தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் விளங்கும் விப்ரோ நிறுவனம் தனது 300 தொழிலாளர்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, விசாரணையுமின்றி பணி நீக்கம் செய்திருக்கிறது. காரணம்: தற்போது மூன்லைட்டிங் என சொல்லப்படும் பகுதி நேரப் பணியை பிற நிறுவனங்களுக்கு அவர்கள் செய்தனர் என்ற குற்றச்சாட்டு தான்.
அண்மைக் காலமாகவே தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்களில், மென்பொருள் உருவாக்கும் பணிகளில் உள்ளவர்கள் இதுபோல பிற நிறுவனங்களில் சில சிறிய வேலைகளை செய்து தருவது வழக்கமாகி வருகிறது. பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும் அத்தகைய ஊழியர்கள் மீது தங்களது அதிருப்தியை காண்பித்துக் கொண்டுதான் இருந்தார்கள்.
தற்போது விப்ரோவின் எக்ஸிக்யூட்டிவ் சேர்மன் ரிஷத் பிரேம்ஜி இத்தகைய மூன் லைட்டிங் பணியினை "ஏமாற்று" என்று கூறி, இது போட்டியாளர்களுக்கு நேரடியாக வேலை செய்வது போன்றது என்றும் கூறி 300 ஊழியர்களை தான் பணி நீக்கம் செய்திருப்பதாக அகில இந்திய மேலாண்மை சங்கக் கூட்டத்தில் அறிவித்திருக்கிறார்.
இன்போசிஸ் நிறுவனமும் மின்னஞ்சல் மூலமாக தனது ஊழியர்களுக்கு மூன் லைட்டிங் பணிபுரிவதாகத் தெரிந்தால் பணிநீக்கம் வரை கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
அதே நேரத்தில் டெக் மகேந்திரா நிறுவன தலைமைச் செயல் அதிகாரி, ஒரு ஊழியர் தனது செயல் திறனை முழுமையாக தனது பணியில் காண்பித்து விட்டால், அவர் பகுதி நேர மூன் லைட்டிங் பணிபுரிவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்கிறார்.
ஐ.டி. துறையில் பணிபுரியும் மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள், இத்தகைய பகுதிநேரப் பணி புரிவது கோவிட் காலத்தில்தான் அதிகரித்தது. அந்த நேரத்தில் ஏற்பட்ட வேலை இழப்பு, பணவீக்கம், அதிக நேரம் கிடைத்தது ஆகியவை பகுதி நேரப் பணியினை நோக்கி ஊழியர்களைத் தள்ளியது. இந்த காலகட்டத்தில் ஏறக்குறைய நான்கு மடங்கு பகுதி நேரப் பணி உயர்ந்திருக்கிறது.
இப்படியாக ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டு வேறொரு நிறுவனத்திற்கு பகுதி நேரமாகப் பணி புரிவது தார்மீக ரீதியில் சரிதானா என்ற கேள்வி இப்போது எழுகிறது.
வழமையான அரசு பணிகளில் இத்தகைய நடவடிக்கைகள் சில வேலைகளில் அக்கம் பக்கமாக நடந்து கொண்டிருப்பினும், சட்டப்பூர்வமாக அது தவறானது தான் என கருதப்படுகிறது. அரசு ஊழியர்களின் பணி நடவடிக்கைகள் குறித்த விதிகளில் இது தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. அதேபோல பொருள் உற்பத்தி சார்ந்த கார்ப்பரேட் நிறுவனங்களிலும் இத்தகைய நடைமுறையே வழக்கத்தில் உள்ளது.
ஆனால் தகவல் தொழில்நுட்பத் துறையைப் பொருத்தவரை அதே ரீதியில் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஊழியர்கள் நிறுவனத்தில் வேலைக்கு சேரும்போது ஏற்றுக்கொண்ட ஒப்பந்தத்தில் இந்த விதி இருந்த போதிலும் அது ஒரு தெளிவானதாக இல்லை. மேலதிகாரி சம்மதித்தால் அத்தகைய பணியினை மேற்கொள்ளலாம் என்றும் கூட வருகிறது.
அரசுப் பணி மற்றும் பொருள் உற்பத்தி சார்ந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், தகவல் தொழில்நுட்பத் துறை பணிக்கும் மிகுந்த வேறுபாடு உள்ளது. அந்த வேறுபாடுகளை பயன்படுத்திதான் தகவல் ஐ.டி. நிறுவனங்கள் வழமையான தொழிலாளர் நலச் சட்டங்களை தங்களது துறையில் அமல்படுத்துவதில்லை.
மற்ற பொருள் உற்பத்தி நிறுவனங்களைப் போல் அன்றி இவர்களின் தயாரிக்கும் மென் பொருள், ஊழியர்களின் மனம் சார்ந்த கடுமையான உழைப்பினால்தான் உருவாகின்றன. இத்தகைய வேறுபாடுகள் நிலவுவதால் மென்பொருள் தயாரிப்பு வேலைகள் ஈடுபடும் ஊழியர்களை மற்ற உற்பத்தி நிறுவன ஊழியர்களோடு ஒப்பிட முடியாது.
