அன்பார்ந்த தோழர்களே….

இன்று நாடு எதிர்நோக்கும் பார்ப்பனிய கார்ப்பரேட் பாசிசம் எப்போது தேர்தல் பாதையைத் தூக்கி எறியும், எப்போது இந்திய அரசியலமைப்பு சட்டத்தை தூக்கி எறியும், எப்பொழுது ஒரு பார்ப்பனிய முதலாளித்துவ கொடுங்கோன்மையை, சர்வாதிகாரத்தைக் கொண்டுவரும் என்று முற்போக்கு, இடதுசாரி, ஜனநாயகவாதிகள் கவலையுடன் எதிர்நோக்கியிருக்கின்றனர். பாசிச எதிர்ப்புக் கூட்டணி என்ற வகையில் நாடு முழுவதும் ஜனநாயகவாதிகளை ஒன்றிணைக்க முயன்று வருகின்றனர்.

அந்தந்த மாநிலத்தில் ஏற்கனவே இருக்கும் தேர்தல் கட்சிகளோடு அவர்கள் தலைமையில் ஒன்றிணைவது அல்லது I.N.D.I.A கூட்டணியைத் தேர்தலில் ஆதரிப்பது என்ற வகையில் தான் செயல்திட்டம் இருந்து வருகிறது.

கடந்த காலங்களில் ஆட்சி செய்த காங்கிரஸ் புதிய பொருளாதார கொள்கையைச் சற்று மென்மையான ஜனநாயக வடிவில் செய்து வந்தது. வெறுப்பு அரசியல் அதனிடம் இல்லை. ஆனால் தற்போது பிஜேபி வெறுப்பு அரசியலோடு ஜனநாயக சட்டங்களை நீக்கியும் பார்ப்பனிய ஆதிக்கத்தை நிலைநாட்டியும் வருகிறது.

இந்துத்துவ பாசிசம் நாடு முழுவதும் வளர்வதற்கு காங்கிரஸ் துணை போயிருக்கிறது அல்லது அது குறித்து கண்ணோட்டம் இல்லாமல் இருந்திருக்கிறது. அதன் விளைவு தான் தற்போதைய சூழல். (அதன் வரலாறு குறித்து இந்தப் பகுதியில் நாம் பேசப் போவதில்லை)

பாரதிய ஜனதாக் கட்சியை எதிர்க்கும் பல்வேறு மாநிலக் கட்சிகள் கூட, புதிய பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. தனியார்மயம் தாராளமயம், உலகமயம் என்கின்ற அதனுடைய கடந்த கால கொள்கை இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதோடு பல்வேறு மக்கள் விரோதச் செயல்களிலும் லஞ்ச ஊழலிலும் திளைத்துப் போய் இருக்கிறது.

இந்நிலையில் முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கைக்கு, இந்து மதவெறிப் பாசிசத்திற்கு எதிராக இருக்கும் சித்தாந்தம் என்ற வகையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமே இருக்கின்றன. ஆனால் அப்படிப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட நாடு முழுவதும் பல்வேறு கட்சிகளாகவும், அமைப்புகளாகவும் தேர்தலில் பங்கெடுத்துக் கொள்ளும் மற்றும் தேர்தலைப் புறக்கணிக்கும் அமைப்புகளாகவும் பிரிந்து நிற்கின்றன.

பல்வேறு மாநிலங்களில் தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றாலும் மக்கள் விரோதமாக, லஞ்ச ஊழலில் ஈடுபடாதவர்களாக, நேர்மையானவர்கள், நியாயமானவர்கள் என்று பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கையைப் பெற்ற கட்சியினர் என்றால் அது கம்யூனிஸ்ட் கட்சியினர் தான்.

