dharumapuram adheenam 700இது திமுக ஆதரவு முற்போக்குவாதிகளுக்கு போதாத காலம். பாவம் அவர்கள் முற்போக்கு இயக்கங்களின் தொண்டர்களாக இருந்து கொண்டு, திமுக பெரியாரின் கொள்கைகளை செயல்படுத்தும் அமைப்பு என்று எவ்வளவுதான் கட்டியமைக்க முற்பட்டாலும், அதற்கு வாய்ப்பில்லாமல் அவர்களை வாசற்படியிலேயே திமுக நிற்க வைத்து விடுகின்றது.

அவர்கள் திமுகவிற்காக வலிந்து ஊர் ஊராகப் பரப்புரை செய்து, எப்படியாவது முட்டுக் கொடுத்து திமுகவை திராவிடக் கட்சி, அதன் ஆட்சியின் தனித்தன்மை திராவிட மாடல் என்று காட்ட படாத பாடு படுகின்றார்கள்.

ஆனால் திமுகவோ “நீ எல்லாம் எனக்கு ஒரு பொருட்டே கிடையாது, நீ சொல்வது போல் எல்லாம் என்னால் ஆட்சி நடத்த முடியாது” என்பதைத் தொடர்ச்சியாக நிரூபித்து வருகின்றது.

நமக்கு நன்றாகத் தெரியும் ஜல்சாப்பு திட்டங்களை செயல்படுத்துவதையும், விளம்பரம் தேடிக் கொள்வதையும் தவிர திமுக இந்த ஓர் ஆண்டில் பெரிதாக எதையும் செய்துவிடவில்லை என்பது. நீட் தேர்வு இன்னும் ரத்து செய்யப்படவில்லை. மத்திய அரசு சொன்னதாக சொத்துவரியை பல மடங்கு உயர்த்தி இருகின்றார்கள். திமுக அமைச்சர்கள் ஆர்.எஸ்.எஸ் விழாக்களில் கலந்து கொள்வதும், சிவராத்திரியை அரசே பல கோயில்களில் நடத்தும் என அறிவிப்பதும், கோயில்களில் சட்டையைக் கழற்றிவிட்டு சுயமரியாதையைக் காற்றில் பறக்க விடுவதும் தொடர்ச்சியாக நடந்து வருகின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக லாக்கப் படுகொலைகள் நடக்காத நாளே இல்லை என்னும் அளவுக்கு காவல்துறையின் அட்டூழியம் தலைவிரித்து ஆடுகின்றது. இவை எல்லாம் ஒருபோதும் திமுகவை திராவிடக் கட்சி என சொல்ல முடியாததற்கான காரணங்கள்.

திமுக எப்போதுமே ஒரு அப்பட்டமான கார்ப்ரேட் கட்சியாகத்தான் செயல்பட்டு வந்துள்ளது. இதற்கு பல நூறு உதாரணங்களை நம்மால் தர முடியும். தனிநபர் வருமானத்தில் இந்தியாவில் பின்தங்கிய மாநிலமாகவே தமிழகம் உள்ளது. இன்றும் கூட குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கும் தைரியம் திமுகவிற்கு இல்லை. பன்னாட்டுப் பெருமுதலாளிகளின் வேட்டைக்காடாகத்தான் தமிழகம் உள்ளது.

தமிழ்நாட்டின் பொருளாதாரமே சாராய விற்பனையில்தான் உள்ளது. இலட்சக்கணக்கான இளைஞர்களை குடிநோயாளியாக்கி, சாகடித்து, இந்தியாவிலேயே கணவனை இழந்த பெண்கள் அதிகமாக வாழும் மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியே இவர்கள் பெருமையாக சொல்லிக் கொள்ளும் திராவிட மாடலை கட்டியமைத்து இருக்கின்றார்கள்.

மக்கள் நலனுக்காகவே செயல்படுவதாக சொல்லிக் கொள்ளும் ஒருவரால் இதை எப்படி ஏற்க முடிகின்றது? அதன் பின்னுள்ள அரசியல் என்ன?

திமுக முற்று முழுதாக மக்களுக்கு எதிரான கட்சி என்று நாம் சொல்ல வரவில்லை. திமுக நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தால் அதை ஆதரிக்கலாம், அதில் எந்தத் தவறுமே இல்லை. நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணத்தைக் கொண்டு வந்தபோது அதை ஆதரித்தோம். நகைக்கடன் தள்ளுபடியை ஆதரித்தோம், தற்போது 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தை அறிவித்து இருக்கின்றார்கள், அதையும் ஆதரிப்போம்.

