(ஆளும் வர்க்க சேவையில் பகிரங்கமாக இறங்கி விட்ட போலி மா.அ.க கும்பலின் ‘பிளீன’ அறிக்கைக்கு மறுப்பு)

வினவு இணையதளத்தில் மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க. (மா-லெ), தமிழ்நாடு பெயரில் “வலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம்! SOC –CPI (ML) 10 வது பிளீன அறிக்கை!” என்ற தலைப்பில் 13.1.2021 அன்று பொய் செய்தி (Fake News) ஒன்று வெளியிடப் பட்டுள்ளது. இதற்கு எமது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ச்சியாக பொய் செய்திகள் வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என சட்ட விரோதமாகவும் சதித்தனங்களின் மூலமும் வினவு தளத்தைக் கைப்பற்றியுள்ள உதிரிக்கும்பலுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம்.

கடந்த 2020-ம் ஆண்டு, அக்டோபர் 13 ந்தேதி மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க. (மா-லெ), தமிழ்நாடுவின் 10வது பிளீனம் நடத்தப்பட்டு புதிய தலைமை தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டது. அந்த செய்தி சமூக வலைதளங்களிலும், கீற்று போன்ற இணையதளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னாள் செயலர் தரப்பின் அதிகாரத்துவம், பிளவுவாத, சீர்குலைவு நடவடிக்கைகளை முறியடித்த அந்த பிளீனம் எமது கட்சியின் வரலாற்றில் மாபெரும் திருப்பு முனையாக அமைந்தது. இந்நிலையில், வினவு தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் பல அவதூறுகளும், திரிபுகளும் உள்ளன. அவற்றை மறுத்து இவ்வறிக்கையை வெளியிடுகிறோம்.

இரு கோடுகள் தத்துவம்: சின்னக் கோட்டுக்கு அருகில் பெரிய கோடு!

2019 ஆம் ஆண்டு அக்டோபர் 7 -ம் தேதி அமைப்பின் தலைமைக் கமிட்டியில் இருந்த இரு தோழர்கள் தலைமைக் குழுவில் நேர்மையின்மையும், அதிகாரத்துவமும் இருப்பதாக விமர்சனமாக முன்வைத்து தலைமைப் பொறுப்புகளில் இருந்து விலகி, கீழிருந்து வேலை செய்வதாக சக கமிட்டி தோழர்களிடம் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை நேர்மையாகப் பரிசீலனை செய்யாத தலைமை, பின்புற வழியில் அவர்களை அமைப்பில் இருந்தே ஓரம் கட்டவும், ஒழித்துக் கட்டவும் தயாரிப்பு செய்து கொண்டிருந்தது.

பிப்ரவரி 2020 மாநாடு வரை கட்சிக்குள் போராடிக் கொண்டு பொறுமையுடன் காத்திருந்த அந்த இருவரும் பிப்ரவரி -24, 2020 -ல் அமைப்பு முறைகளை மீறி பொது வெளியில் தங்களது விலகலை அறிவித்தனர். அந்த விலகல் அறிவிப்பு அணிகள் மத்தியில் தலைமையின் மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியது.

இதனால் வேறு வழியின்றி பதவி விலகுவதாக சுற்றறிக்கை எண் 12, 13 ஆகியவற்றின் மூலம் மா.அ.க VIII அணிகளுக்கு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து கூட்டப்பட்ட மார்ச் -8 சிறப்புக்கூட்டத்தில் மா.அ.க VIII கட்சிக்கு தலைமை தாங்கும் தகுதியை இழந்து விட்டதென கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பான்மை தோழர்களால் முடிவெடுக்கப்பட்டது.

பிளீனம் நடத்தவும், அரசியல் இயக்கங்களுக்கு வழிகாட்டும் பொறுப்பும் அக்கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடைக்காலக் கமிட்டிக்கு (இ.கா.க) தரப்பட்டது. புதிய தலைமையைத் தேர்ந்தெடுக்கும் பிளீனம் நடத்தப்படும் வரையில் அமைப்பை பராமரிக்கும் பணியை மட்டும் மா.அ.க VIII செய்யலாம்; புதிய முடிவுகள் எடுப்பதோ, சுற்றறிக்கைகள் அனுப்புவதோ கூடாது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

ஆனால் அதிகார போதை கொண்ட, கையடக்கமே இருந்த முன்னாள் செயலர் தரப்பு, அணிகளின் ஜனநாயக உரிமைகளை துச்சமாகக் கருதிய மார்ச்-8 சிறப்புக் கூட்ட முடிவுகளை காலில் போட்டு நசுக்கியது. தலைமையின் இந்த வரம்பற்ற அதிகாரத் திமிரை எதிர்த்து மேலும் இரு தோழர்கள் அக்கமிட்டியிலிருந்து விலகினர்.

இவை குறித்தும், இன்னும் பிற குற்றச்சாட்டுகளையும் கொண்ட ஒரு தரப்பு கருத்துக்களை ‘10 வது பிளீனத்திற்கான மா.அ.க வின் அறிக்கைகள்’ என்ற பெயரில் முன்னாள் செயலர் தரப்பு இ.கா.க விடம் தவணை முறையில் ஒப்படைத்தது. இவ்வாறு கொடுத்த ஆவணங்களை சுற்றுக்கு விடத் தேவையான நிதியைத் தராமல் இ.கா.க-வுக்கு ‘சத்திய சோதனை’ வைத்தது.

தனது தவறுகள் கீழே சென்று விடக்கூடாது என்ற உள்நோக்கத்துடன் பல சதித்தனங்களில் இறங்கியது. ஆனால் பல தடைகளை மீறி இ.கா.க ஆவணங்களை சுற்றுக்கு விட்டது. இந்த ஆவணங்களையும் பிற ஆவணங்களையும் படித்து கருத்துக்களை தொகுத்துக் கொண்ட பிறகு பிளீனம் நடத்தப்பட இருந்தது.

இவை ஒருபுறம் நடக்கும் போதே தொழிலாளர் அரங்கின் பொதுச் செயலர் நில மோசடி மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்டதாக நக்கீரன் இதழில் செய்தி வெளியானது. உடனே தனது ’கற்பை’ நிரூபிக்க முன்னாள் செயலர் தரப்பு அமைப்பு முடிவையும், அமைப்பு முறையையும் மீறி தொழிலாளர் அரங்கு பொதுச் செயலரின் ஊழல் பிரச்சினையையொட்டி அறிக்கை ஒன்றை நேரடியாக அணிகளுக்கு சுற்றுக்கு விட்டனர்.

அத்துடன் இந்த ஊழல் பிரச்சினையை – உடனடியாகத் தீர்க்க வேண்டிய கிரிமினல் குற்றப் பிரச்சினையை - தள்ளிப் போட்டு பிளீனம் நிகழ்ச்சி நிரலில் இணைக்க முன்வைத்தனர். இந்த அதிகார வர்க்க அணுகுமுறை மார்ச்-8 சிறப்புக் கூட்ட முடிவுக்கு எதிரானது என்றும், அதிகாரத்தை தானே கையில் எடுக்கும் தவறு என்றும் அணிகளும் இ.கா.கவும் இடித்துரைத்து விமர்சனமாக சுட்டிக்காட்டினர்.

தொழிலாளர் அரங்கு பொதுச்செயலரின் ஊழலுக்கு துணைபோன முன்னாள் செயலர் மற்றும் நேரடியாக அவரை இயக்கிய தோழர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சரி என்பதால், அது குறித்து தனது கருத்தை முன்வைத்து இ.கா.க அணிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியது. அதில் அணிகளிடம் கருத்து கேட்டு முடிவு செய்வதே சரியென முன்வைத்தது.

