sterlite tuticorinகொரொனோ பெருந் தொற்றால் இந்தியா முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை பெருமளவில் உள்ளது. இதைக் காரணங் காட்டி வேதாந்தா நிறுவனம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறந்து அங்கு ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி வழங்கினால், நாளொன்றுக்கு ஆயிரம் டன்னுக்கு மேல் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும், அதை மக்களுக்கு இலவசமாக வழங்கத் தயாராக உள்ளோம் என்று உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்திருந்தது.

அந்த மனு 22.4.2021 அன்று விசாரணைக்கு வந்த போது ஸ்டெர்லைட் ஆலையைத் திறந்து அங்கு ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி வழங்கலாம் என்று மத்திய அரசின் வழக்கறிஞர் கருத்துக் கூறியிருந்தார். இது தொடர்பாகப் பதிலளிக்கக் கால அவகாசம் வேண்டும் என்று தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்த நிலையில், இந்த இடைக்கால மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் 23.4.2021 அன்று விசாரணைக்கு வந்தது.

மக்கள் கருத்துக் கேட்பு:

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஒரு கொந்தளிப்பான சூழல் உருவானதை உளவுத் துறை மூலம் அறிந்து கொண்ட மாவட்ட நிர்வாகம் 23.4.2021 அன்று அவசர கதியில் காலை 8 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஒரு கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தியது.

இந்த இடைவெளியில் வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் ஆதரவாளர்களைத் தனது வழக்கமான பாணியில் திரட்டியது. ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் தன்னெழுச்சியாய்த் திரண்டனர். ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம், வணிகர் சங்கம், மீனவர் சங்கம், துறைமுக லாரி ஓட்டுநர் சங்கம்,மக்கள் அதிகாரம், மதிமுக, அமமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி,தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்று ஒரு பெரும் மக்கள் திரள் ஆட்சியர் அலுவலகத்தை நிறைத்தது.

மூன்று பேர் ஆதரவு:

கூட்டம் ஆரம்பித்தவுடன் மாவட்ட ஆட்சியர் பேசும் பொது ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க ஆதரவு தெரிவிப்பவர்கள் கை உயர்த்தும்படி கேட்டுக் கொண்டார். உடனே மூன்று ஆண்கள் மட்டும் கை தூக்கினர். அங்கிருந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் அவர்களை நோக்கித் தாக்குவதற்கு ஓடினார்கள். பலர் அவர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டினர்.

இதற்கிடையில் போலீசார் தலையிட்டு அவர்களை அங்கிருத்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். கூட்ட அரங்கை விட்டு வெளியே வந்தபின்னும் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் அந்த மூவரையும் தாக்க முயற்சித்தனர். போலீசார் அவர்களைப் பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர்.

நிலைமைக் கட்டுக் கடங்காமல் போவதைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் சிறிது சிரமப்பட்டன. ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களின் ஒருமித்த மனநிலையைப் புரிந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் ஒரு மணி நேரத்தில் மக்களின் கருத்துக்குச் செவி சாய்த்தார். ஸ்டெர்லைட்ஆலையைத் திறக்க அனுமதிக்க மாட்டோம் என்று உறுதி அளித்தார்.

எதிர்ப்பாளர் கருத்து:

மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த வசந்தி (பண்டாரம்பட்டி கிராமம்) பேசும்போது, ”இந்தப் பகுதியில் மக்கள் சுத்தமான காற்றைச் சுவாசிக்க முடியாமல் மாசுபடுத்திய ஸ்டெர்லைட் ஆலை கொரோனாவை விட மோசமானதாகும். கொரோனா எங்களை மட்டும் அழிக்கும். ஸ்டெர்லைட் ஆலைத் திறக்கப்பட்டால் அடுத்த தலைமுறையே அழிந்து விடும். தூத்துக்குடி மக்கள் உயிருக்கு அஞ்ச மாட்டோம். ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துப் போராடி ஏற்கெனவே 13 பேர் செத்துவிட்டோம். இன்னும் எத்தனை பேர் செத்தாலும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்க மாட்டோம் ” என்று ஆவேசத்துடன் கூறினார்.

வணிகர் சங்க மாநில இளைஞர் அணிச் செயலாளர் ராஜா கடந்த கால நிகழ்வுகளை ஒப்பிட்டுப் பேசும்போது, ”கடந்த 2013 மார்ச் 23 அன்று ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்தவர்களுக்கு மூச்சுத் திணறலும், கண் எரிச்சலும் ஏற்பட்டது. தூத்துக்குடி நகரம் முழுவதும் மக்கள் தலைவலி, கண் எரிச்சல், இருமல் போன்ற உடல்நலக் குறைவுக்கு உள்ளானார்கள்.

