இந்தியாவிலேயே மிக அதிகமாக பண மோசடிகள் நடக்கும் மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது. தினம் தினம் ஏதாவது ஒரு நிதி நிறுவனம் மோசடி புகாருக்கு உள்ளாவதும், பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர் மல்க தங்களின் பணத்தை பெற்றுத் தருமாறு அரசுக்கு கோரிக்கை வைப்பதும் நாள் தவறாத செய்திகள் ஆகிவிட்டன.

1998-ம் ஆண்டு கலைமகள் சபா நிதி நிறுவன மோசடி, 2011-ம் ஆண்டு திருப்பூர் பாசி போரக்ஸ் நிதி நிறுவன மோசடி, 2012-ஆம் ஆண்டு ஈமு கோழி வளர்ப்பு நிறுவன மோசடி, 2018-ஆம் ஆண்டு மதுரை பாரிவர் டைரீஸ் அண்டு அலைடு நிறுவன நிதி மோசடி, 2019- ஆம் ஆண்டு கோவை, ராமநாதபுரத்தில் இயங்கி வந்த கிரீன் கிரெஸ்ட் நிதி நிறுவன மோசடி, 2020-ஆம் ஆண்டு கேஎப்ஜே தங்க நகை சேமிப்பு திட்ட மோசடி, 2021-ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் சகோதரர்கள் நிதி நிறுவன மோசடி, 2022-ஆம் ஆண்டு ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி, 2022-ம் ஆண்டு ஐஎப்எஸ் நிதி நிறுவன மோசடி, எல்பின் நிறுவனத்தின் மோசடி என பட்டியல் சென்று கொண்டே இருக்கின்றது.

இதில் ஆருத்ரா, ஹிஜாவு, ஐஎஃப்எஸ், எல்பின் உள்ளிட்ட 8 பெரிய நிதி நிறுவனங்கள் மட்டும் தமிழகம் முழுவதும் 2.91 லட்சத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.14,168 கோடி வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளன.

பெரும்பாலும் இது போன்ற மோசடிகள் உடனே அம்பலப்படுவது கிடையாது. மோசடிக்காரர்கள் மொத்தமாக பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடிய பின்னால்தான் வெளிச்சத்துக்கு வருகின்றன. பொதுமக்களும் தாங்கள் ஏமாற்றப்பட்டதை பெரும்பாலும் காலம் கடந்தே தெரிந்து கொள்கின்றார்கள்.

36 சதவீத வட்டி, மூன்றாண்டுகளில் பணம் இரட்டிப்பு போன்ற ஆசை வார்த்தைகளை மிக எளிதாக நம்பி வீடு, நகை, பணம் என அனைத்தையும் போலி மோசடி நிதி நிறுவனங்களில் முதலீடு செய்கின்றார்கள்.

குறைந்த பட்ச அறிவும் நேர்மையும் இருக்கும் யாருமே இதை நம்ப மாட்டார்கள். ஆனால் வாழ்க்கையில் குறுக்கு வழியில் எளிதாகப் பணம் ஈட்ட வேண்டும் என எண்ணமுள்ளவர்கள் மிக எளிதாக மோசடிக்காரர்களின் வலையில் வீழ்கின்றார்கள்.

இவர்கள் தாங்கள் வீழ்வதோடு மற்றவர்களையும் இந்தப் படுகுழியில் தள்ளிவிட்டு அதன் மூலம் கிடைக்கும் கமிசன் தொகைக்கு ஆசைப்பட்டு பல பேரின் வாழ்க்கையை சூனியமாக்கவும் துணிகின்றார்கள்.

முதலில் பணம் கட்டும் நபர் தன் மூலமாக எத்தனை பேரை சேர்த்து விடுகின்றாரோ, அதைப் பொறுத்து ஒரு கணிசமான தொகை வழங்கப்படுகின்றது. அதே போல அவர் சேர்த்துவிட்ட நபர்கள் மூலம் மீண்டும் சேர்க்கப்படும் ஆட்களை பொறுத்தும் கமிசன் வழங்கப்படுகின்றது.

