அரசு பள்ளிகளில், ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டிகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இப்போட்டிகள், 6-8 வகுப்புகள் வரை பிரிவு 1 யிலும், 9-10 வகுப்புகள் பிரிவு 2 யிலும், 11-12 வகுப்புகள் பிரிவு 3 யிலும் என்ற முறைப்படி பள்ளி,ஒன்றியம், மாவட்டம் மற்றும் மாநிலம் என்ற படிநிலைகளில் நடத்திடுமாறு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

 அதில் 60க்கும் மேற்பட்ட கலைப் போட்டிகளை நடத்த தலைப்புகள் வரையறை செய்து, தப்பாட்டம் முதலான பாரம்பரிய கலைகள் தொடங்கி, கதை கவிதை, கட்டுரை உள்ளிட்ட மொழித் திறன் போட்டிகள் வரை பட்டியலிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 பள்ளி அளவில் நடைபெற்ற போட்டிகளில் முதல் இடம் பெற்ற மாணவர்கள் ஒன்றிய அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெற தகுதி பெற்றவர்கள். ஒன்றிய போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பெற்றவர்கள், மாவட்ட போட்டிகளில் பங்கு பெறவும் மாவட்ட போட்டிகளில் முதல் இடம் பெற்றவர்கள், மாநில சுற்றுக்கும் தேர்வு செய்யப்படுவர்.மாநில அளவில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு, கலையரசன் கலையரசி என்ற பட்டங்கள் வழங்கி சிறப்பிக்கப்படுவர். ஒன்றிய ,மாவட்ட அளவில் வென்றவர்களுக்கும் பாராட்டுச்சான்றும் பரிசும் வழங்கப்படும்.இதுவே போட்டிகள் குறித்தான வரையறைகள் ஆகும். அதன் படி ஒன்றிய அளவிலான போட்டிகள் வரை நடத்தப்பட்டு மாவட்ட அளவிலான போட்டிகள் தற்போது உற்சாகம் குறையாமல் நடைபெற்று வருகின்றன.

 தமிழக பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்ட சீரிய முயற்சிகளில் இதுவும் ஒன்று எனலாம். படிக்கும் இளம்பருவ சிறுவர்கள் விளையாட்டு, கலை, இலக்கியம் போன்றவற்றில் இயல்பாகவே நாட்டம் கொண்டிருப்பர்.அவர்களின் உள்ளார்ந்த திறன்களை வெளிப்படுத்துவதற்கு இந்த கலைத் திருவிழா போட்டிகள் உதவும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.மேலும் அவர்கள் மனதளவில் புத்துணர்வுடன் கூடிய மகிழ்ச்சி அடைவர்.

 கல்வி என்பது கல்வித்துறை வடிவமைத்த பாடங்களை படிப்பதோடு நின்று விடுவதில்லை. பாடங்களை தாண்டியும் மாணவர்களின் வாழ்க்கையிலும், தான வாழும் சமூகத்திலும் பல்வேறு கலைகளை கற்றுக் கொள்வதற்கு ஏராளமான வாய்ப்புகளும், வசதிகளும் இக்காலத்தில் நிறைந்துள்ளது.அவ்வாறான கலைகள் மற்றும் இலக்கியங்கள் இரண்டுமே மனிதர்களுடைய வாழ்வை அழகு படுத்தக் கூடியவை ஆகும். இவற்றில் கைதேர்ந்த மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கு களம் அமைத்துக் கொடுத்தது இந்த கலைத் திருவிழாக்கள் என்றால் அது மிகையல்ல.

 ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்கள் உற்சாகத்தோடு இந்த கலைத் திருவிழா போட்டிகளில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி உள்ளனர்.பாடங்களை மட்டும் படித்து மதிப்பெண்களை ஈட்டுவது மட்டுமே கல்வியாகாது.சற்று குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் வேறு பல திறமைகளில் கோலோச்ச கூடும்.உதாரணமாக இனிய குரலில் பாடுதல், கண்கவர் ஓவியம் வரைதல், செதுக்கு சிற்பம் வடித்தல் போன்ற நுண்கலைகளில் பலர் திறமை வாய்ந்தவர்களாக இருப்பர். அப்படிப்பட்ட மாணவர்களுக்கு வாய்ப்புகள் வழங்க வேண்டுமல்லவா? அதைத்தான் இந்த கலை திருவிழா போட்டிகள் வழங்கி உள்ளன.

 பாடங்கள் படிப்பதையும், தாண்டி நம்மால் சாதிக்க இயலும் என்னும் தன்னம்பிக்கையை, விதைக்கும் களமாக இப் போட்டிகளை மாற்றி, மாணவர்களை வழி நடத்த வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு ஆசிரியருக்கும் உண்டு. இதில் வெற்றி தோல்வி என்பது பொருட்டல்ல. வெற்றி பெற்ற மாணவனை உற்சாகப்படுத்தவும், அடுத்த நிலையில் வரும் மாணவர்களை முயற்சி செய்யவும்,பயிற்சி மேற்கொள்ளவும் உத்வேகம் அளிக்க வேண்டும்.

 விளையாட்டு மற்றும் கலை சார்ந்த போட்டிகளில் வெற்றி தோல்வி இரண்டுமே கொண்டாட்டத்திற்குரியதே என, படிக்கும் பதின் பருவ சிறுவர்கள் உணரத் தொடங்கி விட்டால்,எதிர்காலத்தில் வாழ்க்கையில்ஏற்படும் சவால்களையும்,போராட்டங்களையும் எளிதில் எதார்த்தமாக எடுத்துக் கொள்வர்.போட்டி நிறைந்த உலகில் தன்னுடைய திறமைகளை இனம் காணுவதும் இருக்கும் திறமைகளை மெருகேற்றுவதும் அவசியமான ஒன்றாகும்.

 பாடங்களைக் கற்பித்தல், மாணவர்களைத் தேர்வுகளுக்குத் தயார் செய்தல், இணயத்தில் விவரங்களைப் பதிவேற்றம் செய்தல், நலத்திட்டங்களை செயல்படுத்துதல் உள்ளிட்ட ஏராளமான வேலைகள் இருப்ப்பின், மாணவர் மன்றங்கள் அமைத்து மாதந்தோறும் விளையாட்டுபோட்டிகள், கலை இலக்கியப் போட்டிகள் போன்றவற்றை நடத்துதல் ஒவ்வொரு பள்ளியின் தார்மீகக் கடமைகளில் முக்கியமானது ஆகும். கல்வித்துறையும் இதே உற்சாகத்தோடு ஆண்டுதோறும் கலைத்திருவிழாக்களை நடத்தும் என நம்புவோமாக..

- கா.இரவிச்சந்திரன், ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பேட்டை—முத்துப்பேட்டை ஒன்றியம்

Pin It