ஒரு காலத்தில் அரசியல் என்பது மக்கள் கூடும் இடங்களில் பிறந்தது. தெருமுனை உரையாடல்களிலும், பொதுக்கூட்ட மேடைகளிலும், புத்தகங்களிலும், செய்தித்தாள்களிலும் அரசியல் சிந்தனைகள் வளர்ந்தன. ஒரு தலைவர் மக்களிடம் நேரடியாகப் பேசினார். மக்கள் அவருடைய கருத்துகளை கேட்டார்கள், விவாதித்தார்கள், ஏற்றார்கள் அல்லது மறுத்தார்கள். ஆனால் இன்று அரசியலின் மிகப்பெரிய மேடை நம் கையில் இருக்கும் சிறிய திரையாக மாறிவிட்டது. மனிதர்கள் அரசியலைத் தேடிச் சென்ற காலம் மாறி, அரசியல் மனிதர்களின் கைப்பேசிக்குள் நுழைந்து அவர்களின் சிந்தனைகளைத் தேட ஆரம்பித்துவிட்டது.
இன்று நாம் என்ன பார்க்க வேண்டும், எதை நம்ப வேண்டும், எந்த கருத்தை ஆதரிக்க வேண்டும், எந்த கருத்தை எதிர்க்க வேண்டும் என்பதில் நம்முடைய சொந்த தேர்வை விட கண்ணுக்குத் தெரியாத வழிமுறைக் கணக்கீடுகளின் (Algorithms) தாக்கம் அதிகரித்து வருகிறது. நாம் பார்க்கும் ஒவ்வொரு பதிவு, காணொளியும் தற்செயலாக நம் முன் வருவதில்லை. நம் விருப்பங்கள், தேடல்கள், பார்க்கும் நேரம், உணர்வுகள் ஆகியவற்றை கணக்கிட்டு நமக்கு ஏற்ற தகவல் உலகத்தை இந்த வழிமுறைகள் உருவாக்குகின்றன. இதன் விளைவாக மனிதன் உலகத்தைப் பார்க்கிறான் என்று நினைக்கிறான்; ஆனால் சில நேரங்களில் அவனுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உலகத்தையே அதிகமாக பார்க்கிறான்.
இதையே தகவல் வடிகட்டி குமிழி (Filter Bubble) என்ற கருத்தின் மூலம் இணைய செயற்பாட்டாளர் எலி பாரிசர் (Eli Pariser) 2011-ல் விளக்கினார். மனிதனின் பழைய விருப்பங்களின் அடிப்படையில் அவனுக்கான தனிப்பட்ட தகவல் சூழல் உருவாகும்போது, மாறுபட்ட கருத்துகளை சந்திக்கும் வாய்ப்பு குறையலாம் என்பதே அவரது எச்சரிக்கை.
ஆனால் இதற்கும் மாற்றுக் கருத்துகள் உள்ளன. சில ஆய்வாளர்கள் இந்த ஆபத்து சில நேரங்களில் மிகைப்படுத்தப்படுகிறது என்கிறார்கள். மனிதர்கள் சமூக ஊடகங்கள் மூலம் மட்டும் அல்லாமல் குடும்பம், நண்பர்கள், வேலை இடம், பிற ஊடகங்கள் மூலமும் கருத்துகளை உருவாக்குகிறார்கள் என்பதால், வழிமுறைக் கணக்கீடுகள் மட்டும் மனித சிந்தனையை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது என்பதும் அவர்களின் வாதம். உண்மை இந்த இரண்டிற்கும் நடுவில் இருக்கலாம். தொழில்நுட்பம் மனிதனை முழுமையாக கட்டுப்படுத்தாது. ஆனால் கேள்வி கேட்கும் பழக்கம் இல்லாத சமூகத்தில், அது ஏற்கனவே உள்ள நம்பிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் சக்தியாக மாற முடியும்.
ஒரே சமூகத்தில் வாழும் இரண்டு மனிதர்கள் ஒரே அரசியல் நிகழ்வைப் பற்றி இரண்டு வேறு பார்வைகளுக்குள் வாழும் நிலை உருவாகிறது. ஒருவரின் திரையில் ஒருவர் தலைவராக தெரிகிறார்; இன்னொருவரின் திரையில் அதே நபர் எதிரியாக தெரிகிறார். உண்மை ஒன்று தான். ஆனால் உண்மையை அடையும் பாதைகள் மாறுகின்றன.
