இந்தியாவில் காந்தியை விட மிகப் பெரிய தலைவர் யாருமில்லை. காந்தியை இந்தியாவின் தந்தை, ஆங்கியலேயர்களிடம் இருந்து சுதந்திரம் வாங்கித் தந்தவர் என 75 ஆண்டுகளாக பள்ளிகளில், கல்லூரிகளில் சொல்லித் தருகிறார்கள்.

ஆனாலும் காந்தியின் பிறந்த நாள் ஒரு சம்பிரதாயமாக, சடங்காக, தோய்ந்து வரும் பழக்கமாகவே உள்ளது. காந்தி பிறந்த நாளுக்கே இந்த நிலை என்றால் மற்றவர்களுக்கு? மற்றவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவதே ஒரு சாதனை தான்.

periyar 636ஆனால், பெரியாரைப் பார்த்திராத, பெரியார் பேச்சை நேரில் கேட்டிராத எண்ணற்ற இளைஞர்கள் பெரியார் பிறந்த நாளை தன் பிறந்த நாளை விட கூடுதல் மகிழ்ச்சியோடு, கூடுதல் உணர்ச்சிப் பெருக்கோடு கொண்டாடுகிறார்கள்.

இவ்வளவு அன்போடு, உணர்ச்சிப் பிழம்பாய் பெரியாரை இளைஞர்கள் காதலிக்கக் காரணம் என்ன? காந்தி பிறந்த நாளில் இல்லாத உணர்ச்சிப் பெருக்கு பெரியாரின் பிறந்த நாளில் ஆறாய் பெருக்கெடுத்து ஓடுவது ஏன்?

பெரியார் பிறந்த அதே நாளில் மோடியும் பிறந்திருக்கிறார். அவர் பிறந்த நாளும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அவர் இந்திய ஒன்றியத்தின் பிரதமர், தலைமை அதிகாரி. அதிகாரத்தில் இருப்பவர்களைக் கொண்டாடுவதில் ரகசியம் ஏதுமில்லை.

மோடி போல் பெரியார் பிரதமர் இல்லை, முதலமைச்சர் கூட இல்லை. அவ்வளவு ஏன் தான் நடத்திய பத்திரிக்கையை நடத்த பணமில்லாமல் நிறுத்தி விடலாமா என்று யோசித்தவர் பெரியார்.

அதிகாரத்தில் இல்லாத பெரியாரை ஏன் இவ்வளவு உணர்ச்சிப் பெருக்கோடு கொண்டாட வேண்டும்?

கடவுள்களை மக்கள் துதிக்கிறார்கள். பக்தி பரசவத்தோடு கடவுளிடம் வேண்டுகிறார்கள். கடவுள் பற்றி இருக்கும் அறியாமையும், கடவுளிடம் வேண்டினால் தனது வாழ்வில் இருக்கும் துன்பங்களும் தீரும் என்ற நம்பிக்கையுமே கடவுளை பக்திப் பரவசத்தோடு மக்கள் வணங்குவதற்குக் காரணம். கடவுள்கள் அதிசயம் பண்ணுவார்கள் என குழந்தைப் பருவம் முதல் பழக்கப்படுத்தப்பட்டு, அறியாமையில் உழலும் மக்கள் கடவுளைக் கொண்டாடுவதில் ஆச்சர்யமில்லை.

தந்தை பெரியார் கடவுள் இல்லை. மாறாக கடவுள் இல்லை என்று சொன்னவர். அதோடு நில்லாமல் கடவுளை வணங்காதே என்றும் சொன்னார். பெரியார் காந்தி போல் விமர்சனம் இல்லாமல் நாடே ஏற்றுக்கொள்ளும் தலைவர் இல்லை. மோடி போல் அதிகாரத்தின் உச்சியில் இருப்பவர் இல்லை. பெரியார் கடவுளும் இல்லை.

இருப்பினும் கடவுள் நம்பிக்கை கொண்ட பக்தர்கள் முதல் படித்த அறிவாளிகள் தொட்டு பெரிய பதவியில் உள்ளவர்கள், பணம் படைத்தவர்கள் வரை பெரியாரை அணு அணுவாய்க் கொண்டாடுவதேன்?

பெரியாரிடம் அப்படி என்னதான் இருக்கிறது?

தந்தை பெரியார் 1919 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து 1925 ஆம் ஆண்டு வரை இருக்கிறார். அந்த ஆறு ஆண்டுகளிலும் ஒப்புக்கு சப்பாணியாக கட்சியில் இல்லை. 3 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர், 3 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியின் தலைவர். அன்றைய காங்கிரஸ் தலைவர் ராஜாஜிக்கு மிக நெருக்கமான நண்பர். காங்கிரஸில் இருந்து விலகி, சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்த பின்னரும் அது ஒரு ஒப்புக்கு சப்பாணி இயக்கமாக இல்லை. சுயமரியாதை இயக்கம் தமிழ்நாட்டை தலைகீழாகப் புரட்டிப் போடுகிறது. தமிழகம் முழுவதும் சுழன்று அடிக்கிறார் பெரியார்.

