தொடர்புடைய படைப்புகள்

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அவர்களுக்கு ஒரு செய்தியாளரின் திறந்த கடிதம்

mohan bagwat 377நியூயார்க்கில் உள்ள மேடிசன் ஸ்கொயரில் ஆர்.எஸ்.எஸ். (RSS) தலைவர் மோகன் பகவத் ஆற்றிய ‘செயலுக்கான அழைப்பு’ (Call to Action) என்ற அமைதிக்கான உரை பொதுமக்களின் தீவிர பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

இந்தியாவில் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறைகள் உலகளாவிய விவாதப் பொருளாக மாறியுள்ள இத்தகைய காலகட்டத்தில், மோகன் பகவத் அவர்களின் இந்த உரை முற்றிலும் மாறுபட்ட தொனியிலும், சமரசப் போக்கையும் பிரதிபலிப்பதாக இருப்பதால் இது மிகவும் பொருத்தமானது.

செப்டம்பர் 3, 2026 அன்று நியூயார்க்கில் பேசிய மோகன் பகவத், ‘பன்முகத்தன்மை என்பது இயற்கையின் விதி, ஆனால் ஒற்றுமைதான் அதன் அடிப்படையான உண்மை. பன்முகத்தன்மை என்பது நமது அக ஒற்றுமையின் அலங்காரமாகும்; அது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும், மதிக்கப்பட வேண்டும் மற்றும் பாதுகாக்கப்படுகிறது’ என்றார். மேலும், அவரவர் சொந்த அடையாளத்துடன் மற்றவர்களின் அடையாளமும் பாதுகாக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

பகவத் பேசுகையில், “2018 ஆம் ஆண்டு தில்லியில் எனது சொற்பொழிவுத் தொடரின் போது, அங்கே வந்திருந்த பல முஸ்லிம் சகோதரர்கள் என்னிடம், 'நீங்கள் ஒரு இந்து அமைப்பு. நீங்கள் இந்து ராஷ்டிரம் பற்றிப் பேசுகிறீர்கள். எங்களைப் போன்ற முஸ்லிம்களின் நிலை என்ன? எங்களை விரட்டி அடிப்பீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு நான், 'இல்லை, அது Hindutva அல்ல. பாரதத்தில் முஸ்லிம்கள் இருக்கக் கூடாது என்று எந்தவொரு இந்து நினைத்தாலும், அவர் இந்துவாக இருக்க மாட்டார்' என்று அவர்களிடம் கூறினேன்" என்றார்.

தொடர்ந்து பேசிய பகவத்: “நீங்கள் உங்களை இந்து என்று அழைக்க விரும்பினால், அனைத்து வழிகளும் ஒரே இலக்கில்தான் சென்று சேர்கின்றன என்பதை நீங்கள் நம்ப வேண்டும். மேலும் ஒவ்வொரு மனிதனுக்கும் மாண்பு உண்டு. மனிதர்களிடையே எந்தவித வேறுபாடும் இல்லை” என்றார்.

தனிநபர்கள் எவ்வாறு ‘நானும் எனது என்ற வலையில்’ சிக்குகிறார்கள் என்பதை விவரித்த அவர், ‘அற்பமான விருப்பங்கள், வெறுப்புகள் மற்றும் சுயநல ஆசைகள் ஆகியவை தனிநபர்களை சரியான பாதையில் இருந்து திசை திருப்புகின்றன’ என்றார்.

அரசியல் என்பது இப்போது ஒரு “சுயநல விளையாட்டாக” மாறிவிட்டது என்று குறிப்பிட்ட பகவத், “சிக்கல் எங்குள்ளது என்றால், அங்கே நானும் நானும் மட்டுமே இருக்கும் போது தீர்வுகளும் இருப்பதில்லை, ஆனால் நாம் மற்றும் நமது என்று வரும்போது அங்கே தீர்வு பிறக்கிறது” என்றார்.

