சாவின் விளிம்பில் முறைசாரா தொழிலாளர்கள்
இந்தியா என்ற நிலப்பரப்பைப் பொருளாதாரக் கட்டமைப்பு ரீதியாகப் பார்த்தால், அது பலதரப்பட்ட பொருளாதார நிலையில் வாழும் மக்களைக் கொண்ட ஒரு துணைக்கண்டம் ஆகும். இதில் பெரும்பான்மையான மக்கள் தொகை பொருளாதாரரீதியாக ஏழ்மையிலும் (poor), கீழ் நடுத்தர வர்க்கத்திலும் (lower middle class) இருக்கக் கூடிய மக்கள். இப்படிப்பட்ட நிலப்பரப்பில் அரசாங்கம் ஒரு திட்டத்தைக் கொண்டு வரும் போதோ அல்லது நாடு முழுக்க ஊரடங்கு நிலையை நடைமுறைப் படுத்தும்போதோ அனைத்து மக்களுடைய நலனைக் கருத்தில் கொண்டு பாதுகாத்து செயல்பட வேண்டும். அனைத்து தரப்பட்ட மக்களுக்காகவும் தான் அரசு இருக்கிறதேஒழிய பெரும் பணக்காரர்களுக்காவும் மேல் நடுத்தர வார்க்கத்துக்காரர்களுக்காவும் மட்டுமேயல்ல; அவர்களின் நலனை மாத்திரமே அக்கறை கொண்டு சட்டத்தை அமல்படுத்துவது என்பது பாசிசத்தின் ஒரு கூறு
இன்றுவரை உலகம்முழுவதும் (ஏப்ரல் 6 2020) கொரோனா நோய்தொற்றால் கிட்டத்தட்ட 1245732 பேர் பாதிக்கப்படும் 67927 பேர் உயிரிழந்தும் உள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை 4582 பேரும் தமிழ்நாட்டில் 571 பேரும் இந்தநோயால் பாதிக்கப்பட்டு, இந்தியா முழுவதும் 118 பேரும் தமிழ்நாட்டில் 5 பேரும் இந்த நோயினால் உயிரிழந்திருக்கின்றனர். மார்ச் மாத தொடக்கம் முதலே இந்த நோய்த்தொற்றின் வேகம் அதிகரிக்க, இந்திய அரசானது 21 நாள் ஊரடங்குஉத்தரவை மார்ச் 24 ஆம் தேதி அறிவித்து அது மார்ச் 25-லிருந்து அமலுக்கு வந்தது. மனிதர்களைத் தனித்திருக்கச் செய்வது மூலமே நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த முடியும் என்ற முடிவும் மத்திய அரசு இதை அமல் செய்ததையும் நாம் வரவேற்கிறோம். ஆனால் இந்தியா மாதிரியான உலகில் ஏழைகள் மற்றும் தொழிலாளர்கள் (அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள்) அதிகம் வாழும் நாட்டில் அரசாங்கம் சரியான திட்டமிடல் மூலமும் சரியான அணுகுமுறையின் மூலமும் தான் இந்த சட்டத்தை அமல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், ஆட்சியாளர்கள் எப்போதுமே தாங்கள் சார்ந்திருக்கும் வர்த்தகத்தை மட்டுமே நினைவில் கொண்டு அத்தனை முடிவுகளையும் எடுக்கின்றனர் என்பதற்கான சாட்சியாக இந்த திட்டமிடாத அவசர முடிவு மாறியிருக்கிறது.
நம்மில் பலர் வசதியாக வீட்டில் பாதுகாப்பு உணர்வோடு மூன்று வேளை நல்ல உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில்தான் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல லட்ச கூலித் தொழிலாளர்கள் வேலையிழந்து ஆயிரம் கிலோமீட்டருக்கு மேல் தங்கள் சொந்த கிராமத்திற்கு கால்நடையாக நடந்து கொண்டு இருக்கிறார்கள். இப்போதுதான் அமைப்புசாரா தொழிலாளர்களைப் பாதுகாக்க சட்டம் ஏதும் இல்லையா? என்ற கேள்வி எழுகிறது.
