சாதி ஆணவப் படுகொலைகள் (காதல் தொடர்புடையவை), சாதிவெறிப் படுகொலைகள், சாதி வெறியாட்ட வன்முறைகள் (பிற காரணங்கள்) ஆகியவை தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் தான் இருக்கின்றன. சமீபத்திய அழகேந்திரன் படுகொலை முதல் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் மதிப்புமிக்க திரு. ஆம்ஸ்ட்ராங் படுகொலை வரை. நாமும் இத்துணை ஆண்டுகளும் ஓயாமல் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களும் செய்து கொண்டுதான் இருக்கிறோம். ஆனாலும் சாதியப் படுகொலைகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறதே தவிர குறைந்தபாடில்லை....

ஒவ்வொரு முறையும் ஒரு சாதி ஆணவ படுகொலை நடத்தப்பட்ட பின்னர் நாம் ஒரு ஆர்ப்பாட்டம் அல்லது ஒரு போராட்டம் அறிவிக்கின்றோம். அதை நடத்துகிறோம். நம்முடைய கோரிக்கைகளை முன்வைக்கின்றோம். இவ்வளவு ஆண்டுகள் நடத்தப்பட்ட இவ்வளவு போராட்டங்களில் எத்துணை கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கப் பெற்றிருக்கின்றன? எவ்வளவு குற்றவாளிகள் தண்டிக்கப் பட்டிருக்கின்றனர்? சாதிய படுகொலைகள் குறைந்திருக்கின்றனவா? எதுவுமே இல்லையே...ஒன்று கூட நடக்கவில்லையே...பிறகு எதற்காக எப்பயனுமற்ற இத்தகைய அடையாள ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து நடத்த வேண்டும்?

அப்படியென்றால் எங்கே தவறு நடக்கிறது? நாம் போராடும் முறை தவறா?அல்லது நம் போராட்ட வடிவம் தவறா? அல்லது நம் போராட்டங்களின் நோக்கம் தவறா? அல்லது சாதியப் படுகொலைகள் மீதான நம்முடைய சமூக அரசியல் பார்வை தவறாக இருக்கிறதா? போன்றவற்றை சிந்தித்து விவாதத்திற்கு உட்படுத்த வேண்டியிருக்கின்றது.

"சாதி மறுப்புத் திருமணங்களால் சாதியை ஒழிக்க முடியாது. மாறாக, பல்லாயிரம் ஆண்டுகளாக இந்து மதத்தில் இறுக்கமாக கட்டியமைக்கப்பட்டிருக்கும் சாதிய பழக்க வழக்கங்களையும் சடங்கு சம்பிரதாயங்களையும் முற்றும் முழுவதுமாக ஒழிப்பதன் மூலம் மட்டுமே சாதி ஒழிப்பு முழுமை பெறும்" என்பது புரட்சியாளர் அம்பேத்கரின் சிந்தனையாக இருக்கிறது. 

"எவன் ஒருவனுக்கு அவனுடைய வரலாறு தெரியவில்லையோ அவன் அடிமையாக இருப்பதற்குத்தான் லாயக்கு" என்பது புரட்சியாளரின் வரிகள். பதின் பருவத்திலிருந்தே ஒரு பட்டியல் சாதி இளைஞர் முறையாக அரசியல் படுத்தப்பட்டிருந்தால் முதலில் அவனுக்கு எப்படி காதல் வரும்? அவனுக்கு எப்படி தூக்கம் வரும்? அவனுடைய வரலாறு என்ன, அவனுடைய உண்மையான சமூக நிலை என்ன, அவனுடைய தலைவர்கள் யார், அவனுடைய இலட்சிய நோக்கம் என்னவாக இருக்க வேண்டும், அவனுடைய வாழ்வு எதை நோக்கிய போராட்ட வாழ்வாக இருக்க வேண்டும் போன்றவை கற்பிக்கப்பட்டு ஒரு பட்டியல் சாதி இளைஞன் அரசியல் படுத்தப்பட்டிருந்தால், உண்மையில் அவனுக்கு எப்படி காதல் வரும்? இந்த இடத்தில்தான் பட்டியல் சாதி முற்போக்கு இயக்கங்கள் சில வருடங்களாக கோட்டை விட்டுவிட்டோமா? அல்லது கடந்த சில வருடங்களாக பாதை மாறி, சாதி ஒழிப்பு சமூக நீதி அரசியல் பரப்புரை முன்னெடுப்பில் முழுவதும் சுணங்கி விட்டோமோ என்று எண்ண வேண்டியிருக்கிறது.

