இன்றைக்கு மெரினாவை அழகு படுத்தும் திட்டத்திற்காக நொச்சிக்குப்பம் தொடங்கி பல பகுதி மீனவர்கள் விரட்டப்பட உள்ளனர். மீனவர்களின் வாழ்வாரத்தையே அழித்து பெரும் மேட்டுக்குடி கும்பல்களுக்கு வசதிகள் செய்து தரப்போகிறார்களாம். மெரினா அழகு படுத்தும் திட்டம் அம்மா ஆட்சிக் காலத்திலும் அதற்கு முன்னதாகவும் தொடங்கப்பட்டதாகும். இதை எதிர்த்து மீனவ நண்பன் ஆட்சி காலத்தில் நடைபெற்ற போராட்டங்களில் அன்றைய போலீஸ் அதிகாரி வால்ட்டர் தேவாரம் தலைமையில் துப்பாக்கி நடைபெற்றதையும் யாரும் மறந்திருக்க முடியாது. தற்போது இந்த திட்டம் துரிதப்படுத்தப்பட உள்ளது. எதற்காக இது ஏதோ மெரினாவில் மட்டும் நடைபெறப் போவதில்லை. நீலப் பொருளாதாரத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த திட்டம் அமைந்துள்ளது. மொத்த கடல் வளத்தையும் கடற்கரைகளையும் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் திட்டமே நீலப்பொருளாதாரத் திட்டம். நொச்சிக்குப்பம் மீனவர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த கடற்கரை மாநிலங்களையும் குறிப்பாக தமிழகத்திலுள்ள 13 கடற்கரை மாவட்ட மீனவரகளையும் அவர்களின் வாழ்வாதாரமான கடலையும் கடற்கரைகளையும் கார்ப்பரேட்டுகளின் லாப வேட்டைக்காக சூறையாடப்பட உள்ளது.

நீலப் பொருளாதாரத் திட்டம் என்றால் என்ன?

இந்தியாவையே தலைகீழாக புரட்டிப் போடுமளவக்கு மிகப்பெரிய முதலீட்டில் பெரும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. நீலப் பொருளாதாராம் என்ற அந்த திட்டமானது உலகளவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இனியும் நிலவளங்களை சுரண்டி கொள்ளையடிக்க முடியாது என்ற தொலை நோக்கு பார்வையில் உலகளவிலான கார்ப்பரேட்டுகள் இத்திட்டத்தில் மூலதனமிட்டுள்ளன, உலக வங்கி இதை ஆதரிப்பதோடு பல நாடுகளை ஊக்கப்படுத்தியும் வருகிறது. நீலப் பொருளாதாரத் திட்டத்தின் பகுதிகளாகவே பாரத் மாலா சாகர் மாலா ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆகிய திட்டங்கள் அணி வகுக்கின்றன. இத்திட்டம் அமல்படுத்தப்பட்டு வருவதால் பெருமளவில் காவிரி பாசனப்பகுதிகள் தொடங்கி அனைத்து கடல் பகுதிகளும் உள்நாட்டு நீர் வளங்களும் மீட்க முடியாத நாசமடையும். இதையே அவர்கள் வளர்ச்சி என்கிறார்கள். வளர்ந்து வரும் தமிழகத்தின் விவசாய வளம் நீர் வளம் மற்றும் மீன் வளம் மட்டுமல்ல ஒட்டுமொத்த சுற்றுச்சூழலையும் பாதுகாக்க இத்திட்டம் குறித்த ஆழமான புரிதலைப் பெற வேண்டியது அவசியம்.

13 வகை தொழிற் திட்டங்கள்

நீலப் பொருளாதாராம் என்பது கடலுக்குள்ளும் மற்றும் சமுத்திரங்களுக்குள்ளும் மீன்பிடிப்பு, கடல் அலையில் இருந்து மின்சாரம் எடுத்தல், கடலுக்கு அடியில் உள்ள கனிம வளங்களைச் சுரங்கம் தோண்டி எடுத்தல் கடல் தாவர உயிரினங்களில் இருந்தும் மருந்துப் பொருட்களைத் தயாரிக்க அனுமதி அளித்தல் உள்ளிட்ட 13 வகை தொழில் திட்டங்கள் உலகெங்கும் தொடங்கப்பட்டுள்ளன.

