கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

மனித சமூகத்தின் வளர்ச்சிக்கும், ஒற்றுமைக்கும், ஒழுங்கான வாழ்விற்கும் வழிகாட்டியாக இருப்பது தலைமைப் பாத்திரமாகும். சமூகத்தில் மாற்றத்தை உருவாக்கவும், மக்களை ஒரே நோக்கில் இணைக்கவும், அவர்களின் சிந்தனைக்கும் செயலுக்கும் திசை காட்டவும்தலைமைப் பாத்திரம் முக்கிய பங்கு வகிக்கிறது. தலைமை என்பது ஒரு பதவி அல்ல; அது ஒரு பொறுப்பு, ஒரு பண்பு மற்றும் ஒரு தியாக மனப்பான்மை ஆகும்.

மனிதன் தனியாக வாழ முடியாதவன். அவன் சமூகமாக இணைந்து வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். மனிதனின் கூடிவாழும் போக்குகளில் பண்பு மாற்றங்கள் நிகழ்கின்றன. அந்த மாற்றம் ஒரு அமைப்பாகவும், ஒரு இயக்கமாகவும் கூர்மையடைந்து அவனை நெறிப்படுத்துகிறது அல்லது அவனைப் பிற்போக்கு அடையாளமாக மாற்றிவிடுகிறது. குடும்பம் என்ற அமைப்பில் தாய்–தந்தையர் தலைமைப் பாத்திரமாக விளங்குகின்றனர். அதுபோலவே, ஒரு மனிதனின் பிறப்பே அவனை இன்னார் குடும்பம், இன்னார் சாதி, இன்னார் மதம், இன்னார் இனம் போன்ற சமூக அமைப்புகளின் உறுப்பினராக மாற்றிவிடுகிறது. அவன் அறிந்தோ அறியாமலோ இவ்வமைப்புகளுக்குரிய பொறுப்புகளைச் சுமக்கத் தொடங்குகிறான்.

 ஒரு சமூகத்தின் முன்னேற்றம் அதன் தலைமைப்பாத்திரத்தின் தரத்தின்மேல் தான் அதிகமாக சார்ந்திருக்கிறது. “தத்துவமே தலைமை” எனும் வழிகாட்டும் – வழிநடத்தும் தலைமையே மாற்றத்திற்கான செயல்திட்டங்களையும் அதன் உத்திகளையும் வரையறுக்கும் ஆளுமைமிக்க தலைமைப் பாத்திரமாக விளங்குகிறது.

 தலைமைப் பாத்திரம் என்பது தத்துவமும் தனிநபரும் இணைந்த முழுமையான ஆளுமையாகும். ஒருவருடைய வாழ்க்கைமுறை, சிந்தனை, நடத்தை, செயல் மற்றும் மனிதநேயப் பண்புகள் ஆகிய அனைத்தும் சேர்ந்தே தலைமைப்பாத்திரத்தை உருவாக்குகின்றன. ஒருவருக்கு பதவி கிடைப்பதால் மட்டுமே அவர் தலைவராகிவிட மாட்டார். அவருடைய பண்பும், ஒழுக்கமும், நேர்மையும், மக்களிடம் அவர் காட்டும் அணுகுமுறையும், சொல்–செயல் ஒற்றுமையும் தான் அவரை உண்மையான தலைவராக்குகின்றன.

ஒரு நல்லதலைமைப் பாத்திரம் கொண்ட நபர் தன்னை விட பிறரை முன்னிலைப் படுத்துவார். அவர் தனிப்பட்ட லாபத்தை விட பொதுநலனையே முதன்மையாகக் கருதி செயல்படுவார். மக்களின் பிரச்சினைகளைத் தனது பிரச்சினைகளாகக் கருதி, அவற்றுக்கு தீர்வு காண முயற்சிப்பார். இதனால் மக்கள் அவர்மீது முழு நம்பிக்கை வைத்து அவரைப் பின்பற்றத் தொடங்குவார்கள்.

