கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

பல ஆங்கிலப் படங்களில் இந்தக் காட்சி வரும். நம்மூர் படங்களிலே கூட குளிர் பிரதேச ஊர்களில் நடக்கும் கதை என்றால் கண்டிப்பாக இந்தக் காட்சி வரும். நான் எப்போதுமே இனம் புரியாத சூட்டில் மாய குளிரை போர்த்தியபடியே இந்தக் காட்சிகளின் முன் கண்கள் நீட்டுவேன்.

வீட்டுக்குள்ளேயே நெருப்பு மூட்டி குளிர் காயும் காட்சியைத் தான் இங்கே பற்ற வைத்துக் கொண்டிருக்கிறேன். அந்த செட்டப்பே பார்க்க வியப்பாக இருக்கும். சுவருக்கு அடியே வாய் செய்து அதில் விறகு போட்டு எரிந்து கொண்டே இருக்கும். அதன் அனல் அப்படியே அந்த அறை முழுக்க பரவுவதை நினைத்தாலே கதகதப்பாக இருக்கிறது. அந்த நெருப்புவண்ணம் மனிதர்கள் மேல் பட்டு... ஜொலிப்பதைப் பார்க்க அப்படி ஒரு ஆசை எழும்.

சின்னச் சின்ன காட்சிகளின் வழியே பெரிய பெரிய நினைவுகள் உருவாகும். அப்படி படபடவென மனதில் எழுந்த நினைவனல்களில்... சூடு கொள்ள நீட்டிய வித விதமான கைகளைக் காண்கிறேன். கண்களில் ஜுவாலை. நெஞ்சினில் கதகதப்பு. உள்ளங்கையில் பட்டு மின்னும் நெருப்புநிறத்தின் நிதானம் பின் மெல்ல உடலுக்குள் புகும் அதன் தீர்க்க முறுவலிப்போடு. தன்னிலிருந்து எழுந்து நெளிந்து பொறி பறக்க படபடக்கும் அதன் நா... காத்திரமானது. சடசடவென எரியும் நெருப்பு அடுப்பில் நிதானம் பூக்கிறது.

வெளியே மழை ஊற்றிக் கொண்டிருக்கும். உள்ளே உடலில் ஆவி பறக்க... கனன்று கொண்டிருக்கும் நெருப்பு கூட்டுக்கு முன் அமர்ந்து கைகளை நீட்டி சூடு ஏற்றிக் கொண்டிருப்பார்கள். எனக்கு அப்படியே சிறு வயது நினைவு உள்ளத்தில் பற்றிக்கொண்டு எரிகிறது. நவம்பர் டிசம்பர் ஜனவரி போன்ற குளிர் கால நாட்களில் வீட்டுக்கு முன் அல்லது கோடிப்பக்கம் அல்லது கடைப்பக்கம் என நாலைந்து பேர் சேர்ந்து விட்டால் அங்கே கிடக்கும் சருகு சப்பல் சிறு சுள்ளிகள் என பொறுக்கி நெருப்பு மூட்டி விடுவார்கள்.

குளிர் நடுக்கும். பற்கள் படபடக்கும். ஆனாலும் பேச்சும் சுவாரஸ்யமும் குறையாது. எரிந்து கொண்டிருக்கும் நெருப்பு முன் கைகள் அனிச்சையாக நீண்டிருக்கும். சூட்டைப் பிடித்து பிடித்து கன்னத்தில் வைத்துக் கொள்வார்கள். அந்த வழியாக யார் சென்றாலும்.. அப்படியே பேச்சு கொடுத்தபடியே... நெருப்புக் கூட்டுக்கு முன் மனிதர்களின் தோள்களுக்கு இடையே புகுந்து அப்படி அப்படியே அந்த வட்டம் அதுவாகவே இடம் கொடுத்து பொருந்திக் கொள்ளும்.

கடைப்பக்கம் நின்று பேசும் மனிதர்கள்.. அப்படியே ஆங்காங்கே கிடைக்கும் சுள்ளிகள் கொண்டு நெருப்பு மூட்டி விடுவார்கள். சுற்றி அமர்ந்து பேசியபடியே அந்தப் பொழுதை அவர்களுக்கே தெரியாமல் ஆராதிப்பார்கள். சற்று தள்ளி குறுகுறுவென அமர்ந்திருக்கும் தனித்த ஆட்கள் கூட அப்படி அப்படியே வந்து மெல்ல சேர்ந்து கொள்வார்கள். அவரச ஜோலிக்கு போகிறவர்கூட குனிந்து பீடி பற்ற வைத்துக் கொண்டு அப்படியே கொஞ்சம் அனல் அள்ளி பூசியபடியே நகர்வார்கள்.

இந்த மாதங்களில்... மாலைக்கும் இரவுக்கும் இடையே ஒரு நேரம் இருக்கிறது. அந்த நேரத்தில் இணைந்து விடும் ஊர் ஆட்கள்... நெருப்பு மூட்டி குளிர் காய்வதை ஒரு வேலையாகவே செய்வார்கள். தூரத்து குளிர்கண்களுக்கு நெருப்பு எரிவது... சுற்றி ஆட்கள் அமர்ந்திருப்பது அப்படி ஓர் ஆசுவாசத்தைத் தரும். அதுவரை இருந்த எந்த சோகமும்.. நெருப்புக்கு முன் கைகளை நீட்டி சூடள்ளி முகத்தில் கொள்கையில்... அப்படியே கரைந்து போகும். அதே நேரத்துக்கு ஒரு பாதுகாப்பு உணர்வு... அந்த நெருப்பு மூட்டல் தருகிறது.