ஒவ்வொரு முறையும் காதல் தொடர்பான சாதி வெறிப் படுகொலை நடக்கும் பொழுது, நாம் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த வேண்டியதும், கோரிக்கைகளை முன்வைக்க வேண்டியதும், சமூக அரசியல் அறைகூவல் விடுக்க வேண்டியதும், படுகொலை செய்யப்பட்ட இளைஞர் வசித்த அதே பகுதியில்/ஊரில் தானே தவிர, அரசை நோக்கியோ, காவல் துறையை நோக்கியோ, சமூகத்தை நோக்கியோ அல்ல !! அந்த இளைஞர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம், ஆனால் அங்கே வசிக்கும் பல பதின் பருவத்தாரும், இளையோரும் இன்னமும் மீதம் இருக்கிறார்கள் தானே? அவர்களிடம் தான் நம்முடைய அறைகூவலும், கோரிக்கைகளும் வைக்கப்பட வேண்டும்!! அவர்களுடைய வரலாறு என்ன, அவர்களுடைய உண்மையான சமூக நிலை என்ன, அவர்களுடைய தலைவர்கள் யார், அவர்களுடைய இலட்சிய நோக்கம் என்னவாக இருக்க வேண்டும், அவர்களுடைய வாழ்வு எதை நோக்கிய போராட்ட வாழ்வாக இருக்க வேண்டும் போன்றவை தீவிரமாக கற்பிக்கப்பட்டு அவர்கள் கூர்மைப்படுத்தப்பட வேண்டும்!! அரசியல் படுத்தப்பட வேண்டும்!!

அவர்கள் வறுமையையும் இன்னும் பிற அனைத்து தடைகளையும் தாண்டி முட்டி மோதி ஆயிரம் வழக்கறிஞர்களாக உருவெடுத்து சமூக நீதிக்காகப் போராடப் போகிறார்களா அல்லது ஆயிரம் காவல் துறை பணியாளர்களாக போராட்டங்களுக்கு துணை செய்யப் போகிறார்களா அல்லது ஆயிரம் journalist களாக பல்வேறு வடிவில் துணை/lobby செய்யப் போகிறார்களா? அல்லது படிக்காவிட்டாலும் பரவாயில்லை, தந்தை பெரியார் பாதையில் தன்னை முழு நேர இயக்கவாதியாக சாதி ஒழிப்பு இழிவொழிப்பு போராளியாக அர்ப்பணிப்பு செய்யப் போகிறார்களா அல்லது பயிற்சி பெற்ற அக்மார்க் ஓட்டரசியல்வாதியாக துணை செய்யப் போகிறார்களா?? என்பவை நாம் அவர்கள் முன் வைக்கின்ற கோரிக்கையாகவும், options/ choice ஆகவும் இருக்க வேண்டும். எங்கெல்லாம் சாதிவெறிப் படுகொலை நிகழ்கிறதோ அங்கிருந்தெல்லாம் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் படித்தவர்களாக, புரட்சிப் போராளிகளாக களமிறங்க வேண்டும்!!! இதுதான் நம்முடைய இளைஞர்களை நோக்கிய அறைகூவலாகவும் போராட்டமாகவும் இருக்க வேண்டும்!!!

இதுதான், இத்தகைய கொள்கை மிக்க அறிவார்ந்த பெரும் தலைமுறையை உருவாக்குவதுதான், சாதி வெறியர்கள் வன்முறையாளர்கள்/ கொலைகாரர்களுக்கு எதிராக நாம் நடத்தும் உண்மையான எதிர் தாக்குதல் போராட்டம்!! இதுதான் நாம் சாதி வெறியர்களுக்கு கொடுக்கப் போகும் மிகப்பெரிய தண்டனை!! இதைத்தான் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மதிப்புமிக்க மாநில தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் பல ஆண்டுகளாக செய்து வந்துள்ளார். அவர் படுகொலை செய்யப்பட்டு இருக்கலாம், ஆனால் அவர் கட்டமைத்த "ஜெய்பீம்" அரசியல் என்றும் வீண் போகாது!!

இப்பேற்பட்ட தொடர் கற்பிப்புக்குப் பிறகு, அரசியல்படுத்துதலுக்குப் பிறகு எப்படி ஒருவனுக்கு காதல் வரும்? சமூக அரசியல் சிந்தனையும், தெளிவும், சொந்த வாழ்விலும் வெற்றி பெற்று புரட்சி போராட்ட இயக்க வாழ்வில் துணை செய்ய வேண்டும் என்ற வெறி தான் அவனுக்கு மேலோங்கியிருக்கும். ஓரளவேனும் இயக்க வாழ்வை கடந்த பிறகு, ஒரு சிறு பகுதியாக திருமணம் செய்து குடும்ப வாழ்வில் ஈடுபடுவதை மிக எளிதாக முடித்துக் கொண்டு கடந்து செல்வார்கள் தோழர்கள்.