நீதிக்கட்சி ஆட்சியில் இருக்கிறது. நீதிக்கட்சி தலைவர்களோடு நல்ல தொடர்பில் இருக்கிறார். அன்றைய சென்னை மாகாண முதல்வர்கள், அமைச்சர்கள் என அனைவரும் பெரியாருக்கு அத்துப்படி.ஆட்சிப் பொறுப்பு பெரியாரைத் தேடி பலமுறை வருகிறது. பின்னர் நீதிக்கட்சியே பெரியாரிடம் வந்து விடுகிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்து ராஜாஜி முதல்வரகிறார். ராஜாஜிக்கும் நண்பர் தான் பெரியார். ஆனால் ராஜாஜி கொண்டு வந்த மக்கள் விரோத குலக்கல்வித் திட்டத்தை கடுமையாக எதிர்க்கிறார் பெரியார். ஒரு வருடம் தொடர்ந்து குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து ராஜாஜியைப் பதவியில் இருந்து இறக்கி காமராஜரை முதல்வராக்குகிறார் பெரியார்.1967 வரை தொடர்ந்து காமராசரை ஆதரித்தார் பெரியார்.

காமராசர் பெரியாரிடம் மிகுந்த மரியாதை கொண்டிருந்தார். வயதால் காமராசர் இளையவர். பின்னர் முதல்வரான அண்ணாவும், கலைஞரும் உச்சத்திற்குப் போய் இந்த ஆட்சியே உங்க ஆட்சி தான் என ஒட்டுமொத்த ஆட்சியையும் பெரியாருக்கு அர்ப்பணித்தனர்.

1920 தொடங்கி 1970 வரை 50 ஆண்டுகள் அதிகாரத்தின் போதையை சுவைக்க வாய்ப்பிருந்தும் ஒரு துளி கூட அதிகாரத்தை அருந்தவில்லை பெரியார். பிச்சைக்காரர் போல உடை அணிந்து, தமிழ்நாட்டைச் சுற்றிச் சுற்றி வந்தாரே ஒழிய, அதிகாரத்தை சீண்டவில்லை.

அண்ணாவிடமும் கலைஞரிடமும் காமராசரிடமும் பேசிய சந்தர்ப்பங்கள் உண்டு. அவை பெரியார் என்ற தனிமனிதனுக்காக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தமிழர்களின் கல்விக்காக, வேலைக்காக, வாழ்க்கை முன்னேற்றத்திற்காக முதலமைச்சர்களிடம் பேசினார். தனக்காக ஒரு போதும் பேசவில்லை.

தண்ணீர் கூட இல்லாத வெறும் வீட்டில் பட்டினி கிடப்பது விரதமல்ல. மேசை நிறைய குவிந்து கிடக்கும் பல்சுவை உணவுப் பண்டத்தை தொட்டுக்கூட பார்க்காமல் இருப்பது தான் உண்மையான விரதம். அப்படிப்பட்ட விரதம் மனித இயல்புக்கே விரோதமானது. அப்படி மனித இயல்புக்கே விரோதமாக நடந்து கொண்டார் பெரியார்.

ஒட்டுமொத்த அதிகாரமும் கைக்கெட்டும் தூரத்தில் இருந்தாலும், அவர் ஒரு போதும் அதிகாரத்தின் வாசல் பக்கம் கூட போனதில்லை. தன் கொள்கை மீது அப்பழுக்கற்ற நம்பிக்கை கொண்ட நேர்மையாளர்.

அவர் சல்லி சல்லியாய் உடைத்துப் போட்ட அதிகார மையங்கள் பல உண்டு. ஆனால் அவரை எவ்வித அதிகார போதையும் நெருங்க முடியவில்லை.

அவரை நெருங்க அவரின் ஒரு கட்டுரை போதும். அவரைப் புரிந்து கொள்ள ஒரு பேச்சு போதும். எனவே அவர் மீது காதல் கொள்ளும் கூட்டம் பெருகிக் கொண்டே வருகிறது.

பெரியாரின் எழுத்தை, பேச்சை நேரடியாக அவருடைய சொற்களால் வாசித்த பின்னர் பெரியாரைக் காதலிக்காமல் யாராலும் இருக்க முடியாது.

அதில் இருக்கும் அன்பு, அக்கறை, நேர்மை அனைவரையும் கொள்ளையடித்து விடும். சக மனிதர்கள் மீது அன்பு கொண்ட எவராலும் பெரியாரை காதலிக்காமல் இருக்க முடியாது.

எனவே தான் கடவுள் இல்லையென்று மக்களின் நம்பிக்கைக்கு எதிராகப் பேசிய, அதிகாரத்தில் இல்லாத பெரியாரிடம் உணர்ச்சிப் பெருக்காக நடந்து கொள்ளுகிறார்கள்.

- சு.விஜயபாஸ்கர்

Pin It