இந்நிலையில் தலைமையைக் கைப்பற்ற இடைக்காலக் கமிட்டி சதிசெய்து விட்டதாக மா-லெ இயக்கத்தில் இல்லாத அபத்தங்களை அவிழ்த்து விட்டது. இடைக்காலக் கமிட்டியை கலைத்து விட்டதாக அறிவித்து கடிதம் ஒன்றை தயாரித்துக் கொண்டு, 'இதனை ஏற்பவர்கள் மட்டுமே கட்சியில் நீடிக்க முடியும்; மற்றவர்கள் அனைவரும் சதிகாரர்கள்!' என்று அவதூறுகளை அடுக்கி அமைப்பைப் பிளவு படுத்தும் வேலையில் இறங்கியது.

இந்தப் பிளவு வெளியில் பலரும் விமர்சிப்பதைப் போல அரசியல் ரீதியான பிளவு அல்ல! தலைமைப் பொறுப்பில் நீண்ட காலம் இருந்து பதவி சுகம் கண்ட முன்னாள் செயலரும் அவரது சகபாடிகளும் அதிகாரத்தை கேடான வழியில் தக்க வைத்துக் கொள்வதற்கான சதி! இதற்காக இந்த மலிவான செயலில் இறங்கி மாநில அமைப்புக் கமிட்டியின் மீது அணிகளும், ஆதரவாளர்களும், பிற புரட்சிகர, ஜனநாயக சக்திகளும் வைத்திருந்த மதிப்பு மரியாதை அனைத்தையும் தவிடு பொடியாக்கினர்.

பார்ப்பன பாசிசம் ஏறித் தாக்கி வரும் சூழலில் கட்சியமைப்பை பிளவுபடுத்தி ஆளும் வர்க்க சேவையில் இறங்கினர். மக்கள் திரள்வழி என்ற மகத்தான அரசியல் திசைவழியில் எண்ணற்ற தோழர்கள் தங்கள் தியாகத்தால் உருவாக்கிய அமைப்பை சிதைத்து ’இடது’ பாணியில் செல்லத் துவங்கினர்.

இந்த கேடுகெட்ட செயலுக்கு போல்ஷவிக் கட்சி என்றெல்லாம் பெயர் சூட்டிக் கொண்டனர். தனது கெட்டி தட்டிப்போன கம்யூனிச விரோத அதிகார வர்க்கத் தவறுகளை மூடி மறைக்க முயன்று, கம்யூனிஸ்டுகளுக்கே உரிய நேர்மையை உதறித் தள்ளி, நேர்மையற்ற முறையில் நடந்து கொண்டனர்.

கட்சியமைப்புக்கு கட்டுப்படாமல் மொத்த அமைப்பையும் அவதூறு செய்த சீர்குலைவுவாதிகளின் ஆணிவேரான மூத்த தோழர் ஒருவரையும், மா.அ.க வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் நிலமோசடி, நிதி மோசடி புரிந்த ஊழல் பேர்வழியையும் காப்பாற்றத் துணிந்தனர்.

‘வலது திசை விலகல்’ என்ற பெரிய கோடு போட்டு அதிகாரத்துவம், நேர்மையின்மை ஆகியவற்றை சின்னக் கோடாக மாற்றித் தப்பிக்க முனைந்தனர். இந்த கம்யூனிச விரோத, முதலாளித்துவ வர்க்க பண்பு 9வது பிளீன அறிக்கைகளில் முன்னாள் செயலர் தவறாக முன்வைத்த ஆதிபாவத்தின் தொடர்ச்சியான மீதிபாவம்தான் என்பதே மறுக்கவியலாத உண்மை. இனி இவர்களின் அறிக்கையைப் பரிசீலிப்போம்!

பொய் நெல்லைக் குத்தி சோறு பொங்க முடியாது!

தவிட்டு உமியை புடைக்காமல் அரிசி கிடைக்காது!!

செயல்தந்திரத்தை வகுக்காத, எட்டாண்டு அரசியல் அமைப்பு அறிக்கையை பரிசீலித்து பொதுத்திசைவழி- பொதுவேலைத்திட்டத்தை வகுக்காத தனது அரசியல், அமைப்பு ஓட்டாண்டிதனங்களை மறைக்க “தலைமையில் இருந்து விலகிய இருவரும்தான் இ.கா.கவை இயக்குகிறார்கள்” என்றும் “மா.அ.க என்ற பெயரில் கடிதங்கள் அனுப்பியதை ஏற்க மறுத்த கட்சியின் அணிகளை ‘விலகிய ஒருவரின் அணி’என்றும், விலகியவர்கள் தேர்தல் அரசியலுக்கு செல்லப் போகின்றனர்” என்றும், “கட்சியமைப்பு வேண்டாம் மக்கள் திரள் அமைப்புகளே புரட்சி நடத்திவிடும் என்கின்றனர்” என்றும், “தமிழின பிழைப்புவாதிகள், திராவிட கழகத்தினர் பாணியில் தலைமையில் இருந்து விலகியவர்கள் அனைவரும் ஒரு சாதிக்காரர்கள்” என்றும், “முதலில் விலகிய இரு தோழர்கள் மக்கள் திரள் தலைமை தோழர்களுடன் இரகசிய உறவு வைத்துக் கொண்டு தலைமையை கைப்பற்ற ’சதி’ செய்கிறார்கள்” என்றும், “அடுத்து விலகிய இருவரும் அவர்களின் மறைமுக ஏஜெண்டுகள்” என்றும், “செயலர் பதவியை கைப்பற்ற பார்க்கிறார்கள்” என்றும் அடுக்கடுக்கான பொய்களை அவிழ்த்து விட்டனர்.

பொய் என்று கொச்சையாக விமர்சனம் வைக்க கூடாது உண்மைக்கு புறம்பாக பேசினார் என்று நயம்பட உரைக்க வேண்டும் என்றெல்லாம் வகுப்பு நடத்தினர். விலகிய இருவரும் பொது வெளியில் அமைப்பு விவகாரங்களை வெளியிட்டது தவறு என்று பொங்கினர்.

ஆனால் தனது கையாட்கள் மூலம் மார்க்சியமே வெல்லும் உள்ளிட்ட போலி ஐ.டி க்களின் மூலம் பல தோழர்களைப் பற்றி கீழ்த்தரமான தனிநபர் தாக்குதலை கட்டவிழ்த்து விட்டனர், அவதூறுகளை பரப்பினர். இறுதியாக அமைப்பின் இணையத்தை கைப்பற்றிக் கொண்டு சொந்த அணிகளின் மீது வக்கிரமான தாக்குதலை நடத்தினர்.

இவ்வாறெல்லாம் இ.கா.க ஏற்பாடு செய்த பிளீனத்தை சீர்குலைத்து அமைப்பை பிளவுபடுத்தும் வேலைகளில் இக்கும்பல் ஈடுபட்டது. மா-லெ அமைப்பு முறையில் நடக்க இருந்த பிளீனத்தில் பங்கேற்காமல் அணிகளின் விமர்சனத்தில் இருந்து தப்பித்து ஒடியது.

அமைப்பில் இருந்து விலகி சென்ற தனது துதிபாடிகளையும், தனது பொய் பிரச்சாரத்துக்கு பலியான சிறுபான்மையினரையும் கூட்டி நடத்தப்பட்ட கூட்டத்தை ‘10 வது பிளீனம்’ என அறிவித்துக்கொள்வது நேர்மையற்ற, நாணயமற்ற செயல். இந்த கேலிக் கூத்து நடத்த 3 நாட்கள் வேறு. இந்த லட்சணத்தில் அணிகள் தீவிரமாக விவாதத்தில் கலந்து கொண்டனர் என்றெல்லாம் வாயடிகின்றனர்.

