நேற்றைய தினம் திரு. கோபி, திரு. சுதாகர் அவர்கள் "புரட்டாசி மாதம் பரிதாபங்கள்" காணொளி வெளியிட்டிருந்தனர். காணொளியில் துவக்கத்திலேயே இரண்டு மிக முக்கிய செய்திகளை பதிவு செய்கின்றனர். 1. எவ்வாறு முன்பெல்லாம் இல்லாத வழக்கமாக பலரும் இப்போது புரட்டாசி மாத விரதத்தை கடைபிடிக்க துவங்கியிருக்கிறார்கள் என்றும், அந்த கலாச்சாரம் எவ்வாறு தெருவுக்கு தெரு "spread" செய்யப்படுகிறது என்பது பற்றியும் மிகச்சரியாக பதிவு செய்திருந்தனர். மேலும், திரு. கோபி அவர்கள் போகிற போக்கில், 2. எவ்வாறு இப்போது பார்பனரல்லாதவர்கள் கூட (நவராத்திரி) "கொலு" வைக்க திட்டமிட்டிருக்கிறார்கள் என்பது பற்றி குறிப்பிடுகிறார் (பார்ப்பனரல்லாதார் கொலு வைப்பது பற்றி ஏற்கனவே "எது நம் கொள்கை? கொள்கை முரண்" என்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன்)

nonveg feastபார்பனரல்லாதார் என்றெல்லாம் விளக்கமாக அந்த வார்த்தையை நேரடியாக பயன்படுத்தாவிட்டாலும், அவர்கள் கூற விரும்பிய மறைமுக செய்தி இதுதான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. மற்றபடி காணொளி முழுவதும் அசைவ உணவு சாப்பிட முடியாமல் அசைவப் பிரியர்கள் படுகிற பாட்டை வழக்கம் போல அவர்களுடைய பாணியில் நகைச்சுவையுடன் வெளிப்படுத்தியிருந்தனர். மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு முக்கிய செய்திகளை அவர்கள் பதிவு செய்ததற்கே அவர்களை மிகவும் பாராட்ட வேண்டும் என்றே கருதுகின்றேன். சமூகத்தில் மிக வேகமாக பரவி வரும் பார்ப்பன சனாதன சங்கி கலாச்சார மனப்பான்மையை மிக அழகாக, நாசூக்காக குறிப்பிட்டிருக்கிறார்கள்.

youtube பெண்கள் - பார்ப்பன சங்கி கலாச்சாரம்:

இந்த கலாச்சாரம் பரவுவதற்குக் காரணம் "பெண்கள்" என்று பொத்தாம் பொதுவாக அவர்கள் குறிப்பிட்டிருந்தாலும், youtube சேனல் நடத்தும் பெண்கள் தான் இதில் மிகப்பெரிய பங்காற்றுகிறார்கள் என்பது என்னுடைய கருத்து. டிவி சேனல்கள் வெளியிடும் சீரியல்களை விட, youtube பெண்கள் வெளியிடும் அன்றாட கதைகள் / அட்டூழியங்கள் அளவில்லாமல் நீண்டுகொண்டே போய்க் கொண்டிருக்கிறது. ஒன்றும் சொல்வதற்கில்லை. ஒவ்வொரு பிரபலமான சேனல்களுக்கு பல லட்சம் பின் தொடர்பாளர்கள். இந்த பிரபலமான youtube பெண்கள் என்ன செய்கிறார்களோ அதை அப்படியே நாமும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் நோயாக மாறியிருக்கிறது. அது சமூகத்தில் மூடநம்பிக்கைகள், முன்பில்லாத மூட பழக்கவழக்கங்கள், தேவையற்ற கேடுகெட்ட விடயங்களை பரப்பி, சமூகத்தில் கேடான மாற்றங்களை உருவாக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. இது மிகப்பெரிய ஆபத்தான விடயமாக இப்போது வளர்ந்து நிற்கிறது. ஆனால் அந்த youtube சேனல் நடத்தும் பெண்களை பொறுத்தவரை அவர்கள் வெளியிடுகின்ற அனைத்தும் பார்வையாளர்களை கவர்வதற்காக, views கான "content", அவ்வளவே. ஆனால் அவை சமூகத்தில் எவ்வளவு கேடான, முட்டாள்தனமான மாற்றங்களை மெல்ல மெல்லமாக விளைவிக்கின்றன என்பது பற்றி அவர்கள் எதற்கு கவலை பட வேண்டும்.