இப்படியே ஒவ்வொருவரும் தங்களின் வருமானத்தை உயர்த்திக் கொள்ள நண்பர்கள், உடன் வேலை பார்ப்பவர்கள், உறவினர்கள் என கண்ணில் பட்டவர்களை எல்லாம் மூளைச் சலவை செய்து, Multi-level marketing போன்றே செயல்படும் இந்த வஞ்சக வலையில் வீழ்த்துகின்றார்கள்

ஒரு கட்டத்தில் நம்மால் சேர்த்து விடப்படும் நபர்களின் எண்ணிக்கை குறையும் போது, சம்மந்தப்பட்ட மோசடி நிறுவனம் அவர்கள் கொடுப்பதாகச் சொன்ன வட்டித் தொகையையும் தராமல் இழுத்தடிக்கின்றது.

அப்போதுதான் சம்மந்தப்பட்ட நபருக்கு தனக்கு இத்தனை நாள் கொடுக்கப்பட்ட தொகை அடுத்தவன் பிழைப்பை, தான் கெடுத்து மோசடி நிறுவனத்தில் அவர்களையும் முதலீடு செய்ய வைத்ததற்காக கொடுக்கப்பட்டது என்பது புரிகின்றது.

தான் ஏமாந்ததோடு அடுத்தவர்களையும் ஏமாற்ற, தான் உடந்தையாக இருந்து விட்டோமே என்ற எண்ணமும், மோசடி செய்யப்பட்ட பணத்தில் இத்தனை நாளாக தானும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவிட்ட குற்ற உணர்வும், பல பேரை மோசடிப் பேர்வழிகளுக்கு எதிராக புகார் கொடுக்க முடியாத படி செய்து விடுகின்றது. மோசடிப் பேர்வழிகளின் திட்டமும் அதுதான். முதலீடு செய்த அனைவரையும் குற்றவாளியாக்கி விடுவது. அதன் மூலம் அவர்களை காவல் நிலையத்தை நோக்கி செல்லவிடாமல் தடுப்பது.

இருந்தாலும், பணத்தை இழந்ததைத் தவிர இந்த மோசடியில் எந்த வகையிலும் பங்கு கொள்ளாத சிலரால் இது போன்ற மோசடிகள் அம்பலத்திற்கு வந்து விடுகின்றன. அப்படித்தான் பெரும்பாலான மோசடிகள் வெளியே வந்தன.

அந்த வகையில் மீண்டும் இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டிருக்கின்றது ஒரு மெகா நிதி நிறுவன மோசடி.neomax scamமதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழகத்தின் பல மாவட்டங்களில் செயல்பட்டு வந்த நியோ மேக்ஸ் என்கிற நிறுவனம், முதலீடுகளுக்கு 30% வட்டி வழங்குவதாகவும், சில ஆண்டுகளில் முதிர்வுத் தொகையை இரட்டிப்பாக்கித் தருவதாகவும் கூறி லட்சக்கணக்கான மக்களிடம் பல ஆயிரம் கோடி ரூபாய்களை முதலீடாகப் பெற்றது.

மேலும் நியோ மேக்ஸ் நிறுவனம் மக்களை ஏமாற்ற சென்ரியோ உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பெயர்களில் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வந்திருக்கின்றது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களிடம் 40,000 கோடிக்கு மேல் மோசடி செய்திருக்கலாம் என சொல்லப்படுகின்றது.

தற்போது 17 பேர் கைது செய்யப்பட்டிருப்பதுடன் இந்த நிதி நிறுவனத்துடன் தொடர்புடைய 17 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டு இருக்கின்றது.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்நிறுவனங்கள் மீது மோசடி புகார்கள் சொல்லப்பட்டு வந்தாலும், தங்களுக்குள்ள அரசியல் அதிகார வர்க்க செல்வாக்கைப் பயன்படுத்தி தப்பித்து வந்தார்கள்.

