தேர்தல் பத்திரங்கள் அரசமைப்புச் சட்டம் உறுப்பு 19 (1) க்கு விரோதமானவை என்று பிப்ரவரி 15 அன்று தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம். மார்ச் 6 ஆம் நாளுக்குள் தேர்தல் பத்திரம் யார் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது என்ற விவரங்களைத் தாக்கல் செய்யுமாறு பாரத ஸ்டேட் வங்கிக்குக் கட்டளை பிறப்பித்தது. ஆனால் பாரத ஸ்டேட் வங்கியோ கெடுவுக்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது மார்ச் 5 அன்று, தரவுகளைத் தொகுப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால், வரும் ஜூன் 30 வரை கால அவகாசம் வேண்டும் என மனு செய்திருக்கிறது.modi behind sbiஅதென்ன ஜூன் 30? இன்னும் 110 நாள்கள் தேடும் அளவுக்கு கோடிக்கணக்கான கணக்குகளா என்றால்.. அதுவும் இல்லை. வெறுமனே 22,217 பத்திரங்கள் தான். அதிலும் தேர்தல் பத்திரங்களின் கணக்குப் பதிவிற்காக சிறப்பு மென்பொருள் பயன்படுத்தப் படுவதாக த்தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதிலும் அளித்துள்ளது பாரத ஸ்டேட் வங்கி. வங்கிகள் அன்றாடத் தங்கள் கணக்குகளை நேர் செய்யாமல் அடுத்த நாளைக்குச் செல்லமுடியாது. எந்த மாதிரியான கணக்காக இருந்தாலும் அடுத்த ஒரு மணி நேரத்தில் தந்துவிடமுடியும், எல்லா விவரங்களையும். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு காலாண்டிற்கும் கணக்குகள் முடித்த விவரமும், கணக்காயர்களின் அறிக்கைகளும் இருக்கும். இருந்தும் மேலும் 3 மாதங்கள் தேவைப்படுகிறது என்றால், ‘அவர்’ பதவியில் இருக்கும் வரை இதை வெளியே வராமல் பார்த்துக் கொள்ள ஒப்பந்தம் போட்டிருக்கிறாரா? அல்லது அதற்குள் தேர்தல் முடிந்து விடும். பிறகு காட்டினால் என்ன காட்டாவிட்டால் என்ன என்று இருக்கத் திட்டமா? அல்லது பணமாக்கப்படாத தேர்தல் பத்திரங்களை வேறு வழிகளில் பணமாக்கும் முயற்சியா? அல்லது எப்படியும் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி தான், மொத்தமாக எல்லாவற்றையும் ஒழித்து விடும் திட்டமா?

இந்த மனுவுக்குப் பின்னால், ஒன்றிய அரசின் பெரிய அழுத்தம் இருப்பது நன்கு தெரிகிறது. இது ஒரு வெட்கக்கேடான செயல் என முன்னாள் வங்கி அதிகாரிகள் தொழிற்சங்கத் தலைவர் தாமஸ் ஃப்ராங்கோ “த நியூஸ் மினிட்” வலையொளிக்கு அளித்த பேட்டியில் சொல்கிறார். பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் தினேஷ் குமார்காரா சென்ற ஆண்டு அக்டோபரில் இருந்து இந்த ஆண்டு ஆகஸ்ட் வரை பதவி நீடிப்பு செய்யப்பட்டவர். ஒன்றிய பா.ஜ.க. அரசால் 63 வயது ஆகியும் ஓய்வு பெறாமல் இருக்கிறார் என்றால், அவருடைய பா.ஜ.க. விசுவாசத்தை நாம் உணரலாம். அவரும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களால் வளர்த்து, பால்வார்க்கப்பட்டு, பல அரசு அதிகாரிகள், நீதிபதிகள் போல, தன் எதிர்கால அரசியல் பதவிக்காக இதைச் செய்திருப்பதாகவே கருத வேண்டி உள்ளது.

உச்ச நீதிமன்றம் இந்த மனுவை ஏற்காமல், உடனடியாக, தேர்தல் பத்திரங்கள் குறித்த தரவுகளைப் பெற்று, முறையான நடவடிக்கைகளை எடுப்பதோடு, பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் மீதும் விசாரணையைத் தொடங்கவேண்டும் என்பதே பொறுப்பான குடிமக்களின் எதிர்பார்ப்பு.

- சாரதாதேவி

Pin It