கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

தமிழ்த் தேச இறையாண்மையின் ஆய்வறிக்கை - நவம்பர் 2024  

  1. 1917 அக்டோபர் ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு உலகின் பல நாடுகளில் பொதுவுடைமைக் கட்சிகள் தொடங்கியபோது இந்தியத் துணைக் கண்டத்திலும், தமிழ்நாட்டிலும் பொதுவுடைமைக் கட்சி 1920 இல் தொடங்கப்பட்டது. தேசம், தேசிய இனம், தேசிய அரசு, ஜனநாயகப் புரட்சிக்கும் தேச உருவாக்கத்திற்குமான உறவு, பல்தேசிய இன நாடுகளில் கட்சி கட்டுவது, தேசியம், சர்வ தேசியங்களுக்கு இடையிலான பாட்டாளி வர்க்க உறவு ஆகியன பற்றி மார்க்சியம் தெளிவாக கூறியிருந்தும் இவற்றையெல்லாம் ஆய்வு செய்யாமல் இந்தியாவை தேசம் என்றும், அதன் அடிப்படையிலேயே இந்திய அளவில் புரட்சிக்குத் திட்டமிட்டு இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைக் கட்டியதுமே தேக்கத்திற்கான முதன்மையானக் காரணமாகும். பிற அரசியல் மற்றும் நடைமுறை காரணங்கள் இரண்டாம் பட்சமாகவும் சரி செய்யக் கூடியதும் ஆகும்.

இந்தியா பல்தேசிய இன அரசு சமூகமே ஒழிய தேசிய இன சமூகம் அல்ல. ஒரு தேசத்திற்கான மொழி, இடம் ஆகியன இனக்கூறாகும். பொருளாதார ஒருங்கிணைப்பு என்பது சமூகக் கூறாகும். எனவே இந்தியாவின் இனக் கூறை ஆய்வு செய்யாமல் பொருளாதார ஒருங்கிணைப்பைக் கொண்டு இந்தியாவை தேசம் என்பது பொருளாதாரவாதமாகும். இதுதான் புரட்சி இயக்கத்தின் எல்லா வகையான பின்னடைவுக்கும் காரணமாகும். எனவே இந்த பொருளாதாரவாதத்திற்கு எதிரான போராட்டத்திலேயே புரட்சி இயக்கம் முன்னேற முடியும்.

  1. தமிழ்நாட்டில் 1932லும், 1965லும் தொடங்கிய மொழிப் போராட்டம், எல்லைப் போராட்டம் போன்ற தமிழ்த் தேசிய உரிமைப் போராட்டங்கள் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டமாக, மேலும் திராவிட நாடு திராவிடர்களுக்கே என வெடித்து கிளம்பிய போதும், அதே காலக்கட்டத்தில் காஷ்மீர் மற்றும் வட கிழக்கு தேசிய இனங்களில் தேசிய விடுதலைப் போராட்டங்கள் மூண்டபோதும் இந்தியப் பொதுடைவுமை கட்சி அதனை ஜனநாயகப் போராட்டமாக ஏற்று ஆதரித்ததே தவிர, அதனை விடுதலைப் போராட்டமாக அறிந்து கொண்டு அதற்கு உணர்வு பூர்வமாக தலைமையளிக்கத் தவிறிவிட்டது. 1920 இல் தொடங்கிய இந்திய பொதுவுடைமைக் கட்சி, அதிலிருந்து மாறுபட்டு 1964 இல் தொடங்கிய இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்), அதிலிருந்து மாறுபட்டு 1967 இல் தொடங்கிய இந்திய பொதுவுடைமைக் கட்சி (மா-லெ) குழுக்களின் பல பிரிவுகள் தங்களிடையே மாறுபட்ட நிலைபாடுகள் கொண்டிருந்தாலும் ‘இந்திய தேசம்’ என்ற கண்ணோட்டத்தை விட்டவர்களாக இல்லாமல் அதன் அடிப்படையிலேயே வேலைகளைத் திட்டமிட்டனர். இந்திய பொதுவுடமைக் கட்சி (மா-லெ)யின் பல பிரிவுகள் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்துள்ளதால் அது இ.பொ.க, இ.பொ.க (மா) ஆகியவற்றிலிருந்து 1967 முதல் வேறுபட்டுள்ளன. அதே நேரத்தில் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாட்டை எந்திரகதியாக எடுத்துக் கொண்டுள்ளதே தவிர, இந்தியாவின் தனித்தன்மைகளை ஆய்வு செய்து வந்த முடிவுகளாக இல்லை எனக் காட்டுகிறது. காஷ்மீர் மற்றும் வடகிழக்கு தேசிய விடுதலைப் போராட்டங்கள் ஆகியவற்றின் பின்னடைவுகளுக்கு கூட இந்திய பொதுவுடமைக் இயக்கங்களின் தேசம் பற்றிய பொருளாதாரவாத தவறே காரணம் என்றால் மிகையல்ல. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இ.பொ.க. (மா-லெ)யின் தமிழ்நாடு அமைப்புக் குழுவும் மாநில அமைப்புக் குழுவும் வறட்டுத்தனமாக எதிர்த்தபோது மக்கள் யுத்த குழு மட்டுமே ஆதரித்தது.
  1. முதலாளித்துவம், முதலாளித்துவம் வளர்ந்து ஏகாதிபத்தியமாக மாறிய நிலையில் ஏகாதிபத்திய முதலாளித்துவமானது தேசிய இன பிரச்சினையை தீர்க்காமல் நீடிக்கச் செய்கிறது, காரணம் ஒடுக்கும், ஒடுக்கப்படும் தேசிய இனத்திலுள்ள பாட்டாளி வர்க்கமும் அதன் நட்பு சக்தியான விவசாய வர்க்கமும் தங்களது சொந்த தேசிய இனத்திலுள்ள முதலாளியத்திற்கு எதிரான போராட்டத்தை திசை திருப்பவும், பாட்டாளிய சர்வ தேசிய ஒற்றுமையை தடுப்பதற்கும் இந்த உத்தியை கையாள்கிறது. எனவே, பொதுவுடமையர்கள் அப்பிரச்சினையை உடனே தீர்க்க வேண்டும். முதலாளித்துவமானது எந்த ஒரு சிக்கலையும் முதலாளிவர்க்க நலனிலிருந்தே அணுகுகிறது. ஆனால், பாட்டாளி வர்க்கமானது எந்த ஒரு சிக்கலையும் மொத்த சமூக நலனிலிருந்தே அணுகுகிறது. ஒரு தேசிய இனத்தின் பிரிவினையை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? என்பதை கூட வர்க்கப் போராட்டத்திற்கான சிறந்த நிலைமையை உருவாக்குவது என்ற கோணத்திலேயே பாட்டாளி வர்க்கம் அணுகுகிறது. ஒரு தேசிய இனம் பிரிவதன் மூலம் வர்க்கப் போராட்டத்திற்கான சிறந்த நிலைமை உருவாகும் என்றால் அத்தேசிய இனத்தின் பிரிவுனையை ஆதரிக்க வேண்டும். ஒரு தேசிய இனம் பிரிவதன் மூலம் வர்க்கப் போராட்ட நலன் பாதிப்படையும் என்றால் அத்தேசிய இனம் பிரிவதை எதிர்க்க வேண்டும். ஒருவேளை ஒரு தேசிய இனம் பிரிவதை முன்னிட்டு உலகப்போர் மூளும் நிலைமை உருவாகும் என்றாலும் ஒரு தேசிய இனம் பிரிந்து பிற்போக்கிற்கு வலு சேர்க்கும் என்றாலும் அப்பிரிவினையை பாட்டாளி வர்க்கம் எதிர்க்கும். இதுதான் பிரிவது தொடர்பாக பாட்டாளி வர்க்கத்தின் பன்னாட்டு தேசியக் கொள்கை. இந்த முடிவுகளை குறிப்பான நிலைமைகளை ஆய்வு செய்து மேற்கொள்ள வேண்டும்.
  1. தமிழ்நாட்டில் இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் தொடர்ச்சியாய் தொடங்கப்பட்ட மேற்கு மண்டல குழுவின் ஒன்றான இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மா-லெ) தமிழ்நாடு அமைப்புக் குழுதான் இந்திய தேசம் என்ற பொருளாதாரவாதத் தவறை ஆய்வுக்குட்படுத்தி கண்டறிந்தது. பிற மார்க்சிய - லெனினிய குழுக்கள் இந்திய தேசம் என்ற பொருளாதாரவாத தவறுடன் நீடிக்கிறது. இந்தியப் பொதுவுடைமை இயக்கத்திற்கு நூறு ஆண்டு கால வரலாறு இருப்பினும் அதன் முதல் பேராயம் 1943லேயே நடைபெற்றது. பம்பாயில் நடைபெற்ற முதல் பேராயத்திற்குப் பின் 1948ல் கல்கத்தாவிலும், 1954ல் மதுரையிலும், 1956ல் பாலக்காட்டிலும், 1958ல் அமிர்தசரசிலும், 1961ல் விசயவாடாவிலும், 1964ல் கல்கத்தாவிலும் அதன் அடுத்தடுத்த பேராயங்கள் நடைபெற்றன. 1964ல் கல்கத்தாவில் நடைபெற்ற பேராயம் கட்சி பிளவுபட்டபின் நடைபெற்ற இ.பொ.க. (மா)வின் பேராயமாகும். அதன்பின் கட்சி மேலும் பிளவுபட்டு இ.பொ.க. (மா.லெ)யின் பேராயமாக எட்டாவது பேராயம் மீண்டும் கல்கத்தாவிலேயே நடைபெற்றது. ஆனால் தொடக்கத்திலேயே இடது தீவிரவாதத்தில் சிக்கிய இ.பொ.க. (மா.லெ) வெகுவிரைவிலேயே பல்வேறு குழுக்களாக சிதறுண்டது. அக்குழுக்கள் தத்தம் சொந்த மாநாடுகளையும், பேராயங்கள் மற்றும் பிளீனங்களையும் நடத்தி வருகின்றன.

இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் வரலாறு இடது, வலது தவறுகளின் வரலாறாகவே இருந்து வந்துள்ளது. கட்சிக்குள் இருந்த வலது தவறுகளை எதிர்த்த போராட்டம் கட்சியை இடது திரிபுகளுக்கும், இடது திரிபுகளை எதிர்த்த போராட்டம் வலது திரிபுகளுக்கும் இட்டுச் சென்றுள்ளன என்பதையும், 1920 - 30 வரை பொதுவுடைமை இயக்கம் பிரதானமாக வலது சந்தர்ப்பவாதத்திலும் 1930 - 35 வரை இடது விலகளிலும் 1935 - 48 வரை மீண்டும் வலது சந்தர்ப்பவாதத்திலும் 1948 - 51 வரை இடது தீவிரவாதத்திலும், 1951 - 67 வரை மீண்டும் வலது சந்தர்ப்பவாதத்திலும், 1967க்குப் பின் பிரதானமாக இடது தீவிரவாதத்திலும் சிக்கிக் கொண்டது.communist leadersஅரசியல் அரங்கில் மூன்று கட்டங்களில் வெளிப்படும் வலது திரிபு என்பது பிரதானமாக காங்கிரசுக் கட்சியுடனான உறவைப் பேணுவதில் வெளிப்பட்டது. மற்ற மூன்று கட்டங்களிலான இடது திரிபு என்பது முதல் கட்டத்தில் ஏகாதிபத்தியத்துக்கெதிரான குறிப்பான திட்டம் வைக்கப் தவறியதிலும், இரண்டாவது கட்டத்தில் சோசலிசப் புரட்சிக் கட்டத்திற்கும், சனநாயகப் புரட்சிக் கட்டத்திற்கும் இடையிலான வேறுபாட்டை சரியாகக் கையாளாததிலும் மூன்றாவது கட்டத்தில் ம,.தி. அமைப்பு, இயக்கங்களை முற்றாக நிராகரித்து தனிநபர் அழித்தொழிப்பை ஒரே போராட்ட முறையாக முன் வைத்ததிலும் பிரதானமாக வெளிப்பட்டது; சுருங்கக் கூறின் வலது திரிபு என்பது எதிர்ப்புரட்சி வர்க்கங்களுடன் கொண்ட சமரச உறவையும் இடது திரிபு என்பது புரட்சிகர ஐக்கிய முன்னணியில் அணிதிரட்டப்பட வேண்டிய சக்திகளிடமிருந்து தனிமைப்பட்டத்தையும் குறித்தது. இந்த இடது, வலது திரிபுகளைக் களைந்து அடிப்படையில் சரியான அரசியல் கோட்பாட்டு நிலைப்பாடுகளை த.நா.அ.க.வின் 1983-ம் ஆண்டுப் பிளீனம் முன்வைத்தது. அது ஆளும் வர்க்கங்களுடனான சமரசமற்ற போராட்டத்தை முன்வைத்தது; பாராளுமன்றத்தை எதிர்த்தது; அதே நேரத்தில் ம.தி. வழியில் ஊன்றி நின்று குறிப்பான திட்டத்தை முன்வைத்து புரட்சிகர ஐக்கிய முன்னணிக்கு வழிகாட்டியது. அதேநேரத்தில் “இந்திய தேசம்” என்ற பொருளாதாரவாதத்திற்கு முடிவுகட்டவில்லை.

தேசம் என்பது பற்றியும், தேசத்தின் உருவாக்கத்திற்கும் சனநாயகப் புரட்சிக்கும் உள்ள தொடர்பு பற்றியும் மார்க்சியம் தெளிவாக அறிவுறுத்தியிருந்த போதிலும் 1942 - 43 வரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இந்தியா ஒரு பல்தேசிய இன காலனி நாடு என்பதையே உணரவில்லை. காங்கிரசுக் கட்சியைப் போலவே இந்தியா முழுவதும் ஒரே தேசம் என்ற கருதுகோளின் அடிப்படையிலேயே கம்யூனிஸ்ட் கட்சி இயங்கி வந்தது. இந்திய ஒற்றுமை என்பது இந்து - முசுலீம் ஒற்றுமை என்பதாகவே கருதி வந்தது. 1938ல் கூட இந்தியா ஒரு தேசம் என்றும் அதில் சிறுபான்மையினரான முசுலீம்களின் மத, கலாச்சார உரிமைகளையும், கோரிக்கைகளையும் அனுமதிப்பதன் மூலம் இத்தேசத்தின் ஒற்றுமையைப் பாதுகாப்பது  என்றும் காங்கிரசுக் கட்சி தீர்மானம் வெளியிட்டபோது கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடும் அதுவாகவே இருந்தது.

