மேற்கு பஞ்சாப் மற்றும் கிழக்கு பஞ்சாப், மேற்கு வங்காளம் மற்றும் கிழக்கு வங்காளம் ஆகியவைகளுக்கிடையேயான எல்லைக் கோட்டை நிர்ணயிப்பது சம்பந்தமாக எழுந்துள்ள விவாதங்கள் குறித்து பத்திரிகை செய்திகளிலிருந்தும், முஸ்லீம்களும் இந்துக்களும் எல்லைக் கமிஷனுக்கு அளித்துள்ள மனுக்களிலிருந்தும் ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. அதாவது எல்லைக் கமிஷனின் முடிவு நாட்டிற்கு பேரழிவைக் கொடுக்கக் கூடும் என்பது தெரிகிறது.

முதலாவது, பஞ்சாப் மற்றும் வங்காள மக்கள் ஒருவருக் கொருவர் சண்டையிட்டுத் தங்களுக்குள்ளேயே முடிவு செய்து கொள்ளக் கூடிய ஸ்தல பிரச்சினையாக இது கருதப்பட்டு வந்துள்ளது. இரண்டாவதாக ஸ்தல மக்களால் நில அபகரிப்பு விஷயமாகவே இந்தப் பிரச்சினை கருதப்பட்டு வந்துள்ளது. இந்த நில அபகரிப்பு போட்டியில், முஸ்லீம்களற்ற பகுதிகளில் முஸ்லீம்கள் அல்லாதோர் வாழும் இடங்களைக் காணவும் வெறியுடன் தேடுதல் வேட்டை நடை பெற்றது. இதன் மூலம் தேசிய எல்லைக் கோட்டை முன்னுக்குப் பின்னுக்குத் தள்ளி முஸ்லீமற்ற பகுதிகளுக்கு எவ்வளவு முஸ்லிமல்லாதோரை கொண்டு வர முடியுமோ அவ்வளவு கொண்டு வரவும் முஸ்லிம் பகுதிகளுக்கு எவ்வளவு முஸ்லீம்களைக் கொண்டு வரமுடியுமோ அவ்வளவு முஸ்லீம்களைக் கொண்டு வரவும் முயற்சிகள் நடக்கின்றன. இந்த இருவிதப் போக்குகளுமே எனக்குத் தவறானவையாகத் தோன்றுகின்றன.

ambedkar 248பாகிஸ்தானும் இந்துஸ்தானும் ஒரே மாதிரியான நாடுகள் என்றால் மக்கள் கூட்ட திட்டுக்களுக்கு ஏற்ப தேசிய எல்லைகளை மாற்றியமைப்பது நியாயமானதாகக் கருதப்படலாம். இது பிரிவினையின் அடிப்படையல்ல என்பது காங்கிரஸோ அல்லது முஸ்லீம் லீகோ மக்களை இடம் மாற்றிக் குடியேற்ற வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்கவில்லை என்பதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. எவ்விதத்தில் தேசிய எல்லையை மாற்றி வெட்டித் திருத்தி அமைத்தாலும் கணிசமான எண்ணிக்கையிலான முஸ்லீம் அல்லாதவர்கள் பாகிஸ்தானிலும் அதிக அளவிலான முஸ்லீம்கள் இந்தியாவிலும் தொடர்ந்து வசிப்பார்கள். எனவே தன் இனத்தவரை அதிக அளவில் கொண்டு வருவதற்காக எல்லையில் மாற்றம் செய்ய முயல்வது தவறான வழியில் செல்வதாகும். 

பாதுகாப்பு

இரண்டாவதாக, பாகிஸ்தானும், இந்தியாவும் இரண்டு சுதந்திரமான இறையாண்மை பெற்ற நாடுகளில்லையென்றால் இதை ஸ்தலப் பிரச்சினையாகக் கருதலாம். ஆக்கிரமிப்பு, படையெடுப்பு என்ற நிலை ஏற்பட்டால் அவை ஒவ்வொன்றும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற உண்மையை மறந்து விடக்கூடாது.

