் அடிப்படையில் எடுத்த உறுதிமொழியை மீறுவதோடு இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் குடிமக்களின் ஜனநாயக உரிமைகள் மொத்தமாக அழிக்கப்படுகிறது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது
இந்த விஷயத்தில் உங்கள் பதில் பாராட்டப்படும்.
சீத்தாராம் எச்சூரி
என்று கடிதம் எழுதி இருந்தார்.
சர்வதேச சட்டங்களின் நிலைப்பாடு
கணினி யுகத்தில், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மின்னணு சாதனங்கள் தேடுதல்கள் கடுமையான நிபந்தனைகளுக்கு உட்பட்டவை. மின்னணு சாதனங்களைக் கையாள்வதற்கான கூடுதல் நெறிமுறைகள் உள்ளன.
பல்வேறு மேலை நாடுகளில் இப்படியான டிஜிட்டல் சாதனங்களை பறிமுதல் செய்வதற்கும், ஆய்வுக்கு உட்படுத்துவதற்கும், அதற்குள்ளே நுழைவதற்கு என்று பல்வேறு வழிமுறைகளை உருவாக்கி இருக்கிறது குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இப்படி டிஜிட்டல் சாதனங்களை பறிமுதல் செய்வதற்கு முறையாக நீதிமன்றத்தில் இந்த இந்த விஷயங்களை நாங்கள் பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டு நீதிமன்றத்தில் இருந்து வாரண்ட் வாங்கிய பின்னர் தான் அந்த சாதானத்திற்குள் நுழைய முடியும் இப்படியான சட்டங்கள் இந்தியாவிற்கும் தேவை என்ற அடிப்படையில் சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது..
பரிந்துரை
1. ஒரு மின்னணு சாதனத்திலிருந்து சரியாக என்ன தேடப்படுகிறது மற்றும் ஏன் என்பதை எழுத்துப்பூர்வமாக கொடுக்கவேண்டும். இந்த விவரம் நீதித்துறை வாரண்டில் பிரதிபலிக்க வேண்டும் மற்றும் அவசரகால பறிமுதல் செய்ய அடிப்படையாக காரணங்களை காட்டப்பட வேண்டும். இந்த எழுத்துப்பூர்வ அறிக்கை சாதனத்தின் உரிமையாளரிடமோ அல்லது யாரிடமிருந்து எடுக்கப்படுகிறதோ அந்த நபரிடமோ வழங்கப்பட வேண்டும்.. காவல்துறையால் இந்த மின்னணு சாதனங்களைத் ஒப்படைக்க கூறி யாரையும் அழைக்கக் கூடாது. நீதிமன்றத்தின் ஆணை இல்லாமல் யாருடைய மின்னணு சாதனங்களை விசாரணைக்காக உட்படுத்தக் கூடாது.
2. கைப்பற்றப்பட்ட சாதனம் முதலில் உரிமையாளர் / முகவர் முன்னிலையில் தான் சோதனையை மேற்கொள்ள வேண்டும். தனிப்பட்ட மற்றும் தொழில்முறை தகவல்கள் விசாரணைக்கு சம்பந்தமில்லாத அனைத்து தகவல்களும் அடையாளம் காணப்பட்டு, பிரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு உடனடியாக திருப்பிக் கொடுக்க வேண்டும். விசாரணைக்கு நேரடியாகத் தொடர்புடைய தகவல்கள் மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். அப்படி செல்லும்போது மூன்று நகல்களை எடுத்த பிறகு, ஒன்று உரிமையாளருக்கு, ஒன்று சுயாதீன அதிகாரத்திடம் சீல் வைத்து விட்டு, மூன்றாவதாக ஒவ்வொரு கட்டத்திலும் ஹாஷ் மதிப்பைக் குறிப்பிட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
3. புலனாய்வாளர்களால் மின்னணு சாதனம் பறிமுதல் செய்யப்பட வேண்டிய சந்தர்ப்பத்தில் , விசாரணைக்குப் பொருத்தமற்ற அனைத்துத் தகவல்களையும் அகற்றிய பின்னரே எடுத்துச் செல்ல வேண்டும்.. திரும்ப ஒப்படைக்கப்படும் தேதி மற்றும் இடம் மெமோவில் குறிப்பிடப்பட வேண்டும். இது தேடலின் போது செய்யப்பட வேண்டும், கைப்பற்றப்பட்ட 30 நாட்களுக்குள் சாதனம் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும்.
4. எந்தவொரு சட்டமும் வெளிப்படையாக அனுமதிக்காத வரையில் கடவுச்சொற்களை கட்டாயமாக வெளிப்படுத்துவது தடை செய்ய வேண்டும்,.
5. வழிகாட்டுதல்களை மீறும் வகையில் கைப்பற்றப்பட்ட எந்தப் பொருளையும் நீதிமன்றத்திலோ அல்லது வேறு எந்த வகையிலோ பயன்படுத்தக் கூடாது.
இன்னும் ஒன்றிய அரசு இது பற்றி எதுவும் பதில் சொல்லவில்லை. இந்த தனிமனித உரிமை என்பது அரசியல் அமைப்பு சட்டம் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட ஒன்று. ஓர் அறிவியல் ஆராய்ச்சியாளர் தனது கண்டுபிடிப்பை தனது மின்னணு சாதனத்தில் பதிவிட்டு இருப்பார். அதை திருடும் நோக்கில் கூட இப்படியான அதிரடி சோதனைகளை மேற்கொள்ளும் அளவுக்கு தான் இப்போதிருக்கும் ஆட்சியாளர்களின் சோதனை அமைப்புகள் இருக்கிறது. இது மிகவும் ஆபத்தானது.
- ஆர்.எம்.பாபு