honour killingவயது வந்த ஒரு ஆணும் பெண்ணும் மனம் ஒப்பி காதலிப்பதற்கும் திருமணம் செய்து கொள்வதற்கும் ஒரு சமூகம் இன்னும் ஒப்புக்கொள்ளும் அளவிற்கு மனப்பக்குவம் அடையவில்லை என்றால் அந்த சமூகம் இன்னும் பாசிச பிற்போக்கு மனநிலையில் இருப்பதாகத்தான் நாம் கருத வேண்டி உள்ளது.

 அப்படிப்பட்ட பாசிச பிற்போக்கு மனநிலை கொண்ட சமூகத்தை அதில் இருந்து மீட்டெடுக்க முற்போக்கு இயக்கங்கள் அது கம்யூனிச இயக்கங்களாக இருந்தாலும் சரி, பெரியாரிய, அம்பேத்கரிய இயக்கங்களாக இருந்தாலும் சரி எவ்வளவுதான் பாடுபட்டு பரப்புரை செய்தாலும் ஆளும் அரசு என்பது அதற்கு ஒத்திசைந்து செயல்படவில்லை என்றால் சமூக மாற்றத்திற்காக நடத்தப்படும் அனைத்து பரப்புரைகளும் வீணாகத்தான் போகும்.

 இந்தியாவைப் பொருத்தவரை காங்கிரஸ், பிஜேபி என இரண்டு பெரிய கட்சிகளுமே சாதியை அழியாமல் தக்கவைத்து அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தை அடையத் துடிப்பவைதான். அவர்களைப் பொருத்தவரை சாதி ஒழிப்பு என்பது ஒரு சமத்துவ சமூகத்திற்கான முன்னெடுப்பாக மாறிவிடும் என்பதால் அதை ஒரு போதும் செய்ய முன்வர மாட்டார்கள்.

 ஆனால் சமூக சமத்துவத்தை பெற்றுத் தருவதற்காக கட்சி நடத்துவதாக சொல்லிக் கொள்பவர்களிடமும் சாதி ஒழிப்புக்கான எந்த உருப்படியான திட்டமும் இல்லை என்பதுதான் உண்மை.

 அவர்களைப் பொருத்தவரை ஆட்சி அதிகாரத்தை அடைய சாதிவெறியர்களுடனும் மதவெறியர்களுடனும் எப்போதும் இணக்கமான உறவில் இருப்பதையே விரும்புவார்கள். இட ஒதுக்கீடு போன்றவற்றை உத்திரவாதப்படுத்துவதும், சில சில்லரை சீர்திருத்தங்கள் செய்துவிட்டு அதையே இமாலய சாதனையாக காட்டிக் கொள்வதும் அவர்களின் வாடிக்கை.

 இப்படிப்பட்ட சூழ்ச்சிக்காரர்களின் துரோகத்தால்தான் இந்த மண்ணில் சாதியின் வேர்கள் ஆழமாக ஊடுருவவும் சாதிவெறியர்கள் பல பேரை கொன்று குவிக்கவுமான நிலை ஏற்பட்டது..

 அது போன்ற பார்ப்பனக் கூட்டாளிகளால் ஒரு போதும் இந்த சமூகத்தை பிற்போக்குத்தனத்தில் இருந்து மீட்டெடுக்கவே முடியாது.

 அப்படி ஒரு வேளை உளப்பூர்வமாக அவர்கள் பார்ப்பன வர்ணாசிரம சாதிய கட்டமைப்பை அடித்து நொறுக்கி இந்த மண்ணின் மக்களை தன்மானத்தோடும் சுயமரியாதையோடும் வாழ வைக்க வேண்டும் என நினைத்திருந்தால் சாதி ஒழிப்பு என்பதை தங்களின் முதல் முழக்கமாக வைத்திருப்பார்கள்.

 அப்படி வைத்து இத்தனை ஆண்டுகள் செயல்பட்டிருந்தால் இந்த மண்ணில் சாதியப் படுகொலைகள் குறிப்பாக சாதி ஆணவப் படுகொலைகள் கேட்பாரற்று நடந்து கொண்டு இருக்காது.

 இத்தனைக்கும் வயது வந்த ஆணும் பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொள்வதை சட்டம் அங்கீகரிக்கின்றது.

 “இரு வேறு சாதியினர், காதல் திருமணம் செய்து கொள்வதை யாரும் தடுக்கக்கூடாது. ஒரு பெண்ணும், ஆணும் திருமணம் செய்து கொள்வது அவர்களது தனிப்பட்ட விருப்பம். அதைக் கேள்வி கேட்கவும், தடுக்கவும் பெற்றோர்கள், சமூகம் என யாருக்கும் உரிமை கிடையாது”

“கட்டப் பஞ்சாயத்து மூலமோ, கிராமப் பஞ்சாயத்து மூலமோ, சமுதாயப் பெரியவர்கள் என்ற பெயரிலோ யாருமே இது போன்ற திருமணங்களை தடுக்கக் கூடாது. இது போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தவறினால் உச்சநீதிமன்றம் தலையிடும்”

“இரண்டு வயதுவந்த நபர்கள் திருமணம் செய்ய ஒப்புக் கொண்டதும், அவர்களின் சம்மதத்திற்கு முதன்மையாக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். குடும்பம் அல்லது சமூகம் அல்லது குலத்தின் ஒப்புதல் தேவையில்லை” என்றும் உச்சநீதி மன்றம் கூறியுள்ளது.