இதில் கடலுக்குள்ளே செயற்கையாக பாத்திகள் கட்டியும் கூண்டு வைத்தும் மீன் குஞ்சுகளை வளர்த்து ஏற்றுமதியாக்கும் திட்டமும் உள்ளது. இதனால் மீனவரல்லாத சமூகங்கள் முக்கியமாக பெரும் நிலவுடமையாளர்கள், கார்ப்பரேட்டுகள் மீன்பிடிக்க இறங்கியுள்ளன. அவர்களுக்கு மானியமும் அளிக்கப்பட்டு உள்ளது.

இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது பாரம்பரிய மீனவர்களுக்கு மீன்பிடிப்பு ஒரு தொழில் மட்டுமின்றி அது அவர்களின் பிரிக்க முடியாத வாழ்வியல் பண்பாடாகும். மீனவர்கள் என்பது பிறப்பினால் அல்ல, அவர்களின் தொழிலின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதாலும் தொன்மையான குடிமக்கள் என்பதாலும் இவர்கள் இந்தியாவில் சிறப்பானதும் முக்கியமானதுமான இடத்தைப் பெறுகிறார்கள்.fisher woman 640மீனவர்களை வெளியேற்றுவதே நோக்கமாகும்

சிறிய அளவிலான மீனவர்கள், பிற மீனவர்கள் ஆகியோர் அனைவரையும் மீன் பிடிப்பிலிருந்தும் கடற்கரையிலிருந்தும் வெளியேற்றுவதுதான் நீலப் பொருளாதாரத்தின் நோக்கமாகும்.

வெளியேற்றிவிட்டுக் கடல் வளங்களையும் கடற்கரைகளையும் முழுக்கவே பன்னாட்டுக் கம்பெனிகள், கார்ப்பரேட்டுகளிடம் தாரை வார்ப்பதுதான் நீலப் பொருளாதாரம். இதை நீலப் புரட்சி என்றும் பிரதமர் நரேந்திர மோடி வர்ணித்தார். அந்த நீலப் பொருளாதாரத் திட்டங்கள்தான் கார்ப்பரேட்டுகளின் பெருங்கனவாகும்.

இயற்கை வளங்களை மூலதனமாக்குவது

உலகளவில் கடல், கடற்கரைகள், நீர்நிலைகள், மலைகள், கனிம வளங்கள் போன்ற இயற்கை வளங்களை தொழில் திட்டங்களுக்காகச் சுரண்டுவது என்ற நிலை மாறிவிட்டது. இதற்கு அடுத்த நிலையாக இயற்கை வளங்களையே மூலதனமாக்கி கொள்ளை இலாபம் அடிப்பது என்ற போக்க வேகமாக வளர்ந்து வருகிறது.

இதற்காக நீலப் பொருளாதார திட்டம் என்ற பெயரில் பிரம்மாண்டமான திட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே கடல் மீன் மற்றும் பிற உயிரினங்கள் வளர்ப்பு என்ற கொள்கையானது கொண்டு வரப்பட உள்ளது. இக்கொள்கையின் முன்வரைவு வெளியிடப்பட்டுள்ளது. இக்கொள்கையானது அதிகாரப் பூர்வமாகவே கடலை வணிக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தலாம் என்று அறிவிக்கிறது. ஏன் இந்த நிலை ஏற்பட்டது?