அவர்கள் தங்கள் ‘பிளீன’ அறிக்கையில் “அணிகளில் கணிசமானோர் அவர்களின் பின்னால் சென்றுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளதன் அர்த்தம் “பெரும்பான்மையான அணிகள் அமைப்பு முறையிலும், அமைப்பு முடிவிலும் ஊன்றி நின்று பிளவுவாத, சீர்குலைவு கும்பலான முன்னாள் செயலர் தரப்பை விரட்டியடித்தனர்” என்பதேயாகும். தான் சிறுபான்மை ஆகிவிட்டதையும் நேர்மையுடன் அறிவித்திருக்க வேண்டும்.

ஆனால் நேர்மை என்பது துளியும் இல்லாதவர்களிடம் இதனை நாம் எதிர்பார்ப்பது தவறுதான். இப்படி விரட்டப்பட்ட சதிகார கும்பல் வினவு தளத்தை கைப்பற்றிக்கொண்டு பல அவதூறு செய்திகளையும், பொய்ச் செய்திகளையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே ‘மா.அ.க வின் 10 வது பிளீனம் நடத்தப்பட்டதாக’ வந்த போலி செய்தியையும் (Fake News) பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

தற்போது ’பிளீனம்’ நடத்தியதாக சொல்லும் இவர்கள் “ஆலோசனைக்குழுவில் முன்னாள் செயலர் மா.அ.க முடிவை மாற்றி பொய் பேசியது, சீர்குலைவுவாதிகளின் ஆணிவேராக விளங்கியவரை காப்பாற்றியது, இவற்றை மூடிமுறைக்க அதிகாரத்துவமாக நடந்து கொண்டது, கேள்வி கேட்ட இருவரை ஓரங்கட்ட முயற்சித்தது போன்ற விலகிய இருவரின் குற்றச்சாட்டுகளை ‘அற்ப’ விஷயங்களென குறிப்பிட்டுள்ளனர்.

ஆம், பொய் பேசுவதும், நேர்மையற்ற முறையில் நடந்துகொள்வதும், கேள்வி கேட்பவர்களை அதிகாரத்தை கொண்டு ஒடுக்குவதும் பாசிஸ்ட்களுக்கு சாதாரணமான ‘அற்ப’ விசயங்களே! கம்யூனிஸ்டுகளுக்குத்தான் அவை ஒழிக்கப்பட வேண்டிய எதிரி வர்க்க பண்புகள்! அது மட்டுமின்றி தொழிலாளர் அரங்கு செயலரின் ஊழலில் சம்பந்தப்பட்ட முன்னாள் செயலர் மற்றும் அவரை நேரடியாக இயக்கியவர் மீதும் குறிப்பிடத்தக்க நடவடிக்கை எடுக்கவில்லை

மாறாக, ஊழல், நேர்மையின்மை, அதிகாரத்துவம் என எல்லா பிரச்சினைகளுக்கும் “வலது விலகல்” தான் காரணம் என பொதுவாக காரணம் சொல்லி தப்பிக்கப் பார்க்கிறது. குறிப்பான கேள்விகள் எழும் இடத்தில் பொதுவான கோட்பாட்டு காரணத்தை சொல்லித் தப்பிக்கும் கேடான முறையை பயன்படுத்தியுள்ளது. இது ஆர்.எஸ்.எஸ்- பி.ஜே.பி கையாளும் கோயபல்ஸ் பாணியிலான பாசிச வாத முறையாகும்.

இவர்களே சொல்வது போல அமைப்பின் “வலது திசை விலகல்” தான் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் எனில், அதனை இடைக்காலக் கமிட்டி மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட பிளீனத்திலேயே வைத்து பேசியிருக்கலாமே, பிளீனத்தில் அதனை நிருபித்து ஏற்க செய்திருக்கலாமே. இவ்வாறு செய்வதை அணிகள் யாரும் தடுக்கவில்லையே.

ஏன் அவ்வாறு மா-லெ அமைப்பு முறையை கடைபிடிக்கவில்லை? இவ்வாறு நடந்த தவறுகளை ஒட்டு மொத்த அணிகளிடம் சுயவிமர்சனமாக ஏற்கும் நேர்மை இல்லாததுதான் காரணம்! அதுமட்டுமல்ல! அவர்கள் நடத்தியதாக சொல்லும் ‘பிளீனத்தில்’ 40 ஆண்டு காலமாக தலைமை பொறுப்பில் இருந்த முன்னாள் செயலர் மீது முன்வைக்கப்பட்ட வலது விலகல் என்ற குற்றச்சாட்டு குறித்து எந்த பதிலும் அளிக்காமல் வாய்(மை)மூடி அமர்ந்திருந்தாராமே.

கருத்துக் கூறாமல் இருப்பது அவரது ஜனநாயக உரிமை என்று விளக்கம் அளிக்கப்பட்டதாம்! தன் மீது வைக்கப்பட்ட விமர்சனத்துக்கு பதிலளிக்காமல் இருக்கும் உரிமை உலகில் எந்த கம்யூனிஸ்ட்டுக்காவது உண்டா? இவர்கள்தான் போல்ஷ்விக் பாணியிலான கட்சி கட்டுகிறார்களாம்! நல்ல வேளையாக இந்த கம்யூனிச விரோத, கட்சிக் கலைப்புவாத, பிளவுவாத கும்பல் தன்னைத்தானே அம்பலப்படுத்திக் கொண்டு அமைப்பிலிருந்து ஓடிவிட்டது! இல்லையேல் புரட்சிக்கான வேலையை விட்டு விட்டு இந்த தவிட்டு உமியைப் புடைக்கும் வேலையை நாங்கள் செய்திருக்க வேண்டியிருக்கும்!

வலது பூச்சாண்டி காட்டி வரும் ’இடது’!

இதுதான் மா-லெ அமைப்புகளின் இடர்!

பிளவுவாதிகளின் ‘பிளீன’ அறிக்கையில் “1992 க்குப் பின்னர், எமது அமைப்பினுடைய பொதுத்திசை வழியின் முக்கிய அம்சமான “போர்க்குணம் - வர்க்க அடித்தளம்” என்ற மூல முழக்கங்களைக் கைவிட்டு செயல்தந்திர அரசியலை மாநிலம் தழுவிய அளவில் பிரச்சாரமாக எடுத்துச் செல்லும் ஒரு தன்னெழுச்சி அரசியல் வழியை மா.அ.க நடைமுறைப் படுத்தியது. தொடக்கத்தில் சில கிளர்ச்சி நடவடிக்கைகளுடன் தொடங்கிய இந்தப் பாதை, 1997-இல் மேலும் திசை திரும்பி, வெறும் பிரச்சாரங்களை மையப்படுத்தியதாக மாறியது.” என முன் வைக்கின்றனர்.

கவனியுங்கள்! ஒரு அமைப்பின் அரசியல், சித்தாந்த முடிவுகளை கொண்டு வலது, இடது விலகல் போக்குகளை தீர்மானிப்பதா? அமைப்பு செயல்படும் நடைமுறையில் இருந்து மட்டும் திசை விலகலை தீர்மானிப்பதா? என்றால் அரசியல், சித்தாந்த முடிவுகளை கொண்டுதான் தீர்மானிக்க வேண்டுமென்பது மார்க்சிய வழிகாட்டுதலாகும்.

ஆனால் பொதுத் திசைவழியில் உள்ள “போர்க்குணம் - வர்க்க அடித்தளம்” என்ற முழக்கங்களைக் கைவிட்டதால் வலது விலகல் துவங்கியதாக கதையளக்கிறது முன்னாள் செயலர் தரப்பு! வர்க்க அடித்தளம் – போர்க்குணம் என்ற மூல முழக்கங்களை திட்ட வகைப்பட்ட செயல்தந்திரத்துக்கு எதிராக நிறுத்தும் இந்த அயோக்கியத்தனம் மா.அ.க கோட்பாட்டு முடிவுகளுக்கும் எமது மக்கள்திரள்வழிக்கும் எதிரானது!

