கீற்று வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களை கீற்று இணைய தளம் வாயிலாக சந்திப்பதில் மகிழ்ச்சி. அண்மையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள தொட்டியபட்டியில் அருந்ததியர்கள் மீது நாயக்கர் சாதியைச் சேர்ந்தவர்கள் நிகழ்த்திய வன்கொடுமையை முன்னிட்டு நண்பர்கள் சிலரின் எதிர்வினை குறித்த எனது எதிர்வினையைப் பதிவு செய்வதற்கென்றே இப்பதிவு.

            மிகப்பெரும்பாலானோர் அவ்வன்கொடுமைகளைக் கண்டித்திருந்தனர். சிலரது பதிவுகள் அருந்ததியர்களையே காயப்படுத்துவதாய் இருந்தது. நண்பர்களில் சிலர் ஆண்ட பெருமை பேசிய அருந்ததியர்கள் எங்கே என்பதாய்ப் பதிவிட்டிருந்தனர். சமயம் பார்த்து நீ மலமள்ளிதானே! நீ செருப்புத் தைப்பவன்தானே என்று குத்தி காட்டிவிட்டதாகவும், உன் இடத்தைத் தெரிந்து கொண்டாயா என்கிற இளக்காரத்தை உணர்த்திவி ட்டதாகவும் அவர்கள் நிறைவடைந்திருக்கலாம்.

           என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள்? அருந்ததியர்கள் குறித்து நமது கல்வித் துறை சார்ந்த ஆய்வறிஞர்கள் என்போர் தமிழ்ச் சமூகத்திற்கு அப்படிச் சொல்லவில்லை என்பதற்காக அருந்ததியர்களுக்குப் பெருமை மிகுந்த ஒரு கடந்த காலம் இருந்தது என்பதை நாங்கள் சொல்லக் கூடாதா? உண்மையில் இந்த செய்திகளை அருந்ததியர்கள் அல்லாத மற்றவர்கள்தான் சொல்லியிருக்க வேண்டும். ஏனெனில் ஆய்வு போன்ற வெளிகள் இவ்வளவு நீண்ட காலமாய் அருந்ததியருக்கு அந்நியமாய்  இருந்தது. இது விஷயத்தில் ஒரு மிகப் பெரிய சதி நடந்திருப்பதாக நாம் சந்தேகப் படக் கூடிய அளவிற்கு செய்திகள் இருக்கின்றன.

          உதாரணத்துக்கு ஒரேயொரு செய்தியை மட்டும் முன்வைக்க விரும்புகிறேன். கே.கே.பிள்ளை எழுதிய ‘தமிழக வரலாறு: மக்களும் பண்பாடும்’ நூல் தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற நூல். இளங்கலை வரலாறு, முதுகலை வரலாறு ஆகியவற்றுக்குப் பாடநூலாக அந்நூல் விளங்குகிறது என அந்நூலின் முகப்புரையே சொல்கிறது. மேலும், அந்நூல் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற போட்டித் தேர்வுகளுக்குப் பாடநூலாகவும் விளங்குகிறது என்று சொல்கிறார்கள். அந்நூலில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்திலுள்ள 1258-ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு மேற்கோள் காட்டப்படுகிறது. அந்த மேற்கோள் வருமாறு: ”நியாயத்தாரும், பன்னிரண்டு பணிமக்களுமுள்ளிட்ட பெரும் வேடரும், பாணரும், பறையரும், இருளரும் உள்ளிட்ட அனைத்துச் சாதிகளும்”

          சௌத் இந்தியன் இன்ஸ்கிரிப்சன்ஸ் நூலின் எட்டாவது தொகுதியில் இடம்பெறும் அதன் உண்மையான பகுதி: “நியாயத்தாரும், பன்னிரண்டு பணிமக்களுமுள்ளிட்ட பெரும் வெடரும், பாணரும். பறைமுதலிகளும், செக்கிலியரும் இருளரும்உள்ளிட்ட அனைத்துச் சாதிகளும்” என்பதாகும். இதிலுள்ள சக்கிலியர் என்கிற ஒரு வார்த்தையை மட்டும் கே.கே.பிள்ளை எதற்காக எடிட் பண்ணினார் என நமக்குத் தெரியாது. அதேபோல, வெள்ளைக்குதிரை இதழில் வெளியான எனது கட்டுரையில், கிபி ஆயிரம் ஆண்டுக்கும் கிபி ஆயிரத்து நானூறாம் ஆண்டுக்கும் இடைப்பட்டதான சக்கிலியரைக் குறிப்பிடுகிற ஐந்து கல்வெட்டுக்களைக் குறிப்பிட்டிருக்கிறேன். அதில் குறிப்பிடப்படாத மற்றொரு கல்வெட்டும் உள்ளது. இக்கல்வெட்டுக்களைத் தமிழ் கூறு நல்லுலகிலுள்ள அறிஞர்கள் குறிப்பிடாதது ஏன் என எனக்கு விளங்கவில்லை.

           தமிழறிஞர்கள் யாரைக் கேட்டாலும் சொல்வார்கள்! தமிழ்நாட்டிலுள்ள தெலுங்கு பேசும் மக்களை வடுகர் என்றே கல்வெட்டுக்களும், பழந்தழிழ் இலக்கியங்களும் குறிப்பிடுகின்றன என்பதை. மேலே குறிப்பிட்ட அனைத்துக் கல்வெட்டுக்களும், பழந்தமிழ் இலக்கியங்களுள் சிலவும் சக்கிலியர் எனத் தெளிவாகவே குறிப்பிடுகின்றன.

          நண்பர் ரமேஷ் எழுதிய குறிப்பில் அருந்ததியரை நாயக்கர் போன்றே தெலுங்கு பேசுபவர் என்று குறிப்பிடுகிறார். நான் அருந்ததியர் பேசும் மொழியினைத் தெலுங்கு எனக் குறிப்பிடுவது குறித்து எனக்கு ஆட்சேபனைகள் இருக்கின்றன. அருந்ததியர் பேசும் மொழிக்கும், நாயக்கர் பேசும் மொழிக்கும், ஆந்திரத்தில் பேசுகிற தெலுங்குக்கும் ஒற்றுமைகள் இருக்கின்றன. இந்திக்கும், உருதுக்கும் இருப்பது போன்ற ஒற்றுமை. அருந்ததியரும் தாங்கள் பேசும் மொழியைத் தங்களுக்குள் சொல்லிக் கொள்ளும் போது ‘மாதிய மாட்ட’ (மாதிகர் மொழி) என்றே குறிப்பிடுகின்றனர். இதுகுறித்து இன்னும் விரிவாக எழுதப்பட வேண்டியது உள்ளது. அருந்ததியர் வரலாறு குறித்த ஆய்வில் நான் இருக்கிறேன். கூடிய விரைவில் விரிவான நூலாக எழுத இருக்கிறேன். எனக்குப் போதிக்கப்பட்ட எல்லாமும் உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. அதிலும் குறிப்பாக, அருந்ததியர் போன்ற எல்லாராலும் புறக்கணிக்கப் பட்ட பிரிவினர் குறித்துப் பேசும்போது சிறிது கவனம் தேவை என நினைக்கிறேன். 

- ம.மதிவண்ணன்

Pin It