தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் ஊழல் எதிர்ப்பு என்பது மிக முக்கியமான முழக்கமாக உள்ளது. நேர்மை, வெளிப்படைத்தன்மை, ஊழல் இல்லாத நல்லாட்சி போன்ற கருத்துகளைத் திராவிட மாடலுக்கு மாற்றாக தவெக முன்னிறுத்தியது. இதன் விளைவாக நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக பெருவாரியான வாக்குகளைப் பெற்றது. ஆனால் பெரும்பான்மைத் தொகுதிகளைக் கைப்பற்றவில்லை. ஆட்சி அமைக்க அறுதிப் பெரும்பான்மைப் பெற பிற கட்சிகளின் ஆதரவைப் பெற்றது. தேர்தல் வாக்குறுதிப்படி கூட்டணி ஆட்சி அமைத்தது பாராட்டிற்குரியதே.
ஒரு புதிய கட்சி ஆட்சிக் கட்டிலில் அமரும்போது தோல்வியுற்ற பிற கட்சிகளில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பிற முக்கிய பொறுப்பாளர்கள் ஆளுங்கட்சிக்குள் இணைதல் வழமையான ஒன்றே. இதன்படி அண்மைக் காலமாக அதிமுகவினர் அக்கட்சியில் இருந்து விலகி தவெக கட்சியில் தங்களை இணைத்துக் கொள்வது அன்றாட நிகழ்ச்சியாகிவிட்டது.
மக்களின் பார்வையில்....
ஊழல் குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்ற அதிமுக தலைவி ஜெயலலிதாவின் தலைமையிலான ஆட்சியில் அமைச்சர்களாக, சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தோர் யாவரும் ஊழல் அரசியலின் அடையாளங்களாகக் கருதப்பட்டவர்கள் ஆவர். அத்தகையவர்களைத் தவெக தன்னுள் இணைத்துக் கொள்ளும் செயல் தவெக கட்சியின் கொள்கை நிலைப்பாட்டிற்கு எதிரானதாக மக்களின் பொதுப் பார்வையில் தெரிகிறது. இத்தகைய நியாயமான கேள்வி தமிழ்நாட்டு அரசியலில் மட்டுமல்லாமல், இந்திய அரசியலிலும், உலக அரசியலிலும் விடை தேடி விவாதிக்கப்படும் ஒன்றாகவே உள்ளது.
கொள்கையும் செயல்பாடும்
ஏதோ ஒரு கொள்கையின் அடிப்படையில் உருவாகும் அரசியல் கட்சிகள், அரசதிகாரத்தைப் பெறவும் அதனூடாக சமூக மாற்றங்களை ஏற்படுத்தவும் முனைப்பு காட்டுகின்றன. ஆனால் நடைமுறையில் எல்லா கட்சிகளும் தேர்தல் வெற்றிக்காகக் கொள்கை முரணுள்ள கட்சிகளையும் சமூக சக்திகளையும் தங்களுடன் இணைத்துக் கொள்கின்றன. இது தேர்தல் அரசியல் முரண். இந்த முரணை இப்போது தவெக ஆட்சி பின்பற்றுகிறது. . ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள கொள்கை முரணுள்ள கட்சிகளின் ஆதரவைப் பெற்றதை இங்கு யாரும் பெரிதாகக் கேள்விக்குட்படுத்தவில்லை. ஆனால் நிருபிக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அதிமுக கட்சியினரை தவெக தன்னுள் இணைத்துக் கொள்வது கொள்கை முரண் என்றே விமர்சிக்கப்படுகிறது.
கேள்விக்குள்ளாகும் நம்பகத்தன்மை
தவெக என்ற புதிய அரசியல் கட்சி வளர்ந்து வரும் நிலையில், அதிமுக வில் இருந்து வரும் அனுபவம் வாய்ந்த தலைவர்களையும், முன்னாள் அமைச்சர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் இணைத்துக் கொள்வது அரசியல் ரீதியாகப் பயனுள்ளதாக இருக்கலாம். அவர்களிடம் தேர்தல் அனுபவம், கட்டமைக்கும் ஆற்றல், களத்தில் மக்களுடன் தொடர்பு போன்ற அரிய திறன் இருக்கக் கூடும். ஆனால் இத்தகைய இணைவுகள் தவெக கட்சியின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணாக இருக்கும் போது புதிய சிக்கல் எதார்த்தமாய் எழுகிறது. குறிப்பாக ஊழல் எதிர்ப்பைத் தனது முக்கிய எதிர்ப்பாகக் கொண்ட தவெக கட்சி, ஊழல் குற்றச்சாட்டுகளைச் சந்தித்து தண்டனை பெற்ற கட்சியினரை இணைத்துக் கொள்வது தவெக கட்சியின் நமபகத்தன்மையைக் கேள்விகுள்ளாக்குகிறது.
மக்களின் எதிர்பார்ப்பு
புதிய அரசியல் கட்சியான தவெக வை மக்கள் ஆதரிப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று மாற்றத்திற்கான எதிர்பார்ப்பு ஆகும். பழைய ஆட்சியாளர்களின் செயல்பாடுகள் மீது அதிருப்தி அடைந்தவர்கள் அல்லது சலிப்படைந்தவர்கள் தவெக கட்சியிடம் புதிதாக ஒன்றை எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் ஊழலில் தொடர்புடைய அதிமுக கட்சியினரைத் தவெக தன்னுள் இணைத்துக்கொல்வது தான் உண்மையிலேயே மாற்றமா? அல்லது பழைய அரசியலின் புதிய முகமா? என்ற கேள்வி எழலாம். மக்களின் நம்பிக்கையே அரசியலின் முக்கிய மூலதனம் ஆகும். ஒரு கட்சி தனது கொள்கைக்கும் செயலுக்கும் இடையே ஒற்றுமையைப் பேணும்போது மட்டுமே மக்களின் நம்பகத்தன்மையை நிலை பெறச்செய்ய முடியும்.