எதற்காக நீலப் பொருளாதாரமும் தேசிய கடல் மின் வளர்ப்பு (தே.மீ.வ) கொள்கையும் கொண்டு வரப்பட்டுள்ளது? இவற்றின் பின்புலமுள்ள அரசியல் காரணிகள் என்ன? இங்கு இவற்றின் பின்புலத்திலுள்ள அரசியல் பொருளாதார காரணிகளை அறிந்த பின்னர், தே.மீ.க. வளர்ப்பு கொள்கையின் முக்கிய அம்சங்களை மட்டும் காண்போம்.

நாம் வாழ்கின்ற சமூக அமைப்பு முதலாளிய சமூக அமைப்பாகும். 24 மணிநேரமும் நம்மை அறியாமல் சுவாசிப்பது போலவே இலாபம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவது இச்சமூக அமைப்பின் அடிப்படைத்தன்மையாகும். முதலாளிய உற்பத்தி தொடங்கிய சென்ற நூற்றாண்டுகளிலிருந்தே சந்தைக்கான பிரச்சனைகள் தொடங்கியது.

முதலாளிய உற்பத்தி முறையில் தேவைக்காக அன்றி இலாபத்திற்காக மட்டுமே உற்பத்தி செய்து குவிப்பது அதன் ஒருங்கிணைந்த அம்சம். அளவுக்கு அதிகமாக உற்பத்தி செய்யப்பட்ட சரக்குகளை விற்க உள்நாட்டில் சந்தைகள் கிடைக்காமல் அவை தேங்கத் தொடங்கியது.

அது உலகப் பொருளாதார நெருக்கடியாக வெடித்தது. இந்நெருக்கடிகளைத் தீர்க்க நாடுகளின் சந்தைகளை பிடிக்கப் போய் அது முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களாக முடிந்தது அனைவரும் அறிந்த விசயமே.

இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர், மீண்டும் சந்தைக்கான பிரச்சனை தலை தூக்கியபோது அது வளரும் நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்ட ஏற்றத்தாழ்வான வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் தீர்த்துக் கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றின் மூலமாக தீர்க்கப்படாமல் சந்தைப் பிரச்சினை நீடித்ததால் வளரும் நாடுகள் மீது புதிய தாராளவாத பொருளாதாரக் கொள்கைகள் திணிக்கப்பட்டன.

இந்தியச் சூழல்

இந்தியாவைப் பொருத்தவரை, புதிய தாராளவாதப் பொருளாதாரக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பின்னர், அந்நிய மூலதனம் வெள்ளமாகப் புகுந்து நாட்டையே சூறையாடுவதாகவும் நாடு காலனி நாடாக மாறுவதாகவும் போராட்டக் குரல்கள் எழுந்தன. ஆனால் நடந்ததோ அதற்கு எதிர்மாறானது.

இந்திய ஆளும் வர்க்கங்கள் புதிய தாராளவாதக் கொள்கைகளை தங்களின் நலன்களுக்கேற்பப் பயன்படுத்தி வளர்ந்தன.

இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் இந்தியா மூலதனமிட்டு தொழில்கள் தொடங்கியது. அது மட்டுமின்றி ஆயுதங்களையும் இந்நிய அரசு ஏற்றுமதி செய்து வருகிறது.

ஏகாதிபத்திய நாடுகள் இயற்கை வளங்களையே மூலதனமாக கையாளத் தொடங்கியபோது இந்தியாவும் அந்த வரிசையில் சேர்ந்து கொண்டது.

மூலதனமான இயற்கையும், விளைவுகளும்

முதலில் நீர்வளத்தை வணிகமயமாக்கி அதை பெரும் மூலதனமாக்கிக் கொள்ளை இலாபம் ஈட்டி வருவதைத் தொடர்ந்து மணல், கனிம வளங்கள், வளங்கள், கடற்கரை என்ற வரிசையில் தற்போது கடலை மூலதனமாக்கிக் கூறுபோடத் தொடங்கியுள்ளனர்.