கதகதப்பு மானுட அடிப்படை. அவன் தன்னை பாதுகாப்பாக உணர்வதை குகைக்குள் நெருப்பு வந்த போது இன்னும் பலமாக உணர்ந்திருப்பான். அதன் நீட்சியைக் காண முடியும். நெருப்பைச் சுற்றி நிழல் போல அமர்ந்திருக்கும் ஒவ்வொரு மனிதனும் நெருப்பில் பூத்த நிழல் பூவாகவே நினைத்துக் கொள்கிறேன்.

காடலைந்து வருகையில் மழை வந்து விட்டால்... கை கால்கள் என உடம்பே நீரில் ஊறியிருக்கும். வந்ததும் குசினி அடுப்புக்கு முன் அமர்வது ஆஹா... அது ஒரு மந்திரம் போல நடக்கும். ஒரு மாயத்தின் வழியே உடலுக்கு சூடு ஏற்றும் சுகம் சொற்களில் பற்றாது. விட்டால் நெருப்புக்குள்ளேயே சென்று விடுவது போன்று தோன்றும். அத்தனை நெருக்கத்தில் தீ காய்வது தித்திப்பு. அதுவரை இருந்த குளிர் நடுக்கம் அப்படியே மெல்ல மெல்ல நம்மை விட்டு அகலுவதை உணர உணர வரும் புத்துணர்வு அற்புதம் நிகழ்த்தி இருக்கும்.

சுருங்கியிருந்த உடல் படபடவென விரிவதை உணர முடியும். அமிழ்ந்திருந்த முகம் மலர்வதை உணர முடியும். அதுவரை இருந்த சோம்பல் முறிந்து விடும். வால்பாறை சென்று விட்டு குளிர் நடுக்கத்தோடு மழையில் நனைந்தபடி வீடு அடையும் யாரும் சற்று நேரத்துக்கு அடுப்பின் முன் அமர்ந்து கைகளைக் காட்டி சூடு வாங்கி பூசிக் கொள்வது வீட்டுக்கு வீடு நடக்கும். நினைவு இருக்கிறது தானே.

பொதுவாகவே குளிரில்.. அல்லது மழையில் நனைந்து வருகிறவரை கொஞ்ச நேரம் அடுப்பு பக்கம் போயி உக்காரு என்று சொல்வது வழக்கமாகவே இருந்தது. கை கால் முகம் என அந்த ஜுவாலை படுகையில்... அதுவரை கொண்டிருந்த நடுக்கம் அப்படியே குறையும். உடல் சூடேறி சமநிலைக்கு வருவதை நன்றாக உணர முடியும். குசினிக்குள் நுழையும் போதே அனல் அடிப்பதை உள்வாங்க முடியும். அடுப்பில் இருந்து பரவும் நெருப்பின் அனல் குசினியை கதகதப்பாக வைத்திருக்கும்.

நான் பொங்கலுக்கு உருளிக்கல் செல்கையில் வீடடைந்ததும் முதல் வேலையே அடுப்பு பக்கம் அமர்வது தான். பொள்ளாச்சியில் இருந்து ஆழியாறு அட்டகட்டி கவர்க்கல் அய்யர்பாடி வால்பாறை என வாங்கி வந்திருந்த அத்தனை குளிரையும் போக்கி உடல் மலர்ந்தவனாய் மாறும் நேரம் அதுவே. பிறகு சூட்டோடு சூடாக கரகாட்டம் பார்க்க செல்வது வேறு கதை.

கூடு அடைவதை மழை நாளில் வீடு அடைகையில் உணர்ந்திருக்கிறோம். அப்படி ஒரு கதகதப்பு. சின்ன வீட்டுக்குள்ள அத்தனை உயிர்கள்... ஒருவர் மூச்சு காற்று தான் இன்னொருவருக்கும். அதில் அன்பும் ஆதரவும்.. நெருக்கமும்.. அணைப்பும் இயல்பாகவே இருந்தது.

டீ எப்போதுமே ஒரு பக்க அடுப்பில் சூடேறி கொண்டே இருக்கும். குளிர் காய்ந்து கொண்டே தேநீர் அருந்துவது... அது ஒரு காலத்தின் ஓவியம் போல மனதுக்குள் அப்படியே இருக்கிறது. அனலுக்கு நீட்டிய கைகளை நினைப்பில் காண்கிறேன். நீர் பட்டு ஊறிப் போன கைகளில் தேயிலை வாசம் இருக்கும். விரல்களில் இலை பறித்த வடுவாய் கீறல்கள் இருக்கும். அந்தக் கீறல்கள் தந்த வரைபடத்தில் தான் இன்றைய தலைமுறை எங்கெங்கோ இருக்கிறது. அந்தக் கைகளை எப்போதும் வணங்குவோம்.

வீடெங்கும் இருக்கும் குளிரின் வாசமும் மழை நீரின் வாசமும் மெல்ல மெல்ல நெருப்பின் அனலில் கரைவதை என்னால் இப்போதும் உணர முடிகிறது. வார்த்தைகளில் வடிக்க முடியாத அந்த கதகதப்பை தான் எப்படியாவது உங்களுக்கு கடத்தி விட முயற்சிக்கிறேன். அடுப்பைச் சுற்றி குத்த வைத்து அமர்ந்திருக்கும் பெரியவர்களுக்கு இடையே சிறுவர்களும் உள் நுழைந்து கொள்ளும் அந்த அற்புத காட்சி எனக்குத் தெரிகிறது.

உங்களுக்கும் தெரியும்.

- கவிஜி