சோவியத் நவம்பர் புரட்சிக்குப்பின் 1926இல்தான் இந்தியாவில் தொழிற்சங்கச் சட்டம் வருகிறது. அதில் சங்கம் வைத்துக்கொள்ளவும் உரிமைக்காக போராடுவும் தொழிலாளர் நலனுக்காக மக்களை அணிதிரட்டவும் உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்திய விடுதலைக்குப்பின் தொழிலாளர்களுக்காக 44 சட்டங்கள் இயற்றப்பட்டன. சட்டப்பாதுகாப்பு, சமூகப்பாதுகாப்பு, குடியுரிமை, பணிப்பாதுகாப்பு, L.T.C., E.S.I., P.F., தொழில் தகராறுச் சட்டங்கள், தொழிலாளர்நல அமைச்சகம், தொழிலாளர் துறை என அனைத்தும் தொடங்கப்பட்டன. ஆரம்ப காலகட்டத்தில் தொழிலாளர்களின் உரிமை எப்படி இருந்தது என்பதற்கு சாட்சி அன்று நகராட்சியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு E.S.I, குறைந்தபட்ச ஊதியம், P.F என அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்டன. அதேபோல் மத்திய தொழிற்சாலைகளில் H.A.L., B.H.E.L., தனியார் வங்கி, இன்சூரன்ஸ் கம்பெனிகள் போன்றவற்றிலும் கூட அனைத்து தொழிலாளர்களும் நிரந்தரத் தொழிலாளர்களாகவே இருந்திருக்கினர்.
1971-ல் Contract Regulation And Abolition Act என்கிற ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரத் தொழிலாளியாக ஆக்கக்கூடிய சட்டம் அது. துப்புரவு, உணவகங்கள், தோட்டப் பராமரிப்பு, பாதுகாப்பு பணி ஆகிய தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களை நிரந்தரமாக்கச் சொல்லும் அரசாணை 1976 இல் ஒன்றிய அரசால் பிறப்பிக்கப்பட்டது. இந்த சட்டத்தை அடிப்படையாக வைத்து நடந்த வழக்கில் தான் பல ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தரமாக்கப்பட்டனர். 1997-இல் நடந்த ஏர்இந்தியா வழக்கில் உச்சநீதிமன்றம் ஒப்பந்த தொழிலாளர்கள் 240 நாட்கள் வேலை செய்தால் அவர்களை நிரந்தர தொழிலாளர்களாக மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த தீர்ப்பின் விளைவாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நிரந்தர தொழிலாளர்களானார்கள்.
2002-இல் வாஜ்பாய் தலைமையிலான இந்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதில் துப்புரவு, உணவகங்கள், நான்கு சக்கர வாகன ஓட்டுநர்கள் முதலிய தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களை நிரந்தரமாக்கத் தேவையில்லை என்று அந்த கூட்டத்தில் தீர்மானம் போடப்பட்டது. 2001 இல் ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா வழக்கு தொடர்பான தீர்ப்பில் உச்சநீதிமன்றம் ஒப்பந்த தொழிலாளர்கள் வைத்துக்கொள்வதை அனுமதித்து தீர்ப்பு வழங்கியது. இத்தகைய நடவடிக்கைகள் மூலம் பலகோடி தொழிலாளர்கள் அமைப்புசாரா தொழிலாளர்களாக மாற்றப்பட்டார்கள். இதற்கான பின்னணியாக நாம் பார்க்கவேண்டியது தனியார்மயத்தைதான்.