அப்படிப்பட்ட கட்சியினர் மீது மக்களுக்குப் பெரும்பான்மையாக இருக்கும் விமர்சனம் என்னவென்றால் கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்து கொள்ளையடித்த, மக்கள் விரோத செயலில் ஈடுபட்ட, ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பெரிய கட்சிகளோடு இவர்கள் கூட்டணி சேருவதும் சில சீட்டுகளுக்காக அவர்களிடம் காத்திருப்பதும் பல்வேறு கட்சிகளாக பிரிந்து இருப்பதும் தான் விமர்சனமாக வைக்கப்படுகிறதே தவிர, ஊழல் லஞ்சம் என்று எதிரிகளால் கூட குற்றம் சாட்டப்படாத கட்சி கம்யூனிஸ்ட் கட்சி தான். (சில நபர்கள் விதிவிலக்காக இருக்கலாம்)

ஓட்டுக்குப் பணம் கொடுக்காத, கூட்டத்திற்கு, மாநாட்டிற்கு பணம் கொடுத்து ஆட்களைத் திரட்டாத, எந்த கட்சி ஆட்சியானாலும் மக்களோடு இருந்து போராடும் கம்யூனிஸ்டுகள் தங்கள் பலத்தையும் ஐக்கியத்தையும் அறியாமல் இருப்பது ஏன்? தற்போதைய சூழலுக்குத் தேவைப்படுவதும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடைய ஆளுமை மட்டுமே. அதுவே தற்போதைய நெருக்கடி நிலைக்கு ஒரே தீர்வு.

பாசிச எதிர்ப்பு என்று அனைவரையும் ஒருங்கிணைக்க நினைக்கும் கம்யூனிஸ்டுகள் தங்களுக்குள் ஒருங்கிணைகிறார்களா? அப்படி ஒருங்கிணைய வேண்டும், அதற்கான சமூக, விஞ்ஞான, உள்ளார்ந்த தத்துவ பலமும், மக்கள் பலமும், நெஞ்சுரமும் கம்யூனிஸ்டுகளுக்கு மட்டுமே இருக்கிறது என்று நம்புவதால் மட்டுமே ஒரு கோரிக்கையாக, யோசனையாக, திட்டமாக இக்கட்டுரையை முன் வைக்கிறோம். அல்லது வேறு ஏதேனும் மாற்று ஏதாவது இருந்தாலும் யாரும் முன் வைக்கலாம்.

“கம்யூனிஸ்ட்களுடைய உடனடி நோக்கம் ஏனைய எல்லாப் பாட்டாளி வர்க்க கட்சிகளது உடனடி நோக்கம் என்னவோ அதுவேதான். பாட்டாளிகளை ஒரு வர்க்கமாய் உருப் பெறச்செய்வதும் முதலாளித்துவ மேலாதிக்கத்தை வீழ்த்துவதும், பாட்டாளி வர்க்கம் அரசியல் ஆட்சி அதிகாரம் வென்று கொள்வதும்தான்”. – கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை.

கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு திட்டம் போட்டுக் கொடுப்பதற்கு நாம் எந்த கட்சியின் தலைமையும் அல்ல. கம்யூனிஸ்டுகள் அத்தனை பேரையும் விட நமக்கு அறிவு இருக்கிறது என்ற இறுமாப்போடும் இதை எழுதவில்லை. கடந்த பல ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து மக்களுக்காகப் போராடுபவன் என்ற முறையிலும் மக்களில் ஒருவனாக கம்யூனிஸ்ட்கள் மீது நம்பிக்கை இருப்பவர்களில் ஒருவனாக கம்யூனிஸ்ட்களுக்கு இப்படி ஒரு கடிதத்தை எழுதுவதற்கு உரிமை இருப்பவனாக கருதுவதால் மட்டுமே இக்கட்டுரையை முன் வைக்கிறேன்.

சட்ட ஒழிப்பு;

44 தொழிலாளர்களுக்கான நல சட்டங்களை ஒழிப்பது.

மூன்று வேளாண் சட்டங்கள்

புதிய கல்விக் கொள்கை

நீட், நீம் என கல்வி உரிமையை மறுக்கும் தேர்வுகள்

இயற்கை வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பது.

மின்சாரம் அடிப்படை என்கின்ற உரிமையில் இருந்து மாற்றி கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்குத் தாரை வளர்ப்பது.

அரசு பொதுத்துறை நிறுவனங்களை மட்டமான விலைக்கு தனியாரிடம் விற்பது.

215 லட்சம் கோடிக்கு மேல் இந்திய அரசின் கடன் அதிகரித்துச் செல்வது.

