அகில இந்திய அரசியலில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் அவர்கள் எடுத்த முடிவுகள் எப்போதும் நாட்டுக்கு நலம் பயப்பதாகவும் நாட்டின் ஒற்றுமைக்கு வலிமை சேர்ப்பதாகவும் அமைந்துள்ளன.

 1969ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் விவி கிரி அவர்கள் வெற்றி பெற திராவிட முன்னேற்றக் கழகம்தான் முழு காரணமாக அமைந்தது.

 1971 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் பேரியக்கம் பிளவு பட்டு நின்ற போது மூத்த தலைவர்கள் எல்லாம் ஓர் அணியில் திரண்ட போதும் தலைவர் கலைஞர் இந்திரா காந்தி அம்மையாரை ஆதரித்து வெற்றி பெற்று ஆட்சியில் அமரச் செய்தார்.

அதே இந்திரா காந்தி அம்மையார் 1975இல் கூட்டணிக் கட்சியாக இருந்தாலும் நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்த போது துணிவுடன் அதை எதிர்த்துக் கண்டனம் செய்தார். இதன் காரணமாக கழக ஆட்சி கவிழ்க்கப்பட்டது. முன்னணித் தலைவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர்; தளபதி ஸ்டாலின், முரசொலி மாறன், ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட தலைவர்கள் சிறையில் சித்திரவதைகளுக்கு ஆளாகினர்.

நாட்டில் நெருக்கடி நிலை விலக்கிக் கொள்ளப்பட்டு 1977ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சர்வாதிகார இந்திரா காந்தி அம்மையாருக்கு எதிராக லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணன் அமைத்த வியூகத்திற்குத் தலைவர் கலைஞர் முழுமையாக துணை நின்றார்.stalin akhilesh mallikarjuna1977இல் அமைந்த ஜனதா கட்சி ஆட்சி, தலைவர்களின் ஒற்றுமையின்மையால் மூன்று ஆண்டுகளில் இரண்டு பிரதமர்களைச் சந்தித்துக் கவிழ்ந்தது. ஒன்றிய அரசு நிலையற்றதாக இருப்பது நாட்டின் நலத்திற்குக் கேடு என்பதால் தலைவர் கலைஞர், “நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!!” என்று அழைத்து மீண்டும் அவரை ஆட்சியில் அமரச் செய்தார்.

1989ஆம் ஆண்டு மீண்டும் காங்கிரசுக்கு எதிராக தேசிய முன்னணியை அமைத்து சமூக நீதிக் காவலர் வி பி சிங் அவர்களை ஆட்சியில் அமரச் செய்தார்.

1996ஆம் ஆண்டு தேர்தலில் திமு கழகம் அங்கம் பெற்ற ஐக்கிய முன்னணி ஆட்சி அமைந்த போது பிரதமர் நாற்காலியை கலைஞர் பக்கம் திருப்பிய போது அதனை அன்புடன் மறுத்தார்.

 1999இல் அதிமுகவால் 13 மாதத்தில் ஆட்சியைப் இழந்த பாரதிய ஜனதா கட்சிக்குக் குறைந்தபட்ச செயல் திட்டக் கடிவாளத்தைக் கையில் வைத்துக் கொண்டு ஆதரவளித்தார். பிரதமர் வாஜ்பாய் அவர்களின் ஐந்தாண்டு கால முழுமையான ஆட்சிக்குத் துணை நின்றார்.

2004 இல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர தலைவர் கலைஞர் முழு முதல் காரணமாக அமைந்தார்.

திமு கழகம் சுயநலம் பாராது ஏன் கட்சி நலனைக் கூட பாராது நாட்டின் நலன் கருதி பல்வேறு நல்ல முடிவுகளை எடுத்து உள்ளது.

 இப்போது பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி மூலம் தொழில்துறை சீரழிப்பு, புதிய கல்விக் கொள்கை, சி ஏ ஏ, என் ஆர் சி, விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்கள், சமஸ்கிருத இந்தித் திணிப்பு போன்றவற்றால் நாட்டைச் சீரழித்து வரும் மக்கள் விரோத பாஜக அரசை எதிர்வரும் 2024 தேர்தலில் தோற்கடிக்க அனைத்திந்திய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பு நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர் கழகத் தலைவர் தளபதி அவர்களின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

