இன்றைய முதலாளிய அரசியலில் ஊழல் என்பதும், முறைகேடு என்பதும் இந்திய நாடாளுமன்றம் தொடங்கி சந்து பொந்து வரை அனைத்துப் பகுதிகளிலும் நாற்றமெடுத்துக் கொண்டிருக்கிறது.

பார்ப்பனியமும், முதலாளியமும் அரங்கேற்றி இருக்கிற இந்த அதிகார அமைப்பை அப்படியே வைத்துக் கொண்டு ஊழல்களையும் முறைகேடுகளையும் எவராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது.

இந்திரா ஊழல்.. போபர்ஸ் ஊழல்.. கார்கிலின் சவப்பெட்டி ஊழல்.. ரபேல்போர் வானூர்தி ஊழல்.. என இந்திய அளவில் ஊழலில் மாறி மாறிக் கொழுத்தவர்கள் / கொழுத்து வருகிறவர்கள் காங்கிரசும் பாஜகவும்தான்.

இந்தப் பின்னணியில் தங்களின் அதிகார வெறி ஆட்டத்தைத் தட்டிக் கேட்க ஆள் இல்லை என்கிற திமிரில், பாசிச பார்ப்பனிய முதலாளிய வெறி கொண்ட பாஜக அரசு, மாநில அரசுகளைப் பந்தாடுவதும், வழிப்பறிக் கொள்ளையடித்துச் சூறையாடுவதுமாக இருப்பதை அனைவரும் அறிவர். இதற்கேற்பத் தங்களின் வேட்டை நாய்களான அமலாக்கப் பிரிவு,என் ஐ ஏ, சிபிஐ போன்ற அதிகார அமைப்புகளை வைத்துக் கொண்டு,மாநில ஆட்சியாளர்கள் மீது அவற்றை ஏவிவிட்டுத் திமிராட்டம் போடுகின்றது இந்திய அரசு.

மாநிலங்களிலுள்ள கட்சிகள் எல்லாம் தூய்மையானவை என்றோ, முதலாளியத்திற்கு எதிரானவை என்றோ நாம் ஏற்கவில்லை. அவை யாவுமே பன்னாட்டு முதலாளிய அதிகார வகுப்பின் அங்கங்களே! இருப்பினும், இவற்றின் அதிகாரப் பிடிகள் அனைத்தையும் இந்திய அரசு தன் கைக்குள் வைத்துக் கொண்டு, மாநிலங்களை அரட்டி உருட்டி அடிமைப்படுத்தி வைத்திருப்பதை நாம் ஒருக்காலும் ஏற்க முடியாது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஊழல் நடைமுறையை நாம் எதிர்க்கிறோம். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் நடவடிக்கை எடுப்பதற்கான முறை சட்டத்திற்கும், சனநாயகத்திற்கும் உட்பட்டு இருக்க வேண்டும் என்பதிலும் அதுவும் இந்திய அதிகார வெறிப்போக்கோடு இருக்கக்கூடாது என்பதிலும் நாம் உறுதியாக வலியுறுத்துகிறோம்.

தவிரவும், தமிழ்நாட்டின் அமைச்சர் செந்தில் பாலாஜியையோ அல்லது அவரைப் போன்ற ஊழலில் ஈடுபடும் அமைச்சர்களையோ தண்டிப்பதற்குச் சில நெறிமுறைகள் உள்ளன. ஆனால் அவற்றை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, துணை இராணுவப் படையை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டின் தலைமைச் செயலகத்தை இந்தியப் பார்ப்பனிய அரசின் துறைகள் முற்றுகை இடுவதை ஒரு கணமும் நாம் பொறுத்துக் கொள்ள முடியாது.

இது அப்பட்டமான பாசிச நடவடிக்கை. மேலும் மாநில அரசுகளின் உரிமையைக் காலில் போட்டு மிதிக்கும் வன்செயல். அவ்வகையில், அரசு நிறுவனங்களைத் தவறாகப் பயன்படுத்தும் இந்தியப் பாசிச அரசின் ஆணவப் போக்கு, எதிர்காலத்தில் தவறான முன் எடுத்துக்காட்டாக மாறிவிடும் என்பதைத் தமிழக மக்கள் முன்னணி சுட்டிக் காட்டி எச்சரிக்கிறது.

இப்படி அனைத்து வகையிலும் இன்றைய முதலாளிய சனநாயகத்திற்கேகூட எதிரான பாசிச பாரதீய சனதாக் கட்சியை வேரோடும், வேரடி மண்ணோடும் களைந்தெறிய மக்கள் கிளர்ந்தெழ வேண்டும் எனத் தமிழக மக்கள் முன்னணி அறை கூவல் விடுக்கிறது.

Pin It