 அமைப்பு முறைகளில் தன்னால் தாக்குப் பிடிக்க முடியாத போது, மார்க்சிய - லெனினியத்தை கடைபிடிக்க முடியாத போது விலகிச் செல்லும் உரிமையும், தனியாக கட்சி கட்டிக் கொண்டு செல்லும் உரிமையும் அவர்களுக்கு இருக்கிறது.

ஆனால் மொத்த அமைப்பின் செயல்பாடு பற்றி 2010 –ல் நடந்த எட்டாவது பிளீனத்தில் மொத்த அமைப்பும் பரிசீலனை செய்து எடுத்த முடிவை மறுக்கும் அதிகாரத்தை இவர்களுக்கு யார் கொடுத்தது? 28 ஆண்டு கால ‘வலது விலகலை’ புதிதாக கண்டுபிடிப்பதற்கு இவர்கள் மேற்கொண்ட முறையை, தொகுத்த அறிக்கையை பொதுவெளியில் வைத்து விவாதிக்கத் தயாரா?

அமைப்பின் 28 ஆண்டு கால செயல்பாட்டைப் பற்றி இப்படி ஒரு பாரதூரமான விமர்சனத்தை முன்வைப்பவர்கள் இந்த கால கட்டத்தில் நடந்த ஆண்டறிக்கை பரிசீலனைகள் (8ஆண்டு நீங்கலாக), 1997, 2010, 2019 ஆண்டுகளில் நடந்த பிளீனங்களின் அறிக்கைகள், சுற்றறிக்கைகள், 1992 முதல் வெளியிடப்பட்டுள்ள பல கட்சியின் ஆவணங்கள் எதிலும் முன் வைக்கப்படாத ’அரிய கண்டுபிடிப்பை’ முன் வைத்து தனது தவறுகளுக்கு சிவப்பு சாயம் பூசியுள்ளனர்.

2010 ஆம் ஆண்டு நடந்த பிளீனத்திற்கு தலைமையால் முன்வைக்கப்பட்டு, மொத்த அமைப்பினால் ஏற்கப்பட்ட அறிக்கை அரசியல் அமைப்பு திசைவழியில் பயணித்தது பற்றி கீழ்க்கண்டவாறு பரிசீலனை செய்கிறது:-

“அடுத்ததாக, பாட்டாளி வர்க்கக் கட்சியின் போர்த்தந்திர மற்றும் செயல்தந்திர முழக்கங்கள் நான்கு கட்டங்களாக பிரச்சாரம், கிளர்ச்சி, செயல், ஆணை என்ற ஒரு வளர்ச்சிப் போக்கில் முன்னேறுகிறது. இதில் முதல் இரண்டு கட்டங்களான பிரச்சாரம் மற்றும் கிளர்ச்சி முழக்கங்களுக்கான கட்டங்களில், பாட்டாளி வர்க்க முன்னணிப் படையின் கருக்குழுவும் அணிகளும் வெற்றெடுக்கப்பட்டு அரசியல் படை கட்டப்படுகிறது.

பிரச்சாரக்கட்டத்தில் பிரச்சார பிரசுரங்கள், பத்திரிகைகள், குழு விவாதங்கள், தனிநபர் பிரச்சாரம், கருத்தரங்குகள், தெரு முனைக்கூட்டங்கள் இன்ன பிற வடிவங்கள் கையாளப்படுகின்றன. கிளர்ச்சிக் கட்டத்தில் துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள், நேரடி தெருமுனைக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கலாச்சார வடிவங்கள், பகுதி அளவிலான அரசியல் வேலை நிறுத்தங்கள் கையும் களவுமாக பிடித்து அம்பலப்படுத்துதல் இன்ன பிற வடிவங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. தலைமைக் கருக்குழுவையும் அணிகளையும் வென்றெடுக்கும் முதல் கட்டத்தில் உள்ள நாம் இத்தகைய போராட்ட வடிவங்களையே மேற்கொள்ள முடியும். எதிரியுடன் நேரடி மோதல், ஆயுதக் குழுக்களை கட்டி போலீசுடன் மோதல் என்பதெல்லாம் இன்றைய நிலையில் பொருந்தாது.”

“பிரச்சாரம், கிளர்ச்சி, செயல், ஆணை என்ற நான்கு கட்டங்களைப் பொருத்தவரை, ஒவ்வொரு கட்டத்திற்குமான கால அளவு பருண்மையான நிலைமைகளைப் பொறுத்து மாறுபடும். எடுத்துக்காட்டாக, கருக்குழு அணிகள் கட்டியமைக்கப்படாத நிலையிலும் பரந்துபட்ட மக்களது அரசியல் மற்றும் அமைப்பு உணர்வுகள், போராட்ட அனுபவங்கள் தாழ்ந்துள்ள நிலையிலும் அமைப்பு ரீதியில் அணிதிரளாத நிலையிலும் இயல்பாகவே இந்தக் கட்டங்கள் நீண்டதாகவே இருக்கும், நமது நாட்டில் இன்று மேற்கண்ட நிலைமைகளே எதார்த்தமாக உள்ளதால், பிரச்சார, கிளர்ச்சிக் கட்டங்கள் நீண்டதாகவே இருக்கும்; இருக்கின்றன.

எனவே இவ்வளவு நாளாகியும் ஆயுதப் போராட்டத்தை நாம் தொடங்கவில்லை என அங்கலாய்ப்பது அர்த்தமற்றது. அதே போல தவிர்க்க முடியாமல் இந்தக் கட்டங்கள் நீண்டதாக இருப்பதையே `புரட்சியை கண்காணாத தொலைவிற்கு தள்ளிப் போடுகிறார்கள்' என மாவோயிஸ்டுகள் கொச்சைப்படுத்துவதைப் பற்றி ஒரு பொருட்டாகவே கருத வேண்டியதுமில்லை.”

 “கட்சியைக் கட்டும் முறை மற்றும் மக்களைத் திரட்டும் முறை பற்றிய மேற்கூறிய மார்க்சிய -லெனினிய அணுகுமுறை ஆசான்களால் முன்வைக்கப்பட்டதாகும். ரசீய, சீன, வியட்நாம் புரட்சிகளில் வெற்றிகரமாக பின்பற்றபட்டவை, இவை அனைத்துலகு தழுவிய தன்மை கொண்டவை.

கட்சியைக் கட்டுவது, மக்களைத் திரட்டுவது தொடர்பாக இந்த மார்க்சிய - லெனினிய அணுகுமுறை மற்றும் விதிகளின் அடிப்படையியேயே நமது பொதுதிசை வழி - பொது வேலைத்திட்டம், கட்சிக் கட்டும் முறை, மக்களைத் திரட்டும் முறை, வேலைப்பாணி ஆகிய அனைத்தும் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் மா.லெ கட்சி என்ற பெயரில் இயங்கும் எந்த அமைப்பிடமும் இப்படிப்பட்ட நடைமுறை இல்லை, சரியாக சொன்னால், கட்சியைக் கட்டுவதற்கும் மக்களைத் திரட்டுவதற்கும் இப்படிப்பட்ட மா-லெ முறை இருப்பதைப் பற்றிய அறிவே இல்லாமல் இருக்கின்றனர்”. (பொதுத்திசைவழி - பொது வேலைத்திட்டம் - நிறைவேறிய அளவு, அனுபவம், படிப்பினைகள்: 2010 பிளீனத்திற்கான அரசியல் அமைப்பு அறிக்கை.)

