மயிலாடுதுறை சாரங்கபாணி 

சாரங்கபாணி மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியில் இளங்கலை (பொருளியில்) முதலாம் ஆண்டு படித்து வந்தவர். 

mayiladuthurai sarangapaniதமிழகம் முழுவதும் மாணவர்கள் இந்தித் திணிப்பை எதிர்த்து போராடி வந்த நேரம்! ஆனால் உள்ளூர்ப்பள்ளிகளில் ஒரு சில வகுப்புகள் கமுக்கமாக நடப்பதாகத் தெரிந்தது. 

மயிலாடுதுறை பட்டமங்கலத் தெரு அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்று 14.3.1965 காலை சாரங்கபாணியும் இரா.மா. இராசேந்திரன் முதலிய அவர்களும் போராட்டத்தில் பங்கேற்குமாறு வேண்டிக்கொள்ள வந்தனர். அதனை ஏற்று மாணவியர் பலர் வீட்டிற்குத் திரும்பினார். சில மாணவியர் முகத்தைத் திருப்பியபடி பள்ளிக்குள் சென்றனர். 

'பள்ளிக்குள் போகவேண்டாம்' எனச் சாரங்கபாணி தரையைத் தொட்டு வணங்கி உருக்கமாய்க் கேட்டு கொண்டிருந்தார். அவர் வணங்கத் தலை குனிந்த போது, பள்ளிக் காவலர் தடிக்கம்பால் தலையை நிமிர்த்தி எதிர் பக்கத்திற்குத் தள்ளி சென்றுள்ளார். 

'அவர்கள் செய்வதைச் செய்யட்டும்' என நண்பர்களிடம் கூறிய சாரங்கபாணி வேண்டுகோள் வைப்பதை அமைதியாகத் தொடர்ந்துள்ளார். 

இயல்பிலேயே அமைதியானவர் சாரங்கபாணி. வேளாண்மையை நம்பி வாழ்ந்த குடும்பம். ஒரே தங்கை இந்திரா. சொந்தவூர் மருதவாஞ்சேரி. மயிலாடுதுறைக்கும் திருவாரூருக்கும் இடையே முடிகொண்டான் ஆற்றங்ககரையில் உள்ள ஊர். 

தென்னந்தோப்பின் நடுவே சிறிய கூரைவீடு அவருடையது. கல்லூரியில் படிக்க வந்தவர், வெளியே அறை எடுத்து நண்பர்களுடன், தங்கியிருந்தார். 

தீக்குளிப்பும் உயிரிழப்பும் தொடர்ந்து நடந்த போதும், தமிழைப் பாதுகாக்கும் தீர்வு கிடைக்கவில்லையே இணைக்க கவலைப்பட்ட நிலையில் சாரங்கபாணி இருந்துள்ளார். 

பள்ளி முன் அறப்போர் செய்த அன்று மாலை அவர் அறைக்கு வரவில்லை . மண்ணெண்ணெய் வாங்கிக்கொண்டு வேறிடம் சென்று தங்கிவிட்டார். 

தனது தீர்மானத்தை நண்பர்கள் தடுத்து விடக்கூடாது என்று எச்சரிக்கையாய் இருந்துள்ளார். விடியற்காலையில் மண்ணெண்ணெய் நனைந்த உடலில் தீ வைத்துக் கொண்டு கல்லூரி வாசல் நோக்கி ஓடியுள்ளார். 

உடல் வெந்த நிலையில், தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றுள்ளனர். பிழைக்க வைத்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் மாணவர் தலைவர்கள் பாலகிருட்டிணன் தமாசு முதலியோர் போராடியுள்ளனர்.

மருத்துவமனையிலிருந்தோரை அருகில் வருமாறு 15.3.1965ஆம் நாள் மாலை சாரங்கபாணி அழைத்துள்ளார். மருத்துவர், செவிலியர் எனக் கட்டிலைச் சுற்றி நின்றோரிடம் 'தமிழ் வாழ்க' என்று கூறுமாறு வேண்டியுள்ளார். 

கலங்கிய குரலுடன் அவர்கள் சொன்ன சொற்களைக் கேட்டபடியே சாரங்கபாணியின் உயிர் அடங்கிவிட்டது.  சொந்த ஊர் மருதவாஞ்சேரிக்குக் கொண்டுவரப்பட்ட அவர் உடல், அவருக்குச் சொந்தமான இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. 

பாவேந்தர் பாரதிதாசன் இப்படி ஏக்கக்குரல் எழுப்பிய போதும், இழப்பின் எண்ணிக்கை தொடர்ந்துபடி உள்ளது. 

எனை ஈன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள்

     இனம் ஈன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால்

தினையளவு நலமெனும் கிடைக்கும் என்றால்

    செத்தொழியும் நாள் எனக்குத் திருநாள் ஆகும்!

- பாவேந்தர் பாரதிதாசன் (பாவேந்தம் - 2 . பக்கம் - 159)

***

தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி

    நமக்குள்ள உரிமை தமக்கென் பாரெனில்

வழிவழி வந்தஉன் மறத்தனம் எங்கே?

    மொழிப்பற் றெங்கே? விழிப்புற் றெழுக!

- பாவேந்தர் பாரதிதாசன் (பாவேந்தம் - 17 . பக்கம் - 91)

***

தனக்கென வாழ்வது

      சாவுக்கொப் பாகும்

தமிழுக்கு வாழ்வதே

     வாழ்வது ஆகும்!

- பாவேந்தர் பாரதிதாசன் (பாவேந்தம் - 15. பக்கம் - 154)

புலவர் செந்தலை .கவுதமன்சூலூர் - பாவேந்தர் பேரவைகோவை

(தொடரும்...)

Pin It