இந்த புதிய அரசியல் சூழலில் சமூக ஊடக செல்வாக்காளர்கள் (Influencers) மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளனர். முன்பு சமூகத்தை வழிநடத்தியவர்கள் சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், சமூக இயக்கங்கள். ஆனால் இன்று அதிக பின்தொடர்பவர்களை கொண்ட ஒருவர் கூட ஆயிரக்கணக்கான மக்களின் கருத்தை பாதிக்கும் சக்தியை பெறுகிறார். ஒரு பொருளை வாங்க வைக்கும் அதே செல்வாக்கு, ஒரு அரசியல் கருத்தையும் ஏற்றுக்கொள்ள வைக்க முடியும். இங்கு அறிவின் ஆழத்தை விட பிரபலத்தின் அகலம் முக்கியத்துவம் பெறும் ஆபத்து உருவாகிறது. இதனால் கொள்கை மைய அரசியலிலிருந்து பிம்ப மைய அரசியலுக்கு சமூகம் நகர ஆரம்பிக்கிறது.
ஒரு காலத்தில் தலைவர்கள் அவர்களின் கொள்கைகள், போராட்டங்கள், மக்கள் பணிகள் ஆகியவற்றால் மதிப்பிடப்பட்டார்கள். இன்று அவர்களுக்காக உருவாக்கப்படும் அரசியல் பிம்ப உருவாக்கமும் (Political Branding) முக்கிய இடத்தை பிடித்துள்ளது. ஒரு பொருளை சந்தையில் விற்பனை செய்வது போல அரசியல் பிம்பங்களும் திட்டமிட்டு வடிவமைக்கப்படுகின்றன. தலைவர்களின் பேச்சு, புகைப்படம், உடை, சமூக ஊடக தோற்றம் என அனைத்தும் ஒரு செய்தியை உருவாக்கும் கருவிகளாக மாறுகின்றன.
வேகமாக பரவும் கலாச்சாரம் (Viral Culture) இந்த மாற்றத்தை இன்னும் தீவிரப்படுத்துகிறது. ஒரு சில நொடிகள் கொண்ட காணொளி பல ஆண்டுகளாக உருவான அரசியல் பார்வையை மாற்றும் சக்தி பெற்றிருக்கிறது. ஆனால் வேகமாக பரவும் அனைத்தும் உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. நெருப்பு வேகமாக பரவும் என்பதற்காக அது வெளிச்சம் தரும் சூரியனாக மாறிவிடாது. இன்று அரசியலில் உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான போட்டி மட்டுமல்ல நடப்பது. மக்களின் கவனத்தை யார் கைப்பற்றுவது என்ற போட்டியும் நடக்கிறது.
மனித கவனம் இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான வளங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இதையே கவனப் பொருளாதாரம் (Attention Economy) என்கிறோம். எழுத்தாளர் டிம் வூ (Tim Wu) தனது “The Attention Merchants” நூலில் மனிதர்களின் கவனத்தை கைப்பற்றுவது எப்படி ஒரு பெரிய வணிக அமைப்பாக மாறியது என்பதை ஆராய்கிறார். நாம் திரையில் செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் யாரோ ஒருவருக்கு மதிப்புடையதாக மாறுகிறது.
அதனால் ஆழமான சிந்தனையை விட, மனிதனை தொடர்ந்து பார்க்க வைக்கும் உணர்ச்சி தூண்டும் பதிவுகள் அதிகமாக பரவுகின்றன. இதன் தொடர்ச்சியாக பணம் கொடுத்து உருவாக்கப்படும் கருத்தோட்டங்கள் (Paid Narratives) மற்றும் போலி மக்கள் ஆதரவு உருவாக்கம் (Astroturfing) போன்றவை அரசியல் உலகின் புதிய சவால்களாக மாறியுள்ளன.
ஒரு கருத்து உண்மையாக மக்களிடம் இருந்து உருவாகிறதா அல்லது மக்கள் கருத்து போல திட்டமிட்டு உருவாக்கப்படுகிறதா என்பதை கண்டுபிடிப்பது கடினமாகிறது. ஆனால் இங்கு முழு குற்றத்தையும் தொழில்நுட்பத்தின் மீது மட்டும் சுமத்த முடியாது.