எனவே, இன்று இவர்கள் (போலிகள்) முன்வைத்துள்ள “28 ஆண்டுகள் பிரச்சார வேலைப்பாணி”, “வலது திசை விலகல்” என்பதெல்லாம் அபத்தமான விலைபோகாத சரக்குகள்தான். இடது சந்தர்ப்பவாதிகள் எமது அமைப்பின் மீது அள்ளி வீசிய அவதூறுகளின் நகல்தான்.

போர்க்குணமிக்க பொருளாதாரவாதமே போலிகளின் போக்கிடம்!

“மேலும், அடிப்படை உழைக்கும் வர்க்கத்தின் பிரச்சினைகள், பொருளாதாரப் பிரச்சினைகள் எல்லாம் முக்கியமானவை அல்ல, அரசியலைப் பிரச்சாரமாக எடுத்துச் செல்வதுதான் முக்கியமானவை என்று முன்னெடுத்துச் செல்லப்பட்ட செயல்தந்திர அரங்கின் செயல்பாடுகள் காரணமாக, அடித்தள உழைக்கும் வர்க்கத்துடன் ஐக்கியமும் நெருக்கமும் குறைந்துவரத் தொடங்கியது.” என்ற கண்டுபிடிப்பை முன்வைத்துள்ளனர். (போலிகளின் பிளீன அறிக்கை, 09-01-2021, வினவு)

இதன் மூலம் இந்தியாவிலேயே முன்னோடியாக 1980 களில் மா.அ.க முன் வைத்த அரசியல் கோட்பாட்டு ஆவணங்களையும் இடது சந்தர்ப்பவாதிகளைப் போல இழிவுபடுத்தியுள்ளது. போர்க்குணமிக்க பொருளாதாரவாதம் எனும் சதுப்புக்குழியை நோக்கிச் செல்கிறது.

திட்ட வகைப்பட்ட அரசியல் செயல்தந்திரங்கள் அடிப்படையில் அரசியல் போராட்டங்கள் என்பதே சரியான மா-லெ வழிமுறை, போர்க்குணமிக்க பொருளாதாரவாதததை பற்றி 2014-ல் மறுபதிப்பு செய்த எமது அமைப்பின் அரசியல் கோட்பாட்டு ஆவணங்களின் முன்னுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.

“இவ்வாறான புரட்சி பற்றிய பொதுப்புரிதலும் பொதுத்திசைவழியும் இல்லாமல் மக்களின் போர்க்குணமிக்க பொருளாதார, அன்றாட, பகுதிக் கோரிக்கைகளுக்கான மற்றும் தனித்தனி அரசியல் பிரச்சினைகள் மீதான போராட்டங்களைப் போர்க்குணத்துடன் தொடர்ந்து நடத்திக் கொண்டே போனால், மக்கள் ஆதரவு பெருகி, அரசு அடக்குமுறை எல்லை மீறும்போது ஆயுதப் போராட்டம் வெடிக்கும் என்று பல குழுக்களும் நம்புகின்றன. ஆனால், நிகழ்ச்சிப்போக்கின் அடிப்படையில் செயல்படுவது என்ற இந்த வழியானது, இயக்கத்தைப் பொருளாதாரவாதப் புதைகுழிக்குள்தான் தள்ளும்.

எனவேதான் மாநில அமைப்புக் கமிட்டி, போர்த்தந்திர வழிகாட்டுதலின் கீழ், நாட்டின் அனைத்து உழைக்கும் மக்களையும் பாதிக்கும் சமூக, அரசியல் பொருளாதார, பண்பாட்டு போக்குகளையும் கணக்கிட்டு வகுக்கப்படும் திட்டவகைப்பட்ட அரசியல் செயல் தந்திரங்களின் அடிப்படையிலான அரசியல் போராட்டங்கள், அவற்றின் தொடர்ச்சியாக அரசியல் வேலை நிறுத்தங்கள் உள்ளூர் ஆயுதந்தாங்கிய எழுச்சிகள் ஆகியவற்றினூடாகத்தான் புரட்சியைக் கட்டமைக்க முடியும்; பிறகு மக்கள் யுத்தப் பாதையில் முன்னேற்ற முடியும் என்று தனது அரசியல் கோட்பாட்டு ஆவணம் மூலம் வழிகாட்டியது” (மா.அ.க 2014 -ல் வெளியிட்ட அரசியல் கோட்பாட்டு ஆவணங்களின் இரண்டாம் பதிப்புக்கான முன்னுரை)

 மேற்கண்ட அரசியல் கோட்பாட்டு ஆவணங்களில் கூறப்பட்ட முடிவுகளை மறுக்காமலேயே திடீரென்று 28 ஆண்டு காலம் வலது திசை என அறிவிப்பது மா-லெ ஆய்வுமுறைக்கு உட்பட்டதல்ல.

மேலும், செயல்தந்திர வகைப்பட்ட அரசியலையே தன்னெழுச்சி அரசியல் எனக் குறிப்பிடும் இவர்களைப் போன்ற போலிகளை பற்றி லெனின் பின்வருமாறு கூறுகிறார்.

 “முன் முயற்சியும் ஆற்றலும் போதாமையாலும், "அரசியல் பிரச்சாரம், கிளர்ச்சி, அமைப்புத் துறைகளின் செயற்பரப்பு" போதாமையாலும், புரட்சி வேலைக்கான மேலும் விரிவான அமைப்புக்கு வேண்டிய "திட்டங்கள்” இல்லாமையாலும் பல சமூக-ஜனநாயகவாதிகள் அவதிப்பட்டு வருகிற காலத்தில் "திட்டம் என்கிற வகைப்பட்ட செயல்தந்திரம் மார்க்சியத்துக்கு முரணானது” என்று கூறுவது மார்க்சியத்தைத் தத்துவத்துறையிலே கொச்சைப்படுத்துவது மட்டுமல்ல, நடைமுறையில் கட்சியைப் பின்னோக்கி இழுத்துச் செல்வதுமாகும் என்றே பொருள்” (என்ன செய்ய வேண்டும் –லெனின்.)

இந்த வகையில், திட்ட வகைப்பட்ட செயல்தந்திரத்தை தன்னெழுச்சி வேலைபாணி எனக் கூறி கட்சியை பின்னிழுக்கும் வேலையை செய்துள்ளனர்.

மேலும், போலிகளின் ’பிளீன’ அறிக்கையில் “2015-இல் முன்வைக்கப்பட்டு முன்னெடுத்துச் செல்லப்பட்ட கட்டமைப்பு நெருக்கடி என்ற புதிய செயல்தந்திரம், அதன் இயல்பிலேயே ஆளும் வர்க்க அரசியலின் ஒரு சில கூறுகளை உள்ளடக்கியதாகவும், சோசலிசத்தை நோக்கிய புதிய ஜனநாயகப் புரட்சியை மாற்றாக முன்வைக்காமலும் இருந்தது. இது கட்சியில் இருந்த தோழர்களின் சோசலிச உணர்வு குன்றுவதற்கு காரணமாக அமைந்திருந்தது” என்கின்றனர். (போலிகளின் பிளீன அறிக்கை,09-01-2021, வினவு)

இவர்களின் வாதப்படி கட்டமைப்பு நெருக்கடி அரசியல்தான் கட்சியில் இருந்த தோழர்களின் சோசலிச உணர்வை குறைத்துள்ளது எனில் சோசலிசத்தை நோக்கிய புதிய ஜனநாயகப் புரட்சியை மாற்றாக முன்வைக்கும் தொழிலாளர் அரங்கு பொதுச் செயலாளர் ஊழலில் ஈடுபட்டது எப்படி? சித்தாந்த புலிகளின் ஆய்வு புல்லரிக்கச் செய்கிறது.

மக்கள்திரள் முன்னணியாளர்கள் மீதான போலிகளின் காழ்ப்பு! கயமைத்தனமானது!