இயற்கையை மூலதனமாக்கி அது முதலீடு செய்யப்படும்போது கிடைக்கும் இலாபத்தைக் கொண்டு இயற்கையை மீண்டும் மறுமுதலீடு செய்து அதைப் பெருக்க முடியாது. அதாவது மூலதனம் இலாபம் மறுமுதலீடு இலாபம் மறுமுதலீடு என்று இடைவிடாது தொடரும் இந்த சுழற்சியில் இயற்கையை மீண்டும் மீண்டும் மறுமுதலீடு செய்ய முடியாது. ஏனெனில் இயற்கை என்பது அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபி அல்ல. இயற்கையை மூலதனமாக்கிச் சுரண்டப்படும்போது ஏற்படும் பேரிடர்கள் நமது கற்பனைக்கெட்டாதவை.

தொழில் நுட்பம்தான் தீர்வா?

இயற்கை மூலதனமாக்கப்படும்போது ஏற்படும் கடும் பாதிப்புகளுக்குத் தீர்வாக ஆளும் வர்க்கங்கள் தொழில்நுட்பங்களை முன்வைக்கிறார்கள். உதாரணமாக கார்ப்பரேட்டுகள் முன்வைக்கும் பசுமை தொழில்நுட்பமும் சரி, பூமி சூடேற்றத்திற்குக் காரணமாக உள்ள கால நிலைமாற்றத்திற்கும் தீர்வாக முன்வைக்கப்படும் தொழில்நுட்பமும் சரி அறிவியல் பூர்வமற்றது. சுற்றுச்சூழல் நெருக்கடியையும் அதனால் ஏற்படும் பேரிடர்களையும் ஒருபோதும் தொழில்நுட்பம் தடுக்காது. அது தீர்வும் ஆகாது. பசிக்குத் தீர்வாக மரபணு மாற்ற விதைகளை தொழில்நுட்பத்தை வைக்கிறார்கள்.

ஆனால் கடலைச் சுரண்டுவதினால் ஏற்படும் சூழலியல் நெருக்கடிகளுக்குத் தீர்வாக அவர்கள் தொழில்நுட்பத்தை வைக்க முடிவில்லை. அது முடியாது என்பதை உணர்ந்துள்ளனர்.

(கடலை) கொள்ளையடிப்பதற்கு ஒரு கொள்கை

தற்போது முன்வைக்கப்பட்டுள்ள தேசியகடல் மீன் வளர்ப்பு கொள்கை முன்வரைவின் முகப்புரையில் (தே.மு.வ) கொள்கையின் இலக்காக தேசத்தின் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்காகக் கடல் உணவு உற்பத்தியை நிலைத்த வகையில் உறுதிப்படுத்துவது, அதன் மூலமாகக் கடற்கரை சமூகத்தினர் கூடுதல் வருவாய்க்கும் இவர்களை தொழில் முனைவோராவதற்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதாகும்.

தே.மீ.வ கொள்கை.

கொள்கையின் இலக்கம் நோக்கமும் நல்ல நோக்கத்தைக் கொண்டதாக இருப்பது சரிதான். ஆனால் கொள்கையின் தொலைநோக்கும் (vision), செயல் பணியும் (Mission) அதற்கு எதிர்மாறாக உள்ளது மட்டுமின்றி, இது போன்ற நல்லெண்ண மூடுதிரையை விலக்கி உண்மை முகத்தை வெளிக்கொண்டு வந்துவிடுகிறது.fisher woman 650கடல் பண்ணை உணவு உற்பத்தியின் வளர்ச்சி குழந்தைப் பருவத்தில் இருக்கிறது என்றும் அவற்றுக்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்றும் கூறி கடல் மீன் மற்றும் பிற விலங்குகள் வளர்ப்பதற்கான தொழில்நுட்பங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றை வணிகமயமாக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறது. கடல் மீன் மற்றம் இதர விலங்குகள் உற்பத்தியானது மற்ற நாடுகளில் வளர்ந்து வருவதாகவும் கூறுகிறது.