இந்த கண்ணோட்டத்தில் விஷயத்தை அணுகினால் பஞ்சாப் மற்றும் வங்காளத்தின் பிரிவினை ஓர் உள்ளூர் விவகாரமல்ல என்பதையும் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் எல்லையை நிர்ணயிக்கும் பிரச்சினை இதில் அடங்கியிருப்பதையும் காணலாம். எனவே இது பாதுகாப்பு மற்றும் நிர்வாக வசதிகளுக்க சாதகமான முறையில் தீர்மானிக்கப்பட வேண்டுமென்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

இந்தக் காரணத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் அரசும் இந்திய அரசுமே எல்லைக் கமிஷன் முன் ஆஜராக வேண்டிய கட்சிகள் என்பது மட்டுமல்ல, அவை அவசியமான சுட்சிகளுங்கூட. பாகிஸ்தானையும் இந்தியாவையும் பிரிக்கும் எல்லைக் கோடே இந்தியாவின் எல்லையாக உள்ளதால், எல்லைக் கமிஷனில் ராணுவ அதிகாரிகள் இருக்க வேண்டுமென்று இந்திய அரசின் பாதுகாப்புத்துறை வலியுறுத்தியிருக்க வேண்டும். இரண்டு நாடுகளின் எல்லைகளை முடிவு செய்வதில் இது வழக்கமாக கடைப்பிடிக்கப்படுகின்றது.

இந்திய அரசின் பாதுகாப்புத் துறை இதைச் செய்யத் தவறியதுடன் பாதுகாப்பு மற்றும் நிர்வாக விஷயங்களின் கண்ணோட்டத்தில் தங்களுடைய கருத்துகளை எல்லைக் கமிஷனின் முன்வைக்கக்கூட அக்கறை காட்டவில்லை. எல்லைகளைக் கண்காணிக்கும் பொறுப்பு கிழக்கு பஞ்சாபினுடையதோ அல்லது மேற்கு வங்காளத்துடையதோ அல்ல என்பதை அவர்கள் மறந்துவிட்டதாகத் தெரிகிறது. ஆரம்பத்திலிருந்து கடைசிவரை இந்திய அரசுக்கே அதிகப் பொறுப்புள்ளது. எல்லைகளை நிர்ணயிப்பதில் தன்னுடைய கருத்தை வலியுறுத்துவதில் பாதுகாப்புத் துறைக்கு அதிக அக்கறை உள்ளது.

இயற்கையான எல்லைகள்

பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் கண்ணோட்டத்தில் பார்த்தால் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான எல்லைகள் இயற்கையான எல்லைகளாக இருக்க வேண்டும். அதாவது ஒரு ஆறு செல்லும் வழியாகவோ அல்லது மலையாகவோ இருக்க வேண்டும். எல்லைக் கமிஷனுக்கு அளிக்கப்பட்டுள்ள மனுக்களில் எழுப்பப்பட்டுள்ள வாதங்களின் தன்மைகளைப் பார்த்தால் மேற்குறிப்பிட்ட காரணக் கூறுகள் அதற்குரிய கவனத்தைப் பெறாது என்பது தெளிவாகிறது.

அவை பொருட்படுத்தப்படாமல் விடப்பட்டதுமன்றி அவை குறிப்பிடப்படவுமில்லை. எல்லைக் கமிஷனின் முயற்சியில் உருவாகும் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான எல்லை, அதனால் உடனடியாக பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்கு எவ்வளவு திருப்திகரமாக இருந்தாலும் இந்தியாவின் கண்ணோட்டத்தில் மிகவும் அதிருப்தி அளிப்பதாகவே இருக்கும்.

என்னுடைய அச்சம் உண்மையாகி விட்டால், கமிஷன் தீர்மானிக்கும் எல்லை இயற்கையானதாக இல்லாதிருந்தால், அதைப் பராமரிப்பதற்கு இந்திய அரசு அதிக விலை கொடுக்க வேண்டுமென்பதுடன் இந்தியாவின் பாதுகாப்புக்கும் பந்தோபஸ்திற்கும் பெரும் ஆபத்தாக அது இருக்கும் என்பதைக் கூற தீர்க்கதரிசிகள் யாரும் வர வேண்டியதில்லை. எனவே காலம் கடந்து விட்டாலும் பாதுகாப்புத் துறை விழித்தெழுந்து காலந்தாழ்த்தாது தன் கடமையைச் செய்யும் என நம்புகிறேன்.

- டாக்டர் அம்பேத்கர்

(ஃபிரீ பிரஸ் ஜர்னல், ஜூலை 21, 1947.)

தொகுப்பு: முனைவர் எ. பாவலன்

Pin It