1991-க்குப்பிறகு இந்தியாவில் தாராளமயம் தனியார்மயம் உலகமயம் என்ற கொள்கையை ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் முழுவீச்சுடன் செயல்படுத்தத் தொடங்கின. அதன் பிறகுதான் பன்னாட்டு பெருநிறுவனங்களின்-முதலாளிகளின் மூலதனம் தங்கு தடையின்றி இந்தியாவுக்குள் நுழைந்தன. அதன் பிறகு இந்தியாவில் தொழிலாளர் சட்டங்கள் பெருங்கடலில் போட்ட உப்பைப் போல் மாறத் தொடங்கின. பெருமுதலாளி நிறுவனங்களின் நோக்கம் தங்களின் தேவைக்கு ஏற்ப வேலைகளை-ஆட்களை சேர்க்கவும் நீக்கவும் (hire and fire) தங்கு தடையற்ற உரிமை வேண்டும்; தாங்கள் தருகின்ற கூலியை ஏதும் பேசாமல் வாங்கிக் கொள்ளும் ஆட்கள் வேண்டும் என்பது தான். இதை செயல்படுத்துவதற்காக தொழிற்சாலைகளில் ஒப்பந்த தொழிலாளர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. நிரந்தரத் தொழிலாளர்கள் தங்களுக்கான சுதந்திரமான தொழிற்சங்கம் அமைப்பதை ஆட்சியாளர்கள் துணையுடன் முதலாளிய நிறுவனங்கள் ஒடுக்கின.
இன்று இந்தியாவில் அமைப்பு சார்ந்த துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களை விட அமைப்புசாரா தொழில்துறையில் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம். 2012 நிலவரப்படி இந்தியாவில் கிட்டத்தட்ட 48.7 கோடி தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இதில் 94% பேர் அமைப்புசாரா தொழிலாளர்கள். 2016 நிலவரப்படி கிட்டத்தட்ட 10 கோடி பேர் இந்தியா முழுவதும் புலம்பெயர் தொழிலாளர்களாக இருக்கிறார்கள். இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகை தங்கள் சொந்த ஊர்களில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள்.
இப்படிப்பட்ட சூழலில் தான் இந்த ஊரடங்கு உத்தரவிடப்பட்ட பிறகு பல லட்சம் தொழிலாளர்கள் (பலர் குடும்பத்துடன்) கால்நடையாக தங்கள் ஊர்களுக்கு நடந்து செல்லும் வலி நிறைந்த வேதனை மிக்க காட்சியை நாம் பார்த்திருப்போம். அவர்கள் இறந்து போனாலும் அவர்கள் குழந்தைகள் பசியால் நடுங்கினாலும் உணவிற்கும் பாதுகாப்பிற்கும் அவர்களைக் கேட்பாரற்ற கூட்டமாக மாற்றிய இந்த அரசாங்கத்தின் கொள்கை முடிவு ஏழைகளுக்கு எதிரான மனநிலையையே காட்டுகிறது. ஊரடங்குக்கு உத்தரவிடும் போது ஒரு அரசு என்பது அதனுடைய அனைத்துத்தரப்பட்ட மக்களையும் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். ஏற்கனவே மத்திய மோடி அரசனுடைய தவறுதலான பொருளாதாரக் கொள்கையினால் பொருளாதாரம் கடும்வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் போது, இந்த 21 நாள் ஊரடங்கு ஆனது மேலும் கோடிக்கணக்கான வேலைவாய்ப்பை இழக்கும் சூழலை ஏற்படுத்தி இருக்கிறது. இவர்களுக்கு எந்தவித சமூகப் பாதுகாப்பும் அரசினுடைய சட்டப் பாதுகாப்பும் கிடையாது. ஒவ்வொரு நாளும் உடல் உழைப்பைத் தந்தால் தான் வீட்டில் அடுப்பு எரியும் என்பது தான் இவர்களுடைய வாழ்க்கை முறை.