1940-ல் முசுலீம் லீக், பாகிஸ்தான் கோரிக்கையை முன்வைத்ததும் அதே நேரத்தில் நாட்டின் பல பகுதிகளிலும் மொழிவழி மாநில அமைப்புகளுக்கான போராட்டம் தொடர்ந்து நடந்து வந்ததும் (கர்நாடகா, ஆந்திரா, ஒரிசா, மகாராசுடிரா போன்றவை தனிமாநிலக் கோரிக்கையை முன்வைத்திருந்தன. தமிழ்நாட்டில் தனிநாடு கோரிக்கை எழுந்திருந்தது. நாட்டின் பல பகுதிகளில் மக்கள் மொழி அடிப்படையில் பிரிந்த முரண்பாடுகள் வெளிப்பட்டு வந்தன) கட்சியை தேசிய இனப் பிரச்சனை பற்றி பரிசீலிக்கத் தூண்டியது. “இந்தியா இன்று ஒரே முழுமை என்று கூறப்படுகிறது. ஆனால் இந்தியாவில் புரட்சி எழுச்சி நடக்கும்போது இதுவரை அறிந்திராத தேசிய இனங்கள் பல தமது சொந்த மொழி, கலாச்சாரம் ஆகியவற்றுடன் அரங்கில் தோன்றும்” என்று 1925ல் ஸ்டாலின் கூறியிருந்ததும், தேசங்கள் பற்றிய அவருடைய வரையறுப்பும், கட்சியின் கவனத்தை ஈர்த்தன. இவற்றினடிப்படையில் தேசிய இனப் பிரச்சினை பற்றி கட்சி பரிசீலித்தது. இப்பரிசீலனையின் முடிவில் 1942 செப்டம்பரில் கூடிய மத்திய கமிட்டி இந்தியா ஒரு பல்தேசிய இன நாடு என்றும், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதன் மூலமே இந்திய ஐக்கியத்தைப் பாதுகாக்க முடியும் என்றும் முடிவுக்கு வந்தது. இதை 1943ல் நடைபெற்ற கட்சிப் பேராயம் உறுதி செய்தது. இன்றைய பாகிஸ்தான் பகுதி உட்பட்ட இந்தியாவில் வளர்ச்சியடைந்த தேசிய இனங்கள் மொத்தம் பதினேழு இருப்பதாகவும் பட்டியலிட்டது.

தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை அளிப்பது பற்றிய தீர்மானம் தொடர்ந்து 1948-ல் நடைபெற்ற இரண்டாவது கட்சிப் பேராயத் தீர்மானத்திலும், 1953 - 54ல் நடைபெற்ற மூன்றாவது கட்சிப் பேராயத் தீர்மானத்திலும் இடம் பெற்றன.

மொழிவழி மாநில அமைப்பு குறித்த விவாதம் வந்தபோது அதை கட்சி உறுதியாக ஆதரித்து மொழிவழி மாநில அமைப்புகளுக்கான போராட்டத்தை வரவேற்றது; மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்படுவது நீண்ட போராட்டங்களின் விளைவாக சனநாயக சக்திகளுக்குக் கிடைத்த வெற்றி என வர்ணித்தது. மொழிவழி மாநில அமைப்புகளுக்குப் பதிலாக அவற்றை இணைத்து கோட்பாடற்ற பிரதேச இணைப்புகளை மேற்கொள்வது என்ற தீர்மானத்தை (வங்கம் - பீகார் இணைப்பு, தட்சிணப்பிரதேசம், பட்சமா பிரதேசம் ஆகிய ஆலோசனைகளை) எதிர்த்தது.

ஆனால் 1964ல் கட்சி பிளவுபட்டபின் இ.பொ.க., இ.பொ.க. (மா) ஆகிய இரு கட்சிகளுமே கட்சித் திட்டத்திலிருந்து தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை பற்றிய தீர்மானத்தை நீக்கிவிட்டன. இது குறுகிய இனவாதத்துக்கும் பிரிவினைவாதத்துக்கும் வழி வகுக்கும் என்று இரு கட்சிகளும் கூறின. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்பது இரசியாவின் நிலைமைகளில் லெனினால் தீர்மானிக்கப்பட்டது என்றும், அது எல்லா நாடுகளுக்கும் பொது விதியல்ல, இந்தியாவின் குறிப்பான சூழலில் அது பொருந்தாது என்றும் இ.பொ.க. (மா) கூடுதலாகப் புரட்டல்வாத விளக்கம் அளித்தது.

ஆனால் இ.பொ.க. (மா) விலிருந்து பிரிந்து தோன்றிய இ.பொ.க. (மா - லெ) தனது கட்சித் திட்டத்தில் மீண்டும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைத் தீர்மானத்தை இடம் பெறச் செய்தது. இத்தீர்மானத்தின் அடிப்படையில் நாகா, மிசோ மற்றும் அனைத்துத் தேசிய விடுதலைப் போராட்டங்களையும் உறுதியாக ஆதரித்தது. அதே நேரத்தில் இ.பொ.க.வும், இ.பொ.க. (மா) வும் இவை இந்தியாவைப் பிளவுபடுத்திட குறுகிய இனவாதிகளும், ஏகாதிபத்தியவாதிகளும் செய்யும் சதி என்று கூறி எதிர்த்தன.

1942 - 43 லிருந்து ஒன்றாயிருந்த கம்யூனிஸ்ட் கட்சியும் பின்னர் இ.பொ.க. (மா - லெ)யும் தமது கட்சித் திட்டத்தில் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைத் தீர்மானத்ததை சேர்த்துக் கொண்டிருந்தது; ஒன்றாயிருந்த கம்யூனிஸ்ட் கட்சிக்கு மொழி வழி மாநில அமைப்புகளையும் அதற்கான போராட்டங்களையும் ஆதரிப்பதற்கும், இ.பொ.க. (மா - லெ)க்கு தேசிய விடுதலைப் போராட்டங்களை ஆதரிப்பதற்கும் உதவியது. எனினும் தேசிய இனப் பிரச்சனை குறித்த இந்தத் தீர்மானம் இந்தியாவில் சனநாயகப் புரட்சியை வெற்றிக்கு இட்டுச் செல்லப் போதுமானதாக இல்லை. காரணம், இரசிய போல்சுவிக் கம்யூனிஸ்ட் கட்சி அந்நாட்டின் தேசிய இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மேற்கொண்ட தீர்மானக்களைப் பின்பற்றி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது கட்சித் திட்டத்தில் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை பற்றிய தீர்மானத்தைச் சேர்த்ததே தவிர இரசியாவின் தேசிய இனப்பிரச்சினையிலிருந்து இந்தியாவில் தேசிய இனப் பிரச்சினை வேறுபட்டிருக்கும் விதம் பற்றிய ஆய்வு எதையும் மேற்கொண்டு அதற்கேற்ப தீர்மானங்களை மேற்கொண்டிருக்கவில்லை. இ.பொ.க. (மா - லெ) தனது கட்சித் திட்டத்தில் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்ற தீர்மானத்தை மீண்டும் இணைத்துக் கொண்டது கூட 1943 - 53 கால கட்சித் திட்டங்களின் தேசிய இனப் பிரச்சினை பற்றிய நிலைப்பாட்டை மீட்டமைத்துக் கொண்டதாக இருந்ததே அன்றி இந்திய நிலைமைகள் குறித்த பருண்மையான ஆய்வுகளிலிருந்து பெறப்பட்டதாக இல்லை.

