கீற்றில் தேட...

செய்வன திருந்த செய்... ஓர் ஆதி செய்தி. அதையே உணர்ந்து செய் என்பது ஆயுள் செய்தி.

அடுப்பு... பாத்திரம் என்று தேநீர் தயாரிப்புக்கு தேவையான சாதனங்கள் அவன் முன்னே கைக்கெட்டும் தூரத்தில் கனகச்சிதமாக அமைந்திருக்கிறது. எதை எடுக்க நினைக்கிறானோ அது தானாக அவன் கைக்கு வருவது போன்ற லாவகம் பார்க்கும் நமக்கு கிடைக்கிறது. சலனமற்ற ஆனால் சமரசமற்ற தொழில் நேர்த்தி அவனைக் கண்ணும் கருத்துமாக நிறுத்தி இருக்கிறது.tea stall 600ஸ்டவ் கபகபவென எரிந்து கொண்டிருக்கிறது. சட்டியில் தேநீர் திகு திகுவென கொதிக்கிறது. இது என் வேலை இது என் நேரம் என்பதாக அவன் நிற்பது அழகாய் இருக்கிறது.

அவ்வப்போது பக்கத்து சட்டியில் இருந்து பால் எடுத்து ஊற்றிக் கொள்கிறான். அவன் முகத்தில் படும் வெயில் பற்றிய அக்கறை இல்லை. அவன் விழியும் மௌனமும் தேனீரே தன்னுயிர் போல அப்படி ஒரு தொழில் மொழியில் ஈடுபட்டிருக்கிறது

இஞ்சியை எடுத்து ஒரு சிறு கல்லில் போட்டு நச்சி நச்சி இடிக்கிறான். அதே நேரம் ஸ்டவ் வேகத்தை குறைத்துக் கொள்கிறான். தூள் துணியை எடுத்து கீழே அதற்கான பக்கெட்டில் கொட்டி விட்டு புது தூள் எடுத்து அந்த துணிக்குள் போட்டு அந்த துணியை இறுக கட்டி... அந்த வடிகட்டுதலின் வழியாகவே கோப்பைக்குள் தேநீர் நிரம்புகிறது. அதற்கு முன் ஒரு ஸ்பூனில் கொஞ்சம் எடுத்து அண்ணாந்து வாய்க்குள் விட்டு சுவை பரிசோதிக்கிறான். சர்க்கரை போதவில்லை.. தூள் போதவில்லை.. பால் போதவில்லை என்பதை அந்த நொடியில் உணர்ந்துகொண்டு அதற்குத் தக்க சேர்க்கிறான். அற்புதம் கமகமவென வாசத்தோடு அரங்கேறுகிறது.

ஒரு சுழற்சிக்கு 10 கோப்பை தேநீரை அவனால் தருவிக்க முடிகிறது. நிறுத்தி நிதானமாக ஆனால் நமக்கு நேரம் ஆவதில்லை.

கொதிக்கும் தேநீர் அவனோடு குதித்து குதித்துப் பேசுகிறதோ. அதீத சிந்தனை நமக்கு இயல்புதானே. அருகே அப்படியே நின்று விட்டேன். வழக்கம் போல ஒரு டீ என்றெல்லாம் இங்கு கேட்க தேவை இல்லை. யார் முதலில் வருகிறார் யார் அடுத்து வருகிறார் என கடைக்கண் பார்வையிலேயே அவன் அளந்து விடுகிறான். அடுத்தடுத்து ஊற்றி ஊற்றி தருவதில் அப்படி ஒரு செய் நேர்த்தி. நான் பார்த்த வரையில் முதல் வந்தவருக்கு தான் முதலில் தருகிறான். முந்திக்கொண்டு நீளும் கைகளை அவன் மதிப்பதில்லை.

சர்க்கரை ஜாஸ்தி என்போருக்கு அவர்கள் ஒரு முறை சொன்னாலே போதுமானது. சரியாக அவர்களுக்கு தருகையில் சர்க்கரை அதிகம் போடுவதை அழகாகவே நினைவில் கலக்கிறான். அதே தான் சக்கரை கம்மிக்கும். சர்க்கரை கம்மிக்கு ஒரு சின்ன டிகாஷன் குவளை வைத்திருக்கிறான். இவை எல்லாமே அவன் கைக்குள்ளாகவே படபடவென அது அது அதுவாகவே நிகழ்ந்து விடுகிறது.

12 ரூபாய்க்கு இருபது கொடுத்தால் திரும்ப பத்து ரூபாயை முகம் சுழிக்காமல் கொடுத்துவிட்டு நாளைக்கு என்று ஜாடை செய்கிறான். நான் அடுத்த நாள் மறக்காமல் 2 ரூபாய் -ஐ கொடுத்தேன். அவன் அன்றைக்கும் 12 ரூபாய்க்கான அற்புதமான தேநீர் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபடுகிறான்.