 “கடந்த 25 ஆண்டு காலமாகப் பின்பற்றப்பட்ட இந்த தன்னெழுச்சி வகைப்பட்ட பிரச்சார வேலைபாணியாலும், செயல்தந்திரத்தை முன்னெடுத்து சென்றதில் நடந்த மேற்கண்ட தவறுகள் காரணமாகவும், எமது மக்கள்திரள் அரங்கின் பிரபலத் தலைவர்களும், குட்டி முதலாளித்துவ படிப்பாளி பிரிவினரும் கட்சி அமைப்பு முறைகளை மீறிய, கண்காணிப்புக்கு அப்பாற்பட்ட தனிச்சிறப்பான சலுகைகள் பெறும் நிலை உருவானது.” (அழுத்தம் அவர்களுடையது) (போலிகளின் பிளீன அறிக்கை, 09-01-2021, வினவு)

கவனியுங்கள்! தனிச்சிறப்பான சலுகைகளை வழங்கியவர்கள் யார்? அவர்களின் மார்க்சிய விரோத அமைப்பு முறை என்ன? அதன் வர்க்க குணாம்சம் என்ன? போன்ற விவரங்களுக்குள் சென்று பரிசீலிப்பது தலைவேதனை தரும் என்பதால் மட்டையடியாக ’வலது’ என்ற கோணிக்குள் போட்டு அமுக்கப் பார்கின்றனர்.

அதுமட்டுமின்றி கடந்த 28 ஆண்டுகளாக பார்ப்பன பாசிசத்திற்கும், மறுகாலனியாதிக்கதிற்கும் எதிராக நடத்தப்பட்ட திட்டவகைப்பட்ட போராட்டங்களையும், செயல்தந்திர அரசியல் வழியில் நின்று நடத்தப்பட்ட போராட்டங்களையும் கூட தன்னெழுச்சி என்று முத்திரை குத்தியுள்ளனர்.

1992-க்குப் பின்னர் நடந்த மக்களை அணிதிரட்டிய போர்குணமிக்க போராட்டங்கள் பல நடத்தப்பட்டுள்ளன. தில்லைக் கோயிலில் பார்ப்பனர்களின் கொட்டத்தை அடக்கி அவர்களின் சாம்ராஜ்ஜியத்திற்குள் புகுந்து நூற்றாண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட தமிழ் மொழியை சிற்றம்பல மேடையில் ஒலிக்க செய்து அடக்கு முறைகளையும் வழக்குகளையும் தாங்கி கட்சிக்கு பெருமை சேர்த்தது யார்? மணல் கொள்ளையில் எதிரிகளின் தலை கொய்யும் மிரட்டலுக்கு அஞ்சாமல் பகுதி மக்களை திரட்டி வெள்ளாற்று மணல் கொள்ளையை தடுத்தது யார்?, பன்னாட்டு கொள்ளை கூட்டமான தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையின் சுற்றுசூழல்மாசு, மக்களின் உயிர் கொலைகளை எதிர்த்து போராடி குண்டிப்பட்டு சக தோழர் இறந்தபோதும் களத்தில் மக்களுடன் நின்றது யார்?

தாதுமணல் கொள்ளையில் தென்னகத்தின் மாஃபியா கும்பலின் தலைவனும் பாசிச ஜெயா கும்பலின் சகபாடியான வைகுண்டராஜனை எதிர்த்து போராடி சமூகத்தில் இருந்து தனிமைப் படுத்தியது யார்?, டாஸ்மாக் பிரச்சினையில் விற்பனைக் கடைகளை நொறுக்கி கடையை இழுத்து மூடி சிறை சென்றது யார்? இவ்வாறு எண்ணிலடங்கா பல்வேறு மக்கள் பிரச்சினைகளில் களத்தில் நின்று போராடி, எதிரிகளின் நேரடி தாக்குதலுக்கும், அரச பயங்கரவாதத்தின் பல்வேறு வழக்குகளுக்கு சிறை சென்ற முன்னணியாளர்களின் உழைப்பை ஒரு அடியில் புறந்தள்ளும் போலிகள் மக்களையும், மக்கள் திரள் முன்னணியாளர்களையும் இழிவு படுத்தி ஒதுக்கி விட்டு யாரைக் கொண்டு புரட்சி நடத்துவார்கள்? ஆனால் மக்கள்திரள் முன்னணியாளர்களை கலுகை பெற்ற குட்டிமுதலாளிகள் எனச் சொல்லும் வக்கிரமான வாதத்திற்கான அடிப்படை வேறு இடத்தில் உள்ளது.

மக்கள் திரள் தலைமை தோழர்கள் உள்ளிட்ட பெரும்பான்மையினர் அனைவரும் முன்னாள் செயலரின் நேர்மையின்மையையும், அதிகாரத்துவத்தையும் எதிர்த்து அமைப்பு முடிவுகளை அமுல்படுத்தக் கோரி அமைப்பு முறைகளில் நின்றும், இடித்துரைத்து போராடியதும், இவர்களின் பிளவுவாத, சீர்குலைவு நடவடிக்கைகளை புறக்கணித்ததும்தான் இந்த வன்மமான அவதூறான வாதங்களுக்கு அடிப்படை காரணமாகும்.

அரசியல் போராட்டத்தின் முக்கியத்துவம்: எமது கட்சி ஆவணத்திலிருந்து…

அரசியல் போராட்டதிற்கும், ஆயுதப் போராட்டத்திற்கும் இடையில் உள்ள உறவை சரியாக கையாள தெரிந்துக் கொள்வது தலைமை தாங்கும் விஞ்ஞானத்தில் முதன்மையானது என்கிறார் தோழர் ஸ்டாலின். போலிகளோ ‘போர்க்குணம்’, ‘வர்க்க அடித்தளம்’ என்ற சொல்லடுக்குகளால் அரசியல் போராட்டத்தின், அதுவும் செயல்தந்திர வகையிலான அரசியல் போராட்டத்தின் உண்மையான எழுச்சியை காணத்தவறி, தடுமாறி, தடம் மாறிச் செல்கின்றனர்.

1980 களில் விரல் விட்டு எண்ணத்தகுந்த பகுதிகளையும், சில பத்து தோழர்களையும் கொண்ட நமது கட்சியமைப்பு இன்று இந்திய அளவில் பாராளுமன்ற அரசியலுக்கு வெளியே குறிப்பிடத்தக்க சக்தியாக விளங்கவும், அடையாளம் காணப்படவும் காரணமாக அமைந்தது, தொடர்ச்சியான செயல்தந்திர அரசியல் போராட்டங்களே என்றால் அதனை யாரும் மறுக்க முடியாது. இது பற்றி எமது ஆவணங்களில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளோம்.

“ஆயுதப் போராட்டங்களும் ஆயுதமேந்திய படைகளும் மற்றொரு அடிப்படையான அமைப்பு மற்றும் போராட்ட வடிவங்களாகும். எதிரியின் ஆயுதப்படைகளை அழிப்பதில் நேரடியான, தீர்மானகரமான பங்கேற்று விரிவான மக்கள்திரள் அரசியல் போராட்டங்களை மேலும் உயர்ந்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் மக்களது எழுச்சிகளில் இணைந்து மக்களைக் காக்கவும் இவை தேவையாகின்றன.