ஆட்சியாளர்கள் பெருநிறுவனங்கள் மற்றும் பணக்காரர்களை மனதில் வைத்து திட்டமிடும்போது, 48 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் பற்றி கவனத்தை எடுத்துக் கொள்ளாது என்பதே கார்ப்பரேட் அரசுகள் யாருக்காக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள் முதலே கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உணவு கிடைக்காமல் பசியாலும், வெயில் கொடுமை தாங்காமல் தண்ணீரில்லாமல் மயக்கத்தினால் உயிர் இழந்திருக்கிறார்கள். இதில் 5 பேர் குழந்தைகள். உண்பதற்கு வழியில்லை என்ற நிலையில் 8 வயது சிறுவன் பசியில் மடிகிறான். இந்த சம்பவங்கள் அனைத்தும் அனைவரின் மனசாட்சியையும் உலுக்கியிருக்க வேண்டும். ஆனால் 21 நாள்கள் ஊரடங்கினை உத்தரவிட்ட போது இப்படி இந்தியாவில் சரி பாதிக்கு மேல் இருக்கக்கூடிய தொழிலாளர்களுக்கு, அவர்களுடைய உணவுத் தேவைபற்றியோ, அவர்களுக்கான நிதிப் பங்களிப்பை அளிப்பதைப் பற்றியோ மற்றும் அவர்களுக்குத் தேவைப்படும் மருத்துவ வசதி பற்றியோ இந்த அரசாங்கம் யோசித்ததா என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டும்.
தொலைக்காட்சி அல்லது முகநூல் வாயிலாக தொழிலாளர்களின் அவலநிலையைப் பார்க்கும் போது, திரையில் பார்த்த பாகிஸ்தான் பிரிவினை போது நிகழ்ந்த இடப்பெயர்வுக் காட்சிகள் நினைவுக்கு வருகின்றன. இந்த சூழலில் இந்திய அரசு அறிவித்திருக்கும் நிவாரணத்தைப் பாருங்கள்! வெறும் இரண்டு நாள் சம்பளம், 5 கிலோ தானியங்கள் கொண்டு ஊரடங்கில் வாழவேண்டும் என்றால் நம்மால் நினைத்துப் பார்க்க முடிகிறதா? இந்த கொரோனா நோய் தாக்கத்தினால் பொருளாதார நெருக்கடி நிலையை விட தற்போது உயிர்காத்தல் / தப்பித்தல் என்ற நெருக்கடியும் சேர்ந்து இணைந்துள்ளது.
இந்த சூழலில் தான் உலக நாடுகள் பல தங்களுடைய குடிமக்களுடைய அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்து வருகிறது. குறிப்பாக அமெரிக்க அரசு சூழலை எதிர்கொள்ள 2 லட்சம் கோடி டாலர் நிவாரண நிதி அளித்துள்ளது. இது அந்நாட்டு மொத்த உற்பத்தியில் (ஜிடிபியில்) 10%. ஆண்டுக்கு 75 ஆயிரம் டாலருக்குக் குறைவான வருமானம் உள்ளவர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் 1000 டாலர் நிவாரணத் தொகையாக வழங்கி இருக்கிறது. அதுபோல் திருமணமானவர்களுக்கு 2400 டாலர் குழந்தைகள் இருப்பவர்களுக்கு 500 டாலர் என்ற அடிப்படையில் உதவித் தொகையினை அதிகரிக்கும் திட்டத்தினை அறிவித்திருக்கிறது. அதேபோல் டென்மார்க் மற்றும் நெதர்லாந்து அரசுகள் தங்கள் நாட்டில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களை வேலைவிட்டு நீக்கிவிடக்கூடாது என்பதற்காக, அவர்களுக்கான ஊதியத்தில் 75% முதல் 90% பணத்தை அரசே வழங்குவதாக உறுதியளித்து இருக்கிறது.