மேலும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் வசதிக்காக, தங்களது நிறுவன செலவுகளை குறைப்பதற்காக வீட்டிலிருந்து வேலை செய்யும் (Work from Home) திட்டத்தை முன்னிறுத்துகின்றன; ஆதரிக்கின்றன. அநேகமாக நம் எல்லோருக்குமே தெரியும், வீட்டில் இருந்து மென்பொருள் வேலை செய்பவர்களும் முழு நேரமாக வேலை செய்தால் தான் அவர்களது குறிப்பிட்ட இலக்கினை முடித்துத் தர இயலும். இந்தியாவில் ஐ.டி. சேவை துறையில் பணிபுரியும் 26 லட்சம் பேர்களில் 88 சதவீதம் பேர் வீட்டிலிருந்துதான் பணி புரிகின்றனர்.
மூன் லைட்டிங் எனப்படும் பகுதி நேர வேலையைத் தேர்ந்தெடுப்பதற்கு மூன்று காரணங்கள் உண்டு. ஒன்று, தான் வழக்கமாக செய்யும் ஒரு துறையில் இருந்து மட்டும் திறனை பெருக்கிக் கொள்வதை விட்டு, தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ள மற்ற துறைகளிலும் தனது ஆர்வத்தையும் திறமையும் வளர்த்துக் கொள்வது. இரண்டாவது தனது மேலதிக திறமைக்கு கிடைக்கும் வருமானத்தையும் தனது மேலதிக செலவுகளுக்காக பயன்படுத்திக் கொள்வது. மூன்றாவது தனது தொழில்நுட்ப வல்லுநர்களின் வலைப் பின்னலை விரிவுபடுத்த உதவிகரமாக இருக்கும்.
மூன் லைட்டிங்கை சில பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கூட ஆதரிக்கின்றன. ஏனெனில் தனி நபரின் தொழில் திறமை வளரும் போது, அது அவர்களது நிறுவனத்திற்கும் பயன்பட வாய்ப்பு இருக்கிறது. உணவுப் பொருள் விநியோகம் செய்யும் ஸ்விக்கி நிறுவனமும், நிதி நிறுவனமான கிரெட் நிறுவனமும் இந்த வகையில் முன்னோடியாக தனது ஊழியர்களை பணிக்காலத்திற்கு பின்னர் வேறு பணிகளை செய்ய அனுமதிக்கின்றன; ஊக்குவிக்கின்றன.
மென்பொருள் ஊழியர்கள் தங்கள் நிறுவனத்தின் வேலைகளை செய்து முடித்துவிட்டு மட்டுமே மற்ற நிறுவனங்களின் பகுதி நேர வேலைகளை செய்கின்றனர். அதனால் தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு எந்த பாதிப்பும் வரப் போவதில்லை. வெளிநாடுகளில் கூட, மணி நேர உழைப்புக்கு பணம் தரும் முறை இருக்கிறது.
இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். தகவல் தொழில் நுட்பத் துறை; மென்பொருள் துறையைப் பொருத்தவரை அதன் தொழில்நுட்பம் வெகுவேகமாக மாறிக் கொண்டு வருகிறது. அதனால் இத்தகைய பகுதி நேர வேலைகள் அந்த மாற்றத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் ஊழியர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள உதவும் என்பது ஒரு முக்கிய காரணம்.
விப்ரோ நிறுவனம் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்வதற்கு முன் அவர்களுக்கு முன்னறிவிப்பு கொடுத்தார்களா? விசாரணை செய்தார்களா? என்பதெல்லாம் தெரியவில்லை. எப்படி அந்த 300 பேரும் மூன் லைட்டிங் வேலை செய்தார்கள் என்பதை நிறுவனம் கண்டுபிடித்தது என்றும் தெரியவில்லை. இவையெல்லாம் ஐ.டி.ஊழியர்களின் பணிப் பாதுகாப்பின்மையை தெளிவாக எடுத்துரைக்கிறது.
ஒரு வகையில் இத்தகைய பகுதி நேரப் பணி புரிதல் என்பது ஐடி நிறுவனங்களுக்கு வசதியாகத் தான் இருக்கும். அனைத்து மென்பொருள் நிறுவனங்களுமே பல வேலைகளை பகுதி நேர வேலைகளாகக் கொடுத்துவிட்டு முக்கிய வேலைகளை மட்டும் நிரந்தர ஊழியர்களை வைத்து பார்க்கச் செய்வதால் பணியாளர்களின் ஊதியச் செலவு குறையும்.
ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு முன்னாள் இயக்குனர் செல்வது போல வேறு வழியில்லாமல் இந்த மென்பொருள் நிறுவனங்கள் மூன் லைட்டிங் பணியினை ஆதரித்தே தீர வேண்டும். அதுவே காலத்தின் கட்டாயம்.
- இரா.ஆறுமுகம்