இப்படி எண்ணற்ற சட்டத் திருத்தங்களும் சட்ட சேர்ப்புகளும் அறிவிப்பது என்ன?

என்னவென்றால் இந்த நாட்டில் இருக்கக்கூடிய தேர்தலும் குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகளும் இயற்கை வளப் பாதுகாப்பும் பொதுத்துறை நிறுவனங்களும் இனி அப்படியே விட்டு வைக்கப்பட மாட்டாது, அத்தனை துறைகளும் கார்ப்பரேட் நிறுவனங்களால் கொள்ளையடிக்கப்பட்டு அழிக்கப்படுவதற்கு ஏதுவாக சட்டங்கள் நீக்கப்பட்டும் திருத்தப்பட்டும் கார்ப்பரேட்டுகளுக்கு உரிமைகள் அளிக்கப்பட்டும் வருகிறது. அப்படி ஒரு மோசமான சூழலில் தான் நாம் இருக்கிறோம்.

கார்பரேட் பெரும் முதலாளிகள் தங்களுக்குள் இருக்கும் போட்டியால் எல்லா வழிகளிலும் இருக்கக்கூடிய செல்வங்களைத் திரட்டி இயற்கை வளங்களை அழித்து மூலதனத்தைக் குவித்து வருகின்றனர்.

ஓட்டுக்கட்சிகளின் நிலை

காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நிலை என்ன? திட்டம் என்ன?

அரசியல் ரீதியாக பாரதிய ஜனதாவுக்கு மாற்றாக இந்து மத வெறிப் பாசிசத்திற்கு எதிராக ஜனநாயகத்தை வழங்குபவர்களாக மட்டுமே ஒன்றியத்திலும் மாநிலத்திலும் இருக்கும் இந்த கட்சிகள் அரசியல் ரீதியாக மாற்றை முன்வைக்கின்றனர். தவிர, இவர்களுக்கும் பாரதிய ஜனதாவிற்கு இருக்கும் பொருளாதாரக் கொள்கைக்கு மாற்றாக எந்த ஒரு பொருளாதாரக் கொள்கையும் (மக்களுக்கு கொடுக்கும் இலவசங்கள் சில நல்ல திட்டங்களை தவிர இதுவரை) இவர்களால் முன்வைக்கப்படவில்லை. இவர்களால் முன்வைக்கவும் முடியாது.

இப்படிப்பட்ட கட்சிகளை மக்களும் கம்யூனிஸ்ட்களும் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு நம்பி இருக்க முடியும்?

கம்யூனிஸ்ட்களின் கடந்த காலமும் நிகழ்காலமும்;

CPI, CPI(M), CPI( ML) என நூறாண்டுகளுக்கும் மேலாக இந்திய பொதுவுடமைக் கட்சி, அமைப்புக்கள் இயங்கி வருகிறது.

முதலாளித்துவ பொருளாதாரத் திட்டங்களுக்கு மாற்றாக புதிய ஜனநாயகம், சோசலிசம், கம்யூனிசம் என்கின்ற பொருளாதாரத் திட்டங்களை வைத்திருக்கும் கம்யூனிஸ்டுகள், தேர்தல் பாதையில் சில மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கிறார்கள்; சட்டமன்றம், பாராளுமன்றம் சென்றிருக்கிறார்கள்.

பாராளுமன்றத்திற்கு வெளியே பல்வேறு மார்க்ஸ்சிய லெனினிய குழுக்கள், கட்சிகள், ஆயுதம் தாங்கிய குழுக்கள் ஆகியோர் பாராளுமன்ற தேர்தல் ஜனநாயகப் பாதையை போலி ஜனநாயகம் என ஒதுக்கிவிட்டு அதற்கு வெளியில் ஒரு ஜனநாயக அமைப்பை நிறுவுவது என பல ஆண்டுகாலமாக போராடி தற்போது தோற்றும் பின்வாங்கியும் வருகின்றனர்.

நாடு முழுவதும் மிகப் பெரிய அளவில் இருக்கும் தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள், மாணவர் சங்கங்கள் தொடங்கி சுமை தூக்கும் தொழிலாளர் வரை பல கோடிக்கணக்கான உறுப்பினர்களை பல்வேறு கம்யூனிஸ்ட் கட்சிகள் பெற்றிருக்கின்றன.