ஆனால், இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள சூழ்நிலையில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கூலியை 182-லிருந்து 202-ஆக உயர்த்தப்படும் என்று சொல்வது எவ்வளவு பெரிய மோசடி? ஊரடங்கு காலகட்டத்தில் அவர்கள் எங்கே வேலைக்கு போக முடியும்? இதுகூட அடிப்படையாக ஒரு அரசுக்கு தெரியாமல் இருக்குமா? இதில் பல லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு கடந்த வருடம் பட்டுவாடா செய்யப்பட வேண்டிய பணமே இன்னும் நிலுவையில் இருப்பதாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் தொழிலாளர்களுக்கான சங்கம் அறிவித்துள்ளது. இப்படிப்பட்ட அன்றாடத் தொழிலாளர்கள் கோடான கோடி பேர் இந்த நாட்டுடைய பிரதமர் தங்கள் பசியைப் போக்க என்ன வழி சொல்வார் என்று ஆவலாக இருக்கும் பொழுது தொலைக்காட்சியில் பிரதமர் நரேந்திர மோடி தோன்றி ’கைதட்டுங்கள்’, ’விளக்கு ஏற்றுங்கள்’, 'நாம் அனைவரும் ஒன்று என்று நிரூபிப்போம்' என்று சொல்கிறார். ஆனால், இந்திய மக்கள் அனைவருக்கும் தனித்தனியாக வயிறும் பசியும் இருக்கும் என்பதை மோடி மறந்து விட்டார் போலும்.
இப்பொழுது அடுத்த முறையும் தொலைக்காட்சியில் தோன்றி மக்களுக்கு என்ன டாஸ்க்கினை பிரதமர் கொடுப்பார் என்ற அச்சத்தில் ஏழை எளிய மக்களும் நடுத்தர மக்களும் இந்தியாவில் ஒருவித பயத்துடன் உள்ள நேரத்தில், இந்திய சர்க்கார் நிவாரண நிதியாக ரூபாய் 1.7 லட்சம் கோடியைஅறிவித்திருக்கிறது. இது இந்தியாவின் ஜிடிபியில் 0. 8 சதவீதம்தான். நெருக்கடியான சூழலில் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத மக்களைப் பாதுகாக்கும் வகையில் ஒதுக்கப்படுவது நிவாரண நிதி. ஆனால், கிட்டத்தட்ட அரசு அறிவித்து இருப்பதை விட இன்னும் 5 மடங்கு நிவாரண நிதியை அதிகரித்தால் மட்டுமே நோயால் உயிரிழப்பவர்களை விட அதிகமாக பசியால் உயிரிழக்கும் அவலத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.
தற்போதைய சூழலில் இந்திய அரசு அறிவித்து இருக்கும் நிவாரண நிதியில் வெறும் 60,000 கோடி அளவில் மட்டுமே நேரடியாக மக்களுக்குச் சென்று சேரும். எனவே தற்போது இந்திய அரசு அறிவித்திருப்பது நிவாரண நிதியாகவே வகைப்படுத்த முடியாது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சிலிண்டர்கள், உணவு விநியோகம், கைம்பெண்கள் மற்றும் முதியோருக்கான கருணைத் தொகை இந்த மூன்று பிரிவுகளில் மட்டுமே கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்றவையெல்லாம் மத்திய அரசின் கீழ் ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்கள் தான். உதாரணமாக ஜெய் கிசான் திட்டத்தை எடுத்துக் கொள்வோம். இந்த திட்டத்தின் மூலம் ஒன்றிய அரசு 8.6 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாயை மூன்று தவணைகளாக வழங்குவதாக சொல்லப்பட்டது. அந்த வகையில் தற்போது ஒரு தவணையை, அதாவது ரூபாய் இரண்டாயிரத்தை முன்னதாகவே வழங்கப் போவதாக அறிவித்திருக்கிறது. இது அந்த திட்டத்தின் கீழ் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகைதான். அதை முன்னதாக வழங்குவதை எவ்வாறு நிவாரண ஒதுக்கீடாக எடுத்துக் கொள்ள முடியும்?
நாடு முழுவதும் 5.1 கோடி கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளனர். ஆனால், கட்டுமான தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்களுக்கு பெறப்பட்ட நிதியில் ரூபாய் 30 ஆயிரம் கோடியை மாநில அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறுகிறது. இதன்மூலம் 3.5 கோடி கட்டுமான தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால், இந்தியாவில் பதிவு செய்யாத கட்டுமான தொழிலாளர்கள் 3 கோடிக்கு மேல் உள்ளனர். பதிவு செய்யப்படாமல் இருப்போருக்கு என்ன செய்யப் போகிறது அரசு? இந்த தொகையும் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியில் முறையாக செலவிடப்படாமல் இருந்த தொகைதான்.