குறிப்பாக நியோ மேக்ஸ் துணை நிறுவனம் ஒன்றின் இயக்குநரான வீரசக்தி நியோ மேக்ஸ் நிதி நிறுவனத்தில் சேர்வதற்கு முன்பு தனியார் நிறுவனத்தில் மாத சம்பளத்துக்கு வேலை பார்த்து வந்திருக்கின்றார்.

கடந்த எட்டு ஆண்டுகளில் வீர சக்தியின் வளர்ச்சி அபரிவிதமாக வளர்ந்திருக்கின்றது. தற்போது அவர் பல கோடி சொத்துகளுக்கு அதிபதியாவார்.

தன்னிடம் உள்ள சொத்துகளை பாதுகாப்பதற்காக முதலில் மக்கள் நீதி மையம் கட்சியில் சேர்ந்து திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டு, தோல்வி அடைந்த வீரசக்தி, வழக்கம் போல பாஜகவில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார்.

எப்படி ஹெலிகாப்டர் சகோதரர்கள் (எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர் சுவாமி நாதன்) விக்டரி ஃபைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்ய பாஜக கட்சியைத் தேர்தெடுத்தார்களோ, ஆருத்ரா மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான ஆர்.கே. சுரேஷ் தனக்கு பாதுகாப்பான இடமாக பாஜகவைத் தேர்ந்தெடுத்தாரோ, அதே போல இந்த மோசடிப் பேர்வழி வீர சக்தியும் பாஜகவைத் தேர்ந்தெடுத்து இருக்கின்றார்.

இப்படி பொது மக்களை ஏமாற்றி கொள்ளையடித்த பணத்தில் 'கருமேகங்கள் கலைகின்றன' என்ற படத்தையும் தங்கர் பச்சானைக் கொண்டு வீரசக்தி தயாரித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பொது மக்களை ஏமாற்றும் மோசடிப் பேர்வழிகளின் பின்னால் பாஜக இருப்பது, அந்தக் கட்சி எவ்வளவு கேவலமான கீழ்த்தரமான மோசடிப் பேர்வழிகள் நிரம்பிய கட்சி என்பதை அம்பலப்படுத்தி இருக்கின்றது.

ரவுடிகள், பொறுக்கிகள், கேடிகள், பாலியல் குற்றவாளிகள், கஞ்சா, அபின் கடத்துபவர்கள், விபச்சாரத் தொழில் செய்பவர்கள், நிதி நிறுவன மோசடிப் பேர்வழிகள் என ஒட்டுமொத்த சமூக விரோதிகளின் கூடாரமாக பாஜக மாறியுள்ளது.

ஆனால் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஊழல் இல்லாத ஆட்சியை நாங்கள் கொடுப்போம் என கூச்சமோ குற்ற உணர்வோ இல்லாமல் பேசிக் கொண்டிருக்கின்றார்.

தமிழ்நாட்டில் சட்டத்திற்குப் புறம்பாக செயல்பட்டு வரும் அனைத்து நிதி நிறுவனங்களையும் கண்டறிந்து, அவர்கள் பொது மக்களிடம் இருந்து பெற்ற அனைத்துப் பணத்தையும் தமிழ்நாடு அரசு உடனே பறிமுதல் செய்ய வேண்டும்.

12.5 சதவீதம் அதற்கு குறைவாகத் தான் நிதி நிறுவனங்கள் வட்டி கொடுக்க வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் விதிமுறையாக இருக்கும் போது, எப்படி 30 சதவீத வட்டி, 36 சதவீத வட்டி தருவதாகச் சொல்லி நிதி நிறுவனங்களால் வெளிப்படையாக ஏமாற்ற முடிகின்றது?

லட்சக்கணக்கான பேர் முதலீடு செய்து ஏமாறும்வரை அரசு கைகட்டி வாய் பொத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது என்பது, இந்த மிகப் பெரிய மோசடியில் அரசியல்வாதிகளின் கை இருக்குமோ என்ற சந்தேகத்தைத்தான் ஏற்படுத்துகின்றது.

- செ.கார்கி

Pin It