கக்கூஸ் என்ற ஆவணப்படத்தை எடுத்து சாதியத்தின் முகத்திரையைக் கிழித்த தோழர் திவ்யபாரதிக்கு பிஜேபி மற்றும் புதிய தமிழகத்தைச் சேர்ந்த காலிகள் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். எப்பொழுதெல்லாம் தங்களின் இருத்தலுக்கு ஆபத்து வருகின்றதோ, அப்பொழுதெல்லாம் தங்களின் இருத்தலுக்கு வேட்டு வைக்க நினைக்கும் நபர்களை கடித்துக் குதறுவது பார்ப்பனர்களின் வேலை. ஆனால் இந்த முறை இதில் பள்ளர் சாதியை பிரநிதித்துவப் படுத்துவதாய் சொல்லிக் கொள்ளும் புதிய தமிழகமும் இடம் பெற்றிருப்பது, தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன கூட்டத்திற்கு மிக நம்பிக்கையான ஒரு கைக்கூலி கிடைத்துவிட்டது என்பதைத்தான் காட்டுகின்றது.

divya bharathiபுதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அவர்கள் தன்னுடைய மானம், மரியாதை அனைத்தையும் கேவலம் அரசியலில் பொறுக்கித் தின்பதற்காக கமலாலயத்தில் விற்றுவிட்டார் என்பதை கடந்த சில மாதங்களாக அவரின் செயல்பாடுகள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றார். அதன் உச்சமாக தமிழ்நாட்டில் இந்தி வரவேண்டும் என்றும், நீட் நுழைவுத் தேர்வுக்கு ஆதரவாக தாம் போராடப் போவதாகவும் அறிவித்து, தன்னைப் போன்ற ஒரு பார்ப்பன அடிமை தமிழ்நாட்டில் யாரும் இல்லை என்பதை நிரூபித்தார்.

ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி கும்பலுக்கு என்ன ஒரு சிறப்பான தன்மை உள்ளது என்றால், அது தன்னோடு சேர்ந்தவர்களையும் தன்னைப் போலவே பொறுக்கிகளாகவும், காலிகளாகவும், அயோக்கியர்களாகவும் இன்னும் சொல்லப்போனால் குற்றக்கும்பலாகவும் மாற்றிவிடும் என்பதுதான். ஒரு காலத்தில் தன்னை ஒரு தலித்தாகவும், தன் சமூகத்தை உயர்த்துவது மட்டுமே தன்னுடைய ஒரே குறிக்கோள் என்றும் பிரகடனம் செய்த கிருஷ்ணசாமி, அதன் மூலம் தன் சமூக மக்களின் நம்பிக்கையைப் பெற்று, அந்த நம்பிக்கையை வாக்குகளாக மாற்றி, அதை அடமானம் வைத்து பெரும் கோடீஸ்வரராக மாறிவிட்டார். இப்போது இன்னும் தன்னுடைய நிலையில் இருந்து அடுத்த கட்டத்திற்கு செல்ல கிருஷ்ணசாமி விரும்புகின்றார். அவரின் இந்த அல்பத்தனமான ஆசையை நிறைவேற்றத்தான் தன்னுடைய மானம் மரியாதையை அடமானம் வைத்து பிஜேபியுடன் கைக்கோர்த்துள்ளார். ஆசை வெட்கம் அறியாது என்பதை கிருஷ்ணசாமி தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கின்றார்.

அப்படி போன் போட்டு கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு தோழர் திவ்யபாரதி அவர்கள் என்ன வன்முறையைச் செய்துவிட்டார்? அவர் செய்த வன்முறை எல்லாம் தன்னுடைய கக்கூஸ் ஆவணப்படத்தில் மலம் அள்ளும் தொழிலில் சக்கிலியர் வகுப்பை சேர்ந்தவர்கள் மட்டும் ஈடுபடவில்லை; பள்ளர், பறையர், குறவர், போயர், காட்டு நாயக்கர் போன்ற பல்வேறு பட்டியல் இன சாதி மக்களும் ஈடுபட்டிருப்பதை அம்பலப்படுத்தியதுதான். அதுதான் கிருஷ்ணசாமியை தலைவிரி கோலமாக ஆடவைத்து இருக்கின்றது. ஆனால் மற்ற சாதி மக்கள் யாரும் எப்படி ‘நீ என்னுடைய சமூகத்தை மலம் அள்ளும் வேலையைச் செய்கின்றார்கள் என்று சொல்லலாம்’ என்று தோழர் திவ்யபாரதியை மிரட்டவோ, இல்லை காவல் நிலைத்தில் புகார் கொடுக்கவோ இல்லை. அவர்களுக்கு நன்றாகத் தெரியும், தன்னுடைய சமூகத்தை இந்தச் சாதிவெறி பிடித்த இந்திய அரசு எப்படி அடக்கி ஒடுக்கி வஞ்சிக்கின்றது என்பது. ஆனால் கிருஷ்ணசாமிக்கு தன்னுடய சமூக மக்கள் எவ்வளவு இழி நிலையில் தாழ்ந்த நிலையில் வாழ்ந்தாலும், அதைப்பற்றி கவலையில்லை. தானும் தன்னுடைய குடும்பமும் செல்வச் செழிப்பில் இருந்தால் போதும் என்று நினைப்பவர். அந்தக் கெட்ட எண்ணத்தில் இருந்துதான் அவர் தன்னுடைய சமூக மக்களுக்கு இட ஒதுக்கீடே தேவை இல்லை என்றும் அறிவித்தார்.