பார்ப்பனர் பண்டிகைகள்:

இப்போது இந்த புரட்டாசி மாத விரதம் பற்றி பாப்போம். "தின்று கெட்டான் பார்ப்பான்" என்றும், உணவை எவ்வளவு சுவையாக அருந்த வேண்டும் என்று அவனிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். எதற்கெடுத்தாலும் ஒரு பண்டிகை, நாளொரு பூஜை, பொழுதொரு புனஸ்காரம், மிக முக்கியமாக இவையனைத்தும் உணவை சுற்றியே கட்டமைக்கப்பட்டிருக்கும். விநாயகர் சதுர்த்தி என்றால் அதற்கென்று "பட்சணம்", கிருஷ்ணா ஜெயந்தி என்றால் அதற்கென்று "நெய்வேத்யம்", அமாவாசை என்றால் இதற்கென்று தனியாக "பிரசாதம்", இப்படி ஒவ்வொரு நாளும் உணவைச் சுற்றியே அவர்களின் பண்டிகைகளும் பூஜை புனஸ்காரங்களும் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. அதிலும் இந்த புரட்டாசி மாதத்தை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை பார்ப்பனர்கள் மிகத் தெளிவாக வரையறை செய்திருக்கிறார்கள்.

நவராத்திரி கொலு - பார்ப்பனர் உணவு சூட்சமங்கள்:

புரட்டாசி மாதம் துவங்கும் போது தான், குளிர் ஆரம்பிக்கும், மழை காலம் தொடங்கும் அல்லது துவங்கியிருக்கும், நோய்கள் பரவும் காலம் என்பது அவனுக்கு மிக நன்றாக தெரியும். மழை, குளிர், நோய் ஆகியவற்றிலிருந்து தன்னை முழுவதுமாக தற்காத்துக் கொள்வதற்காகவே மிகப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கும் பண்டிகைதான் "நவராத்திரி கொலு". அதில் பூஜை, கொலு அலங்காரம் இதையெல்லாம் விட்டுத் தள்ளுங்கள். முக்கிய அயிட்டமே, இந்தப் பண்டிகையின் "கதாநாயகனே", மிக அதிகளவிலான புரதச்சத்து நிறைந்த, தன்னை மழை குளிர் நோய் ஆகியவற்றிலிருந்து காக்கப்போகும், நோய் எதிர்ப்பு சக்தியை மிகச்சிறப்பாக அவனுக்கு வழங்கப்போகும் "சுண்டல்" தான் அங்கே முக்கியமே. ஒரு நாளைக்கு ஒரு மாமி தன்னுடைய வீட்டில் ஒரு சுண்டல் தான் செய்வார். ஆனால், அந்த மாமி அந்தத் தெருவில் இருக்கும் அனைத்து மாமிகள் வீட்டு கொலுவுக்கு அழைக்கப்பட்டிருப்பார். அனைத்து மாமிகளும் அந்தத் தெருவில் இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் சென்று, அலங்காரங்களை பார்வையிட்டு, பாட்டுப்பாடி, அனைத்து வீடு "பிரசாதம்" எனப்படும் அத்தனை சுண்டல் வகைகளையும் அந்தந்த வீட்டில் சாப்பிட்டு, அல்லது அனைத்தையும் தத்தமது வீட்டிற்கு எடுத்து வந்து சாப்பிடுவர் (சிறு வயதில் இவற்றிலெல்லாம் நானும் கலந்திருப்பதால், இவர்களின் protocol எனக்கு அத்துப்படி). இப்படி பார்த்தால் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு பல வகையான சுண்டல்களை உட்கொள்கின்றனர். ஒவ்வொரு சுண்டலும் ஒவ்வொரு வகையான ஆரோக்கியத்தை வழங்குகிறது. இது போன்ற "சுண்டல் உண்ணும் பண்டிகை" ஒன்பது நாட்களுக்கு தொடர்கிறது. இது போதாதென்று இடையே வரும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, அதற்கென்றே பிரத்யேக "பிரசாதங்கள்" பொரி அவல் வெல்லம் பழங்கள், மேற்கொண்டு இப்பூஜை நாட்களுக்கான உணவு வகைகள் என்று அனைத்தும் சேர்ந்துகொள்ள, புரட்டாசி "விரதம்" என்று கூறிக்கொண்டு சைவ உணவை ஒரு புடி புடித்து விடுகின்றனர் பார்ப்பனர்கள். இவ்வாறு பார்ப்பனர்களின் பெருமாளுக்கு புரட்டாசி மாத விரத உணவு பட்டியல் என்பது நீண்டுகொண்டே போகிறது என்பதுதான் உண்மை. இதுமட்டுமல்லாமல், பொதுவாகவே அவர்களுடைய அன்றாட உணவில் எத்தனை வகையான சைவ புரதங்கள் மற்றும் காய்கள் கீரைகள் இடம்பெற்றிருக்கும் என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. பார்ப்பனர்கள் இப்படியாக தங்களை புரட்டாசி மாத மழை, குளிர், நோய் நொடிகளிலிருந்து விரதம் என்கிற பெயரில் தங்களை மிக சாமர்த்தியமாக உணவின் மூலம் காப்பாற்றிக் கொள்கின்றனர். வடிவேலு கூறுவது போல "என்ன ஒரு பிளானிங்? என்ன ஒரு வில்லத்தனம்?"