இரசியாவில் ஜாராட்சியின் கீழ் பெரிய ருசிய தேசிய இனம் ஒடுக்கும் பெரும் தேசிய இனமாகவும் மற்ற தேசிய இனங்கள் ஒடுக்கப்படும் தேசிய இனங்களாகவும் இருந்தன. லெனின் தலைமையிலான போல்சுவிக் கட்சி ஒடுக்கும் தேசிய இனமான மாருசிய தேசிய இனத்தின் பலம் பொருந்திய சக்தியாகவும் புரட்சிக்குத் தலைமையளிக்கும் தீர்மானகரமான சக்தியாகவும் வளர்ந்திருந்தது. இந்நிலையிலேயே அது ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை தேசிய அரசுரிமையை அங்கீகரித்து அதன் மூலம் ஒடுக்கப்படும் தேசிய இனப் பாட்டாளி வர்க்கக் கட்சிகளைத் தன்னுடன் ஐக்கியப்படுத்தி புரட்சியை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வந்தது.

இந்திய நிலைமையில் சுயநிர்ணய உரிமை பற்றியத் தீர்மானம், இந்தியா இன ரீதியாகவோ, மத ரீதியாகவோ பிளவுபட்டு விடாமல் ஐக்கியப்படுத்துவதையே முதன்மையான நோக்கமாகக் கொண்டு கட்சித் திட்டத்தில் சேர்க்கப்பட்டது. எனவே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தீர்மானங்கள் செயல்பாடுகள் அனைத்தும் இத்தீர்மானத்திற்குப் பின்னும் ‘இந்தியப் தேசிய ஐக்கியம்’ பாதுகாப்பது என்ற  முறையிலேயே அமைந்திருந்தன. இதன் தர்க்கரீதியான விளைவு கட்சி பிளவுபட்ட பொது இரு கட்சிகளுமே அத்தீர்மானத்தைக் கட்சித் திட்டத்திலிருந்து நீக்கிவிட்டதாகும்.

இ.பொ.க. (மா - லெ) தனது கட்சித் திட்டத்தில் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை பற்றிய தீர்மானத்தை மீண்டும் சேர்த்துக் கொண்டதால் இந்தியத் தேசம் என்ற கருத்தாக்கத்திலிருந்து விடுபட்டுவிடவில்லை. காலனிய கால ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தை அதன் கட்சித் திட்டம் தேசிய விடுதலைப் போராட்டம் என்றே வர்ணித்தது. இந்தியாவின் அரசியல் நிலைமைகள் குறித்த தீர்மானங்கள் அனைத்தும் தேசிய நிலைமைகள் என்றே வர்ணிக்கப்பட்டன. உண்மையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி என்பதே ‘இந்தியக் தேசம்’ என்ற கருத்தாக்கத்திலிருந்து விடுபடாததன் வெளிப்பாடேயாகும்.

இவ்வாறு இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்கள் இருப்பதையும் அவற்றின் சுயநிர்ணய உரிமையையும் இந்தியப் பொதுவுடைமை இயக்கம் அங்கீகரித்த பின்னரும் கூட அது ‘இந்தியத் தேசம்’ என்ற கருத்தோட்டத்திலிருந்து இறுதி வரை விடுபடவே இல்லை. இந்தியத் தேசம் கருத்தோட்டம் தேசம் பற்றிய மார்க்சிய வரையறைக்கு முற்றிலும் மாறானது என்ற போதிலும் இந்தியப் பொதுவுடைமை இயக்க வரலாறு முழுவதும் அதன் தொடக்கம் முதல் இறுதிவரை இக்கருத்தோட்டத்தை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருக்கிறது. மொழி முதலான இனக்கூறு எதுவும் இல்லாத ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு இந்தியத் தேசம் என்ற கருத்தோட்டத்தின் அடிப்படையிலேயே அது தனது சனநாயகப் புரட்சித் திட்டம் பற்றிய கருத்தை வளர்த்துக் கொண்டிருந்தது. இதனால் தேசங்களின் உருவாக்கத்திலிருந்து சனநாயகப் புரட்சியை அது தனியாகப் பிரித்து விட்டது. இது இந்தியாவின் பல்வேறு தேசிய இனங்களையும், அவை நவீன தேசங்களாக உருவாகும் நிகழ்ச்சிப் போக்கையும் ‘இந்தியத் தேசத்திற்கு’ பலியாக்கும் பொருளாதாரவாதம் ஆகும். இவ்வாறு மொழி முதலான பொதுப் பண்புகள் (இனக்கூறு) ஏதுமில்லா ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு இந்தியத் தேசம் என்ற பொருளாதார (சமூகக் காரணி) அம்சத்தை மட்டும் கருத்தில் கொண்டு இந்திய சனநாயகப் புரட்சித் திட்டத்தைக் கட்சி வகுத்துக் கொண்டது பொருளாதாரவாதம் ஆகும்.  இதனால் இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் தத்துவார்த்த அடிப்படை பொருளாதாரவாதத்துக்கு மேல் ஒன்றும் இல்லை என்றாகியது. இ.பொ. இயக்கத்தில் எப்பிரிவாக இருந்தாலும் இதில் விதிவிலக்கில்லை. உண்மையில் இந்த பொருளாதாரவாதத்திற்கும் மார்க்சிய - லெனினியத்திற்கும் எவ்வித ஒட்டுறவும் இல்லை.

1894 - 1901 வரை முதலாளித்துவம் வெற்றி வாகை சூடிவிட்டது. ஆகவே அரசியல் பிரச்சினைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்று ரசியாவில் அரசியல் கிளர்ச்சிகளை நிராகரித்தவர்களை முதாளித்துவ பொருளாதாரவாதிகள் என்று லெனின் அழைத்தார்.

1916 இல் ஏகாதிபத்தியம் வெற்றிவாகை சூடிவிட்டது. ஆகவே, அரசியல் ஜனநாயகம் பற்றி யோசிக்க வேண்டிய அவசியமில்லை. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை சாத்தியம் இல்லை என்றார்கள். இவர்களை ஏகாதிபத்திய காலகட்டத்தின் பொருளாதாரவாதிகள், அதாவது ஏகாதிபத்திய பொருளாதார வாதிகள் என்று லெனின் அழைத்தார்.

இந்தியாவில் தேசிய இனங்களின் அரசுரிமையை மறுத்து பல்தேசிய இன நாடான இந்தியாவை தேசம் எனக்காட்டுவதும், அதாவது மொழி, இடம் முதலான இனக்கூறை மறுத்து பொருளாதார ஒருங்கிணைப்பு என்ற சமூக கூறை காட்டி இந்தியாவை தேசம் எனக் காட்டுவதும் பொருளாதாரவாதமாகும். இவர்களை நவீன ஏகாதிபத்திய பொருளாதாரவாதிகள் என்போம். இந்த நவீன ஏகாதிபத்திய பொருளாதாரவாதத்திற்கு எதிரான போராட்டத்திலேயே புரட்சி இயக்கத்தை முன்னெடுக்க முடியும். சர்வதேச அளவில் பொருளாதாரவாதம் என்பது பொதுவுடைமை இயக்கத்தில் வெவ்வேறு காலக்கட்டத்தில் ஒவ்வொரு நாட்டின் தனித்தன்மைக்கு ஏற்ப வெவ்வேறு வடிவில் வெளிப்படுகிறது.