ஆனால் அரசுக் கல்லூரிகளில் காலையில் ஆண்களும், மதியம் பெண்களும் படிக்கும் படியான திட்டத்தைக் கொண்டு வரும் எண்ணம் இருப்பதாக திமுக அறிவித்தபோது எந்த முற்போக்கு அமைப்புகளும் பெரிய அளவில் எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை. இது போன்ற திட்டங்கள் சாதிவெறியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

ஆண்களும் பெண்களும் ஒன்றாகப் படிப்பதால்தான் அவர்களுக்கு இடையில் காதல் ஏற்படுகின்றது, சாதியக் கட்டுமானம் தகர்கின்றது என்பது அவர்களது வாதம். பெரியார் இருந்தால் இதை எப்படி அணுகி இருப்பார்? ஆனால் பல முற்போக்கு அமைப்புகள் இயற்கையின் சமநிலையையே சீர்குலைக்கும் இது போன்ற அயோக்கியத்தனமான திட்டங்களுக்கு என்ன வகையான எதிர்வினை ஆற்றினார்கள் என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகின்றது.

கோயில் நிலங்களை மீட்கின்றேன் என்ற போர்வையில் பல ஆண்டுகளாக அங்கு குடியிருக்கும் மக்களை நாய்களைப் போல அடித்து விரட்டிய போதும், சென்னையின் பூர்வகுடி மக்களின் வீடுகளை இடித்துத் தள்ளிய போதும் இவர்களின் எதிர்வினை மெளனமாகவே இருந்தது.

தேர்தலில் பங்கெடுக்காத இயக்கங்கள் எப்போதுமே தங்களது தனித்துவத்தை இழக்காமல், ஆட்சியில் உள்ளவர்கள் தவறு செய்தால் அதைக் கண்டிக்கும் இடத்தில் இருக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் பல முற்போக்கு இயக்கங்கள் அப்பட்டமாகவே திமுகவின் ஜால்ரா பேர்வழிகளாக அதன் கிளை அமைப்புகளாகவே செயல்படுகின்றார்கள்.

வரலாற்றில் தாங்கள் செய்யும் தவறான செயலுக்காக விமர்சனக் கூண்டில் ஏற்றப்படுவோம் என்ற எந்த குற்றக் உணவும் இவர்களிடம் துளியும் இல்லை. ஒட்டுமொத்த சமூகத்தையே தங்களது சுயநலத்துக்காக தவறாக வழிநடத்திக் கொண்டு இருக்கின்றார்கள்.

பல ஆண்டுகள், பல உண்மையான தொண்டர்கள் உழைத்து சேர்த்த மதிப்பை திமுகவிற்கு அடமானம் வைப்பதுபோல் உள்ளது அவர்களின் செயல்பாடுகள்.

திமுகவை வைத்தே சமூக மாற்றத்தை - அது பார்ப்பனிய பயங்கரவாத ஒழிப்பாக இருக்கட்டும் அல்லது முதலாளித்துவ பயங்கரவாத ஒழிப்பாக இருக்கட்டும்  - சாதித்து விடலாம் என உறுதியாக நம்பி செயல்படுபவர்கள் தாங்கள் பணியாற்றும் கட்சியையோ, அமைப்பையோ விட்டு வெளியேறி நேரடியாகவே கார்ப்ரேட் கட்சிகளில் இணைந்து விடலாம். ஆனால் முற்போக்கு அமைப்புகள் என்று சொல்லிக் கொண்டு திமுகவின் கடும் பிற்போக்குத்தனமான நடவடிக்கைக்கும் முதலாளித்துவ அடிவருடித்தனத்திற்கும் ஆதரவு தருவது மக்கள் விரோத செயலாகும்.

திமுக பார்பனிய எதிர்ப்பில் உறுதியான கட்சி என்று சொல்வதற்கு நம்மிடம் ஏதாவது உறுதியான சான்றுகள் இருக்கின்றதா என நேரத்தை வீணடித்துத் தேடுவதைவிட தற்போதைய அதன் சரணாகதியைப் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம்.

மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறும் பட்டிணப்பிரவேச நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் போன்ற பெரியாரிய இயக்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் தமிழக அரசு அதற்குத் தடை விதித்தது.

ஆதீன குரு மகா சந்நிதானத்தை பல்லக்கில் அமர வைத்து, மக்கள் தோளில் சுமப்பது மனித நாகரீகத்திற்கே இழிவானது என்பதால்தான் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மன்னார்குடி ஜீயர் “…இந்த தர்மதுரோகிகளுக்கும், தேசத்துரோகிகளுக்கும் நாங்கள் ஒரு எச்சரிக்கை கொடுக்கிறோம். இதேபோல் இந்து விரோதமான செயல்கள், இந்து விரோதமான கோயில் தலையீடு போன்ற இந்து தர்மத்தில் தலையிட்டால் அரசாங்கத்தின் எந்த ஓர் அமைச்சரும் ரோட்டில் நடமாட முடியாது!" எனக் கூறி பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தான். ஆனால் அவன் இதுவரை கைது செய்யப்படவில்லை.

