முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, 2017-18ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தபோது தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் திட்டத்தை அறிவித்தார்.

தேர்தலின்போது அரசியல் கட்சிகள் 20,000 ரூபாய்க்கு மேல் தனிப்பட்ட ஒருவரிடமிருந்து நிதி பெற்றிருந்தால், அப்படி நிதி வழங்கியவர்களின் பெயர் மற்றும் தொகையின் தரவுகளை நிதி ஆண்டின் இறுதியில் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று Representation of People Act சட்டத்தில் இடம் பெற்றிருந்தது. இதனை Electoral Bond Scheme 2018 மூலம் திருத்திய பாஜக அரசு, தேர்தல் பத்திரம் மூலம் கட்சிகளுக்கு நிதி வழங்குபவரின் பெயர்களைத் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கத் தேவையில்லை என மாற்றியது.

இதற்காக மே 14, 2016 அன்று நிதிச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இது வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் 2010 (FCRA) இன் பிரிவு 2(1)(J)(Vi) ஐ திருத்தியது. இதன் மூலம் இந்திய நிறுவனங்களில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட வெளிநாட்டு நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கு முன்பு வெளிநாட்டு நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பது தடை செய்யப்பட்டிருந்தது.Electoral Bondsஅதன் பிறகு மார்ச் 31, 2017 அன்று தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட பங்களிப்புகளின் விரிவான பதிவை வைத்திருப்பதில் இருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்கும் வகையில் வருமான வரிச் சட்டத்தின் 13A பிரிவு திருத்தப்பட்டது.

மத்திய அரசாங்கத்தை தேர்தல் பத்திரங்களை வெளியிட எந்த ஒரு அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கியையும் அங்கீகரிக்க அனுமதித்த RBI சட்டத்தின் பிரிவு 31 திருத்தப்பட்டது.

RoPA இன் பிரிவு 29C-க்கு ஒரு விதியை அறிமுகப்படுத்தினார்கள். இதன் மூலம் அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட பங்களிப்புகளை "நன்கொடை அறிக்கைகளில்" வெளியிடுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

நிறுவனங்கள் சட்டத்தின் பிரிவு 182-ஐத் திருத்தினார்கள். இதன் மூலம் ஒரு நிறுவனம் ஒரு அரசியல் கட்சிக்கு எவ்வளவு நன்கொடை அளிக்கலாம் என்பதற்கான உச்ச வரம்பை நீக்கினார்கள். இதற்கு முன்னர் நிறுவனங்கள் மூன்று வருட நிகர லாபத்தில் 7.5 சதவீதம் வரை மட்டுமே நன்கொடை அளிக்க முடியும் என்றிருந்தது.

இதை எல்லாம் படிக்கும் போது உங்களுக்கு ஒன்று தோன்றலாம். ஒரு தேர்ந்த திருடன் கூட திருடுவதற்கு இப்படி எல்லாம் திட்டமிட முடியாது என்று.

இந்த திட்டத்தை ரத்து செய்யக் கோரி ஏடிஆர், காமன் கேஸ் உள்ளிட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டாலும் கடந்த 6 ஆண்டுகளாக விசாரணை நீடித்தது.

கடந்த ஆண்டு முதல், தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்து வந்தது.

கடந்த மாதம்தான் தேர்தல் பத்திரத் திட்டம் சட்டவிரோதமானது என்று கூறி, அந்த நடைமுறையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததோடு 2019-ம் ஆண்டு முதல் தேர்தல் பத்திரம் வழங்கியது தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 6-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், மேலும் எஸ்பிஐ வழங்கிய விவரங்களை மார்ச் 15ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் தன்னுடைய இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் மார்ச் 4 ஆம் தேதி வேண்டுமென்றே மனு தாக்கல் செய்த எஸ்பிஐ வங்கி, தேர்தல் பத்திரம் தொடர்பான தகவல்களைத் தரவிறக்கம் செய்து, அவற்றை வகைப்படுத்தித் தருவது சிக்கலான நடவடிக்கை என்றும், எனவே முழு விவரங்களை வெளியிடுவதற்கு ஜூன் 30-ம் தேதி வரை கால அவகாசம் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது.

ஆனால் எஸ்பிஐயின் கோரிக்கையை ஏற்காத உச்சநீதிமன்றம், அரசியல் கட்சிகள் பணப் பட்டுவாடா செய்த தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை மார்ச் 12-ஆம் தேதி வணிக நேரம் முடிவதற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்திரவிட்டுள்ளது.

அதே போல மார்ச் 12 அன்று தேர்தல் ஆணையத்தின் வேலை நேரம் முடிவதற்குள் எஸ்பிஐ விவரங்களை சமர்ப்பித்துள்ளது. இதனை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது

அத்திபூத்தார் போல எப்போதாவது உச்சநீதிமன்றத்திடம் இருந்து கிடைக்கும் நல்ல தீர்ப்புகளில் இதுவும் ஒன்று.

கடந்த ஆறு ஆண்டுகளாக உச்சநீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்த காலத்தில் மட்டும் பாஜக - ரூ.6,570 கோடி, காங்கிரஸ்,ரூ.1,123 கோடி, பிஆர்எஸ் ரூ.912 கோடி, திரிணமூல் காங்கிரஸ் ரூ.823, பிஜு ஜனதா தளம் ரூ.774, திமுக ரூ.616 கோடியும் தேர்தல் பத்திரங்கள் மூலம் தேர்தல் நிதியாகப் பெற்றிருக்கின்றன.