அப்படி இருந்தும் கேரளா, மேற்கு வங்கம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சி அமைக்கும் நிலையில் இருந்தவர்கள், தற்போது பல இடங்களில் தோற்று இருப்பதும், சில சீட்டுகளுக்காக முதலாளித்துவ கட்சிகளிடம் எல்லை மீறிய அளவில் சரணாகதி அடைந்திருப்பதுமான நிலைக்கு காரணம் என்ன? ஏன் நம்மால் தனிப்பெரும் சக்தியாக இந்த நாட்டின் காங்கிரஸ், பிஜேபிக்கு மாற்றாக முன்வர முடியவில்லை?

1) 1957 CPI கேரளாவில் முதல் அரசியல் ஆட்சி

2) 1977 CPI(M) மேற்கு வங்காளத்தில் வெற்றி. 178/294 (34 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சி)

3) 1980 CPI(M) கேரளா, திரிபுரா வெற்றி

தற்போதும் இதற்கு முன்பும் 1957-67-80-87-96- என் பல்வேறு முறை இடது கூட்டணி ஆட்சி அமைந்திருக்கிறது.

தேர்தல் பங்கேற்பில் சீர்குலைவுகளும் பின்னடைவுகளும்;

தேர்தல் பாதையில் பங்கெடுத்துக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு சில மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருந்தாலும் அதை தக்க வைத்துக் கொள்வதிலும் நாடு முழுமைக்கும் விரிவு படுத்துவதிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தோல்வியைத் தழுவி இருக்கின்றன. காரணம் என்னவெனில் தேர்தல் பாதையில் சென்று ஆட்சி அமைத்ததும், தொழில்துறை விரிவாக்கத்திற்கு இடம் கையகப்படுத்துவது, நிலவக்கூடிய இந்த அரசு கட்டமைப்பில் சாத்தியமான அடுத்த கட்ட பொருளாதார நகர்வுக்கு திட்டமில்லாதது, மக்களை நாடு முழுமைக்குமாக அமைப்பாக்காதது, அரசியல் படுத்தாதது, சமூகத்தின் மாற்றம் வளர்ச்சி குறித்து மார்க்சிய வழியில் மக்களுக்கு விளங்கப்படுத்தாதது மற்றும் ஒட்டுமொத்த முதலாளித்துவ பொருள் உற்பத்தியை விரிவுபடுத்தும் போது மக்கள் உணர்வுக்கும், வாழ்விடத்திற்கும், உரிமைக்கும் எதிராக அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது உள்ளிட்ட செயல்களின் மூலம் மக்களுக்கு எதிராக தன்னை முன்னிறுத்திக் கொண்டனர். உதாரணம்; டாட்டாவிற்காக நிலம் கையகப்படுத்துவதில் ஏற்படுத்திய துப்பாக்கி சூடு.

இன்று இருக்கக்கூடிய பொருள் உற்பத்தி முறையை மிகப்பெரிய அளவில் விரிவு படுத்துவதும் நவீனப்படுத்துவதும் தான் முதலாளித்துவ ஜனநாயக புரட்சிகளுக்கோ சோசலிச புரட்சிகளுக்கோ முன் நிபந்தனை‌. சீன-ரசிய சோசலிசப் புரட்சி வரலாறு கூறுவதும் அதைத் தான்.

நாம் எதிர்க்க வேண்டியது அல்லது சிறுகச் சிறுக குறைத்துக் கொள்ள வேண்டியதும் உற்பத்தி துறையில் இருக்கும் தனியார் சொத்துடமையை, தனியார் மூலதன ஆதிக்கத்தை நிதி முலதனக் கும்பலின் ஆதிக்கத்தை, சாத்தியமான வழியில் இந்த தேர்தல் பாதையில் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கலாம். அரசின் பொருள் உற்பத்தி மற்றும் மூலதன முதலீடுகளை அதிகப்படுத்துவதும். OTT தளங்களை அரசு ஏற்படுத்துவதும் கேரளா ஒரு முன்னுதாரணம். இதைத் தொடர்ந்து தொலைத்தொடர்பு மற்றும் உற்பத்தி சேவையில் அரசு தொடர்ந்து மூலதனம் இடுவதன் மூலம் உத்தரவாதமான வேலை சூழலும் வாழ்க்கையும் பெரிய அளவில் மக்களுக்கு வழங்க முடியும். இது எல்லாம் இருக்கக்கூடிய ஜனநாயகத்தில் செய்ய முடிந்த வேலைகளே.