சக்கரை கம்மியா ஸ்ட்ராங்கா ஆத்தாம ஒரு டீ என்று நான் சொல்லாத கடைகள் இல்லை. நான் பார்த்த 80 சதவீதம் டீ மாஸ்டர்கள் கவனக்குறைவாகவே தான் இருக்கிறார்கள். ஒரு நாள் கூட சர்க்கரை கம்மிக்கு... அவர்களுக்கு அளவு தெரிந்ததே இல்லை. அதுவும் அலட்சிய பார்வை.. கோபக்கார குறியீடுகள்.. சட்டை இல்லாமல் பனியனோடு நிற்கும் அரைகுறை தோற்றங்கள் என என்னவோ இவர்களுக்கு மட்டும் தான் வேலை இருக்கிறது போன்ற வெளிப்பாடுகள் சகிக்க இயலாதவை.

(நல்லா இல்லாத டீயை நல்லா இல்லன்னு சொல்லி பாருங்க. சொல்லித்தான் பாருங்களேன். கடையை விட்டு முழு கருத்தோடு வெளிய வந்தற முடியுமா. நல்லா இல்லாத டீயை குடித்த அன்று அது நல்லா இல்லை என்று இதுவரை உங்களில் யாராவது கடையில் சொல்லி இருக்கிறீர்களா.)

ஆனால் இவன் அப்படி இல்லை. நான் பையா என்று கூப்பிடவும் இல்லை. அவன் அண்ணா என்று சொல்லவுமில்லை. வருகிறவர் டீ க்கு தான் வருகிறார் என்று அவனால் சுலபமாக கண்டுணர முடிகிறது. ஒரு டீ மாஸ்டருக்கு தேவையான புரிந்துணர்வு அது. டீ மாஸ்டர் உட்பட பல மாஸ்டர்களுக்கு உடல்மொழியில் இருக்கும் ஒரு வீணா போன தெனாவெட்டு அவனிடம் இல்லை.

எங்கும் இஞ்சி டீ க்கு தனியாக சொல்ல வேண்டும். அதையும் மறந்துட்டேன் என்று குற்ற உணர்வே இல்லாமல் வழக்கமான டீயை நீட்டும் பேக்கரி பாய்ஸ் மத்தியில்.. இவன் போடுவதே இஞ்சி டீ தான். ஆத்தாம என்றெல்லாம் சொல்ல தேவை இல்லை. அவன் சூடே சுடச் சுட தான்.

இங்கு சராசரி கடைகளில் டீ 15 ரூபாய் அல்லது 20 ரூபாய்.. அல்லது 25 க்கு போய் விட்டது. போகட்டும். ஆனால் அதற்குத் தக்க தரம் இருக்கிறதா என்றால்... பெரும்பாலும் இல்லை. கழுநீர் தண்ணியை உரிவது போல தான் பலர் டீ குடிப்பது. அதில் என்ன சுவை இருக்கிறது... எப்படி அந்தச் சுவை இருக்கிறது என்றே அவர்களுக்கு தெரியாது. திறன்பேசிக்குள் திடீர் பிணம் போல குனிந்து கிடப்பவனுக்கு தேநீர் என்ன கழுநீர் என்ன. எல்லாம் ஒன்றுதான். ஆனால் நமக்கு அப்படி இல்லை. அதில் ஓர் ஆத்ம திருப்தி வேண்டும். நல்ல தேநீருக்கு நான் சண்டையிடாத அடுமனைகள் இல்லை. ஸ்ட்ராங்கா என்பதை அரை டம்ளருக்கு டிகாஷன் ஊற்றும் அளவுக்கு தான் புரிந்து கொள்வார்கள். ஒன்னு பாலை ஊத்தி பால் டீயா ஆக்கிடுவான். இல்ல... டிகாஷனை போட்டு கட்டஞ்சாயாவுக்கு அக்காவாக்கிடுவான். செய்யும் தொழிலில் நுட்பம் கொண்டவனுக்கே... அதன் நுணுக்கம் பிடிபடும். இங்கே பெரும்பாலும் அப்படி மாஸ்டர்ஸ் இல்லை. சில கடைகளில் அத்தி பூத்தாற் போல நல்ல டீ கிடைக்கும். ஆனால் தொடர்ந்து அதற்கு உத்திரவாதம் இல்லை. என்றைக்கும் ஒரே சுவையை ஒரு கை கொள்ளுமாயின் அந்தக் கை தான்... அதில் மாஸ்டர். மற்றதெல்லாம் சும்மா பேருக்கு. ஊருக்கு ஆகும். சுவைக்கு ஆகாது.

சரி சுத்தம் என்று வருகையில்.. எனக்கு தெரிந்து தேவ் நாராயணன் டீ ஸ்டால்.. இங்கிருக்கும் பல பேக்கரிகளை விட பரவாயில்லை என்றே தோன்றுகிறது. மேலும் கிச்சன்களுக்கே உரித்தான சூழல்... முன்ன பின்ன இருந்தாலும்... பெரும்பாலும் நாம் அதற்குள் நுழையாமல் இருப்பதே நல்லது.

- கவிஜி