 இவை எல்லாம் பல்வேறு சாதிமறுப்புத் திருமணங்கள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதி மன்றம் தெரிவித்த கருத்துக்கள்.

 ஆனால் நடைமுறையில் பல மாநிலங்கள் சாதி மறுப்புத் திருமணங்கள் செய்து கொள்பவர்களுக்கு எந்த பாதுகாப்பும் தர துப்பற்ற நிலையில்தான் உள்ளன. இதற்கு அடிப்படைக் காரணம் அந்த மாநிலங்களின் உள்ள கட்சிகள் சாதிவெறியர்களின் தயவில் பிழைப்பு நடத்தும் கட்சிகளாக இருப்பதுதான்.

 கடுமையான பிற்போக்குத்தனங்கள் நிறைந்த ராஜஸ்தான் மாநிலம் கூட 2019 ஆண்டே ஆணவக் கொலை, சாதி வெறுப்பு குற்றங்களுக்கு எதிராக சிறப்புச் சட்டத்தை கொண்டு வந்துவிட்டது. ஆனால் இந்தியாவிலேயே முற்போக்கு மாநிலம் என பீற்றிக் கொள்ளும் தமிழ்நாட்டில் அப்படியான சட்டங்கள் இன்னும் கொண்டு வரப்படவில்லை என்பது இங்கே ஆளும் கட்சிகளுக்கு வெட்கக்கேடான ஒன்றாகத் தெரியவில்லை.

 ஏற்கெனவே நாடு முழுவதும் நடைபெற்ற ஆணவக் கொலைகள் பற்றிய விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்யும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட போது 22 மாநிலங்கள் அது சம்மந்தமான அறிக்கைகளை அனுப்பி வைத்தன. ஆனால், தமிழ்நாடு உட்பட சில மாநில அரசுகள் மவுனமாகவே இருந்தன. இன்னும் ஒருபடி மேலே போய் தமிழகத்தில் ஆணவக் கொலைகளே நடக்கவில்லையென கடந்த அதிமுக ஆட்சியில் துணைமுதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கொஞ்சம் கூட கூச்சமின்றி பொய் கூறினார்.

உடுமலை சங்கர், ஓசூரை அடுத்துள்ள சூடகொண்டபள்ளி கிராமத்தைச் சேர்ந்த நந்தீஷ் – சுவாதி, ஆரணி தாலுகா மொரப்பதாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சுதாகர், திருச்செங்கொடு கோகுல்ராஜ் என பல பேர் அதிமுக ஆட்சியில்தான் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டார்கள்.

 இத்தனைக்கும் இந்தியாவில் நடக்கும் திருமணங்களில் சராசரியாக 5 முதல் 6 சதவீதம் மட்டுமே சாதி மறுப்புத் திருமணங்களாகும்.

 மிசோராம் (55 சதவீதம்), மேகாலயா (46 சதவீதம்), சிக்கிம் (38 சதவீதம்), ஜம்மு காஷ்மீர் (35 சதவீதம்) அதிகப்படியான கலப்புத் திருமணங்கள் நடக்கும் மாநிலங்களாகவும், மத்தியப் பிரதேசம் (1 சதவீதம்), ஹிமாச்சல், சத்திஸ்கர் மற்றும் கோவா (2 சதவீதம்), பஞ்சாப் (3 சதவீதம்) ஆகியவை குறைந்த கலப்புத் திருமணங்கள் நடக்கும் மாநிலங்களாகவும் உள்ளன.

 இதில் சமூகநீதியும் முற்போக்கும் கொடிகட்டிப் பறக்கும் தமிழகத்தில் வெறும் 3% அளவில் மட்டுமே சாதி மறுப்புத் திருமணங்கள் நடைபெற்றிருக்கிறது.

 இதை நினைத்து பெருமைப்படுவதா? இல்லை காறித் துப்புவதா? என்பதை திராவிடக் கட்சிகளின் ஆட்சி என திமுக, அதிமுகவிற்கு சொம்பு தூக்கும் பிழைப்புவாதிகள் பதில் சொல்ல வேண்டும்.

 ஏன் சாதி மறுப்புத் திருமணங்கள் மிகக் குறைவாக சமூகநீதி மண்ணில் நடக்கின்றது என்றால் சாதி மறுப்புத் திருமணங்கள் செய்து கொள்பவர்களை சாதிவெறி பிடித்த ஓநாய்கள் வெட்டிக் கொல்வதும் அந்த ஓநாய்களின் துணையோடு ஓட்டுப்பொறுக்கிகள் தேர்தலில் வெல்வதும்தான்.

 ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் சராசரியாக 1000 சாதி ஆணவக் படுகொலைகள் நடப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. அதிலும் வருடந்தோறும் இதன் எண்ணிக்கை 796 சதவீதம் அதிகரிப்பதாகவும் அந்த ஆய்வு மேலும் தெரிவிக்கிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கைகளும் இதனை உறுதிப்படுத்துகின்றன.

 சாதிமறுப்புத் திருமணங்கள் சமூகத்தில் அதிகரிக்க வேண்டும் என்றால் சாதிமறுப்புத் திருமணங்கள் செய்து கொள்வோர்க்கு சட்ட ரீதியான பாதுகாப்பை ஆளும் அரசுகள் உத்திரவாதப்படுத்த வேண்டும். நம்மால் பிஜேபி போன்ற சனாதன பாசிச கட்சிகளிடம் அவ்வாறான கோரிக்கைகளை வைக்க முடியாது.

 ஆனால் சமூகநீதி பேசும் அரசுகள் இப்படியான சட்டத்தை யாரும் கேட்காமலேயே செயல்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் இத்தனை ஆண்டுகளில் அது நடக்கவில்லை என்பது சாதி ஒழிப்பு பற்றிய இவர்களின் யோக்கியதையையே காட்டுகின்றது.

 சாதி ஆணவக் கொலைகள் என்பது பெரும்பாலும் பொதுச்சமூகத்தின் பார்வைக்கு வராமலேயே நடத்தி முடிக்கப்படுகின்றன. சாதி கெளரவத்தை காப்பாற்றுவதற்காக பெற்றோர்களோ அல்லது உறவினர்களோ தனது மகளையோ, மகனையோ கொலை செய்கின்றார்கள். பெரும்பாலும் சாதி மறுப்புத் திருமணத்தில் குடும்பத்திற்குள் வைத்து கொலை செய்யப்படுவது பெண்களாகவே இருக்கின்றார்கள்.

 இந்தியாவில் 15 வயதிலிருந்து 29 வயது வரையிலான பெண்களில், தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை, 2016ம் ஆண்டில் மட்டும் 71.26 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 15 முதல் 39 வயது வரையிலான பெண்களின் தற்கொலையும் 57.7 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 1990ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், ஒட்டுமொத்தமாக இந்தியாவில் பெண்களின் தற்கொலை 25.3 சதவிகிதத்தில் இருந்து 36.6 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

 இந்திய மக்கள் தொகையில் 15 வயதிலிருந்து 39 வயது வரையிலான நபர்களே அதிகம் தற்கொலை செய்து கொள்கின்றனர். இவர்களில் 37 சதவிகிதம் பேர் பெண்கள். ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 700க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் இந்தியாவில் தற்கொலை செய்து கொள்வதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அதில் பாதிக்கும் மேல் சாதி ஆணவக் கொலைகள் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நிச்சயம் அரசின் உதவி இல்லாமல் சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுப்பது என்பது சாத்தியமான ஒன்றல்ல. ஆனால் அரசுகள் சாதி ஆணவப் படுகொலைகளை கண்டுகொள்ளாமல் இருப்பதானது அவர்கள் சாதிவெறியர்களின் கள்ளக் கூட்டாளிகள் என்பதைத்தான் காட்டுகின்றது.

 அவர்களுக்கு ஓட்டரசியலில் வெற்றி பெற சாதி தேவை. ஆண்டசாதி பெருமை பேசி தன் சகமனிதனைக் கொன்று போட்டாலும் அவன் சாதி ஓட்டு தேவை. அதனால் அது போன்ற சாதிவெறியர்களையும் அவன் சார்ந்த சாதியையும் பகைத்துக் கொள்ள ஒருபோதும் ஓட்டு அரசியல்வாதிகள் முன்வர மாட்டார்கள்.

 இருந்தாலும் அப்படியான துரோகக் கும்பலுக்கு முட்டுக்கொடுத்து அவர்களை வெற்றி பெற வைக்க போலி முற்போக்குவாதிகள் தொடர்ந்து வேலை செய்துகொண்டே தான் இருப்பார்கள்.

 சாதிவெறியர்களைவிட இந்த போலி முற்போக்குவாதிகள் ஆபத்தானவர்கள். இவர்களின் கை சமூகத்தில் ஓங்கி இருக்கும்வரை ஒருபோதும் சாதி ஒழிப்பை நம்மால் நினைத்துப் பார்க்கக்கூட முடியாது. குறைந்தபட்சம் 100க்கு 3 பேர்கூட சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டு உயிரோடு வாழ முடியாது.

இருந்தாலும் நாம் எதிர்ப்பார்க்கின்றோம். இந்தப் புதிய அரசாவது சாதி ஆணவப் படுகொலையை தடுக்க தனிச்சட்டம் இயற்றும் என்று. பொறுத்திருந்து பார்ப்போம். வரும் ஆண்டாவது சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்ளும் காதலர்களுக்கு விடியுமா என்று.

- செ.கார்கி

Pin It