ஆனால் ஒரு புரட்சி வேண்டும் என்றால் அது சமூகத்தின் மேலிருந்து மட்டுமல்ல கீழ் இருந்தும் தான் நடத்தப்பட வேண்டும். கீழிருந்து மட்டுமல்ல மேலிருந்தும் நடத்தப்பட வேண்டும் என சோசலிசப் புரட்சிக்கும் ஜனநாயகத் தேர்தல் பாதையில் உள்ள தற்போதைய நிலைக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை மக்களுக்கு உணர்த்தாமல் தானும் உணராமல் இருப்பதும் ஒரு காரணமாகும்

என்ன செய்ய வேண்டும்?

இருக்கக்கூடிய பொருளாதாரச் சூழல்களில் கிடைத்த அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்கள் மத்தியில் கம்யூனிச பொருளாதாரத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வும் கீழிருந்து மிகப்பெரிய அளவில் கட்சி அமைப்பை நாடு முழுவதும் கட்டமைப்பதற்கான வழியையும் கண்டடையாமல், கிடைத்த அதிகாரத்தை பயன்படுத்தி தாங்களும் தங்களுக்கு கீழ் உள்ள அணிகளும் செய்யக்கூடிய ஊழல்களையும், முறைகேடுகளையும், மக்கள் விரோதச் செயல்களையும் கண்டு கொள்ளாமல் விட்டதன் பொருட்டு தான் கழுதை தேய்ந்து கட்டறும்பான கதையாக மாறி இருக்கிறது கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலை.

புரட்சிகர தத்துவம் இல்லாமல் புரட்சிகர கட்சி இல்லை என்கின்றனர் மார்க்சிய ஆசான்கள். புரட்சிகர தத்துவத்தை கைவிட்டதன் பலனாக தேர்தல் பாதையில் இருந்து கம்யூனிஸ்ட்கள் வலதுசாரிகளாக திசைவிலகிச் சென்றுள்ளனர். எனவே மக்கள் மத்தியில் மதிப்பிழந்து, இருக்கக்கூடிய எண்ணற்ற ஓட்டுக் கட்சிகளில் ஒரு கட்சியாக மாறிப் போய் உள்ளனர்.

தேர்தலைப் புறக்கணிக்கும் இடது தீவிரவாதம்

மேலே நாம் கண்ட தேர்தல் கம்யூனிஸ்ட் கட்சியான‌ CPI, CPI(M) கட்சிகளின் கடந்த கால தேர்தல் பாதைகளில் அவர்கள் செய்த தவறுகளை மையப்படுத்தி, தேர்தல் பாதையில் எந்த தீர்வும் கிடைக்காது, நேரடியாக “புரட்சி ஒன்று தான் தீர்வு” “ஓட்டு போடாதே புரட்சி செய்” அல்லது ஆயுதம் தாங்கிப் போராடு இப்படி எண்ணற்ற இடது தீவிரவாதங்களுக்கு தேர்தல் பாதையில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சிகளை உதாரணமாகவும் காரணமாகவும் காட்டுகின்றனர். இன்றளவும் இடதுசாரிகள் இவற்றையே காரணமாகவும் கூறியும் வருகின்றனர்.

மார்க்சிய ஆசான்கள் மார்க்ஸ்சும், எங்கெல்சும், லெனினும் காட்டிய விஞ்ஞான கம்யூனிசத்தை கடந்த கால அவர்களுடைய அனுபவங்கள் அத்தனையும் குப்பையில் வீசி எறிந்திருக்கின்றனர் இடது திசை விலகலில் ஈடுபடும் தேர்தல் புறக்கணிப்பு கம்யூனிஸ்ட்கள்.