ஆனால் உண்மை நிலை பள்ளர் சாதியைச் சேர்ந்த மக்கள் இன்னும் பொருளாதார நிலையிலும், சமூக மற்றும் கல்வி நிலையிலும் மிகவும் கீழ் நிலையில் உள்ளார்கள் என்பதே. அதுவும் மலம் அள்ளும் தொழிலுக்கு செல்லும் நிலையில்தான் அவர்களின் பொருளாதார நிலை இன்னும் சமூகத்தில் உள்ளது. இதை திவ்யபாரதி அவர்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியதால்தான் எங்கே தன்னுடைய திட்டம் தன் சமூக மக்கள் முன் அம்பலப்பட்டுவிடுமோ என்ற பயத்தில் கிருஷ்ணசாமி அவர்களையும், அவர்களின் கட்சியைச் சேர்ந்த பிழைப்புவாதிகளையும் மிகக் கீழ்த்தரமாக நடந்துகொள்ளத் தூண்டியுள்ளது. கிருஷ்ணசாமி பிஜேபியுடன் சேர்ந்துகொண்டு கட்டியமைக்க முற்படும் 'தாங்களும் ஒரு ஆண்ட பரம்பரைதான்' என்ற பிம்பத்தை ஒட்டுமொத்தமாக சிதைப்பதாக கக்கூஸ் ஆவணப்படம் உள்ளது. அது சாதிவெறி பிடித்த பொதுச்சமூகத்தின் முகத்தில் காறி உமிழ்கின்றது. ஒரு பக்கம் தலித் என்ற அடையாளத்தில் இருந்து விடுபட பார்ப்பனியத்திடம் அடைக்கலம் தேடும் கிருஷ்ணசாமிக்கும் கக்கூஸ் அச்சத்தை ஏற்படுத்துகின்றது; மற்றொரு பக்கம் இந்துக்களின் ஒற்றுமைக்காக பாடுபடுவதாய் சொல்லிக்கொண்டு அவர்களை ஆண்டாண்டு காலமாக மலம் அள்ள வைத்துக் கொல்லும் இந்திய பார்ப்பனியத்தின் குரல்வளையையும் நெறிக்கின்றது கக்கூஸ் ஆவணப்படம்.

இதனால்தான் இரண்டு பேரும் கங்கணம் கட்டிக்கொண்டு தோழர் திவ்யபாரதிக்கு எதிராக களம் இறங்கி இருக்கின்றார்கள். வழக்கம் போல தோழர் திவ்யபாரதியையும் தமிழக பிஜேபி கழிசடைகள் நக்சலைட் வரிசையில் சேர்த்திருக்கின்றார்கள். சாமானிய எளிய மனிதர்களுக்காக குரல் கொடுக்கும் அனைவருமே பார்ப்பனியத்தின் பார்வையில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்கள். அப்படி முத்திரை குத்துவது என்பதே அவர்களை வேட்டையாடுவதற்கான பொதுக்கருத்தை சமூகத்தில் உருவாக்கத்தான். தொடர்ச்சியாக தமிழகத்தில் மக்களுக்காக போராடுபவர்கள் மீது தமிழக அரசு கடுமையான அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டு வருகின்றது. யார் யாரை கைது செய்ய வேண்டும், என்ன என்ன பிரிவுகளில் கைது செய்ய வேண்டும் என்ற உத்திரவுகள் கமலாலயத்தில் இருந்து தமிழக அரசுக்குப் போய்க்கொண்டு இருக்கின்றது. மாஃபியாக்களுக்கும், ஊரை அடித்து உலையில் போட்ட ஊழல்வாதிகளுக்கும் உள்ள பாதுகாப்பு தமிழ்நாட்டில் மக்கள் பிரச்சினைகளுக்காக போராடும் போராளிகளுக்கு இல்லாமல் போய்விட்டது. போராடும் நபர்கள் மீது வழக்கு தொடுத்து அச்சுறுத்தி பணிய வைத்துவிடலாம் என்று பிஜேபியின் எடுபிடி எடப்பாடி அரசு நினைக்கின்றது. ஆனால் அது ஒருபோதும் நடக்கப் போவதில்லை.

தனது பிழைப்புவாதத்திற்காக இன்று பார்ப்பனியத்துக்கு சொம்பு தூக்க புறப்பட்டு இருக்கும் கிருஷ்ணசாமியும், கிருஷ்ணசாமிக்கு உடுக்கை அடித்துக் கொண்டு இருக்கும் பிஜேபியும் என்னதான் தலைகீழாக நின்றாலும் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது என்பதுதான் எதார்த்தம். என்ன தான் மூடி மறைக்க முயற்சி செய்தாலும் உண்மை வெளிவந்தே தீரும். கக்கூஸ் ஆவணப்படம் பல செய்திகளை அம்பலப்படுத்தி இருக்கின்றது - குறிப்பாக மலம் அள்ளும் தொழிலில் ஒரு குறிப்பிட்ட சாதி மக்கள் மட்டும் ஈடுபடமால் பரவலாக பல சாதி மக்களும் ஈடுபட்டிருக்கின்றார்கள் என்பதையும் மோடியின் 'தூய்மை இந்தியா' என்ற ஏமாற்று மோசடியையும். இந்தப் படத்தை பரவலாக தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டியது ஒவ்வொரு முற்போக்குவாதியின் கடமையாகும். அதுவே தோழர் திவ்யபாரதியை மிரட்டும் காலிகளுக்கு நாம் கொடுக்கும் சரியான பதிலடியாக இருக்கும்.

- செ.கார்கி

Pin It