தமிழ்த் தேச இறையாண்மையும் இந்தியப் பொதுவுடைமை கட்சி மார்க்சிய - லெனினிய அமைப்புகளும்.

தமிழ்நாட்டில், இந்தியத் துணைக் கண்டத்தில் ஜனநாயகச் புரட்சி என்பது தேசிய இன அடிப்படையிலேயே நடக்க முடியும். ஒடுக்கும் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் தனித்தனியான கடமையை எதிர்கொண்டு இருப்பதால் கட்சி என்பது தேசிய இன அடிப்படையிலேயே கட்டப்பட வேண்டும் என்பதை சுவிடன் நார்வே எடுத்துகாட்டுதல் விளக்குகின்றன. பல்தேசிய இன நாடான ரஷியப்புரட்சி என்பது இதிலிருந்து விதிவிலக்கானது. ரஷ்ய ஒடுக்கும் தேசிய இனத்தில் பலமான தொழிலாளர் வர்க்கம் பிற தேசிய இனங்களை ஒடுக்கிய தனது சொந்த தேசிய இனத்தை சேர்ந்த ஆளும்வர்க்கமான ஜார் மன்னனை அல்லது அவனது ஆட்சியை வீழ்த்தியதாலும், ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி பிற ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொண்டு போராடியதாலும் அங்கு ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பிற ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களும் இணைந்து ஜனநாயகப் புரட்சியை முன்னெடுத்தன. சுவீடன் - நார்வே பிரச்சனையில் இரு தேசிய இனங்களின் பாட்டாளி வர்க்கத்தின் கடமை வேறு வேறாக இருந்தன என வாதித்த லெனின், சர்வதேச பாட்டாளி வர்க்கத் தலைவன் என்ற முறையில் பல்தேசிய நாடான ரஷ்யாவில் ஒரே கட்சி ஒட்டுமொத்த புரட்சியை சாதித்துக் காட்டினார். காரணம்:  இரசியாவில் ஜாராட்சியின் கீழ் பெரிய ருசிய தேசிய இனம் ஒடுக்கும் பெரும் தேசிய இனமாகவும் மற்ற தேசிய இனங்கள் ஒடுக்கப்படும் தேசிய இனங்களாகவும் இருந்தன. லெனின் தலைமையிலான போல்சுவிக் கட்சி ஒடுக்கும் தேசிய இனமான மாருசிய தேசிய இனத்தின் பலம் பொருந்திய சக்தியாகவும் புரட்சிக்குத் தலைமையளிக்கும் தீர்மானகரமான சக்தியாகவும் வளர்ந்திருந்தது. இந்நிலையிலேயே அது ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை தேசிய அரசுரிமையை அங்கீகரித்து அதன் மூலம் ஒடுக்கப்படும் தேசிய இனப் பாட்டாளி வர்க்கக் கட்சிகளைத் தன்னுடன் ஐக்கியப்படுத்தி புரட்சியை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வந்தது. இந்திய நிலைமையோ வேறு. இங்கு அனைத்து தேசிய இனங்களும் ஒடுக்குமுறைக்கு உள்ளாகியிருக்கின்றன. இது பல்தேசிய நாடாக இருந்தபோதிலும் பல்வேறு வரலாற்று வளர்ச்சி போக்கில் உள்ளன. வெவ்வேறான பண்பாடு பழக்கவழக்கங்ளை கொண்ட மக்களை அதன் மூலம் பெற்ற மன இயல்புகளை கொண்ட மக்களை வழி நடத்த வேண்டுமானால் பொதுவுடைமை இயக்கம் அந்தந்த தேசிய இன அடிப்படையிலேயே கட்சியையும் வேலை திட்டத்தையும் வகுக்க வேண்டும். மாறாக ஒரே கட்சியில் ஒரே வேலை திட்டத்தில் இணையக் கூறுவது சர்வதேசியத்தை வறட்டு சூத்திரமாக மாற்றுவதாகும்.

இந்தியப் பொதுவுடமைக் கட்சி (CPI), இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) (CPIM) ஆகியன இரண்டும் மார்க்சிய - லெனினியத்தை தங்களது தத்துவக் கோட்பாடாக அறிவித்திருந்த போதிலும் இந்தியாவின் குறிப்பான நிலைமைகளில், அதை கைவிட்டனவாகவே உள்ளன. இன்றைய புதிய ஏகாதிபத்திய சூழலில் ஒரு பொதுவுடைமை இயக்கம் என்பது 1. மார்க்சிய - லெனினிய - மாவோ சிந்தனை 2. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை 3. பாராளுமன்ற ஆட்சிமுறைக்கு பதிலாக சோவியத் வடிவிலான ஆட்சி முறை 4. அரசியல் அதிகாரத்தை நிறுவ ஆயுதப் போராட்டம் 5. பாட்டாளி வர்க்க சர்வ தேசியம் 6. சர்வ தேசிய திரிபு வாதத்திற்கு எதிரான போராட்டம். ஆகிய நிலைப்பாடுகளைக் கொண்டிருக்க வேண்டும். இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் மார்க்சிய - லெனினிய அமைப்பினர் இதனை பொதுவான நிலையில் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் இ.பொ.க., இ.பொ.க (மா) ஆகிய இரண்டும் மார்க்சிய - லெனினியம், பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை ஏற்கொண்டனவாக அறிவித்துள்ளன. அதேநேரத்தில் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை, சோவியத் வடிவிலான ஆட்சிமுறை, ஆயுதப் போராட்டம், திரிபுவாதத்திற்கு எதிரான போராட்டம் ஆகிய நிலைபாடுகளை கைவிட்டுள்ளன. இதன் காரணமாக இவைகள் புரட்சியை கைவிட்டுள்ளன. இ.பொ.க. - மாவோ சிந்தனையை முழுமையாக ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால், இ.பொ.க. (மா) மாவோ சிந்தனையை கொள்கை அளவில் ஏற்றுக் கொள்வதில்லை. இந்தியாவை தேசம் என்றும், இந்திய முதலாளிகளை தேசிய முதலாளிகள் என்றும், தேசிய இனங்களின் அரசுரிமைக்கான போராட்டத்தை அதாவது தேசிய இன விடுதலை போராட்டத்தை பிரிவினைவாதம் என்றும் இ.பொ.க., இ.பொ.க.(மா) ஆகிய இரண்டும் வாதிடுவதன் மூலம் இந்திய முதலாளிவர்க்க கட்சிகளாக மாறிவிட்டன. முதலாளித்துவ ஜனநாயகம் என்பது தேசிய இனங்களின் உரிமைக்கான போராட்டத்தை இறுதியாக தேசிய இன அரசுரிமைக்கான போராட்டத்தை குறிப்பதாகும். இ.பொ.க., இ.பொ.க. (மா) ஆகிய இரண்டும் இப்போராட்டத்தை தீவிரவாதம், பிரிவினைவாதம் என்பதன் மூலம் ஜனநாயக மறுப்பவைகளாக சீரழிந்து இந்திய ஆளும் வர்க்கக் கட்சிகளாக காங்கிரசு, பிஜேபி நிலைக்கு தாழ்ந்துவிட்டன.