தலைமைப் பாத்திரம் கொண்டவர் மக்களுக்கு முன்மாதிரியாக விளங்க வேண்டும். அவர் பேசுவதால் மட்டும் அல்ல, தனது செயல்களாலும் பிறருக்கு வழிகாட்ட வேண்டும். நேர்மை, ஒழுக்கம், பொறுமை, துணிவு, பொறுப்பு உணர்வு போன்ற பண்புகள் அவரிடம் இயல்பாகவே காணப்பட வேண்டும். அவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் சமூகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியத்துவம் உடையதாக இருப்பதால், அவை சிந்தித்து எடுக்கப்பட வேண்டும்.

சமூகத்தில் நல்லதலைமைப் பாத்திரம் உள்ள இடங்களில் ஒற்றுமையும் வளர்ச்சியும் நிலவுகின்றன. மக்கள் தங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நம்பிக்கையைப் பெறுகின்றனர். ஆனால்,தலைமைப் பாத்திரம் இல்லாத சமூகம் குழப்பம், சிதைவு மற்றும் திசையற்ற நிலையை எதிர்கொள்ளும். அதனால்,தலைமைப் பாத்திரம் சமூக வளர்ச்சிக்கான அடித்தளமாகக் கருதப்படுகிறது.

வரலாற்றில் நல்லதலைமைப் பாத்திரம் கொண்ட ஆளுமைகள் நாடுகளின் போக்கை மாற்றியுள்ளனர். அவர்கள் மக்களை ஒன்றிணைத்து, அடிமைத்தனத்திலிருந்து விடுதலைக்கு வழிவகுத்துள்ளனர். இத்தகைய தலைமைப்பாத்திரங்களே மக்களுக்கு நம்பிக்கையையும் தன்னம்பிக்கையையும் அளித்துள்ளனர்.

டாக்டர் பி.ஆர். அம்பேத்கரும் தந்தை பெரியாரும் தலைமைப்பாத்திரத்தின் உண்மையான முகங்கள். சில தலைவர்கள் பதவியால் அடையாளம் பெறுகிறார்கள்; சில தலைவர்கள் பதவிகளைத் தாண்டி காலத்தை ஆள்கிறார்கள். இந்த இரண்டாவது வரிசையில் முதலில் நின்றவர்களே அம்பேத்கரும் பெரியாரும். இவர்கள் இருவரும் வெறும் அரசியல் தலைவர்கள் அல்ல; ஒரு சமூகத்தின் மனநிலையை மாற்றிய இந்தியாவின் தலைசிறந்த தலைமைப்பாத்திரங்கள்.

வலியிலிருந்து வடிவெடுத்த தலைவர் – அம்பேத்கர்.

அம்பேத்கரின் வாழ்க்கை கதை ஒரு மனிதனின் வாழ்க்கை அல்ல — ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வரலாறு. “நீ தாழ்ந்தவன்” என்ற முத்திரையைச் சுமந்தவர், “நீ சமமானவன்” என்று ஒரு நாட்டின் அரசியலமைப்பில் எழுதி வைத்தார். ‘கல்வியே விடுதலையின் முதல் ஆயுதம்’ என்பதை உணர்ந்து, உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் கற்ற அறிவை அவர் தனக்காக சேமிக்கவில்லை; தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளாக மாற்றினார். இந்திய அரசியலமைப்பின் இதயத்தில் ‘சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம்’ என்ற மூன்று சொற்களை பதித்ததன் மூலம், தலைமை என்பது அதிகாரம் பெறுவது அல்ல — உரிமை பெற்றுத் தருவது என்பதை அவர் நிரூபித்தார்.

மனநிலைகளை உடைத்த தலைவர் – பெரியார்.