கொள்கை குறித்த விளக்கம்

கடல் மீன் மற்றும் பிற உயிரினங்கள் வளர்ப்பு என்பது இறால் வளர்ப்பின் சிறப்புப் பகுதியாகும்.

. இதில் பொருளாதார ரீதியாக முக்கியத்தும் வாய்ந்த கடல் வாழ் தாவரங்களையும் உயிரினங்களையும் செயற்கை முறையில் வளர்ப்பது என்பது கார்ப்பரேட்டுகளின் நலனுக்கானது என்பது மறைவானது அல்ல, வெளிப்படையானதாக உள்ளது.

கடல் மீன் வளர்ப்பில் 1) செய்கையாக மீன் பிடிப்பு, 2) மீன் பிடிப்பு, 3) அழிந்து வரக்கூடிய அபாயகரமான நிலையிலுள்ள கடல் வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பது, 4) கடல் உணவு அல்லாத இனங்களான கடல்பாசி, கடல் புற்கள், உயிரியல் எரிசக்தி, உயிரியல் இரசாயனப் பொருட்கள் உள்ளிட்டவற்றை பண்ணையில் வைத்து உற்பத்தி செய்வது மற்றும் கடல் வாழ் ஆடம்பர வண்ண மீன்கள் மற்றும் முத்து சிப்பிகள் போன்றவற்றை பண்ணை முறையில் வளர்ப்பதும் விவரிக்கப்பட்டுள்ளது.

மீனவ விவசாயி ஒரு இன அழிப்பு

இதில் முக்கியமானதும் அபாயகரமானதுமான விசயம் என்னவெனில், தேசிய கடல் மீன் வளர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைவரையும் மீனவ விவசாயிகளாக அழைக்கலாம் என்று குறிப்பிடுகிறது. மீனவ விவசாயிகள் என்பது மீனவரல்லாத மற்ற சமூகத்தினரை மீன்பிடிக்க அனுமதிக்கும் பதமாகும். இதன் மூலம் மீனவர்கள் யார் என்ற கேள்வி எழுப்பி மீனவர்கள் இனத்தையே அழிப்பதாகும்.

இன்னொரு பக்கம் மீனவர் அல்லாத பிற சமூகத்தினரை மீன்பிடிக்க அனுமதிப்பதால் பெரும் கார்ப்பரேட்டுகள் நிலவுடையாளர்கள், விவசாயிகள், தொழிலதிபர்கள், கம்பெனிகள் இதில் இறங்குவார்கள். இதனால் மீனவர்களுக்கும் பிற சமூகத்தினரும் பெரும் மோதல்கள் ஏற்படலாம்.

இறுதியில் பணபலம், அதிகார பலம் உள்ள பிற சமூகத்தினரிடம் கார்ப்பரேட்டுகளிடமும் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக உள்ள மீனவர்கள் தோற்க நேரிடலாம். மீனவரல்லாத மற்ற சமூகத்தினருக்கு மீன்பிடிப்பில் இறங்குவதை ஊக்குவிக்க மானியத்தையும் வழங்கி வருகிறது அரசு என்பது குறிப்பிடத்தக்கது

இதனையடுத்து மீனவர்கள் பிழைப்பு தேடி வேறு வேலைகளுக்குச் செல்ல நிர்பந்திக்கப்படுவர். ஆக மீனவர் இனத்தின் அழிப்பு என்பதே மீனவ விவசாயி என்ற வார்த்தையின் உள்ளார்ந்த பொருளாகும்.

கற்பிக்கப்படும் நியாயங்கள்

நாட்டின் ஊட்டச்சத்துத் தேவைக்கு பாரம்பரிய முறையில் பிடிக்கப்படும் மீன் இனங்கள் போதவில்லை. அது குறைந்து வருவதற்கு மாற்றாக செயற்கையான முறையில் கடல் மீன் வளர்ப்பு தேவைப்படுவதாகவும், அது வேகமான முறையில் வளர்ந்து வருவதாகவும் கூறுகிறது.