இப்போதைக்கு பட்டியல் சாதி முற்போக்கு அமைப்புகளிடம் ஒற்றை MLA சீட் இலட்சியத்தைத் தவிர வேற எந்தத் திட்டமோ, செயல்பாடோ, தொலை நோக்குத் பார்வையோ (vision) இருப்பதாகத் தெரியவில்லை...வெறுமனே நல்லது கெட்டதுக்கு அட்டெண்டன்ஸ் போடுகிற பழக்கம் அவர்களுக்கு வந்துவிட்டது போராட்ட அமைப்புகளுக்கு. மேலும், "நாங்களும் இதற்காக ஆர்ப்பாட்டம் நடத்தினோம்" என்று பதிவு செய்வதற்காக உப்பு சப்பில்லாத ஆர்ப்பாட்டங்களை நடத்துவது வழக்கமாகி விட்டது. இதற்கெல்லாம் எந்தவொரு followup நடவடிக்கைகளும் இருப்பதில்லை.

கடந்த 25 ஆண்டுகளில், ஒரு முற்போக்கு பட்டியல் சாதி அமைப்பு, ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் முன்வைத்து, அதற்கான தொடர்ச்சியான போராட்டங்களை பல வருடங்களாக முன்னெடுத்து, அக்கோரிக்கையை வென்றெடுத்தது என்றால் அது சக்கிலியருக்கான உள் இட ஒதுக்கீடு போராட்டம் மட்டுமே!! இது மிகப்பெரிய சாதனைதான், யாரும் மறுப்பதற்கில்லை. பிரச்சனை என்னவென்றால் அந்த உள் இட ஒதுக்கீட்டை நிரப்பும் அளவுக்குக் கூட படித்தவர்கள் எண்ணிக்கை சக்கிலியர் சாதியில் இல்லை என்பதுதான். இது எவ்வளவு பெரிய அவலம்? இப்பேற்பட்ட உள் இட ஒதுக்கீட்டை "சகோதர" பட்டியல் சாதியினர் தான் இன்றும் நிரப்பி வருகின்றனர் என்பது அப்பட்டமான உண்மையா? இல்லையா? இவ்வளவு பெரிய அவலத்தை எங்கே போய் சொல்வது? எப்படி தீர்ப்பது?

எட்டாம், பத்தாம் பன்னிரெண்டாம் வகுப்பு கூட தாண்டுவதில்லை நம் பிள்ளைகள். இதற்கு என்ன தீர்வு? RTE ஆக்ட் இல் 25% சிறப்பு இடஒதுக்கீட்டில், மிகவும் ஏழ்மையான பட்டியல் சாதியினர் பழங்குடியினர், மூன்றாம் பாலினத்தவர், physically challenged மற்றும் குறிப்பாக தூய்மைப் பணியாளர் குழந்தைகளுக்கு LKG முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை தனியார் பள்ளிகளில் இலவச கல்வி வழங்கப்படுகிறது, இதை தூய்மைப் பணியாளர்களும் நலிவடைந்த பட்டியல் சாதியினரும் நன்றாக பயன்படுத்திக் கொள்கிறார்களா என்பதை monitor செய்வதற்கோ, அல்லது ஆண்டு தோறும் பள்ளி சேர்க்கை நடைபெறும் நேரத்தில் அவர்களிடம் RTE பற்றி தெரிவித்து, உரிய பள்ளிகளில் சேர்க்க உதவி செய்வதற்குக் கூட எந்த ஒரு அமைப்பிடமும் உரிய செயல் திட்டம் இல்லை. RTE பள்ளி சேர்க்கை education drive யார் நடத்துவது? உண்மையில் கூற வேண்டுமானால் இதுதான் அனைத்து முற்போக்கு அமைப்புகளின் தலையாய பணியாக இருக்க வேண்டும். இதுவும் நடப்பதில்லை.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இன்றளவும் இன்னமும் எத்தனை எத்தனை பிரச்சனைகள் இருந்து கொண்டிருக்கின்றன. கையால் மலம் அள்ளும் அவலம், தூய்மை தொழிலாளர் மறுவாழ்வு, கூலித் தொழிலாளர் மற்றும் விவசாயக் கூலிகள் பிரச்சனை, கொத்தடிமைகள், பட்டாசு தொழிலாளர்கள் செத்து மடிவது-அவர்களுடைய மறுவாழ்வு, தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற ஆதிதிராவிடர் உறைவிடப் பள்ளிகளின் அவல நிலை, பட்டியல் சாதியினர் வாழ்விடங்களில் அன்றாட அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சனைகள் என்று அள்ள அள்ளக் குறையாத அளவுக்கு அவலங்களும் இழிவுகளும் நம் சமூகத்தின் மீது திணிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் ஒவ்வொன்றாக கையிலெடுத்து போராடி, நம் மக்களுக்காகப் போராடுகின்றோம், களமாடுகின்றோம் என்ற எண்ணமும் நேர்மையும் கொடுக்கும் பெருமையும், செருக்கும், தலையை நிமிர்த்தி போராளியாக நடக்கும்பொழுது ஏற்படும் திமிர் பெரிதா? அல்லது ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு லெட்டர் பாடில் கோரிக்கை கடிதம் எழுதிக் கொண்டு, கும்பலாக அறிவாலயம் சென்று கூனி குறுகி காத்துக் கிடந்தது, அசிங்கம் அவமானம் பட்டு, நம்மை சேர்த்துக் கொள்வார்களோ மாட்டார்களோ என்று மன உளைச்சல் பட்டு, ஒன்றுக்கும் உதவாத துன்பப்பட்டு துயரப்பட்டு ஒவ்வொரு முறையும் தலைகுனிவோடு ஊருக்குத் திரும்ப வேண்டுமா? என்பதை பட்டியல் சாதி அமைப்புகள் தான் முடிவு செய்ய வேண்டும்.