இதற்குக் காரணம் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயு என கண்டறியப் பட்டது. இதனைத் தொடர்ந்து சுற்றுச் சூழல் விதிகளை மீறியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு மார்ச் 29 அன்று ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. நச்சு வாயுவை உற்பத்தி செய்தஸ்டெர்லைட்,ஆக்சிஜன் உற்பத்தி செய்யப் போவதாகக் கூறுவது தார்மீக அடிப்படையில் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல” என்று தெளிவாகத் தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாத்திமா பாபு பேசும்போது, “தேச நலன் கருதி ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆக்சிஜன் உற்பத்தி செய்து இலவசமாக மக்களுக்கு வழங்கப் போவதாகக் கூறுவது மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கான முயற்சி ஆகும். ஆக்சிஜன் உற்பத்தி செய்ய எத்தனையோ நிறுவனங்கள் உள்ளன.

மெடிக்கல் ஆக்சிஜன் உற்பத்தி , இண்டஸ்ட்ரியல் ஆக்சிஜன் உற்பத்தி என இதில் பல நிறுவனங்கள் உள்ளன. இவர்களால் நடப்புத் தேவையை நிறைவு செய்ய முடியவில்லையெனில் ஸ்டெர்லைட் என்ற அடையாளத்தை முற்றிலும் நீக்கிவிட்டு, அரசு ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனமாக மாற்றினால் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என்று தீர்க்கமான முடிவைத் தெரிவித்தார்.

சமம் குடி மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த ஜான் ராயன் பேசும் போது, “ஆக்சிஜன் தயாரிப்பு என்ற போலி வடிவத்தில் சதியின் உச்சமாக குறுக்கு வழியில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு அதன் நிர்வாகம் முயற்சிக்கிறது. மாவட்ட நிர்வாகமும், மாநில அரசும் அதற்கு அனுமதிக்கக் கூடாது” என்று தெரிவித்தார்.

இக்கருத்துக் கேட்புக் கூட்டத்தில் திமுகவின் சார்பில் எவரும் கலந்து கொள்ளவில்லை என்றாலும் “ஸ்டெர்லைட்ஆலை ஏற்படுத்திய சுற்றுச் சூழல் கேடுகளையும், அது மக்களிடையே ஏற்படுத்திய அச்சத்தையும் எளிதில் புறந்தள்ளிவிட முடியாது “ என்று தூத்துக்குடி நாடாளுமன்ற திமுக உறுப்பினர் கனிமொழி கருத்துத் தெரிவித்துள்ளார்.

பெயர் குறிப்பிட விரும்பாத காவல் துறை அதிகாரி ஒருவர் பேசும்போது, ”அரசு ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதித்தால் மக்கள் போராட அரசே காரணமாகிவிடும்” என்று நேர்மையுடன் கள நிலவரத்தை நம்மிடையே பகிர்ந்து கொண்டார்

சனநாயக தரைவழிப் போக்குவரத்து ஓட்டுநர் மற்றும் பொதுத் தொழிலாளர் நலச் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் சகாயம் பேசும் போது, ”ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆக்சிஜன் உற்பத்தி என்ற பெயரில் ஒரு நாடகம் நடத்துகிறது. INDX நிறுவனம் ஆக்சிஜன் உற்பத்தியில் உலக அளவில் முன்னனி வகிக்கிறது. இந்நிறுவனம் இந்திய உப கண்டத்தில் எல்லா மாநிலங்களிலும் தன்னுடைய திரவ ஆக்சிஜன் தொழிற்சாலையை நிறுவியுள்ளது.

தற்போதைய ஆக்சிஜன் தேவையைத் தங்களால் பூர்த்தி செய்ய முடியும் என்று இதன் இயக்குநர் சித்தார்த் ஜெயின் கூறியியுள்ளார். தங்கள் நிறுவனம் நாளொன்றுக்கு 7,200 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்கிறது, ஆனால் சந்தைத் தேவை 5000 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே என்று தெளிவுபட எடுத்துரைத்துளார்.

எனவே ஆக்சிஜன் உற்பத்தி என்ற பெயரில் வேதாந்தா குழுமத்தின் உரிமையாளர் அனில் அகர்வால் புது நாடகம் போடுகிறார். இந்த கபட நாடகம் தூத்துக்குடி மக்களிடம் செல்லாது. பொது மக்களின் சுவாசக் காற்றை நாசம் செய்த ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க மத்திய அரசும், மாநில அரசும் ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது” என்று தக்க சான்றுகளுடன் விரித்துரைத்தார்.

உச்ச நீதிமன்றக் கருத்து:

ஆக்சிஜனுக்கான தேவை என்பது தேசிய அவசர நிலையாக உள்ளது. சுற்றுச் சூழல் விதிகளுக்கு உட்பட்டு ஆக்சிஜன் ஆலையை மட்டும் இயக்க அனுமதிப்பதில் என்ன பிரச்சனை உள்ளது? ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக அரசு ஏன் ஆக்சிஜன் தயாரிக்கக் கூடாது? தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நடத்த அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு தெரிவித்தது.

INDX நிறுவனம் ஆக்சிஜன் உற்பத்தியில் சந்தைத் தேவையை விட அதிகமாக உற்பத்தி செய்யும் திறன் கொண்டது என்ற சேதியை உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு தமிழக அரசு வழக்கறிஞர் கொண்டு செல்ல வேண்டும் என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் குரல் கொடுக்கின்றனர்.

- ச.மோகன்

Pin It