மனிதனின் அடிப்படைத் தேவைகளில் உணவு முக்கியமானது. உணவுப் பாதுகாப்பு என்பது நான்கு முக்கிய அம்சங்களைக் கொண்டதாகும்.

  1. உணவு இருப்பு: அதாவது, இது நாட்டின் வேளாண்மை உற்பத்தி, உணவு தானிய இருப்பு மற்றும் இறக்குமதி சம்பந்தப்பட்டவை.
  2. உணவை அணுகும் திறன்: இது மக்களின் வாங்கும் சக்தி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமானதாகும்.
  3. உணவை உடல் ஏற்கும் திறன்: இது தூய்மையான குடிநீர் மற்றும் சுகாதார வசதி சார்ந்ததாகும்.
  4. நிலைப்புத் தன்மை: மேற்சொன்ன மூன்று அம்சங்களும் எல்லாக் காலங்களிலும் எல்லாச் சூழ்நிலைகளிலும் கிடைக்கப் பெறுதல் வேண்டும்.

food safety in tnஉணவுப் பாதுகாப்பில் வேளாண்மை, கால்நடைத் துறை, மீன்வளம் ஆகியவை முக்கிய பங்காற்றுகின்றன. உணவு என்பது மனிதனின் அடிப்படை உரிமை. அதனை உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013 உறுதி செய்கிறது.

மனிதன் உயிர் வாழ உட்கொள்ளும் அனைத்து உணவுகளும் எல்லாக் காலத்திலும் கிடைக்கப் பெறுதல் அவசியம். தானிய வகைகள், பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள், மாமிச உணவுகள் மட்டுமின்றி, சுத்தமான நீரும் கிடைக்கக் கூடிய சூழல் வேண்டும்.

இந்தியாவின் மக்கள்தொகை சுமார் 147 கோடி. ஒவ்வொரு ஆண்டும் மக்கள்தொகை பெருகிக் கொண்டே வருகிறது. மக்கள்தொகைக்கு ஏற்ப எல்லோருக்கும் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாய நிலையில் உள்ளோம்.

1940-களில் உணவு உற்பத்தி மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது. 1960-களில் பசுமைப் புரட்சி வந்த பின்பு அரிசி, கோதுமை உற்பத்தி பெருகிய அளவுக்கு, மக்களின் வாங்கும் சக்தி உயரவில்லை. அன்றைய காலகட்டத்தில் கிராமப்புறங்களில் கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற தானியங்கள் பிரதான உணவாக இருந்தன. அரிசி உணவு நிலச்சுவான்தார்கள், வசதி படைத்த வீடுகளில் மட்டுமே இருக்கும். முக்கிய குடும்ப விழாக்களில் அரிசி உணவு தயார் செய்யப்படும். அந்த அளவுக்குத் தொழில்நுட்பம் அன்று வளரவில்லை.

இன்று அரிசி பிரதான உணவாகிவிட்டது. ஓரளவு எல்லோருக்கும் கிடைக்கக் கூடிய சூழ்நிலை உள்ளது. ஆனால் ஆரோக்கியமான உணவு கிடைப்பதில் சவால் நீடிக்கிறது. இந்திய ஊட்டச்சத்து நிறுவனத்தின் (NIN) பரிந்துரைப்படி, மனிதனின் ஒருவேளை உணவில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளான காய்கறிகள் மற்றும் பழங்கள் (50%); தானிய உணவுகளான அரிசி, கோதுமை அல்லது சிறுதானியங்கள் (25%); புரத உணவுகளான பருப்பு, பயறுகள், பால் பொருட்கள், முட்டை அல்லது இறைச்சி (25%) எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கான சரிவிகித உணவாகக் கருதப்படுகிறது.