 அதைத்தான் அவர் தன்னுடைய பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் “தமிழ்நாட்டைப் போல ஒற்றுமையான கூட்டணியை அகில இந்தியா முழுமைக்கும் அமைக்க வேண்டும்.” என்று வற்புறுத்தினார். அரசியல் கட்சிகள் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை மறந்து, விட்டுக் கொடுத்து பாஜகவுக்கு எதிராக ஒன்று சேர வேண்டும். அதே நேரத்தில் காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் கூட்டணி என்று ஒரு சிலரால் சொல்லப்படும் வாதங்களையும் நிராகரிக்க வேண்டும். அது கரை சேராது. தேர்தலுக்குப் பிறகு கூட்டணி வைத்துக் கொள்கிறோம் என்று சொல்வதும் நடைமுறைக்கு ஒத்து வராது என்று தெளிவான ஒரு செயல் திட்டத்தை தளபதி அவர்கள் அகில இந்தியக் கட்சிகளிடம் முன் வைத்துள்ளார்.

 இந்தத் திட்டம் தொலைநோக்கானது; தெளிவானது; துணிவானது . உத்திர பிரதேஷ் மாநிலத்தில் அகிலேஷ் யாதவ், சமாஜ்வாடி கட்சியும் பீகார் மாநிலத்தில் நித்திஷ் குமார் தேஜஸ்வி யாதவ் கூட்டணியும், மராட்டியத்தில் சரத் யாதவ் உத்தவ் தாக்ரே கூட்டணியும், தெலுங்கு தேசத்தில் சந்திரசேகர் ராவ் கட்சியும், ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி காங்கிரசும், கேரளாவில் சிபிஎம் கட்சியும் தனித்தனியாக வலுவாக இருந்தாலும் அவைகள் எல்லாம் காங்கிரஸ் என்ற நூலினால் ஒருங்கிணைக்கப்பட்ட முழு மாலையாக வெற்றி மாலையாக உருவெடுக்க வேண்டும். அதற்கு காங்கிரஸ் கட்சியும் இயன்ற அளவு விட்டுக் கொடுக்க வேண்டும் என்று தளபதி அவர்கள் மிகத் தெளிவாக தொலைநோக்கு மிக்க ஒரு அரசியல் பார்வையை முன் வைத்துள்ளார்.

மதவாத சனாதன ஆர் எஸ் எஸ் ஐ பின்னணியாக கொண்ட பாஜக அரசு முழுமையாக தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதுதான் அனைவரின் முழு முதல் நோக்கமாக அமைய வேண்டும் என்பதைத் தன்னுடைய பிறந்தநாள் செய்தியாக தளபதி அவர்கள் முன் வைத்துள்ளார்.

தலைவரின் இந்தச் செயல் திட்டம்தான் இந்தியாவைக் காப்பாற்றும்; ஜனநாயகத்தைக் காப்பாற்றும்; இந்திய ஒற்றுமையை நிலைநாட்டும் ; மதவாத சர்வாதிகாரத்தை வேரறுக்கும்.

 யாருடைய ஆட்சி அமைய வேண்டும் என்பதை விட யாருடைய ஆட்சி அமைந்து விடக்கூடாது என்பதுதான் முக்கியம். பாஜகவை எதிர்க்கும் அனைத்துக் கட்சிகளும் இதனையே ஒற்றை இலக்காக திட்டமிட்டு ஒன்று சேர வேண்டும். இந்த ஒற்றுமை உணர்வு வந்து விட்டாலே வெற்றி பெற்று விட்டோம் என்று சொல்லிவிடலாம். மாநிலங்களுக்குள் இருக்கும் அரசியல் வேறுபாட்டை வைத்து தேசிய அரசியலைத் தீர்மானித்தால் இழப்பு நமக்குத்தான் என்பதை அனைத்துக் கட்சிகளும் உணர வேண்டும்.

வருகை தந்துள்ள அகில இந்தியத் தலைவர்கள் இந்தத் தகவல்களை டெல்லிக்கு எடுத்துச் செல்லுங்கள். இந்தியத் துணைக் கண்டம் முழுமைக்கும் எடுத்துச் சொல்லுங்கள். ஒற்றுமையை வலியுறுத்துங்கள். வெற்றிக்கு அடித்தளம் இடுங்கள். இப்போது விதைப்போம். அடுத்த ஆண்டு மார்ச் என்பது அகில இந்திய அரசியலுக்கு அறுவடைக் காலமாக அமையட்டும் என்கின்ற தளபதி அவர்களின் வேண்டுகோள் எதிர்கால வலிமைமிக்க இந்தியாவை உருவாக்கும் அடித்தளம். தளபதி அவர்கள் காட்டிய பாதையில் அகில இந்தியக் கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும்! வெற்றி பெற வேண்டும்!!

- பொள்ளாச்சி மா.உமாபதி

Pin It