புரட்சி என்பது வெறும் ஆயுதப் போராட்டம் மட்டும் எனக்கருதி அதன் விளைவாக எதிர்ப்புரட்சி, புரட்சி ஆகிய இரு தரப்புகளின் இராணுவ சக்திகளின் பலாபலன்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால், புரட்சியின் சக்திகளைக் குறைத்து மதிப்பிடுவோம்; மக்களைக் கிளர்ச்சிக்காகத் தட்டியெழுப்பத் துணியமாட்டோம்; மக்கள் கிளர்ந்தெழுந்த பின் தாக்குதலைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லத் துணிய மாட்டோம்; ஆயுதப் போராட்டம் துவங்கியபின் செயலற்ற தற்காப்பு நிலைக்குத் தாழ்ந்து விடுவோம். புரட்சியும் புரட்சிகர யுத்தமும் தொடுக்கப்படும் வரை இவ்வாறான அரசியல் போராட்டங்களே பிரதான வடிவமாக இருக்கும்,”

“ஒருபுறம் அரசுக்கும் ஆளும் வர்க்கங்களுக்கும், மற்றொரு புறம் பாட்டாளி வர்க்கத் தலைமையில் பரந்துபட்ட மக்கள், குறிப்பாக விவசாயப் பெருமக்களுக்கும் இடையிலான மோதல் அப்பட்டமானதாகவும் நேரடியாகவும் மாறும் வரை, புரட்சியும் புரட்சிகர யுத்தமும் தொடுப்பதற்காக அமைப்பு ரீதியில் அவர்கள் திரட்டப்படும் வரை, இவற்றுடன் தாக்குதலுக்கான காலம் கனியும் வரை பரந்துபட்ட மக்களை அமைப்பாக்குவதும் அரசியல் போராட்டங்களில் ஈடுபடுத்திப் பயிற்றுவிப்பதுமே பிரதானப் பணியாக இருக்கும். திட்டவகைப்பட்ட செயல் தந்திரங்களிலான அரசியல் நடத்தை வழியாதலால் இது நிச்சயம் ஆயுதப் போராட்டத்துக்கான தயாரிப்பாகவும், பொருளாதாரவாதத்தை நிராகரிப்பதாகவும் இருக்கிறது”

 “ஆனால், ஆயுதப் போராட்டத்திற்கு முன் தேவை என்ற பேச்செடுத்தால் ஒருபுறம் ‘இடது’ சந்தர்ப்பவாதிகள் முகஞ்சுழிக்கின்றனர். இவர்களுடைய நிலைப்பாட்டின்படி, ஏற்கெனவே ஆயுதப் போராட்டம் பிரதான வடிவமாக நடந்து கொண்டிருக்கிறது என்று அங்கீகரிக்க வேண்டும் என்கின்றனர்.

மற்றொருபுறம் வலது சந்தர்ப்பவாதிகள் பொருளாதாரவாதத்தின் அடிப்படையிலான மக்கள் திரள் இயக்கங்கள் மூலமாகவே இந்த முன்தேவைகளை அடைய முடியுமென்கின்றனர். பிற மார்க்சிய லெனினிய குழுக்கள் பொருளாதாரவாதத்துடன் நிகழ்ச்சிப் போக்கின் வகைப்பட்ட செயல்தந்திரங்களால் இதைச் சாதிக்க முடியுமென்கின்றன. அல்லது பொதுவில் அரசியல் பொருளாதாரப் பிரச்சினைகள் மீதான எல்லாப் போராட்டங்களையும் முன் வைக்கின்றன”

 “பொருளாதாரவாதத்துடன் இணைந்த நிகழ்ச்சிப் போக்கின் வகைப்பட்ட செயல்தந்திரங்கள் மூலமாக பரந்துபட்ட மக்களை அரசியல் படுத்துவதாகவும், இப்போராட்டங்களையே ஆயுதப் போராட்டங்களாக வளர்த்தெடுப்பதாகவும் கூறிக்கொள்ளும் இந்தப் போக்குதான் மார்க்சிய - லெனினிய இயக்கத்திற்குள் பிரதானமாகி வலது சந்தர்ப்பவாத அபாயத்தைத் தோற்றுவித்திருக்கிறது. புரட்சிகரமான சொல்லடுக்குகளால் தன்னை அலங்கரித்து மூடி மறைத்துக் கொண்டுள்ள இந்த வலது போக்கிற்கெதிரான உக்கிரமான சித்தாந்தப் போராட்டத்தினூடாகத்தான் சரியான மக்கள் திரள் வழியை வகுத்து வரையறுத்து நடைமுறையில் நிலைநாட்ட முடியும்.”

 “பல்வேறு பிரிவு மக்களுக்கும் வர்க்கங்களுக்கும் தனித்தனியான மக்கள் திரள் அமைப்புகளை நிறுவி அவர்களது பகுதி மற்றும் அன்றாட கோரிக்கைகளுக்கான போராட்டங்களை நடத்துவதன் மூலம் விவசாயத் திட்டத்தையும், அரசியலதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஆயுதப் போராட்ட அரசியலைப் பிரச்சாரம் செய்வதன் மூலமும், பரந்துபட்ட மக்களுக்கு அரசியல் பிரக்ஞை ஏற்படுத்தும் பகுதி மற்றும் அன்றாடக் கோரிக்கைகளுக்கான போராட்டங்களையும், அரசாங்கத்திற்கெதிரான துண்டு துண்டான சில அரசியல் பிரச்சினைகள் மீதான போராட்டங்களையும் நடத்தி அவற்றின் வளர்ச்சிப் போக்கையே ஆயுதப் போராட்டமாக மாற்றுவதும் என்கிற முறையிலேயே இந்த வலது சந்தர்ப்பவாதம் எழுகிறது.” (மக்கள்திரள் பாதையில் செந்தளப் பிரதேசம் கட்டுவதை நோக்கி - மா.அ.க ஆவணம் 2011.வெளியீடு)

இவற்றை போலிகள் பரணில் வைத்து விட்டனர் போலும்!

சீர்குலைவுவாத, பிளவுவாத நடவடிக்கைகளை முறியடிப்போம்! எஃகுறுதிமிக்க போல்ஷ்விக் பாணியிலான கட்சியை கட்டியமைப்போம்!

கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக எண்ணற்ற தோழர்களின் தியாகத்தினாலும் அர்ப்பணிப்பினாலும் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தீவிரமான செயல்பாட்டிலும், அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிராவில் அறிமுகமும் ஆகியுள்ள மாநில அமைப்புக் கமிட்டி (SOC) இந்த அளவுக்கு வளர்ந்து வந்துள்ளதற்கு வலது, இடது சந்தர்ப்பவாதங்களுக்கு பலியாகாமல் சமர்புரிந்ததே முக்கிய காரணம்.

மா-லெ சித்தாந்த ஒளியில் திட்டவகைப்பட்ட அரசியல் போர்தந்திரமும், அதற்கு சேவை புரியும் செயல்தந்திரமும் வகுத்து அரசியல் நடத்தை வழியை சரியாக பின்பற்றியதும்தான் காரணம். இந்த பாதையில் நாங்கள் கடக்க வேண்டிய தூரம் மிக அதிகம் என்றாலும் ஒரு புரட்சிகர கம்யூனிச கட்சிக்கு உரிய பண்புகளை பெறுவதில், தொடர்ந்து தவறுகளை திருத்திக் கொள்வதில் சமரசமின்றி, முன்னோடியாக செயல்படுகிறோம் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்!

யாரையும் கட்சியில் சேர்த்துக் கொண்டு, என்ன அயோக்கியத்தனங்கள் செய்தாலும் அவனை கட்சியில் வைத்துக் கொண்டு மக்கள் விரோதிகள், தேச துரோகிகள் என யாரிடமும் நிதி பெற்றுக் கொண்டு கட்சியை நடத்தியிருந்தால், ஒருக்கால் எமது கட்சி ‘பெரிய’ அமைப்பாக வளர்ந்திருக்கலாம். இன்னும் பிரபலமான அமைப்பாக பேசப்பட்டிருக்கலாம்.