பாராளுமன்றப் பாதையில் பங்கெடுத்துக் கொள்வது குறித்து பல்வேறு நூல்களில் லெனின் எழுதி இருந்தாலும் அதன் மூலம் கிடைக்கக்கூடிய பலன்கள் பொதுமக்களை அரசியல் படுத்துவதற்கும், கிடைக்கக்கூடிய அதிகாரத்தைக் கொண்டு அடுத்த கட்டமாக சமூக மாற்றத்திற்கு அதைப் பயன்படுத்துவது குறித்தும் பல்வேறு மார்க்சிய நூல்கள் இருந்தாலும் அவை அத்தனையும் புறந்தள்ளி தேர்தல் பாதையில் அதிகாரம் இல்லை என்கின்றனர். இவர்கள் கண்ணை மூடி கொண்டதாலேயே உலகம் இருண்டு விடும் என்று இன்றளவும் கூறி வருகின்றனர்.

ஒரே அடியாக தேர்தல் ஜனநாயகத்தில் இருந்து எகிறிக் குதித்து புதிய ஜனநாயகப் புரட்சியை சாதித்து விடலாம் அல்லது சோசலிசப் புரட்சியை சாதித்து விடலாம் என்று கற்பனையாகக் கோட்டை கட்டி வருகின்றனர்.

பிரதமர், முதல்வர், அரசு அதிகாரிகள், அரசு பணியாளர்கள் இப்படி இந்த நாட்டை நிர்வாகிக்கும் ஆட்சி செலுத்தும், அதிகாரம் செலுத்தும் பல லட்சக்கணக்கான பதவிகளும் அரசு பணிகளும் இருக்கும் இடத்தில், அவற்றை தேர்தலில் மூலமாக நிர்வகிப்பதற்கு இருக்கக்கூடிய வாய்ப்பைப் பயன்படுத்தாமல் புறக்கணித்து விட்டு மக்கள் அணி அணியாக திரண்டு வந்த பிறகு புரட்சியை சாதிக்கலாம் என்று காத்திருக்கின்றனர்.

பிரதமருக்கும் முதல்வருக்கும் இருக்கும் அதிகாரத்தை மிகத் துச்சமாக அறியாமையின் மூலம் மதிப்பிடுகின்றனர். விஏஓ, தாசில்தார் கவுன்சிலர், எம்எல்ஏ, எம்பி இவர்களுக்கு இருக்கும் அதிகாரம் செல்வாக்கு என்ன என்பது பற்றி எல்லாம் துளி அளவும் கூட அறிவு இல்லாத புதிய ஜனநாயகப் புரட்சி அல்லது சோசலிசப் புரட்சி எனும் சாகச கதையின் மீது தங்கள் அமைப்பை 50 ஆண்டுகளுக்கு மேலாக கட்டியமைத்து குளம் வற்றிய பிறகு மீன் பிடிக்கலாம் என்று காத்திருக்கின்றனர்.

தற்போதைய சூழல்;

இந்தியா முழுவதும் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், அரசு ஊழியர் சங்கம் தொடங்கி எல்லாவிதமான நிறுவனங்களிடையேயும், தொழில், உழைப்பு இருக்கும் இடங்களில் எல்லாம் சங்கம் நடத்துகிறார்கள் கம்யூனிஸ்டுகள்.

“முதலாளித்துவ பொருளாதார உற்பத்தி முறைக்கு மாற்றாக”

 1) புதிய ஜனநாயகப் புரட்சி

 2) சோசலிசம்

3) அரசு முதலாளித்துவம்

என எவ்வளவோ இருந்தாலும் தற்போது தேர்தல் பாதையின் மூலம் சாத்தியமானது

“அரசு பொருளாதார உற்பத்தி முறைதான்”.

