கோபம்.... இயலாமையின் வழியே வந்து சேர்ந்த அரூபம். அது தன்னை மட்டுமல்லாது சுற்றிலும் அழிக்கும். அழிக்கட்டும். எத்தனை அழித்தாலும் அழிவது தான் அழியும்.

*
பெருங்கணையின் வடிவு மாறு வேஷத்தில் கோபம் பூட்டும். பூட்டி பூட்டி புன்னகை தொலைத்து பைத்தியம் பிடிப்பதில் யார் கண்டார்... கடவுளாகவும் வாய்ப்புண்டு.

அன்பின் முழுமையை சொல்ல முடியாத தருணங்களில் கோபம் பூண்டு கொந்தளித்து சமன் செய்து கொள்கிறது இயலாமை மானுடம். வேண்டும் என்பதை அழுது அடம் பிடித்து தரை உருண்டு கேட்கும் கோபத்தின் அடியே துடைத்து பார்க்க அங்கே ஆசை தான் அநியாயத்துக்கு. ஆசை ஒன்றும் அழிக்கப்பட வேண்டிய ஆயுதம் இல்லையே. ஆசையின் அழகியல் பொருட்டே இங்கே நம் வாழ்க்கை என்பது தீட்டப்படுகிறது... கோபப்பட்டாலும் நம்புவோமாக.

என்னை கவனி என்பதைக் கூட மிரட்டும் தொனியில் கேட்பது தனிமையின் பாரம் தாங்காத பதற்றம் இன்றி வேறென்ன. வார்த்தைகள் கை கொடுக்காத போது வாயோரம் கண்கள் முறைக்க காத்துக் கிடக்கும் கோபத்தை சாக்கு பையில் கட்டி தூக்கி எங்கோ காட்டுக்குள் விட்டு விட்டு வந்து விட பூனைக்குட்டியின் ஈனக்குரலா.... கோபம் கொண்டவனின் குரல் வளை.

கோபக்காரனை அரக்கனைப் பார்ப்பது போல பார்ப்பதை தவிர்க்க. சேகுவேரா கோபக்காரர். ஹிட்லர் அரக்கன்.

நேர்மையின் வழியே அறத்தை சுமப்பவனுக்கு கோபம் தான் துணை. அரக்கன் வேறு. அணுக்கன் வேறு. அணுக்கன் கோபத்தின் வழியே சூரியன் பூக்கும் கால உருண்டை. அணுக்கனிடம் அனுபூதியும் உண்டு. அதே நேரம் ஆங்காரமும் உண்டு. அங்காளியிடம் இருக்கும் வேல் கம்பில் முரட்டு தோற்றம் இயல்பு தானே. அய்யனார் கை அருவாளுக்கு கோபம் தேவை தானே. யேசுவின் சிலுவையில் இருப்பதெல்லாம் என்ன... கோபம் தவிர. அத்தனை கோபத்தையும் தன்னிடம் கொண்டு அன்பை வெளியிட காலம் அவருக்கு அனுமதித்திருக்கிறது. அகிம்சை என்பதே கோபத்தின் ஆழம் என்பதை எத்தனை பேர் புரிந்து கொண்டீர். காந்தியின் கைத்தடியில் இருந்தது அகிம்சை என்றால்.... இன்னும் வளரணும் ராஜா... அது பக்குவப்பட்ட கோபம்.

தன் முனைப்பு வேறு... ஈகோ வேறு. ஈகோ வேறு கோபம் வேறு.

வன்மத்தில் இருந்து வெகு தூரத்துக்கு தள்ளி நின்று முறைத்துக் கொண்டிருப்பது... கோபம். தழல் வீரத்தில் குஞ்சொன்றும் மூப்பென்றும் உண்டோ என அது ஆடவும் செய்யும். முதுகில் குத்தாது கோபம். முத்தமிட தெரிந்த கோபத்தை முழுதாய் புரிந்து கொள்ள மூச்சு விடல் மட்டும் போதா. மலர்வனமும் மூச்சில் வேண்டும் உணர்.

கோபத்தின் வழியே சென்றடைந்து நின்று விடும் இடம் அகங்காரம் என்ற கணக்கில் தான் கோபத்தின் அழகு நமக்கு தெரிவதில்லை. தன்னை விட்டு தள்ளி நின்று படும் கோபத்தில் தான் அறியாமை விலகிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் நம்மை அறியாமலே காலம் காலமாய் அறிந்து கொண்டிருக்கிறோம். உற்று நோக்கு உள்ளே. சற்று தள்ளி நில் வெளியே.

நாக்கு துருத்தி ஊர்க்கோடியில் நிற்கும் காளி.. கோபக்காரி தான். அது தானே அல்லும் பகலும் நம்பிக்கை தருகிறது.

இரண்டு பேர் அமரும் இருக்கையில் ஒன்றரை சீட்டை பிடித்து அமர்ந்திருக்கும் ஜன்னலோர பிரயாணியை கண்டு கோபப்படாதவனுக்கு தேனிசை தேவா பாடல் சாபம். கோபக்காரனுக்கு சொற்கள் பஞ்சம். ஆக கத்தி விட்டு சென்று விடுகிறான். கோபக்காரனுக்கு அறிவு அதிகம். அதனால் தான் மிச்சம் மீதி இருக்கும் முட்டாள் தனத்தை கொட்டி விடுகிறான்.

கோபம் கொண்டோரை பிசாசு சூழாது. கோபம் கொண்டோரை பிரியங்கள் ஆளாது. கோப முகத்தில் ஈக்கள் மொய்ப்பதில்லை. கோபக்காரனை நாய்கள் குரைப்பதில்லை. உண்மைக்கு நெருக்கமாக இருக்கும் மனதுக்குள் கோபம் ஒரு கவசம். கோபம் வன்மத்தின் வாரிசு அல்ல. அது விடிய விடிய விழித்துக் கொண்டு நிற்கும் CCTV கேமரா.

சித்தார்தனின் கோபம் தான் புத்தன். சிலை ஆகும் மனிதனெல்லாம் கோபத்தில் வளர்ந்தவன். திரும்பி பார்.

அர்த்தமுள்ள கோபங்களில் தான் ஆன்ம பலம் கூடுகிறது என்றால்... அனுபவம் இல்லாதோர் கண்ணுற்று அவதானியுங்கள். மற்றபடி மாற்றிக் கொள்ள ஒன்றுமில்லாத போது கோபத்தை கை விடாத பயிற்சியை மேற்கொள்வோம்.

ஏனென்றால் தனித்த யானைக்கெல்லாம் கோபமே துணை.

- கவிஜி

Pin It