உள்நாட்டு குட்டைகளிலும் நீர் நிலைகளிலும் மேற்கொள்ளப்படும் இறால் உற்பத்தி 1951இல் 0.75 மில்லியன் டன்களாக இருந்தது. 2017இல் 4.9 மில்லியன் டன்களாக வளர்ந்து இவ்வரிசையில் இந்தியா, உலக நாடுகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதே போல கடல் சார்ந்த இறால் உற்பத்தி கடந்த சில ஆண்டுகளாக 0.5 மில்லியன் டன்களாக அதிகரித்து வருகிறது.

கடல்மீன் வளர்ப்பில் இறால் உற்பத்தியானது மிக வேகமாக வளர்ந்து வரும் துறை என்று குறிப்பிடுகிறது. 2016இல் கடல் மீன் வளர்ப்பு 28.7 மில்லியன் டன்கள் மீன் உணவை அளித்தது. இது உலகின் மீன் உணவு உற்பத்தியில் 35.8 விழுக்காடாகும். மொத்த கடல் மீன் வளர்ப்பு உற்பத்தியில் கடல்பாசி உள்ளிட்டு 58.7 மில்லியன் டன்களாகும். இது உலக உற்பத்தியில் 53.4 விழுக்காடாகும்.

இதுவரை கண்ட விபரங்கள் கடல் மீன் வளர்ப்பு எவ்வளவு இலாபம் கொழிக்கும் தொழிலாக வளர்ந்து வருகிறது என்பதற்கு சான்றாகும். இதுவே கடலும் சமுத்திரங்களும் மூலதனமாக மாற்றப்படுவதற்கான முக்கிய காரணமாகும். இந்நிலையில், இந்தியா 2030க்குள் 18 மில்லியன் டன்கள் மீன்கள் உற்பத்தி செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது 10 மில்லியன் டன்கள் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. கூடுதல் 8 மில்லியன் டன்கள் முழுமையான அளவில் இறால் தொழிற்சாலைகளின் உற்பத்தியிலிருந்தே எடுக்கப்பட உள்ளது. எனவே கடலும், உள்நாட்டின் நீர்நிலைகளும் வேட்டையாடப்படுவது உறுதிப்படுத்தப்படுகிறது.

இதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் கூடுதல் தேவையானது இறால் உள்ளிட்ட கடல் மீன் வளர்ப்பின் மூலமாக பூர்த்தி செய்யப்பட வேண்டும். அது ஒன்றே ஒரே வழியாக உள்ளது என்று கூறுகிறது. இங்கு சமூகத்தின் வளர்ச்சிக்கு முதலாளியம் ஒன்றே தீர்வு என்று ஆணும் வர்க்கங்கள் கூறி வருவதை வலியுறுத்துவதாக உள்ளது.

கடலை கூறுபோடும் திட்டம் (Marine Spatial Plans - MSP)

கொள்கை (7.3)ல் மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, மாநில அரசுகள் கடலின் இடத்தைத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். அதாவது கடலை பகுதி பகுதியாகப் பிரித்து கடலில் கூண்டு வைத்து மீன் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள், இறால் வளர்ப்பது, மூங்கில் பாத்தி கட்டி கடல்பாசி வளர்ப்பது போன்ற திட்டங்களை மேற்கொள்ளப்பட வேண்டும். கடலை தனித் தனிப் பகுதியாகக் கூறுபோடும் திட்டம் இது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

குத்தகை விடுவதற்கான கொள்கை

உள்நாட்டு நீர்நிலைகளில் பாத்திகட்டி மீன்வளர்ப்பு, இறால் வளர்ப்பு உள்ளட்டவற்றை அந்தந்த ஊர்களின் உள்நாட்டு அரசாங்கங்கள் மேற்கொள்ளும். கடல்களை குத்தகைக்கு விடுவதை கடற்கரை மாநில அரசுகள் மேற்கொள்ளும். இதற்கான அதிகாரங்கள் முறையே மாநில அரசுகளுக்கும் ஊராட்சி அரசாங்கங்களுக்கும் அளிக்கப்படும்.