அரசியல் எதார்த்தவாதம்
சனநாயக அரசியல் நெறிமுறைப்படி தனிமனிதர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப கட்சி மாறும் நிலைப்பாட்டை எடுக்கலாம். ஆனால் குற்றம் சுமத்தப்பட்டவர் மீது நீதிமன்றத் தீர்ப்பு முடிவுக்கு வராமல் ஒருவரை அரசியலில் இருந்து நிரந்தரமாக நீக்கிவிட முடியாது. இதன்படி புதிதாக இணையும் ஒவ்வொருவரையும் அவர்களின் தற்போதைய அரசியல் உறுதிப்பாட்டின் அடிப்படையில் மதிப்பிட வேண்டும் என்ற கருதுகோளைப் பின்பற்றலாம்.
அரசியல் அறம்
சட்ட ரீதியாக எந்தத் தடையும் இல்லாத ஒரு செயல், அரசியல் அறநெறிப்படி விமர்சனத்திற்குரியதாக இருக்கலாம். ஊழல் எதிர்ப்பை அடையாளமாகக் கொண்டிருக்கும் தவெக கட்சி தன்னுள் இணையும் பிற கட்சியினரிடம் தரமான நேர்மையையும் பொது வாழ்க்கை ஒழுக்கத்தையும் உறுதிப்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். இல்லையெனில், ஊழல் எதிர்ப்பு என்பது தேர்தல் காலத்து வெற்று முழக்கமாகவே தோன்றும். தவெக கட்சியின் கொள்கை, நோக்கம் குறித்த சந்தேகம் வலுவாக எழும்.
உலகளாவிய பிரச்சனை
உலகின் பல நாடுகளில் புதிய அரசியல் கட்சிகள் வளரும்போது பழைய அரசியல் கட்சித் தலைவர்களை இணைத்துக் கொள்வது வழக்கமாக உள்ளது. நல்வாய்ப்பாக சில நேரங்களில் இது வெற்றியைத் தருகிறது. ஆனால் கெடுவாய்ப்பாகப் பல நேரங்களில் கட்சியின் தனித்துவ அடையாளத்தை மங்கச் செய்கிறது. கொள்கையை விட தேர்தல் வெற்றிக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்ற விமர்சனத்திற்கு ஆளாகிறது. உலக அரசியல் வரலாறு சொல்லும் சேதி யாதெனில், வெற்றுப் பேச்சுகளை விட செயற்பாடுகளின் அடிப்படையில் அரசியல் கட்சிகளை மக்கள் மதிப்பீடு செய்கின்றனர் என்பதாகும்.
தவெக முன்னுள்ள சவால்
புதிதாக வளர்ந்து வரும் தவெக கட்சி முன்னுள்ள மிகப்பெரிய சவால் யாதெனில், வளர்ச்சிக்கும் கொள்கைக்கும் இடையே சமநிலையைப் பேணுவதாகும். தேர்தல் அரசியல் மூலம் ஆட்சியைக் கைப்பற்ற வலுவான கட்டமைப்பு தேவை. அதே நேரம், மக்கள் எதிர்பார்க்கும் கொள்கைத் தூய்மையையும் கடைப்பிடிக்க வேண்டும். இந்த இரண்டிற்கும் இடையில் சம நிலையைக் கடைப்பிடிக்கத் தவறினால் அரசியல் அடையாளம் பாதிப்புக்குள்ளாகும்.
வெளிப்படைத்தன்மை
தவெக தனது கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது என்பதை உறுதி செய்ய ஊழல் பின்னணி கொண்டவர்களை இணைத்துக் கொண்டது ஏன்? என்பதை வெளிப்படையாக மக்களுக்கு விளக்க வேண்டும். அவர்களிடம் இருந்து பெறப்பட்ட உறுதிமொழி என்ன? அவர்களின் கடந்த கால செயற்பாடு குறித்து தவெக கட்சியின் நிலைப்பாடு என்ன? அவர்கள் பின்பற்ற வேண்டிய ஒழுக்க விதிகள் யாவை? என்பன போன்ற கேள்விகளுக்குத் தெளிவான பதில்கள் வழங்கப்பெற வேண்டும்.
இறுதியாக.....
ஊழலுக்கு எதிராகப் பேசும் தவெக கட்சியின் உண்மையான வலிமை அதன் செயற்பாடுகளில் தான் உள்ளது. ஊழல் எதிர்ப்பு என்பது வெறும் தேர்தல் முழக்கமாக இல்லாமல், கட்சியின் அனைத்து நிலைகளிலும் செயற்பாடுகளிலும் பிரதிபலிக்க வேண்டும். இறுதியாக மக்கள் கேட்பது ஒரே கேள்வி தான்! நீங்கள் சொல்வது போல் செயல்படுகிறீர்களா? என்பதே. இதற்கான நேர்மையான பதில் உண்மையான செயற்பாடுகளில் உள்ளது.
- ச.மோகன்