மாறாக, கொள்கை வழி நின்று, தவறு செய்த தலைமைக்குழு உறுப்பினர் உட்பட பலர் மீது ஒழுங்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அவர்களில் சிலர் அமைப்பை விட்டு வெளியேறி அமைப்பிற்கு எதிராக வேலை செய்துள்ளார்கள். இவை காரணமாக சில பகுதிகளில் எமது அமைப்பின் எண்ணிக்கை குறைந்ததும் நடந்தது.

ஒரு குறிப்பிட்ட காலம் அங்கே அமைப்பு வளர்ச்சி தடைபடவும் செய்தது. ஒரு புரட்சிகர அமைப்பின் பலம், வளர்ச்சி என்பதை எண்ணிக்கையை வைத்து தீர்மானிக்கக் கூடாது அதன் தன்மையை வைத்தே தீர்மானிக்க வேண்டும். இந்த கண்ணோட்டத்தில் எமது அமைப்பின் பலம் கூடியுள்ளது. வளர்ச்சி கணிசமாக உள்ளது.

 “ஆழ்ந்த சித்தாந்த தெளிவும் அரசியல் கூர்மையும் கொண்ட அமைப்பு; தேசிய, சர்வதேசிய அரசியல் பொருளாதார நிலைமைகளில் ஏற்படும் மாற்றங்கள், புதியவைகளின் தோற்றம் ஆகியவை பற்றி முன்னறிந்து தெளிவு படுத்தும் அமைப்பு; சமரச ஊசலாடும் சக்திகளை அம்பலப்படுத்தி திரைகிழிப்பதில் சிறந்து விளங்கும் அமைப்பு; எதற்கும் அஞ்சாது விமர்சனங்களை முன் வைக்கும், அதுவும் சரியான விமர்சனங்களை முன் வைக்கும் அமைப்பு; கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாத அமைப்பு; புரட்சிகர பண்பாடு, அமைப்புக் கட்டுப்பாடு ஆகியவற்றில் பிறர் வறட்டுவாதம் என்று சொல்லுமளவிற்கு (அவர்களாலேயே கறாரான அமைப்பு எனவும்) பெயர் வாங்கியுள்ள அமைப்பு - இவையெல்லாம் பிறரால் அங்கீகரிக்கப்பட்ட உண்மைகள். நக்சல்பாரிகள் என்பவர்கள் வன்முறையாளர்கள் வனாந்தரங்களில் வசிப்பவர்கள் என்று பரப்பப்பட்டுள்ள சித்திரத்திற்கு எதிராக நக்சல்பாரிகள் மக்களிடம் இருப்பவர்கள்; மக்களின் நலன்களுக்காக பாடுபடும் நேர்மையாளர்கள்; அவர்கள் ஓர் அரசியல் இயக்கம்; ஓட்டுப் பொறுக்கிகள் போல அவர்கள் பிழைப்புவாதிகள் அல்லர்; மக்களுக்கான, நாட்டின் நலனுக்கான அரசியலை முன்வைக்கும் சிறந்த அரசியல்வாதிகள், அறிவாளிகள் என்றெல்லாம் மக்கள் மத்தியில் நிலைநாட்டச் செய்து நக்சல்பாரி இயக்கத்திற்கே தமிழ்நாட்டில் பெருமை சேர்த்த இயக்கம் நமது இயக்கம்!”

 “இந்தியப் புரட்சியின் அடிப்படை நிலைப்பாடுகளை ஆய்வு செய்து அரசியல் கோட்பாட்டு ஆவணங்களை, இந்திய அளவில் முன் வைத்துள்ள ஒரே அமைப்பு நமது அமைப்புதான் என்று அடித்துச் சொல்லலாம். இ.க.க, இ.க.க (மா) தொடங்கி, மா-லெ கட்சி அல்லது குழுக்கள் என்று செயல்படும் அமைப்புகள் வரை எந்தக் குழுவும், கட்சியும் இப்படிப்பட்ட ஓர் ஆய்வை முன் வைக்கவில்லை. இது நமது அமைப்பின் குறிப்பிடத்தக்க சாதனை.” (பொதுத்திசைவழி - பொது வேலைத்திட்டம் - நிறைவேறிய அளவு, அனுபவம், படிப்பினைகள்: 2010 பிளீனத்திற்கான அரசியல் அமைப்பு அறிக்கை.)

இதுதான் மாநில அமைப்புக் கமிட்டியின் நிலையாகும். ஆனால், 2010 முதல் 2020 வரையிலான காலத்தில் ஆய்வுப்பணியை முடிக்காமல் காலம் கடத்திய தலைமையை இடித்துரைத்து தலைவர்களையே ஆழமான சுயபரிசீலனைக்கு உட்படுத்தி தேவையான மாற்றங்களை செய்துள்ளோம்.

கட்சிக்குள் ஒளிந்திருந்த சீர்குலைவுவாதிகள், பிளவுவாதிகள், கலைப்புவாதிகள், ஊழல் பேர்வழிகள் அனைவரையும் எந்த முக்கிய பொறுப்பில் இருந்தாலும் கடுமையாக விமர்சனம் செய்து அவர்களை முறைப்படுத்தியுள்ளோம். திருத்த முடியாத சிலரை நீக்கவும் செய்துள்ளோம்.

இந்திய சமுதாய பொருளாதார கட்டுமானத்தில், உற்பத்தி முறையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றங்கள் குறித்து ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டும் கடந்த ஒரு தசாப்தமாக அதை நிறைவேற்றாமல் பாராதூரமான தவறை இழைத்துள்ளோம். அதே வேளையில், போலிகள் முன்வைக்கும் “28 ஆண்டுகளாக கட்சி வலது திசை விலகலுக்கு சென்று விட்டது” என்ற அபத்த முடிவை நாங்கள் ஏற்கவில்லை.

ஆரம்ப காலகட்டத்தில் அரசியல் கோட்பாட்டு ஆவணங்கள் வைத்தது, போர்தந்திரம், செயல்தந்திரம் வகுத்து, பொதுத்திசைவழி-பொதுவேலைத்திட்டத்தின் அடிப்படையில் வழிநடத்தியது, விமர்சன - சுயவிமர்சன முறைக்கு பயிற்றுவித்தது போன்ற சரியான அம்சங்கள் ஏற்படுத்திய நம்பிக்கையின் காரணமாக முன்னாள் செயலரின் அதிகாரத்துவத்துக்கு எதிராக வலுவான போராட்டத்தை நடத்தத் தவறியுள்ளோம். இதனை மிகுந்த விலை கொடுத்து புரிந்துக் கொண்டுள்ளோம் என்பதை சுயவிமர்சனமாக தங்கள் முன் வைக்கிறோம்.

இறுதியாக, மா.அ.க என்ற பெயரில் சீர்குலைவு வேலையில் ஈடுபடும் மேற்குறிப்பிட்ட கும்பலை இனங்கண்டு புறக்கணிக்கும்படியும், வினவு உள்ளிட்ட கட்சியின் உடைமைகளை பத்தாவது பிளீனத்தில் தேர்வான மா.அ.க-IX ஆன எங்களிடம் ஒப்படைப்பதே நேர்மையாகுமென்று முன்னாள் செயலர் தரப்புக்கு அறிவுறுத்தும் படியும், வழக்கம்போல் எமது புரட்சிகர போராட்டங்களில் ஊக்கமுடன் துணை நிற்குமாறும் தோழமை அமைப்பினர், ஆதரவாளர்கள் மற்றும் முற்போக்கு, ஜனநாயக சக்திகளான தங்களிடம் கேட்டுக் கொள்கிறோம்.

புரட்சிகர வாழ்த்துக்கள்!

23-02-2021 இவண்,
மாநில அமைப்புக் கமிட்டி,
இந்திய பொதுவுடமைக் கட்சி (மா-லெ),
தமிழ்நாடு.

Pin It