கடல்பாசி வளர்ப்பில் (9.6) முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் அடையாளங் காணப்பட்டு, அவற்றுக்கான தொழில்நுட்பம் அமல்படுத்தப்படும். அதன் மூலம் உணவுக்கானதும் அது அல்லாததுமான கடல்பாசி வகைகள் வளர்க்கப்படும்.

பிராய்லர் மீன்கள் வளர்ப்பு

நோய் எதிர்ப்பு குஞ்சுகளுக்கான வங்கிகளும் உருவாக்கப்படும். இதற்கும் நோய் எதிர்ப்பு பூச்சிக்கொல்லி எதிர்ப்பு உள்ளடக்கத்துடன் மரபணு மாற்றியமைக்கப்பட்ட விதைகளுக்கும், ஹார்மோன் ஊசி போடப்பட்ட பிராய்லர் கோழி குஞ்சுகளுக்கும் எந்தவித வேறுபாடுகளும் இல்லை. இவ்வகை மீன்கள் வளர்ந்து மற்ற இயற்கை மீன் இனங்களுக்கு மத்தியில் பரவினால் விபரீத விளைவுகள் ஏற்படும். இது தனியே ஆய்வு செய்யப்பட வேண்டிய விசயம்.

உணவைப் பொருத்தவரையில் செத்த மீன் குஞ்சுகளை உணவாகப் பயன்படுத்துவது கைவிடப்பட்டு அதற்குப் பதிலாக தாவரங்கள் மற்றும் பிற உயிரினங்கள் பயன்படுத்தப்படும்.

இறந்த மீன்களைப் பயன்படுத்துவதைக் கைவிட்டு உயிரினங்களையோ தாவரங்களையோ பயன்படுத்தினாலும் அவை நிலத்தில் ஊடுருவி நிலத்தடி நீரைப் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நிதி மற்றும் காப்பீடு

கடலில் கூண்டு கட்டி மீன் மற்றும் பிற உயிரினங்களை வளர்ப்பதை ஊக்குவிக்க நபார்டு நிறுவனம் நிதி உதவியும் மானியமும் அளித்து ஊக்குவிக்கிறது. அந்த நிறுவனம்தான் மீனவ விவசாயிகளுக்கு மானியமும் அளித்து வருகிறது என்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடலில் கூண்டு வைத்து மீன் மற்றும் பிற உயிரினங்கள் வளர்ப்பது ஆபத்து மிகுந்ததாகும். புயல், சூறாவளி போன்ற இயற்கைப் பேரிடர்களால் கூண்டுகள் உடைந்து விடும் அல்லது அலையில் அடித்துச் செல்லப்படும் அபாயம் உண்டு என்பதால் இதுவரை எந்த நிறுவனமும் காப்பீடு அளிப்பதற்கு முன்வரவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

இறுதியாக கொள்கையில் குறிப்பிடப்படும் முக்கிய அம்சங்களே கடலும் உள்நாட்டு நீர்நிலைகளும் இலாபத்திற்காகச் சூறையாடப்படப் போகிறது என்பதை தெளிவாக்குகிறது. இது கடல், கடற்கரை மற்றும் மீனவர்களை அழிக்கும் கொள்கையாகும்.

இப்புவியின் பிரமாண்டமான கூழல் அமைப்பான கடலுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள போராகும். இதை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?

துணை நின்றவை

1.            தேசிய மீன்வளக் கொள்கை 2021

2.            நீலப்பொருளாதாரம் உலக வங்கியின் ஆய்வு

3.            கல்ச்சர் பிசரீஸ் இணையதளங்களலுள்ள சில தகவல்கள்

4.            இறால தொழிற்சாலைகள் உலகளவிய மூலதன திரட்டல் ஆய்வு சேது ராமலிங்கம்

- மெய்.சேது ராமலிங்கம்

Pin It