அன்பார்ந்த தோழர்களுக்கும் நண்பர்களுக்கும் வணக்கம்
நக்சல்பாரி இயக்கம் தனிநபர் அழித்தொழிப்பைக் கைவிட்டு மக்கள்திரள் இயக்கங்களைக் கட்டி ஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிராகவும், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகவும் போராட முடிவெடுத்தபோது தமிழகத்தில் உழைக்கும் வரக்கத்தைத் திரட்டி இரட்டைக்குவளை, கந்துவட்டி உள்ளிட்ட பொருளாதார, சாதியக் கொடுமைகளுக்கு எதிராக வீச்சாகப் போராடிய தோழர் பாலன் படுகொலை செய்யப்பட்ட நாளான செப்டம்பர் பன்னிரெண்டாம் நாள் அவ்வுயர் இலட்சியத்துக்காக உயிர்நீத்த அனைத்து தியாகிகளையும் நினைவுகூர்ந்து ஆண்டுதோறும் தோழர்களின் நினைவிடத்தில் கூடி மாலைசூட்டி அஞ்சலி செலுத்தி வருகிறோம். அவர்களின் கொள்கையையும் அற்பணிப்பையும் நெஞ்சில் ஏந்தி அதன்பால் கொண்ட ஈர்ப்பும் பற்றுமே தோழர்களை ஆண்டுதோறும் தவறாமல் அங்கே கூடவைக்கிறது. அங்குவரும் அத்தனை தோழர்களின் நெஞ்சிலும் தியாகத் தோழர்கள் விதைத்த கொள்கைகள் இன்றும் அழியாமல் வாழ்ந்து வருவதற்கான ஆதாராமாக இது விளங்குகிறது.
அவர்களில் ஒருவராக அந்தக் கொள்கையுணர்வு குன்றாமல் வாழ்பவர்களாகவும் அங்கே வருபவர்களாகவும் இருக்கிறோம் என்பதில் எங்களுக்கும் மகிழ்ச்சி. ஆனால் அந்தக் கொள்கைகளை எவ்வளவு தூரம் வளர்த்து மக்களிடம் எடுத்துச் சென்று எந்தளவு செயலாக்கி இருக்கிறோம் என்று நினைக்கும்போது இந்த மகிழ்ச்சி எவ்வளவு போலியானது; சுயதிருப்திக்கானது என்பதை நினைத்து மனம் நோகிறது. உலகின் ஆளும்வர்க்கங்கள் எல்லாம் உன்னத தலைவர்களுக்கு சிலையெழுப்பி புனிதர்களாக்கி அவர்களின் கொள்கைகளைக் கொன்றுவிடுகின்றன என்கிறார் லெனின். அதன்படி நாமும் அதைத்தான் நமது தலைவர்களுக்கு செய்து கொண்டிருக்கிறோம் என்பதை நினைக்கும்போது குற்ற உணர்வுக்கு ஆளாவதைத் தவிர்க்க முடியவில்லை.
இந்த மண்ணில் கம்யூனிஸ்ட் கட்சி தோன்றி ஒரு நூற்றாண்டைக் கடந்து கொண்டிருக்கிறது. இந்தக் காலத்தில் எத்தனையோ ஆயிரம் தோழர்களின் உழைப்பும் உயிரும் இந்தக் கொள்கைக்காக கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன்மூலம் இந்தக் கொள்கை பரவி வளர்ந்திருக்கிறதா என்று பார்த்தால் அது தேய்ந்து இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து கொண்டிருக்கிறது என்பதே கசப்பான உண்மையாக இருக்கிறது. ஒருங்கிணைந்த கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த நாம் உடைந்து இரண்டாகி பின்பு மூன்று, நான்கு என பிரிந்து இப்போது ஆயிரம் குழுக்களாகப் பிரிந்து ஆங்காங்கே ஆளுக்கொரு கட்சியாகச் சிதறி கிடக்கிறோம்.
இது ஏதோ இந்தியக் கம்யூனிஸ்டுகளுக்கு மட்டுமே ஏற்பட்ட நிலையல்ல. ஸ்டாலின், மாவோ போன்ற தலைவர்களின் மறைவுக்குப் பின்னும் சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னும் ஒட்டுமொத்த உலக இடதுசாரிகளும் இப்படி உருக்குலைந்துதான் கிடக்கின்றனர். ஆனால் அவர்கள் எல்லாம் ஓரளவு முன்னேறி பின்புதான் வீழ்ச்சியடைந்து இருக்கிறார்கள். ஆனால் நாமோ ஒருசில படிகள் கூட முன்னேறாமல் ஒரு பொதுவான பிரச்சனைகளில்கூட ஒன்றிணைய முடியாமல் அருகிக் கொண்டிருக்கிறோம். இந்த வேறுபட்டுக்கான காரணம் என்ன? இப்படியான சிதறிய எண்ணங்களையும் ஒருங்கிணைப்பற்ற செயல்பாடுகளையும் கொண்ட மனிதர்களாக நம்மை உருவாக்கும் இந்த சாதியச் சமூகத்தின் பங்கென்ன? என்பதை நமக்குள் யாரோ ஒருவர் மட்டும் ஆய்ந்தறிந்து துல்லியமாகக் கண்டறிந்து சொல்லி விடமுடியாது.