எல்லாவற்றுக்கும் மேலாக அரசு அறிவித்திருக்கும் நலத்திட்டங்கள் என்பது ’பதிவு செய்த தொழிலாளர்களுக்கு’ மட்டுமே வழங்கப்படும் என்பதே மிகப்பெரிய அதிர்ச்சி தான். இந்தியாவில் படிப்பறிவு இல்லாமல், கிராமங்களில் வாழும் மக்கள் அதிகம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பதிவு செய்யாத - படிப்பறிவு இல்லாத நபர்களை இந்திய அரசு கைவிட்டு விடும் அபாயம் உள்ளது. இந்தியாவில் சுமார் 18 லட்சம் பேர் வீடற்றவர்களாக சாலையோரங்களிலும் 7.3 கோடி பேர் எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் சாலையோரங்களில் துணி/தகரத்தை வைத்து சிறுகட்டுமானத்தை ஏற்படுத்தி வீடுகளாகப் பயன்படுத்து வாழுகின்றனர். இவர்களை இந்த அரசு கைவிடப்பட்ட மக்களாகக் கருதுகிறார்களா அல்லது ஏழை மக்கள் என்ற காரணத்தினால் செத்தொழியுங்கள் என்று மறைமுகமாகச் சொல்கிறார்களா என்ற கேள்வி நம்மிடையே எழுகிறது.
இந்த நாட்டில் கொரோனா நோய் பரவாமல் தடுப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் உழைக்கக்கூடிய மக்களின் உயிரை பசியிலிருந்து காப்பாற்றுவது. உலக அரங்கில் சமூக நலத்திட்டங்களில் மிகமோசமாக செயல்படும் நாடாக இந்தியா இருந்து வருகிறது. ஒவ்வொரு மணிநேரமும் போதிய ஊட்டச்சத்து இல்லாமல் 46 குழந்தைகள் இந்தியாவில் இறக்கின்றனர். உலகில் கொடுமையான வறுமையில் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 7 கோடியே 2 லட்சம் மக்கள் மிக மோசமான வறுமையில் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 38% பேர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தேசிய குடும்பநல மற்றும் சுகாதார அமைப்பு மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட்டு உள்ள குழந்தைகளில் 72 சதவீதம் பேர் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி செய்தியும் அதிலிருந்து தெரிய வருகிறது. உலக ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள குழந்தைகளில் 50 சதவீத குழந்தைகள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்கின்றன சமீபத்திய புள்ளி விவரங்கள். ஏற்கனவே இந்தியாவில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் வறுமையினால் உயிரிழந்துள்ளனர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த தரவுகளில் இருந்து தான் நாம் அரசுகளை நோக்கிய கேள்விகளை எழுப்ப வேண்டியிருக்கிறது.
புலம்பெயர் தொழிலாளர்களின் நிலைமையைக் கவனத்தில் கொண்ட உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து கேள்வியெழுப்பிய போது, அரசு தரப்பில் பதிலளித்த ஒன்றிய அரசுத் தலைமை வழக்கறிஞர் துஷெர் மெஹ்தா, “கிட்டத்தட்ட 23 லட்சம் பேருக்கு உணவுகளையும் தண்ணீரையும் பாதுகாப்பையும் வழங்கியிருக்கிறோம்” என்றும் “யாரும் பாதசாரிகள் இல்லை” என்றும் பொய்யான தகவலை உச்சநீதிமன்றத்தில் மார்ச் 31 ஆம் தேதி கூறியிருக்கிறார். இதற்கு பிறகுதான், மகாராஷ்டிரா மாநிலம் வர்தா என்னும் இடத்தில் தங்கி அங்குள்ள கல்லூரியில் உணவு பதப்படுத்தல் துறையில் பயிற்சி மாணவனாக படித்து வந்த, நாமக்கல் மாவட்டத்தில் சொந்த ஊரைக் கொண்ட மாணவர் பாலசுப்பிரமணி லோகேஷ், ஊரடங்கு உத்தரவு காரணமாக 30 மாணவர்களுடன் தங்களின் சொந்த ஊர்களுக்கு நடந்து செல்வது என முடிவு செய்தனர். கிட்டத்தட்ட 1340 கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டியிருந்தது.