நம் உடலுக்குத் தேவையான தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ள உணவுகளை நாம் குறைவாகவே எடுத்துக் கொள்கிறோம். நமது வருமானம், உணவு கிடைக்கக் கூடிய சூழ்நிலை ஒருபுறம் இருந்தாலும், சரிவிகித உணவிற்குத் தனிமனித விழிப்புணர்வு, குடும்பச் சூழ்நிலை, சமூகக் கலாச்சாரம் மற்றும் அரசின் கொள்கைகள் காரணியாக இருக்கலாம்.

உணவுப் பாதுகாப்பு மனித வளர்ச்சிக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் மிக அவசியம். நகர்மயமாதல், விலைவாசி உயர்வு போன்றவை அமைப்புசாரா தொழிலாளர்களுக்குச் சவாலாக இருக்கும். உணவு மனிதனின் அடிப்படைத் தேவையாக இருக்கிறது. ஒரு மனிதனுக்கு உணவுத் தேவை பூர்த்தி அடையாத போது மற்ற தேவைகள் உருவாவதில்லை. இந்த உணவு ஊட்டச்சத்து மிக்கதாகவும், சரிவிகித உணவாகவும் கிடைக்கப்பெறுதல் வேண்டும். உடல் இயக்கத்திற்கும் ஆரோக்கியமுடன் வாழ்வதற்கும் ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு 2400 கலோரி அளவுக்கு மேல் கிடைக்கப்பெறுதல் வேண்டும்.

நம் நாட்டில் உணவுப் பாதுகாப்புத் திட்டங்கள், பொது விநியோகத் திட்டம், காலை உணவுத் திட்டம், மதிய உணவுத் திட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013 என உணவுப் பாதுகாப்புத் திட்டங்களை அரசு கொண்டு வந்தாலும் முழுமையான உணவுப் பாதுகாப்பு நிலை உருவாக வேண்டும். இன்றைய மருத்துவ வசதிகள் மனித உயிரைக் காப்பாற்றுவதற்குப் போதுமானதாக இருக்கலாம்; ஆனால் மனிதன் ஆரோக்கியத்தோடு வாழ்வதற்கு நல்ல சத்தான உணவு மிக அவசியம்.

சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் முதியோர்க்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இருந்தாலும், அவர்களுக்கான உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். போதுமான வருமானம் இருந்தும் உணவு சிலருக்குக் கிடைப்பதில்லை; உணவு இருந்தும் வாங்கிச் சாப்பிடப் போதுமான பணம் இருப்பதில்லை; வருமானமும் உணவும் கிடைத்தாலும் அதனை வாங்கி உட்கொள்வதற்கும் உடல் ஏற்கும் திறனும், சுகாதார வசதிகளும் பெருக வேண்டும்.

பொருளாதார வளர்ச்சியில், வாங்கும் சக்தியில், அரிசி, கோதுமை, பால், மீன் உற்பத்தியில் முதல் ஐந்து இடங்களில் இருந்தாலும், மனிதனின் உடல் ஆரோக்கியத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பதை உலகப் பசி குறியீட்டெண் மற்றும் தேசிய குடும்ப நல ஆய்வறிக்கை உறுதிப்படுத்துகின்றன. ஒவ்வொரு ஆண்டும் உலகப் பசி நிலையை அறிந்து கொள்ள உலகப் பசி குறியீட்டெண் ஆய்வு அறிக்கை வெளியிடப்படுகிறது. இதனை மதிப்பீடு செய்வதில் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் எடை, உடல் ஆரோக்கியம், உயரத்திற்கு ஏற்ப எடை, வயதிற்கு ஏற்ப உயரம் போன்றவை முக்கிய அளவுகோல்களாக உள்ளன.