பெரியார் ஒரு அரசியல்வாதி அல்ல; ஒரு சமூக மனநிலை மருத்துவர். அவர் நோயாகக் கண்டது — சாதி அடிமைத்தனம், மூடநம்பிக்கை, பெண் அடக்குமுறை. அவர் கொடுத்த மருந்து — பகுத்தறிவு, சுயமரியாதை, சமத்துவம். “யோசி” என்ற ஒரே சொல்லால் ஒரு சமூகத்தை சிந்திக்க வைத்த தலைவர் பெரியார். அவர் மக்களை பின்பற்றச் செய்யவில்லை; மக்களை மனிதர்களாக மாறச் செய்தார்.  

அம்பேத்கரும் பெரியாரும் சேர்ந்து, “ தலைமைப் பாத்திரம் என்பது மக்களை அடிமைகளாக வைத்திருப்பது அல்ல — மனிதர்களாக உயர்த்துவது” என்ற வரையறையை சமூகத்திற்கு அளித்தனர்.

இன்றைய உலகில் அரசியல், கல்வி, தொழில், குடும்பம் என அனைத்துத் துறைகளிலும்தலைமைப் பாத்திரம் அவசியமாக உள்ளது. குடும்பத்தில் பெற்றோர், பள்ளியில் ஆசிரியர்கள், அரசியலில் தலைவர்கள் — அனைவரும் சமூகத்தின் திசையை நிர்ணயிக்கும் தலைமைப்பாத்திரங்களாக செயல்படுகின்றனர்.

இன்றைய இளைய சமூகம் தலைமைப்பாத்திரத்தை திரையில் தேடத் தொடங்கியுள்ளது. திரைப்படங்களில் தோன்றும் நாயகர்களின் பிம்பங்களே அவர்களுக்கு “தலைவர்” எனப் படமாக்கப்படுகின்றன. ஆனால் அந்தத் தலைமைகள் பெரும்பாலும் காட்சிக்காக வடிவமைக்கப்பட்டவை; கவர்ச்சிக்காக உருவாக்கப்பட்டவை. அவை சிந்தனையை வளர்ப்பதில்லை; கைதட்டலை மட்டுமே தேடுகின்றன.

திரைத் தலைமைகள் நிமிடங்களில் உருவாகின்றன. ஒரு பாடல், ஒரு வசனம், ஒரு சண்டைக் காட்சி — இவைகளால் “தலைவன்” உருவாக்கப்படுகிறான். ஆனால் அந்த தலைமைகள் சமூகத்திற்கு எந்தத் திசையையும் அளிப்பதில்லை. அவை மாற்றத்தை உருவாக்குவதில்லை; வெறும் மயக்கத்தை மட்டுமே உருவாக்குகின்றன.

இதனை நமது வரலாற்றின் பார்வையில் நோக்கினால், இது ஒரு கவர்ச்சி பிழை எனக் கருதப்பட வேண்டும். திரையில் தேடும் தலைமை ஒரு தலைமுறையை மயக்கத்தில் நிறுத்தும். வரலாற்றில் தேடும் தலைமை ஒரு சமூகத்தை விடுதலைக்கு நடத்தும்.இன்றைய இளைய சமூகம் மீண்டும் திரும்பிப் பார்க்க வேண்டிய இடம் திரை அல்ல — வரலாறு. அங்கே தான் தலைமைப்பாத்திரத்தின் உண்மையான முகங்கள் இருக்கின்றன.

திரை நாயகனால் மட்டுமே தான் இந்த நாட்டை காப்பாற்ற முடியும்; மக்களை வளமைப் பாதையில் கூட்டிச் செல்ல முடியும்” என்ற நம்பிக்கை இன்றைய இளைய சமூகத்தில் வேகமாக விதைக்கப்படுகிறது. ஆனால் இது ஒரு அரசியல் உண்மை அல்ல — ஒரு கவர்ச்சியான மயக்கம்.