வழிமுறைக் கணக்கீடுகள் மனித சிந்தனையை பாதிக்கின்றன என்பது உண்மை. ஆனால் அதை எதிர்கொள்ள தேவையான விமர்சன சிந்தனையை (Critical Thinking) நாம் வளர்த்திருக்கிறோமா என்பதே இன்னொரு முக்கியமான கேள்வி.
ஒரு தகவல் நம்மிடம் வந்தவுடன் “இது உண்மையா?”, “இதன் பின்னால் யாருடைய நோக்கம் இருக்கிறது?”, “இதற்கு எதிரான கருத்து என்ன?” என்று கேட்கும் திறனே விமர்சன சிந்தனை.
ஆனால் பல நேரங்களில் கல்வி முறை கேள்வி கேட்கும் மனிதர்களை விட, கொடுக்கப்பட்ட பதில்களை நினைவில் வைத்திருக்கும் மனிதர்களையே அதிகம் உருவாக்குகிறது. தேர்வில் சரியான பதிலை தேர்வு செய்ய கற்றுக்கொண்ட தலைமுறை, சமூகத்தில் சரியான கேள்வியை கேட்க மறந்துவிடும் ஆபத்து இருக்கிறது.
எதிர்கால கல்வியில் தகவல் அறிவு (Digital Literacy) முக்கிய இடம் பெற வேண்டும். மாணவர்கள் தகவலை மனப்பாடம் செய்வதை விட, அதன் மூலத்தை ஆராயவும், ஆதாரத்தை தேடவும், எதிர் கருத்துகளை புரிந்து கொள்ளவும் கற்றுக் கொள்ள வேண்டும். “என்ன சிந்திக்க வேண்டும்” என்று சொல்லும் கல்வியிலிருந்து “எப்படி சிந்திக்க வேண்டும்” என்று கற்றுக் கொடுக்கும் கல்விக்கு நாம் நகர வேண்டும்.
ஒரு காலத்தில் ஆட்டு மந்தையை வழிநடத்த மேய்ப்பன் இருந்தான். அந்த மேய்ப்பனை பார்க்க முடிந்தது. ஆனால் இன்றைய டிஜிட்டல் காலத்தின் மேய்ப்பன் கண்ணுக்குத் தெரியவில்லை. அவன் திரையின் பின்னால் இருக்கிறான். அவன் கட்டளையிடுவதில்லை. ஆனால் மெதுவாக நமது விருப்பங்களையே வடிவமைக்க முயற்சிக்கிறான்.
ஜனநாயகத்தின் உண்மையான வலிமை மக்கள் வாக்களிப்பதில் மட்டும் இல்லை. அவர்கள் சுதந்திரமாக சிந்தித்து வாக்களிப்பதில் இருக்கிறது. எதிர்கால அரசியல் போர்கள் தெருக்களில் மட்டும் நடக்காது. அவை நமது திரைகளுக்குள்ளும், கவனத்திற்குள்ளும், சிந்தனைகளுக்குள்ளும் நடக்கும்.
தொழில்நுட்பம் மனிதனின் எதிரி அல்ல. ஆனால் மனித சிந்தனையை கட்டுப்படுத்தும் அதிகாரமாக அது மாறும்போது அதை கேள்வி கேட்பது அவசியம். திரைகள் நமக்கு தகவல்களை காட்டட்டும். ஆனால் நமது முடிவுகளை அவை எடுக்கக்கூடாது.
மனிதர்கள் தங்கள் தலைவர்களை தாங்களே தேர்ந்தெடுத்ததாக நினைக்கும் நாளில் கூட, அவர்களின் சிந்தனைகளை முன்பே திரைகள் தேர்ந்தெடுத்திருக்கக் கூடாது என்பதே எதிர்கால ஜனநாயகத்தின் மிகப் பெரிய சவால். திரைகள் அரசியலை காட்டும் கருவியாக இருக்க வேண்டும். அரசியலை தீர்மானிக்கும் அதிகாரமாக அல்ல.
- கோபி சேகுவேரா