இந்தியப் பொதுவுடைமைக் கட்சி மார்க்சிய - லெனினிய பிரிவுகளைப் பொறுத்த அளவில் மார்க்சிய - லெனினியத்தின் பொதுவான கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டிருந்த போதிலும் இந்தியாவில் அதனை பொருத்துவதில் தோல்வியுற்றன. இந்திய முதலாளிகள் தரகு முதலாளிகள், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை, ஆயுதப் போராட்டம் ஆகிய நிலைபாடுகளை இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் பல்வேறு பிரிவுகளும் கொண்டுள்ளதால், இவைகள் ஆளும் வர்க்கத்துடன் சமரசமற்ற போராட்டத்தை நடத்துகின்றன. அதேநேரத்தில் தேசிய இனங்களின் உரிமைக்கான, அரசுரிமைக்கான போராட்டத்தை ஜனநாயகப் போராட்டமாக ஏற்று ஆதரிக்கின்றன. அதனால் அதற்கு தலைமையேற்க முன் வருவதில்லை. இதன் காரணமாக இவைகள் ஜனநாயக இயக்கங்களாகவே நீடிக்கின்றன.

2018இல் தொடங்கிய தமிழ்த் தேச இறையாண்மை என்பது தமிழ்நாட்டில் மார்க்சிய - லெனினியத்தை ஏற்றுக் கொண்டு செயல்படும் அமைப்பாகும். இது தமிழ்த் தேச விடுதலைப் புரட்சியை முன்னெடுக்கும் போராட்டத்தில் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து செயல்படும். தமிழ்நாட்டிலுள்ள இந்தியப் பொதுடைமைக் கட்சி மார்க்சிய - லெனினிய அமைப்புகளுடன் அவைகள் ஜனநாயக இயக்கங்கள் என்ற அளவில் மட்டுமே கூட்டிணைந்து செயல்படுமே தவிர, ஒன்றிணைவதற்கான வாய்ப்பேதும் இல்லை. இந்தியாவில் செயல்படும் பிற தேசிய இன விடுதலை இயக்கங்களுடனும் தமிழ்த் தேச இறையாண்மை கூட்டினைந்து செயல்படும். இதே அளவுகோலை சர்வதேச அளவிலும் கையாளும்.

தமிழ்த் தேச இறையாண்மை இந்தியாவின் இன்றைய குறிப்பான பாசிச அபாய சூழலில் பாசிசத்திற்கு எதிரான சக்திகளுடன் இணைந்து பாசிச எதிர்ப்பு முன்னணியை கட்டும். அதற்கான போராட்டத்தில் ஈடுபடும். இச்சூழலில் ஆளும் வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாட்டை கையாளும். புரட்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் வர்க்க அணி சேர்க்கை மாறுவது போல இந்த குறிப்பான சூழலிலும் அணி சேர்க்கை மாறும் என்பதை கவனத்தில் கொள்ளும்.

தமிழ்நாட்டில் செயல்படும் திமுக, அதிமுக போன்றவை தமிழினத்தின் உரிமைகள் சார்ந்த கோரிக்கைகளை எழுப்புவது மக்களிடையிலான ஜனநாயக மனப்பாங்கை அறுவடை செய்வதும், அதனைக் காட்டி இந்திய ஆளும் வர்க்கத்துடன் சலுகைகள் பெறுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. எனவே இவர்கள் ஜனநாயகத்தை படைக்கும் நோக்கம் கொண்டவர்கள் அல்ல என்பது வெளிப்படை.

தமிழ்நாட்டில் பலமான பாட்டாளி வர்க்க இயக்கம் இன்மையால் சாதிவாத, இனவாத, மதவாத, சட்டவாத போக்குகள் மேலோங்கி வருகின்றன. அதேநேரத்தில் ஒடுக்கப்பட்ட சாதி, மத இன, சட்டவாத கோரிக்கைகளில் ஜனநாயகத் தன்மை இருப்பதை புறக்கணிக்க இயலாது.  

மேலும், தமிழ்நாட்டில் பெரியாரிய, அம்பேத்கரிய கண்ணோட்டம் கொண்ட சிறு, சிறு அமைப்புகள் செயல்படுகின்றன. அம்பேத்கரின் முதலாளிய - பார்ப்பனிய எதிர்ப்பையும் பெரியாரின் இந்திய, பார்ப்பனிய எதிர்ப்பையும் தமிழ்த் தேச இறையாண்மை ஏற்று செயல்படும். அத்துடன் தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்திய எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு ஆகியவற்றின் தொடர்ச்சியான சமூக நீதி வழிகாட்டிகளையும் ஏற்று செயல்படும்.

இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் தொடர்ச்சியாக தொடங்கிய தமிழ்த் தேச இறையாண்மை பிற மா - லெ இயக்கத்திலிருந்து வேறுபட்டு தனித் தன்மையுடன்  செயல்படுகிறது. இப்படி கூறக் காரணம், அது இந்திய தேசம் என்ற ஏகாதிபத்திய பொருளாதாரவாதத்தையும், இந்தியாவின் தனிப்பண்பான பார்ப்பனியத்தையும் எதிர்க்கிறது. பல தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியாவை தேசம் எனக் காட்டுவது ஏகாதிபத்திய பொருளாதாரம் என்றால், அதற்கான தத்துவ நியாயங்களைக் கொடுப்பது பார்ப்பனியமே. காஸ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இம்மக்களை இணைத்திருப்பது இனம் அல்ல, பார்ப்பனியம் என்ற இந்து மதமே. மத அடிப்படையிலான தேசங்கள் வரலாற்றில் அமைவதில்லை. பார்பனியம் என்பது மக்களை சாதிகளாக பிரித்து ஒடுக்குகிறது. இங்கு உடைமை வர்க்கம் என்பது சாதிய நிலவுடமையாகவும், சாதிய முதலாளியமாகவும் அதனை பாதுகாக்கும் அதிகார வர்க்கமாகவும் இருக்கிறது. ஆக, இந்துத்துவமான பார்ப்பனியம் சமூக உற்பத்தியின் மேல்கட்டுமானத்திலும், சாதிய உடமை என்ற வகையில் அடித்தளத்திலும் செயல்படுகிறது. இந்திய தேசியம் என்பது பெரும் முதலாளிகளின் சந்தை தேவைக்காகவும் பார்ப்பனிய அதிகார வர்க்கங்களின் மேலாண்மைக்காகவும் கட்டப்பட்டுள்ளது. ஆக, உடமை மற்றும் அதிகார வர்க்கத்தை பாதுகாப்பதில் இந்திய தேசியமும், பார்ப்பனியமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக செயல்படுகின்றன. இவை இரண்டும் வீழ்த்தப்பட வேண்டும்.