 அதாவது அரசு முதலாளித்துவம், அரசு பொதுத்துறை நிறுவனங்களை வளர்ப்பது, விரிவாக்குவது. பொருள்‌ உற்பத்தியில் அரசு முதலீடு செய்வது, BSNL, BHEL, சேவைத் துறையில் ola, Uber, zomoto, rapido போன்ற சேவைத்துறை செயலிகளைகளை அரசே அறிமுகம் செய்வது, OTT பிளாட்பார்ம் சேவை வழங்குவது இப்படி பல்வேறு துறைகளின் மூலம் அரசிற்கான வருவாயை அதிகரிப்பது,

அரசுப் பணியை அதிகரிப்பது,

சிறந்த ஊதியம் வழங்குவது,

பாதுகாப்பான எதிர்கால உத்திரவாதம்,

ஓய்வுதியம் வழங்குவது‌,

அந்நிய நாட்டு நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டால் கூட அதை கொஞ்சம் மேலும் நியாயமான ஒப்பந்தமாக செய்து கொள்வது, தொழிற்சங்க அங்கீகாரம் வழங்குவது, தொழிலாளர்களுக்கு முறையான நிரந்தர வேலை வழங்குவது உள்ளிட்ட நிபந்தனைகளோடு அதை செய்து கொள்ள வேண்டும். (தனியார்மயத்தையோ அல்லது உலகமயத்தையோ முற்றிலுமாக ஒரே அடியாக இந்த அமைப்பு முறையில் இருந்தே அழித்து விடலாம் என்று கனவு காண்பதும் அல்லது நேராகப் புரட்சி செய்து அழித்து விடலாம் என்று கனவு காண்பதும் இயக்கவியலுக்கே எதிரானது. நாடு முழுவதும் சாத்தியமான அளவு முதலாளித்துவ பொருள் உற்பத்தி முறையை பரவச் செய்வது அல்லவா கம்யூனிஸ்ட்டுகள் செய்ய வேண்டிய உடனடியான வேலை).

முதலாளிகளுக்கு வழங்கும் கடன் தள்ளுபடிகளை வரம்புக்கு உட்படுத்துவது, அதை மக்கள் நலத்திட்டங்களுக்கு ஒதுக்குவது என ஒரு மக்கள் நல அரசாக மாற்றுத்திட்டங்களை ஏதேனும் முன் வைத்து தங்கள் ஆளுகையின் கீழ் பிற கட்சிகளுடன் தேர்தலில் பங்கேற்பது என தேர்தல் அரசியலில் உள்ளும் புறமும் மக்களை திரட்டவும் வேண்டும்.

தங்களுடைய தொழிற்சங்கம்‌ மற்றும் பிற சங்கங்களைச் சேர்ந்த நபர்களை தமக்கு வாக்களிக்கத் திட்டமிடுவது என்று தீர்மானித்தாலே நாடு முழுமைக்குமான மிகப்பெரிய ஒரு தேர்தல் கட்சியாக கம்யூனிச கட்சிகள் உருவாக முடியும், உருவாகவும் வேண்டும்.

பாசிச எதிர்ப்பு, பாசிச எதிர்ப்புக் கூட்டணி, அரசியல் சட்ட உரிமையைப் பாதுகாப்பது என்று தங்களுடைய கொள்கை லட்சியத்தில் இருந்து ஏற்கனவே பல படிகள் கம்யூனிச கட்சிகள், இயக்கங்கள் கீழ் இறங்கி விட்டன. இதில் பல ஆண்டுகளாக மக்களை கொள்ளை அடித்து சொத்து சேர்த்த முதலாளித்துவ ஓட்டுக் கட்சிகளிடம் கூட்டணி வைத்துக்கொண்டு அவர்களிடம் சில சீட்டுகளுக்காக மன்றாடி நிற்பதை நிறுத்திவிட்டு தங்களுடைய சொந்த பலத்தை அதிகரிப்பதும் அல்லது அப்படிப்பட்ட ஓட்டுக் கட்சிகளிடம் தான் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும், பேரம் பேச வேண்டும் என்ற நிலையில் இருந்தாலும் கூட நியாயமான கூட்டணி பேரங்களாவது செய்து கொள்வதும், மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வு செய்து அமைப்பாக்குவது என்ற வேலையில் தீவிரமாக ஈடுபடுவதும் தான் இந்த நாட்டையும் இந்த கட்சிகளையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்கும்.