மோகன் பகவத்தின் இந்த சர்க்கரை தடவப்பட்ட வார்த்தைகள், ஆர்.எஸ்.எஸ். (RSS) இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை அறியாதவர்களுக்கு இசையைப் போல கேட்கலாம். சுமார் 4 முதல் 6 மில்லியன் வரையிலான தீவிர தொண்டர்களைக் கொண்ட ஒரு பெரிய அளவிலான அமைப்பை மோகன் பகவத் தலைமை ஏற்று நடத்தி வருகிறார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இரு நிலைகளில் செயல்படுகிறது. முதலாவது சமூகம் சார்ந்த தொண்டுப் பணிகள், பொது ஒழுக்கம் மற்றும் இந்து கலாச்சார விழுமியங்களை ஊக்குவித்தல்; இரண்டாவது அதன் பாரிய தொண்டர்களை அரசியல் மிரட்டல்கள், துருவமயமாக்கல் மற்றும் ஆக்கிரமிப்பு சித்தாந்த தலையீடுகளுக்குப் பயன்படுத்துவது.

ஊடகங்களும் அரசும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அசிங்கமான முகத்தை மூடி மறைத்து, தேசத்தைக் கட்டி எழுப்புவதில் அதன் தன்னார்வத் தொண்டுகளை முன்னிலைப்படுத்துகின்றன. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உண்மையான முகம் என்பது மதத் துருவமயமாக்கலிலும், தனித்துவமான சிறுபான்மையினர் அடையாளங்களை நிராகரிப்பதிலும் ஈடுபட்டுள்ளது. நியூயார்க் உரையில் பகவத் இதை மறுத்தாலும் இதுவே உண்மையாகும். இந்தியா ஒரு இந்து நாடு என்றும், அதில் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் போன்ற மத சிறுபான்மையினர் வெளியாட்கள் என்றும் ஆர்.எஸ்.எஸ். கேடர்கள் வெளிப்படையாகப் பிரச்சாரம் செய்கின்றனர்.

இந்தப் பின்னணியில், இந்து தேசியவாதிகளின் நடவடிக்கைகள் குறித்து சமீபத்தில் இரண்டு அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. முதலாவதாக, மத சிறுபான்மையினருக்கு எதிரான மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தும் தெற்காசிய நீதி பிரச்சாரத்தின் (South Asia Justice Campaign) காலாண்டு செய்தி மடலான 'இந்தியா பெர்சிக்யூஷன் டிராக்கர்' (India Persecution Tracker) வெளியிட்டுள்ள அறிக்கை ஆகும். இந்த ஆவணம் இந்தியா முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறை, மாநில அடக்குமுறை மற்றும் பாகுபாடுகளை விவரிக்கிறது.

இந்தியா பெர்சிக்யூஷன் டிராக்கர் அறிக்கையின்படி, 2026 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 44 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர், 3,000-க்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன, மேலும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இரண்டாவது அறிக்கை ஐக்கிய நாடுகளின் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தால் (USCIRF) வெளியிடப்பட்டுள்ளது. இது முதல் அறிக்கையை உறுதிப்படுத்துகிறது. USCIRF அறிக்கை, இந்தியாவில் மத சுதந்திர நிலைமைகள் 2026 ஆம் ஆண்டிலும் கீழ்நோக்கிய பாதையிலேயே தொடர்வதாகக் கூறியுள்ளது.

பல சிறுபான்மை குழுக்கள் மீதான முறையான மற்றும் தொடர்ச்சியான துன்புறுத்தல்கள் இந்தியாவில் நடந்து வருவதாக அது குற்றம் சாட்டியுள்ளது. குடியுரிமை மற்றும் வாக்களிப்பு உரிமைகள் மறுக்கப்படுவதுடன், இந்தியாவில் மத சுதந்திரத்திற்குத் தடையாக கடுமையான மதமாற்ற தடைச் சட்டங்களும், மாட்டுக்கறி விற்பனைத் தடைச் சட்டங்களும் அமல்படுத்தப்படுகின்றன.

மத சுதந்திரம் அல்லது நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்காக அல்லது மற்றவர்களின் உரிமைகளுக்காக வாதிட்ட தனிநபர்களை இந்திய அதிகாரிகள் தொடர்ந்து தடுத்து வைத்துள்ளனர் மற்றும் சிறையில் அடைத்துள்ளனர் என்று USCIRF தெரிவித்துள்ளது.