இந்தியாவில் தேசிய இனங்கள் ஒடுக்கு முறைக்கு உள்ளாகி இருப்பது போல சாதி, மதங்களும் இந்துத்துவம் என்ற பார்ப்பனியத்தால் ஒடுக்குமுறைக்கு உள்ளாகி இருக்கின்றன. இவைகள் தீர்க்கப்பட வேண்டும்.

இந்தியாவில் ஒடுக்கப்படும் சாதிய மதப் பிரச்சனைகளுக்கு தீர்வாக தேசிய இனங்களின் உரிமையை, பெண்களின் உரிமையை, முதலாளித்துவ ஜனநாயக உரிமையை ஏற்றது போல சாதி, மத பிரச்சனைகளை கையாள வேண்டும். தமிழகத்தை பொறுத்த அளவில் சாதிய அமைப்புகள் தங்களது சாதிய மக்களின் விகிதத்திற்கு ஏற்ப இட ஒதுக்கீட்டு உரிமையை கேட்பதும், அதேபோல மத அமைப்பினர் தங்களுக்கான மதவுரிமையை கேட்பதும் எரியும் பிரச்சனையாக மாறி உள்ளது. சாதி, மதவாதத்திற்கு எதிராக போராடிக் கொண்டே பாட்டாளி வர்க்கம் சாதி, மதவுரிமையை அங்கீகரிக்க வேண்டும். அதுவே, ஒடுக்கப்படும் சாதி, மதவாதத்திற்கு முடிவுகட்டும். முதலில் எதிர்க்கப்பட வேண்டியது ஒடுக்கும் சாதி, மதவாதமே. இந்த வேறுபாடுகளை குறிப்பான நிலைமைகளில் கையாள வேண்டும்.

அமைப்புத்துறை சிக்கல் குறித்து

1920 இல் தோன்றிய இ.பொ.க-வும் அதிலிருந்து மாறுபட்டு தோன்றிய இ.பொ.க(மா)-வும், அதிலிருந்து மாறுபட்டு தோன்றிய (மா-லெ)-யின் சிறு சிறு குழுக்களும் தனித்தனியாக செயல்படுகின்றன. ஏன்? தங்களுக்குள் இடையிலான மாறுபட்ட கொள்கையியல் நிலைபாடுகளை ஜனநாயகம், ஜனநாயக மத்தியத்துவ கோட்பாட்டை உயர்த்திப் பிடித்து தீர்க்காததன் விளைவே. இன்று தமிழ்நாட்டில் செயல்படக் கூடிய அனைத்து மா.லெ குழுக்களுக்கும் இது பொருந்தும். இந்நோய் இன்று வரை பல குழுக்களிடையே நீடிக்கிறது. இக்குழுக்கள் கொள்கையியல் போராட்டத்ததை கைவிட்டு தன்னை பெரிய அமைப்பாக காட்டிக் கொள்ள மக்களைத் திரட்ட இடது, வலது திரிபுகளுக்கு உட்படுகின்றன. வலது திரிபு என்பது ஆளும் வர்க்கங்களுடன் சமரசமாக செல்வதையும், இடது திரிபு என்பது அணிதிரட்ட வேண்டிய மக்களிடமிருந்து தனிமைப் பட்டதையும் குறிக்கும். மேலும் இந்திய தேசம் பற்றிய இவர்களது ஏகாதிபத்திய பொருளாதாரவாதம் இவர்களை தேசிய இன மக்களிடையே ஒட்டாமல் மேலும், மேலும் தனிமைப்படுத்துகிறது. வரலாறு என்பது தேசிய இனங்களின் வரலாறாக உள்ளதால் இவர்களது ஏகாதிபத்திய பொருளாதாரவாதம் ஊழியர்களிடையே வரலாறு பற்றிய அறியாமை, தத்துவ வறட்சி, வறட்டு வாதம் போன்ற கேடுகளுக்கும் காரணமாகி அமைப்பு தேக்கம் அடைந்துவிட்டது. எனவே ஜனநாயகம், ஜனநாயக மத்தியத்துவ கோட்பாட்டை உறுதியாக கடைபிடிக்க வேண்டும்.

வேலை முறை வேலைத் திட்டம் பற்றி:

ஒரு கட்சி தனது வேலை திட்டத்தை நிறைவேற்ற கட்சியின் அக, புற நிலைமைகளை ஆய்வு செய்து கட்சி, முன்னணி, படை என செயல்படுகிறது. இது நேர்வரிசையில் நடைபெறுவதில்லை. அந்நாட்டின் குறிப்பான நிலைமைகளை ஒட்டி ஏற்படுகிறது. ஒரு புரட்சிகர கட்சி தலைமறைவாகத்தான் செயல்பட முடியும் என்பதை உள்நாட்டு, வெளிநாட்டு அனுபவங்கள் காட்டுகின்றன. மக்கள் பல்வேறு வர்க்கங்களாக செயல்படுவதாலும் அதன் அடிப்படையிலேயே உற்பத்தி, வினியோகம், நுகர்வில் பங்கெடுப்பதாலும் மக்களை வர்க்க அடிப்படையிலே திரட்டுகிறது. மக்களுக்கு அதுதான் நேரடியான அரசியல் பயிற்சித் தளமாகும். பெரும்பாலான மா-லெ குழுக்கள் முன்னணி அமைப்புகளையே கட்சி கொள்கைகளை பரப்புரை செய்வதற்கு பயன்படுத்துகின்றன. இது தவறானதாகும்.

கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி அமைப்புகளை கட்டுவதில் உள்ள இத்தவறான வழிமுறை பெருவாரியான மக்களை அணிதிரட்டுவதற்கு தடை ஏற்படுத்துகிறது. மேலும் இவைகளுக்கு கட்சி, முன்னணி, படை பற்றிய தெளிவின்மையால் மக்கள் இயக்கங்களைக் கூட பொருளாதாரவாதத்திலோ, அல்லது வலது, இடது விலகளிலோ கட்டுகிறது.

கட்சியை கட்டுவது, அரசியல் முன்னணியைக் கட்டுவது, படை கட்டுவது ஆகியவை ஒவ்வொன்றும் தனித்தனி கட்டங்களாவோ ஒன்றன் பின் ஒன்றாக கட்டப்படுவதாகவோ இருப்பதில்லை. ஒரு வலுவான கட்சி இன்றி அரசியல் முன்னணியோ படையோ சாத்தியம் இல்லை. அதேசமயம் மக்களை அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற வளர்த்தெடுக்கும் போராட்டம் இல்லாமல் வாய்ப்புள்ள நிலைமைகளில் தற்காப்புக் குழுக்கள் தாக்குதல் குழுக்கள் இவைகளின்றி அரசியல் முன்னணியின் முன்னேற்றம் கூட சாத்தியம் இல்லை. எனவே, இவை மூன்றும் ஏககாலத்தில் செயல்படுபவை. புறநிலைமை மற்றம் அகநிலைமைகளின் தன்மைக்கு ஏற்ப இதன் முக்கியத்துவம் மட்டுமே, முதன்மை, இரண்டாம் பட்சம் என்று மாறுபடும். பாசிஸ்டுகள் வலுவாக உள்ள இடங்களில் பிரச்சாரப் பணிகளை கொண்டு செல்ல கூட தற்காப்பு மற்றும் தாக்குதல் குழுக்கள் இன்றி செயல்பட முடியாது. இத்தகைய தற்காப்பு மற்றும் தாக்குதல் குழுக்களை ஆயுதப்படை என்ற அளவில் உயர்த்தி மதிப்பிடவில்லை. கட்சியானது முரணற்ற ஜனநாயகத்தை முன்னெடுக்கும் போராட்டத்தில் வரக் கூடிய தடைகளை உடைக்கவும், சட்டத்திற்கு புறம்பான ஆளும் வர்க்கத்தின் செயலை எதிர்கொள்ளவும் கூட நமக்கு தற்காப்பு மற்றும் தாக்குதல் குழுக்கள் அவசியமானதாகும். இவ்வாறான வேலைமுறை வேலைத் திட்டம் தேவை.