பார்ப்பனர் அல்லாதோர் புரட்டாசி விரத முட்டாள்தனங்கள்:

இப்போது, புதிதாக முளைத்துள்ள, பார்ப்பனரல்லாத "நம்மவா" களுக்கு வருவோம். இவர்கள் செய்யும் முட்டாள்தனத்தை என்னவென்று சொல்வது? நீ என்ன அன்றாடம் பார்ப்பானைப் போல வகை வகையான சைவ புரதம், விதவிதமான காய்கள் கீரை என்று அன்றாடம் சாப்பிடுபவனா? கிடையவே கிடையாது. இல்லை பார்ப்பனரல்லாதார் "அனைவருமே" கொலு வைத்து சுண்டல் உண்ணும் பண்டிகை கடைபிடிக்க போகிறோமா? அதுவும் கிடையாது. நமக்கு இருப்பதெல்லாம், நமக்கு மிகச்சிறப்பான புரதம் அளிக்கக்கூடிய அசைவ உணவு தான். இதே புரட்டாசி மாத குளிர், மழை, நோய்களிலிருந்து நம்மை காப்பது, நாம் உண்ணும் புரதம் நிறைந்த அசைவ உணவுதான். அசைவ உணவு மிகச்சிறந்த புரதத்தை வழங்கினாலும், புரட்டாசி மாதத் தீமைகளிலிருந்து நம்மை உண்மையில் காப்பது, அப்பேற்பட்ட அசைவ உணவு சமையலில் நாம் சேர்க்கும் துணை பொருட்கள் தான் என்று கூறினால் அது மிகையாகாது. இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி கீரை, புதினா இலைகள், பட்டை, கிராம்பு, ஏலக்காய் போன்ற மசாலா வகைகள் (whole spices), மிளகு, சீரகம், சோம்பு போன்ற அனைத்தும் நம் உடலில் வெப்பத்தை உருவாக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் மிகச் சிறந்த உணவுப் பொருட்களாகும். பார்ப்பானுக்கு சமமாக, இந்த புரட்டாசி மாதத்தில் இருந்து நம்மை காக்கும் உணவு இந்த அசைவ உணவு சமையல்தான். அப்பேற்பட்ட அசைவ உணவை "புரட்டாசி மாதம்" "புரட்டாசி விரதம்" என்று கூறிக்கொண்டு, அறிவுக்கும் அறிவியலுக்கும் புறம்பான, ஒரு முட்டாள்தனமான கலாச்சாரத்தை பரப்பி, மக்களை நோய் நொடியில் தள்ளப் பார்ப்பது என்ன நியாயம் என்று கேட்கிறேன்? என்ன ஒரு அநியாயம் அக்கிரமம் அயோக்கியத்தனம் என்று கேட்கிறேன்?

இன்னும் கூற வேண்டுமென்றால், முந்தைய காலங்களில் இந்த புரட்டாசி மாதம் என்பது பகலெல்லாம் வெப்பமாகவும், இரவெல்லாம் குளிராகவும் இரண்டும் கெட்டான் பருவமாக இருக்குமாம். இப்பேற்பட்ட குழப்பமான பருவ நிலையில் அஜீரண கோளாறு ஏற்படும், எனவே அசைவ உணவை தவிர்ப்பது நல்லது என்ற பழக்கம் நம்மிடையே இருந்து வந்துள்ளது. ஆனால் இப்போதுதான் ஆகஸ்ட் மாதம் துவங்கியதும் மழையும் குளிரும் துவங்கிவிடுகிறது அல்லவா? செப்டம்பர் மாதம் முழுவதும் மழையும் குளிரும் தானே இருக்கிறது? இப்போது எதற்காக அசைவ உணவை தவிர்க்க வேண்டும்? இன்னும் சொல்ல வேண்டுமென்றால், புரட்டாசி மாதத்தில் தான் தொடர்ச்சியாக அசைவ உணவு சாப்பிட வேண்டும். அதை விட்டுவிட்டு முட்டாள்களை போல புரட்டாசி விரதம், அது இது என்று கூறிக்கொண்டு சனாதன சங்கி புதிய பார்ப்பனர்கள் அறிவாளிகளாக கிளம்பியிருக்கின்றனர். இவர்களிடமிருந்து சமூகத்தை எப்படி காப்பது என்று தெரியவில்லை...கால கொடுமை !

இதை counter செய்வதற்கு, புரட்டாசி விரதம் என்று இந்த அறிவிலிகள் ஆரம்பித்தவுடனேயே, "புரட்டாசி அசைவ புரட்சி" என்ற ட்ரெண்ட் ஐ, அறிவியல் விடயங்களை, முற்போக்காளர்கள் பரப்பி, அசைவ உணவை ஒரு புடி புடிக்கும் கண்கொள்ளா காட்சிகளை ரீல்ஸ் மூலம், சமூக தளங்கள் மூலமாக நாமும் ஆரம்பித்து விட வேண்டியதுதான்....

(Title Credits in part - Gopi Sudhakar parithabangal)

- தேன்மொழி