இன்றைய சூழலிலும் இனி வரவிருக்கும் சூழலிலும் முதலாளித்துவ நெருக்கடிகள் ஓயப் போதும் இல்லை, பாசிச அபாயம் நிற்கப் போவதுமில்லை. எல்லா மக்களின் நன்மைக்காக இருக்கும் கம்யூனிசம் எனும் மிக உயர்ந்த கொள்கையை லட்சியத்தை கையில் வைத்துக் கொண்டு அதை நடைமுறையோடு இணைப்பது குறித்து சிந்திக்காமல், பாட்டிலில் இருந்து வரும் பூதத்தைக் கட்டுப்படுத்தி வேலை வாங்கத் தெரியாதவர்கள் போல, வலதுசாரிகளான தேர்தல் கம்யூனிஸ்டுகள் கம்யூனிசம் எனும் பூதத்தை கட்டுப்படுத்தத் தெரியாமல் இருப்பவர்களாகவும், இடதுசாரிகள் கம்யூனிச பூதத்தைக் கண்டு மக்களை பயந்து ஓடச் செய்பவர்களாகவுமே இதுவரையும் செயல்பட்டு வந்திருக்கின்றனர்.

இன்னும் சொல்லப்போனால் தேர்தல் பாதையில் இருக்கும் கம்யூனிஸ்ட்கள் யானை பலம் கொண்ட கம்யூனிசக் கொள்கையை அதன் பலம் உணராமல் இருப்பதும், இடதுகள் அந்த யானையை வெறியூட்டி மக்கள் கூட்டத்திற்குள் ஓட விட்டு மக்களை அச்சப்படுத்துவதும் தான் இன்று வரை நடந்து கொண்டிருக்கிறது.

கம்யூனிஸ்ட்களுக்குள் ஓர் ஐக்கியம் ஏற்பட்டு தேர்தலுக்கு உள்ளும் புறமும் தங்களை ஒரு மக்கள் சக்தியாக முன்னிறுத்தினால் மட்டுமே பார்ப்பனிய முதலாளித்துவ பாசிச அபாயத்திலிருந்து மக்களையும் தங்களையும் காத்துக் கொள்ள முடியும். முதலாளித்துவ தேர்தல் கட்சிகளின் பின்னே ஒளிந்து கொள்வதன் மூலம் எதையும் காக்க முடியாது‌‌.

எனவே தற்போதைய சூழலில் INDIA கூட்டணியை ஆதரிப்பது சரியான முடிவாக இருந்தாலும், அதுவே வருங்காலத்திற்கும் போதுமானதாக இருக்காது என்பதை மனதில் கொள்ள வேண்டும்

  • எனவே கம்யூனிஸ்ட் கட்சிகளின் இருக்கும் தலைமைகள், அணிகள், கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருந்து பல காரணங்களுக்காகவும் வெளியேறிய தோழர்கள் அனைவரிடமும் நாம் வைக்கும் கோரிக்கை என்னவென்றால் நாம் உடனடியாக தேர்தல் பாதையிலும் ஆட்சி அதிகாரத்தை அடைவது குறித்து திறந்த மனதோடு பேசுவதும் பணியாற்றுவதுமான காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம். அது குறித்து தொடர்ந்து சிந்திப்பதும் கலந்துரையாடுவதும் கூட்டங்கள் நடத்துவதும் அவசியம் என்ற கோரிக்கையை பணிவோடு முன் வைக்கிறோம். (நம்மிடையே இருக்கும் முரண்பாடுகளை அதிகாரம் நமது கைக்கு வந்த பிறகு பேசித் தீர்க்கலாம்.)
  • இடது ஒற்றுமையை “உடனடியாக ஆட்சி அதிகாரத்தை அடைவோம்” என்ற மார்க்சிய கோட்பாட்டின் மீது கட்டி அமைக்க தோழர்கள் முன் வர வேண்டும். அதுவே கோட்பாடு ரீதியான ஒற்றுமையாகும்.
  • மார்க்சியத்தை உயர்த்திப் பிடிப்போம். பாட்டாளி வர்க்கத்திற்கான ஆட்சி அதிகாரம் அமைக்கும் பாதை நோக்கிப் பயணிப்போம்.

மாபெரும் மக்கள் சக்தி வெல்லும்..

- தர்ஷன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.