மேலும், சமூக வலைதளப் பதிவுகள், கும்பல் வன்முறைகள் அல்லது இடிப்புகள் பற்றிய சமூக ஊடகப் பதிவுகள், மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான கலவரங்களின் போது உதவி கோருவது உள்ளிட்ட கருத்துச் சுதந்திரத்தை நசுக்குவதற்கான ஒரு கருவியாக இந்திய அரசு தொடர்ந்து இணைய முடக்கங்களைப் பயன்படுத்துகிறது என்று USCIRF கூறுகிறது.

USCIRF அறிக்கை குறிப்பிடுகையில், "இந்து தேசியவாத கும்பலின் (ஆர்.எஸ்.எஸ். எனப் படிக்கவும்) செயல்பாடுகள் பரவலாக உள்ளன, மேலும் மத சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்களுக்கு சிறிதும் பொறுப்புக்கூறல் இல்லாமல் இவை தண்டனையின்றி நிகழ்கின்றன" என்கிறது.

வழக்கம்போல, இந்திய அதிகாரிகள் இந்த இரண்டு அறிக்கைகளையும் கடுமையாக நிராகரித்தனர். வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் சர்வதேச அறிக்கைகளை நிராகரித்து, அவை பாரபட்சமானவை மற்றும் தீய நோக்கம் கொண்டவை என்று அழைத்தார். கமிஷன் தொடர்ந்து உண்மைகளைத் திரித்து, இந்தியாவைப் பற்றிய கேள்விக்குரிய தேர்ந்தெடுக்கப்பட்ட, சிதைக்கப்பட்ட பார்வையை முன்வைப்பதாக ஜெய்ஸ்வால் கூறினார்.

இந்தச் சூழலில்தான் பகவத்தின் நியூயார்க் உரை மதிப்பிடப்பட வேண்டும். வெளிநாட்டில் இருக்கும் இந்து சித்தாந்தவாதி, இந்தியாவில் உள்ள மதங்களின் ஒற்றுமையையும் பன்முகத்தன்மையையும் போதிப்பது போல் நடிக்கிறார். எவ்வாறாயினும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மற்றும் அதன் தலைவர் மோகன் பகவத்தின் இருண்ட முகம் என்னவென்றால், அது இந்தியாவில் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் இல்ஹான் உமர் (Ms. Ilhan Omar), இந்தியாவில் முஸ்லிம்கள் மீதான துன்புறுத்தல் "இனப்படுகொலையின் எட்டாவது கட்டத்தை" எட்டியுள்ளதாக விவரித்தார். ஆர்.எஸ்.எஸ். மற்றும் பிற இந்து-வலதுசாரி அமைப்புகள் இத்தகைய கூற்றுக்களைக் கடுமையாக எதிர்த்துள்ளன.

மோகன் பகவத் இந்தியாவின் அரசியலை நேரடியாகக் கட்டுப்படுத்தாவிட்டாலும், அதன் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்., இந்தியாவில் ஆளும் கட்சியான பாஜகவின் (BJP) ஊற்றுக்கண்ணாகத் தொடர்கிறது. பாஜக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அஜண்டாவைச் செயல்படுத்தி வருகிறது. அதன் தீங்கற்ற பாதுகாப்பின் கீழ், ஆர்.எஸ்.எஸ். கேடர்கள் முஸ்லிம்களைத் துன்புறுத்தி வருகின்றனர்.

மோகன் பகவத் நியூயார்க்கில் பிரசங்கித்த பன்முகத்தன்மையை மகிமைப்படுத்துவதன் அடிப்படையில் அல்லாமல், முற்றிலும் வெறுப்பின் மேல் அடித்தளம் அமைக்கப்பட்ட ஒரு இந்து ராஷ்டிரத்தை உருவாக்குவதில் ஆர்.எஸ்.எஸ். கேடர்கள் ஈடுபட்டுள்ளனர்.

எனவே, தாத்தா, தயவு செய்து உபதேசிக்காதீர்கள் – உங்கள் கைகளில் ரத்தக் கறை படிந்துள்ளது.

தமிழாக்கம்: நிவேதிதா, கோவை.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.