உண்மை என்னவென்றால் நீங்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை, ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலை கையிலெடுத்து உண்மையாக களமாடி வந்தால், நீங்கள் தமிழகத்தின் அரசியல் மைய நீரோட்டத்தில் இருப்பீர்கள், அப்போது அறிவாலயம் உங்களைத் தேடி வரும், நீங்கள் அவர்களிடம் தலைகுனிந்து கெஞ்ச வேண்டியது இல்லை. இதுதான் நீங்கள் மார்தட்டிக் கொள்ள வேண்டிய மக்கள் அரசியல் அதிகாரமே தவிர, ஒரு MLA சீட் என்பது உண்மையான அரசியல் அதிகாரமல்ல!! சக்கிலியர் அமைப்புகளுக்கு எல்லாம் தனித்து ஓட்டரசியல் செய்யும் அளவுக்கு முதிர்ச்சி, ஆள் பலம், பொருளாதாரம், பயிற்சி என்று எதுவும் கிடையாது, நாங்களெல்லாம் மிகப்பெரிய அரசியல் சக்தி, அரசியல் அதிகாரம் பெறப் போகிறோம் என்ற வெற்று நினைப்பு மட்டும் தான் இருக்கிறது. அதை நம்பி ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைப் போராட்ட களப் பணிகளையும் கைவிட்டுவிட்டார்கள். இரண்டும் கெட்டான் பிழைப்பு பிழைக்கிறார்கள். என்னதான் அவர்களின் சிந்தனை என்பது புரியவில்லை....

எதோ இத்துணை ஆண்டுகளும் உடல் உழைப்பு செலுத்திய தலைவர்கள் தான் ஓய்ந்து விட்டார்கள் என்றால், அமைப்பின் நிர்வாகிகளுக்கு, அடுத்த கட்டத் தலைவர்களுக்கும் எந்தவொரு செயல்திட்டமும் இல்லையா? அமைப்பை சரியாக வழிநடத்திச் செல்ல வேண்டிய பொறுப்பும் கடமையும் அடுத்த கட்ட தலைவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் இல்லாமல் போனதன் அவலம் பற்றி என்ன சொல்வதென்று தெரியவில்லை....இவ்வளவு தூரம் தலைவர்கள் இழுத்து வந்த தேரை அப்படியே விட்டுவிடப் போகிறீர்களா? இவ்வளவு இழிவுகளையும் சுமக்கும் ஒடுக்கப்பட்ட மக்களையும், ஒடுக்கப்பட்ட சமூகத்தையும் அப்படியே விட்டுவிடப் போகின்றீர்களா? என்ற கேள்வியை அனைவரின் சிந்தனைக்கும் விட்டுவிடுகிறேன்...நெருப்புத்தமிழன் நீலவேந்தன் அவர்களின் முழக்கத்தை மட்டும் இங்கே மிகுந்த மன வருத்தத்துடன் நினைவு கூர்கிறேன்....

neelavendhan 600

- தேன்மொழி