2026 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையின்படி பட்டியலில் உள்ள 122 நாடுகளில் இந்தியா 100-ஆவது இடத்தில் உள்ளது. இது அவசர நிலையைக் குறிக்கிறது. இது பற்றிய விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும், 'மறைமுகப் பசி' (Hidden Hunger) நிலை உயர்ந்து வருகிறது என்பது உண்மை. அதாவது மனிதனுக்குத் தேவையான சில நுண்ணூட்டச்சத்துகள் தொடர்ந்து கிடைக்கப்பெறாத நிலை அதிகரித்து வருகிறது. ஒரு சில சத்துகள் கிடைக்கக் கூடிய உணவுப் பண்டங்கள் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. இந்நிலை மாற வேண்டும்.

ஒரு நாட்டின் உணவுப் பாதுகாப்பைப் பல்வேறு காரணிகள் தீர்மானிக்கின்றன. அதாவது வேளாண் உற்பத்தி, காலநிலை, வணிகம், ஏற்றுமதி-இறக்குமதி, மழை, வருமானம், உணவின் தரம், சுகாதாரமான தண்ணீர், சுற்றுப்புறச்சூழல், அரசின் நிர்வாகம், அரசியல் நிலைப்புத்தன்மை, சமூகக் கட்டமைப்பு போன்ற பல காரணிகள் உள்ளன. எனவே, ஒரு குறிப்பிட்ட காரணி மட்டும் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்துவிடாது.

பன்னாட்டுப் போர், சுனாமி, பெருவெள்ளம், நிலநடுக்கம் போன்ற செய்திகளைக் கேட்டுக்கொண்டு மட்டும் இருக்கிறோம். இந்தியா வளரும் நாடு; மக்கள் தொகையில் பெரிய நாடு. நிலநடுக்கம், சுனாமி, கொரோனா போன்ற இயற்கை பேரிடர்கள் இந்தியாவைப் பாதித்துள்ளன. மிகப்பெரிய இயற்கை பேரிடர், நோய், பொருளாதாரப் பிரச்சினை, போர் போன்றவை எதிர்காலத்தில் ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

முதலில் நாம் தயாராக வேண்டியது சுயசார்பு நிலை. முக்கியமாக உணவுப் பாதுகாப்பில் என்றைக்கும் சுயசார்பு நிலை அவசியம். உணவு உற்பத்தியில் தன்னிறைவு என்று சொல்லப்பட்டாலும், எல்லாக் காலங்களிலும் மக்களுக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். எரிபொருள் இறக்குமதியைக் குறைக்க வேண்டும். அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அந்த உரிமையைப் பாதுகாப்பதில் அரசிற்கு மட்டுமல்லாமல், நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் சமூகப் பொறுப்பு உண்டு.

ஐ.நா அமைப்பின் முன்னாள் தலைமை இயக்குநர் ஜாக்குவாஸ் தியூஃப் (Jacques Diouf) கூறியது போல, "பசி என்பது ஒரு தர்மப் பிரச்சினை அல்ல; இது ஒரு நீதிக்கான பிரச்சினை". மனித சமூகத்தின் மேன்மையை பசியில்லா நிலையை உருவாக்குவதன் மூலம் அடைய முடியும்.

இன்று (அக்டோபர் 16, 2026) உலக உணவு நாள். இந்த நாளுக்கான கருப்பொருள்: "ஒரு சிறந்த வாழ்க்கைக்கும் எதிர்காலத்திற்குமான உணவுக்கான உரிமை" என்பதுதான்.

அரசின் திட்டங்களைச் சரியாக, முழுமையாகப் பயன்படுத்தலாம். வீடுகளில் மாடித்தோட்டம் அமைத்து வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்யலாம்; உணவுக்கான செலவைக் குறைக்கலாம். உணவை வீணாக்காமல், எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் சத்தான, போதுமான உணவு கிடைக்கக் கூடிய சூழ்நிலையை உருவாக்குவோம். பசியில்லா ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவோம்!

- முனைவர் இல.சுருளிவேல், உதவிப் பேராசிரியர், மீன்வள விரிவாக்கம், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை, டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், பொன்னேரி - 601 204, திருவள்ளூர் மாவட்டம்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.