கடன்பத்திரங்கள் அனைத்தும் எஸ்பிஐ வங்கிக் கிளைகளில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன. ரூ 1,000 முதல் ரூ 10000000 மதிப்புகளில் தேர்தல் பத்திரங்களானது விற்கப்பட்டது. இதன் மூலம் தனி நபர், பெரு நிறுவனங்கள் என அனைவரும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு நிதி அளிக்க முடியும். ஒருவர் எத்தனை தேர்தல் பத்திரம் பெறலாம் போன்ற எந்த அளவு கட்டுப்பாடுகளும் இல்லை என்பதால், கார்ப்ரேட் கட்சிகளுக்கு கொடுக்க வேண்டிய கமிசனை சட்டப்படியே கார்ப்ரேட்களால் கொடுக்க முடிந்தது.

கார்ப்ரேட்டுகள் சட்டவிரோதமாக அடிக்கும் கொள்ளையில் தங்களுக்கான பங்கை சட்டப்படியே பெற்றுக்கொள்ள கார்ப்ரேட் கொள்ளைக்கு விளக்கு பிடிக்கும் அரசியல்வாதிகள் வழி ஏற்படுத்திக் கொண்டார்கள்.

இதன் மூலம் கணக்கு வழக்கற்ற கருப்புப் பணம் தேர்தல் நிதியாக அரசியல் கட்சிகளின் கஜானாவில் குவிந்தன. ஒவ்வொரு கட்சியின் கார்ப்ரேட் சேவையைப் பொறுத்து கார்ப்ரேட்கள் வீசும் எலும்புத்துண்டுகளின் விகிதமும் வித்தியாசப்பட்டது.

மோடி பதவியேற்றதில் இருந்து ஒட்டுமொத்த கார்ப்ரேட்களின் நம்பிக்கை நட்சத்திரமாக, சிறந்த புரோக்கராக செயல்பட்டதால் கார்ப்ரேட்களால் அதிகம் நிதி கொடுக்கப்படும் கட்சியாக பிஜேபியே இருந்து வந்தது.

கடந்த ஆண்டு டிசம்பரில் மக்களவையில் மத்திய நிதியமைச்சகம் பகிர்ந்து கொண்ட இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, இந்தியாவின் பொதுத்துறை வங்கிகள் 2015 மற்றும் 2023 நிதியாண்டிற்கு இடைப்பட்ட ஒன்பது ஆண்டுகளில் ரூ.10.42 லட்சம் கோடி கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளன. அவற்றில் அதிக கடன் தொகையைத் தள்ளுபடி செய்த முதல் ஐந்து வங்கிகளில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

ஒரு பக்கம் இப்படி கடன் கொடுத்து கடன் தள்ளுபடி நாடகம் ஆடும் அரசு இன்னொரு பக்கம் அவர்களுக்கு வரிச்சலுகைகளை வாரி வழங்கியது

2019 லேயே நிதி அமைச்சர் கார்ப்பரேட்டுகளுக்கான வரியை 30% லிருந்து 22% ஆகக் குறைத்தார். இதனால் அரசுக்கு ஓர் ஆண்டுக்கு அன்றைய தேதியில் ஏற்பட்ட இழப்பு 145000 கோடி ரூபாய் என்றும் அவரே கூறினார். 2020 பட்ஜெட்டில் நேர்முக வரியில் 65,000 கோடி ரூபாய்க்கு சலுகை அளித்து அரசுக்கு இழப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் மந்த நிலையைக் காரணம் காட்டி ஏற்றுமதிக்கு 50,000 கோடி ரூபாய், பன்னாட்டு நிதி மூலதனத்திற்கு 10000 கோடி ரூபாய் மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளுக்கு 25000 கோடி ரூபாய் என்று மொத்தம் 300000 கோடி ரூபாயை விரல் விட்டு எண்ணக்கூடிய பெரிய முதலாளிகளுக்கும் பணக்காரர்களுக்கும் 2019-20இல் பாஜக அரசு ஒதுக்கியது. (நன்றி:மார்க்சிஸ்ட்).

இப்படி வரிச்சலுகைகள் கடன் தள்ளுபடி என கொழுத்துப் போன இந்திய பெருமுதலாளிகள் அதற்குக் காரணமான கைக்கூலி அரசியல்வாதிகளுக்கு கொடுப்பதற்காகவே உருவாக்கப்பட்டதுதான் இந்தத் தேர்தல் பத்திரங்கள்.

கடந்தாண்டு அக்டோபர் 12ஆம் தேதி அயர்லாந்து நாட்டின் 'Concern World wide' மற்றும் ஜெர்மன் நாட்டின் 'Welt Hunger Hilfe' வெளியிட்ட உலகப் பட்டினி குறியீடு (GHI) அறிக்கையின்படி 125 நாடுகளின் பட்டியலில் இந்தியா 111வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இந்தியா 107வது இடத்தில் இருந்தது.

இப்படி பட்டினி தலைவிரித்தாடும் நாட்டில்தான் அந்த மக்களின் உயிரைக் காவு வாங்கி அரசியல்வாதிகளின் துணையோடு பணக்காரர்கள் கொழுக்க வைக்கப்படுகின்றார்கள்.

தற்போது எஸ்பிஐ வங்கி தேர்தல் ஆணையத்திடம் கொடுத்திருக்கும் தரவுகள் வெளியாகும்போது, எளிய மக்களையும், இந்திய வளங்களையும் ஒட்டச் சுரண்டி கொழுக்கும் பணக்காரப் பன்றிகள், அதற்கு உதவி செய்த கிரிமினல் அரசியல்வாதிகள் என அனைவரும் அம்பலப்படுவார்கள்.

மேலும் அதானி ஏன் காப்பாற்றப்பட்டார், வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற நீரவ் மோடி, விஜய் மல்லையா போன்ற கார்ப்ரேட் கடன்காரன்களை ஏன் அரசு இன்றுவரை கைது செய்யவில்லை போன்ற பல உண்மைகள் வெளிவரலாம்.

- செ.கார்கி

Pin It