இவ்வுலகில் தோன்றிய எல்லா கோட்பாடுகளும் எண்ணங்களும் இல்லாத ஏதோ ஒன்றில் இருந்து தோன்றியவை என்று நினைக்க நாம் கருத்துமுதல்வாதிகள் அல்ல. எண்ணாயிரம் மனிதர்களின் சிந்தையில் தோன்றி வளர்ந்து உருப்பெற்றவை என்று இயக்கவியல் பொருள்முதல்வாத அறிவியல் துணைகொண்டு சிந்திக்கும் கம்யூனிஸ்டுகள். அவ்வறிவியல் சிந்தனைக்கு உண்மையாக நடப்பவர்கள் அனைவரும் இந்தியக் கம்யூனிஸ்டுகளின் இந்த வீழ்ச்சிக்கும் உருக்குலைவுக்கும் ஒவ்வொருவரும் முன்வைக்கும் காரணங்களைத் திறந்த மனதுடன் உள்வாங்கி பகுத்தாய்ந்து சரியான கருத்தை அடைவதும் அதன் அடிப்படையில் செயல்பாடுகளை வகுத்துக்கொண்டு ஆக்கப்பூர்வமாகச் செயலாற்றி சமூகத்தை மாற்ற முற்படுவதுமே சரியானதாக இருக்கும்.
அதற்கான முதல்படியாக இவ்வாண்டு அப்பு, பாலன் தோழர்களின் நினைவுநாளில் எல்லோரும் ஒன்றுகூடி நமது வீழ்ச்சிக்கான காரணங்களைச் சுயபரிசீலனை அடிப்படையில் முன்வைக்க அழைக்கிறோம். தோழர்களின் கருத்துகளைச் சாரமாகக் கருத்தரங்கத்திற்கு முன்போ பின்போ தொகுப்பாகக் கேட்டுவாங்கி ஆவனப்படுத்தி அனைவர்க்கும் கொடுத்து இந்தத் தலைமுறையும் எதிர்கால தலைமுறையும் இக்கருத்துகளை முன்முடிவுகள் இன்றி உள்வாங்கி தமது கருத்துகளையும் செயல்பாடுகளையும் செழுமைப்படுத்திக் கொண்டு புரட்சிகர வழியில் முன்னேறி இந்த சமூகத்தைப் பீடித்திருக்கும் அனைத்து பிற்போக்கு ஆற்றல்களையும் தகர்த்து எறிந்து இருண்டு கிடக்கும் உழைக்கும் வர்க்கத்தின் வாழ்வில் ஒளியேற்றுவார்கள் என்று உறுதியுடன் நம்புகிறோம்.
இப்படி நாம் எடுத்து வைக்கும் முதலடியே தோழர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான செயல்பாட்டுக்கான செவ்வணக்கமாக இருக்கும் என்றும் கருதுகிறோம். செஞ்சட்டை அணியும் ஒவ்வொரு தோழரும் இவ்வண்ணமே கருதுவார்கள் என்று உறுதியாக நம்பி கருத்தரங்கில் கலந்து கொண்டு கருத்தை முன்வைத்து எல்லோர்க்கும் கற்பிக்கவும் முன்முடிவுகள் இன்றி மற்றவரின் கருத்தைக் கற்கவும் அழைக்கிறோம். இடதுசாரிகளை இருக்குமிடம் தெரியாமல் அழிக்கும் கூறுகளைக் கொண்ட மூன்று குற்றவியல் திருத்த சட்டங்களை பார்ப்பனிய ஆளும்வர்க்கம் கொண்டுவந்து நம்மை ஒடுக்க முற்படும் இச்சூழலில் உடைந்து கிடக்கும் நாம் கருத்து வேறுபாடுகளை விட்டு நமது பின்னடைவிற்கான காரணங்களைக் கண்டறிந்து முன்னேற முற்படுவோம் வாரீர்!
(இக்கடிதம் கண்டவுடன் உங்களின் ஏற்புடைமையையும் இசைவையும் பின்கண்ட எண்ணுக்குத் தொடர்பு கொண்டு தெரிவிக்க அன்புடன் வேண்டுகிறோம்)
இடதுசாரிகள் ஒருங்கிணைப்பு குழு தமிழ்நாடு.
ஒருங்கிணைப்பாளர்: தோழர் ஆம்பள்ளி முனிராஜ்- 77083 02843