இன்றைய இளைய தலைமுறை ‘மீட்பர்’ எனக் கருதும் தலைமைப்பாத்திரங்கள், தன்னால் சுயமாக மக்கள் பிரச்சினைகள் குறித்து பேசவும், எழுதவும், சிந்திக்கவும் தெரியுமா என்பதே இன்று ஒரு கேள்விக்குறி மட்டும் அல்ல — ஒரு பெரும் ஆச்சரியக்குறி.

நாயகனாக உச்சத்தில் இருக்கும் திரைத்துறையில்கூட, தானே சுயமாக ஒரு கதையையோ, ஒரு திரைக்கதையையோ சிந்திக்கவும், எழுதவும் முடியாத பாத்திரம், “நான் தான் தலைமை” என்று தம்பட்டம் அடிப்பது சமூக அறிவியலின் முன் நிற்கும் ஒரு மிகப்பெரிய ஆச்சரியக்குறியே.

அம்பேத்கர் மக்களிடம் எழுதி எழுதி உரிமைகளை உருவாக்கினார். பெரியார் மக்களிடம் பேசி பேசி சிந்தனைகளை உருவாக்கினார். அண்ணா மக்களிடம் உரையாற்றி உரையாற்றி சமத்துவத்தை உருவாக்கினார். திரை நாயகன் மக்களை மயக்கலாம். வரலாற்றுத் தலைவன் மக்களை மாற்றுவான். இன்றைய இளைய சமூகம் தேர்ந்தெடுக்க வேண்டிய இடம், திரை அல்ல — தத்துவம்.

ஒரே மனிதன் எல்லாம் மாற்றுவான்” — ஒரு திரை மாயை. திரைப்படங்களில் ஒரு தனி மனிதன் தோன்றினாலே, அடுத்த காட்சியில் சமூகமே மாறிவிடுகிறது. அநீதி உடைந்து விடுகிறது. அடக்குமுறை கரைந்து விடுகிறது. ஒரே மனிதன் போதும் — அனைத்துக்கும் தீர்வு. ஆனால் இது திரையின் மொழி. இது வாழ்க்கையின் மொழி அல்ல. சமூக மாற்றம் என்பது ஒரு வசனத்தால் நடப்பதில்லை. ஒரு சண்டைக் காட்சியால் உருவாகுவதில்லை. அது இயக்கங்களால், கட்சிகளால், மக்களின் கூட்டு சிந்தனையால், தொடர்ச்சியான போராட்டங்களால் தான் உருவாகிறது. தனிமனிதன் ஒரு தீப்பொறி மட்டுமே. ஆனால் தீப்பொறி மட்டும் தீயாக மாறாது.அதை பரப்ப காற்றும் வேண்டும் — அந்தக் காற்று தான் மக்கள்.

எந்த தலைவரும் நான்தான் தலைவர் என்று சுயதம்பட்டம் அடிப்பதில்லை.தலைமைப் பாத்திரம்எனும் பண்பு மக்களை பண்படுத்தும், புரட்சிப் பாதையில் அழைத்துச் செல்லும். மக்கள் தானகவே தலைமை தந்தார்கள். மக்கள் இயக்கமாக மாறினார்கள்.

முடிவாக,தலைமைப் பாத்திரம் என்பது அதிகாரத்தின் வெளிப்பாடு அல்ல; அது பண்பின் வெளிப்பாடு. மக்களின் நலனை முதன்மையாகக் கருதி செயல்படும், நேர்மையையும் ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்கும், பிறருக்கு முன்மாதிரியாக விளங்கும் ஆளுமைகளே உண்மையான தலைமைப்பாத்திரங்கள். சமூகத்தின் நிலையான முன்னேற்றத்திற்கும் ஒளிமயமான எதிர்காலத்திற்கும் நல்லதலைமைப் பாத்திரம் கொண்ட மனிதர்கள் அவசியம் தேவைப்படுகின்றனர்.

- கோபி சேகுவேரா