அண்ணாமலையோ ஆதீனத்தைத் தோளில் சுமக்க நான் நேரில் வருவேன்  என்று சூத்திர அடிமைத்தனத்தைக் காட்டினார். தடையை மீறி பட்டினப்பிரவேசத்தை நடத்துவோம் என ஹெச். ராஜா, குஷ்பு போன்ற விளம்பர விஷக் கிருமிகள் கருத்து தெரிவித்திருந்திருந்தனர்.

பாமக, பாஜக, அதிமுக போன்றவை பட்டிணப்பிரவேச நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவித்தன. விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், ஏன் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூட கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.

 ஆனால் ஆதீனங்களின் பகையை சம்பாத்தித்துக் கொள்ள முடியாது என நினைத்த திமுக தனது சங்கி அமைச்சர் சேகர் பாபுவை வைத்து “தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப் பிரவேசம் நடத்துவது தொடர்பாக விரைவில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நல்ல முடிவை எடுப்பார்’ என்று பச்சைக்கொடி காட்ட வைத்தது. சொல்லிவைத்தார் போல தற்போது தடை நீக்கப்பட்டிருக்கின்றது. ஆதீனம் பட்டிணப் பிரவேசம் வரும்போது மாற்றுத்திறனாளிகளும், வயதான முதியவர்களும் பல்லக்கில் அமர்ந்து வரும் ஆதீனத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இப்படியான இழிவான அயோக்கியத்தனமான நிகழ்ச்சியைக்கூட தடுத்து நிறுத்த வக்கற்ற நிலையை திமுக அடைந்திருக்கின்றது. ஆனால் திமுகவை ஆதரிப்பவர்கள் வழக்கம் போல முகத்தை திருப்பி வைத்துக்கொண்டு அப்படியான சம்பவமே நடக்காதது போல கடந்து செல்கின்றனர். மனிதனை மனிதன் இழிவுபடுத்தும் இப்படியான செயலை திமுக அனுமதித்தது பெரியாருக்கு செய்யும் துரோகமாக இவர்களுக்குப் படவில்லை.

அதிமுகவிற்கு இல்லாத ஒன்று திமுகவிற்கு இருக்கின்றது என்றால் அது புரட்சி பேசுபவர்களில் இருந்து பகுத்தறிவு பேசுபவர்கள் வரை பலரைத் தன்பக்கம் இழுத்து வைத்திருப்பதுதான்.

இவர்கள் ஒருபோதும் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு ஏன் இன்னும் நீதி கிடைக்கவில்லை என்றோ, சாத்தான்குளம் படுகொலைக்கு ஏன் நீதி கிடைக்கவில்லை என்றோ, பொள்ளாட்சி பாலியல் வழக்கும், நிர்மலா தேவி வழக்கும் என்னானது என்றோ மறந்தும் வாய் திறக்க மாட்டார்கள்.

அதிமுக ஆட்சியில் இருக்கும் போது திமுகவை விமர்சித்தால் “ஆட்சியில் இருக்கும் கட்சியை விமர்சிக்காமல் ஏன் ஆட்சியில் இல்லாத கட்சியை விமர்சிக்கின்றீர்கள்?” எனக் கேள்வி கேட்பார்கள். இப்போது திமுகவை விமர்சித்தால் பிஜேபியின் பி டீம் என்றோ, சங்கி என்றோ சொல்வார்கள். இதுதான் பெரும்பாலான திமுக அபிமானிகளின் நிலைப்பாடாக இருக்கின்றது.

 திமுகவால் சங்கிகளை எதிர்த்து நிற்க முடியவில்லை என்றால் இவர்கள் எப்படி மாநில சுயாட்சியை வென்றெடுப்பார்கள்? சாதாரண மனித உரிமை மீறலைக் கூட தடுத்து நிறுத்த வக்கற்ற இவர்கள் எப்படி ஒட்டுமொத்த மாநிலத்தின் தன்மானத்தையும், சுயமரியாதையையும் மீட்டெடுப்பார்கள்? ஆனாலும் நாம் எல்லோரும் நம்ப வைக்கப்படுகின்றோம், அது எல்லாம் நடக்கும் என்று.

அப்படி நடக்காத போது திமுகவிற்காக பரப்புரை செய்தவர்கள் மக்களின் முன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்பார்கள் என நம்புகின்றோம். காரணம் நாம் அவர்களை நம்புகின்றோம்.

- செ.கார்கி

Pin It