எப்படியாவது சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் என 30 மாணவர்களும் நடைபயணமாக வாய்ப்பு கிடைத்த சில இடங்களில் லாரி மூலமாக பயணம் செய்து, கிட்டதட்ட 9 நாள்கள் தொடர்ந்த பயணத்தில் 490 கிலோமீட்டர் தூரம் கடந்த நிலையில்,தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் வந்தவர்கள் சமுதாய நலக்கூடத்தில் இரவு தங்கியிருக்கின்றனர். முகாமில் இருக்கும் ஒரு நாற்காலியில் அமரும் போது லோகேஷ் திடீரென நிலைதடுமாறி மயங்கி விழுந்திருக்கிறார். மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த மருத்துவர் அவர் மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக தெரிவித்திருக்கிறார்.
3 நாட்களாக தொடர்ச்சியாக நடந்து வந்ததால் அவருக்கு உடலில் நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்பட்டு அதன் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மற்றோருபுறம் வேலைகளை இழந்த தொழிலாளர்களை பேருந்துகளில் மீட்க 600 முதல் 1000 பேருந்துக்கட்டணத்தை வசூலித்திருக்கிறது, உத்திரப் பிரதேசத்தில் யோகி அரசு. இதைவிட கொடூரமாக தங்களது ஊர்களுக்குத் திரும்பிய தொழிலாளர்களை ஆட்டு மந்தைகளைப் போல் அனைவரையும் ஓரிடத்தில் அமரவைத்து அவர்கள் மேல் இரசாயனத் தண்ணீரைப் பாய்ச்சி அடித்து சுத்தம் செய்திருக்கிறது. அடிப்படையில் ஏழைகளை, அடிப்படை மனித மாண்புள்ளவர்களாகக்கூட இந்துத்துவ அரசு நடத்தவில்லை.
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அடுத்த மூன்று மாதத்திற்கு குறைந்தபட்சம் 25 நாட்களுக்கான ஊதியத்தையும் ஓய்வூதியத்தையும் இரண்டு மடங்காக வழங்க வேண்டும். விலையில்லா தண்ணீர் மற்றும் இலவச மருத்துவத்தை அடிப்படையாகக் கொடுக்க வேண்டும். நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் பொருள்களை இரண்டு மடங்காக அளிக்க வேண்டும். கூடுதலாக வீடில்லாத குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் புலம் பெயர்ந்த தனிநபர்களுக்கும் பொது சமையலறையை உருவாக்கி அரசே உணவு வழங்க வேண்டும். இந்திய அரசு உடனடியாக தன்னுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்தை மருத்துவக் கட்டமைப்புக்கு செலவிடுவதற்கு உறுதியளிக்க வேண்டும். இந்தத் திட்டம் அனைவருக்கும் இலவசமாக ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலை மருத்துவ சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். இந்த அடிப்படைத் தேவைகள் உடனடியானவை என்பதால் நியூசிலாந்து மற்றும் ஸ்பெயின் அரசுகள் தங்கள் தனியார் மருத்துவக் கட்டமைப்பை நாட்டுடமை ஆக்கியது போல் இந்திய அரசாங்கமும் அதே வழிமுறையை அவசரமாகப் பின்பற்ற வேண்டும். எந்த நோயாளியும் கொரோனா பரிசோதனைக்காக சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டால் அதற்காக கட்டணம் வசூலிக்கப்படக்கூடாது என்பதாக அவசரச் சட்டம் இயற்றப்பட வேண்டும்.