தமிழ்த் தேச மக்களின் இறையாண்மை மீட்புக்கான போராட்டத்தில் இந்திய ஆளும் வர்க்கம் முன்வைத்துள்ள பாராளுமன்ற, சட்டமன்ற அதிகார வர்க்க ஆட்சி முறையை நிராகரிக்கிறோம். பெரும்பான்மை மக்களுக்கு அதிகாரமுள்ள சோவியத் வடிவிலான ஆட்சிமுறையை முன் வைக்கிறோம். இந்த நோக்கத்திற்கு பயன்படும் வகையில் குறிப்பான நிலைமைகளை ஒட்டி தேர்தலில் பங்கேற்கவோ புறக்கணிக்கவோ செய்வோம்.

தொகுப்பாக:

பல்தேசிய நாடான இந்தியாவை தேசம் என்றதும், அதன் அடிப்படையிலே கட்சியை கட்டி வேலைமுறை வேலைத் திட்டத்தை வகுத்ததுமே இந்திய இடதுசாரிகளின் தேக்கத்திற்கு காரணமாகும். 1932இல், 1965இல் தமிழ்நாட்டில், இந்தியாவின் பல தேசிய இனங்களின் தேசிய விடுதலைப் போராட்டங்கள் மூண்ட போது “தேசிய இனப் பிரச்சனைக்கும் ஜனநாயகப் புரட்சிக்குமான” உறவை ஒன்றுபட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிந்திருக்கவில்லை. அதிலிருந்து மாறுபட்டு பிளவுண்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மா), அதிலிருந்து மாறுபட்டு பிளவுண்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ)யின் பல பிரிவுகளும் இந்திய தேசம் என்ற நவீன ஏகாதிபத்திய பொருளாதாரவாத கண்ணோட்டத்தை கொண்டவைகளாகவே நீடிக்கின்றன. இந்திய முதலாளிகள் தேசிய முதலாளிகள், ஆயுதப் போராட்டத்தை கைவிட்டது ஆகிய நிலைபாடுகள் இ.க.க., இ.க.க. (மா) ஆகிய இரண்டையும் இந்திய ஆளும் வர்க்க கட்சிகளின் இடதுசாரி பிரிவாக தாழ்த்தியது. இவைகள் இரண்டும் தேசிய இனங்களின் இறையாண்மைக்கான போராட்டத்தை பிரிவினைவாதம், தீவிரவாதம் என்பதால் ஜனநாயக இயக்கங்களாக கூட இல்லை. இந்திய முதலாளிகள் தரகு முதலாளிகள், ஆயுதப் போராட்டம், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை, பாராளுமன்ற நிராகரிப்பு ஆகிய நிலைபாடுகளை இ.க.க. (மா- லெ)யின் பல பிரிவுகள் கொண்டிருந்தபோதிலும் தேசம் பற்றிய வரையறை செய்ததில் புதிய ஏகாதிபத்திய பொருளாதாரவாத கண்ணோட்டத்தை கொண்டிருக்கிறது. இதன் காரணமாக தேசிய விடுதலைப் போராட்டங்களை ஜனநாயகப் போராட்டம் என்ற அளவில் ஆதரிக்கும் ஜனநாயக இயக்கங்களாக சுருங்கிப் போனது.

இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் தொடர்ச்சியாய் 1983ல் தொடங்கிய இ.பொ.க. (மா-லெ) தமிழ்நாடு அமைப்புக் குழு 1992 ஆறாவது பிளீனத்தில் இந்திய தேசம் என்ற நவீன ஏகாதிபத்திய பொருளாதாரவாதத்திற்கு முடிவு கட்டியது. தமிழ்நாடு மார்க்சிய - லெனினியக் கட்சியை தொடங்கி தமிழ்நாடு விடுதலைப் புரட்சிக்கு வழிகாட்டியது. அதன் செயலற்ற தன்மையின் காரணமாக 2018 இல் தமிழ்த் தேச இறையான்மை தொடங்கப்பட்டது. தமிழ்நாடு மார்க்சிய - லெனினியக் கட்சிதான் தேசிய இன விடுதலை புரட்சிக்கும் இந்தியாவின் தனித்தன்மையான பார்ப்பனியத்திற்குமான உறவை அடையாளம் காட்டியது. இது பிற மார்க்சிய - லெனினிய அமைப்புகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நிலைபாடுகளாகும்.

ஆக, இ.க.க., இ.க.க. (மா) ஆகியன இரண்டும் ஜனநாயக இயக்கங்களாக கூட இல்லாமல் ஆளும் வர்க்க கட்சிகளாக சீரழிந்து விட்டன. இ.க.க. (மா-லெ)யின் பல பிரிவுகள் ஜனநாயக இயக்கங்களாக நீடிக்கின்றன. இவ்வியக்கங்களுடன் தமிழ்த் தேச இறையாண்மை இணையும் வாய்ப்பே இல்லை. இவைகள் எழுப்பும் ஜனநாயக கோரிக்கைகளின் படி கூட்டியக்கங்களாக இணைந்து செயல்பட முடியும். இந்தியாவின் குறிப்பான பாசிச அபாய சூழலில் கூட்டிணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. தமிழ்த் தேசத்தின் இறையாண்மை மீட்புக்கான போராட்டத்தில் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை புரட்சியின் நோக்கத்தை அடையும் பொருட்டு தமிழ்த் தேச இறையான்மை தேர்தலில் பங்கேற்கவோ, புறக்கணிக்கவோ செய்யும். தமிழ்நாட்டின் நீண்ட வரலாற்றின் உயரிய மரபுகளை முன்னெடுத்த அறிஞர்களையும், பெரியார், அம்பேத்கர் போன்றோரின் சமூக நீதி போராட்டத்தையும் முன்னெடுக்கும். அமைப்பில் ஜனநாயகம், ஜனநாயக மத்தியத்துவ கோட்பாட்டை உறுதியாக பின்பற்றி வேலைமுறை வேலைத்திட்டத்தை வகுத்து முன்னேறும்.

  • இந்திய தேசம் என்ற புதிய ஏகாதிபத்திய பொருளாதாரவாத்திற்கு முடிவு கட்டுவோம்!
  • ஜனநாயகம், ஜனநாயக மத்தியத்துவ கோட்பாட்டை உயர்த்தி பிடிப்போம்!
  • வேலைமுறையிலுள்ள இடது, வலது திரிபுகளுக்கு முடிவு கட்டுவோம்!
  • தமிழ்த் தேச இறையாண்மையை மீட்போம்!

மார்க்சிய - லெனினிய - மாவோ சிந்தனை வெல்லட்டும்!