இந்த நேரத்தில் கூடவா அரசை நோக்கி கேள்வி எழுப்புவார்கள் என்பவர்களுக்கு மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்திலும், இந்திய ஒன்றிய அரசு 116 மில்லியன் டாலர்களுக்கு இஸ்ரேலிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கும் ஒப்பந்தத்தைக் கமுக்கமாக முடித்திருக்கிறது. அதுவும் தொழில் முடங்கி சோற்றுக்கு வழியில்லாமல் கிடக்கும் மக்களிடம் நிதி தாருங்கள் என்று கேட்கிறார் மோடி. ஆனால், அதே நேரத்தில் அம்பானி, GMR, அதானி, ESSAR, டாடா போன்ற கார்ப்பரேட் முதலாளிகள் அரசு வங்கிகளுக்கு திருப்பி அளிக்க மறுக்கும் 10 லட்சம் கோடி பணத்தைக் கேட்க ஏன் மோடி – ஆர்எஸ்எஸ் மற்றும் வலதுசாரி சிந்தனையாளர்களுக்கு இந்நேரத்தில் கூட தைரியம் வருவதில்லை?
ஓ.... இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருக்கும் 56 இன்ச் மார்புடைய மோடி அரசாங்கமே! ஒரு தரப்பு மக்களுடைய பாதுகாப்பையும் மருத்துவத்தையும் உணவையும் பேணிப் பாதுகாப்பது மட்டும் இந்தியாவை வல்லரசாக, நல்லரசாக மாற்றிவிடாது! கோடான கோடி உழைக்கும் வர்க்கத்தை உடைய இந்தியாவில், ’ஒரு குறிப்பிட்ட மக்களின்’ வாழ்வாதாரத்தையும் சுகாதாரத்தையும் மற்றும் அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்ய விரும்பினால், இந்த தொற்றுநோயின் முடிவின் மறுப்பக்கத்திற்கு வரும்போது நீங்கள் ஆட்சி செய்யும் கோடான கோடி கிராமங்கள் இல்லாமல், மக்கள் இல்லாமல் தொழிலாளர்கள் இல்லாமல், குழந்தைகள் இல்லாமல், ஏழை எளிய மக்கள் இல்லாமல், நடுத்தர மக்கள் இல்லாமல், முதியவர்கள் இல்லாமல், மாற்றுத்திறனாளிகளும் திருநங்கைகளும் இல்லாமல் உங்கள் அரசு யாருக்கானதாக எவருக்காக இருக்கப் போகிறது?
பிரதமர் மோடி அவர்களே நீங்கள் சொல்லுவதை எல்லாம் மக்கள் கேட்கிறார்கள் என்ற பூரிப்புடன் இருக்காதீர்கள்! நோய் தொற்றின் அபாயத்தை இந்தியா இன்னும் உணரவில்லை. இந்தியாவில் சரியான சோதனை முறைகளை மேற்கொள்ளுதல் மற்றும் இன்னும் பல லட்சம் பேரை ஒரு நாளில் பரிசோதித்தல் ஆகியவற்றை விரைவாக செய்தால் மட்டுமே இந்த நாடும் நாட்டு மக்களும் உங்கள் ஆட்சியில் தப்பிப்பார்கள். எப்போதுமே உங்கள் மாளிகையிலிருந்து உயர்ந்த மாடிக் கட்டடங்களை மட்டும் பார்க்காமல், உங்கள் கண்ணாடிகளைத் துடைத்து ஏழைகள் உடைய குடிசை வீடுகளையும் பாருங்கள்! அப்போது உங்களுக்குப் புரியும் எங்களின் நிலைமை. அடுத்தமுறை நீங்கள் தொலைக்காட்சியில் வரும்பொழுதும் உங்களை அச்சத்துடனே பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியாவுடைய பெரும்பான்மை மக்களில் நாங்களும் ஒருவர்.
நீங்கள் செயல்படும் வரை உங்கள் அரசு பூதக்கண்ணாடி போட்டு மக்களைப் பார்க்கும் வரை சாமானியனுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் தீர்வு வரும் வரை எங்கள் குரல்களும் எங்கள் முழக்கங்களும் எங்கள் விரல்களும் உங்களை நோக்கி கேள்வி எழுப்பிக் கொண்டே இருக்கும்!
- மே 17 இயக்கக் குரல்