இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தா. பாண்டியன் அவர்களின் மறைவு எமக்கும், உலகத் தமிழர்களுக்கும் பேரிழப்பாகும் - NCCT
இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் அகில இந்தியத் தலைமைக்கு ஈழத் தமிழர்களின் இன அழிப்பு குறித்து தெளிவுபடுத்தி, அய்தராபாத்தில் நடைபெற்ற அக்கட்சியின் மாநாட்டில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றுவதற்கு பெரிதும் காரணமாக இருந்தார்.
அது மட்டுமல்ல, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவராக திகழ்ந்து இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கும், அமைதி நிலவ வேண்டும் என்பதற்காகவும் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் தீவிரமாகப் பங்கெடுத்துக் கொண்டார். உலக அளவிலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கம்யூனிஸ்டுக் கட்சிகளுக்கு ஈழத் தமிழருக்கு எதிரான இன அழிப்பு குறித்து விளக்கி ஆதரவு தேடியவர்.
ஈழத்தமிழர்களிற்கு ஆதரவாக 2008க்குப் பின் வலிமையாக பல சமயங்களில் குரல் கொடுத்து முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை காலங்களில் பல கட்சித் தமிழகத் தலைவர்களையும் இணைத்துப் பல போராட்டங்களை நெறிப்படுத்தி போராடிய பொதுவுடமை சிந்தனையாளர்.
தா. பாண்டியன் அவர்கள் தமிழ் நாட்டில் ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை ஒருங்கிணைத்து, தமிழ் நாட்டின் முக்கிய 36 கட்சிகளையும், கனடியத் தமிழர் தேசிய அவையையும் (NCCT) ஒருங்கிணைத்து தமிழ் நாடு எங்கும் பரப்புரையை மேற்கொண்டனர். ஈழத்தில் எற்பட்ட இன அழிப்பையும், இன அழிப்பிற்கான பன்னாட்டு விசாரணையையும், மற்றும் ஐ.நாவின் மேற்பார்வையில் தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு என்கின்ற மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இடம்பெற்ற இக் கையெழுத்துப் போராட்டத்தின் பின் தமிழ் நாட்டு சட்ட சபையில் இதே தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டதென்பது வரலாற்றில் பதியப்படவேண்டியது.
1-3-2012 எங்களால் ஜெனிவாவில் நடாத்தப்பட்ட அனைத்துலக ஈழத்தமிழர் மகா நாட்டில் கலந்துகொண்டு ஈழத்தமிழருக்கு இடம்பெற்றது இன அழிப்பு என்று ஆதாரங்களோடு பேசியவர்.
தமிழ்நாட்டு அரசியல் மேடைகளில், தன்னிகர் அற்ற சொற்பொழிவாளர், தங்கு தடை இன்றி தமது கருத்துகளை எடுத்து உரைப்பவர். மிகச்சிறந்த எழுத்தாளர், இலக்கியவாதி, எண்ணற்ற கட்டுரைகள், நூல்களை எழுதி இருக்கின்றார். தோழர் ஜீவா அவர்களின் பேரன்பைப் பெற்றவர்.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைவராக சிறப்பாகப் பணி ஆற்றினார். பொது உடைமைக் கட்சி நடத்திய அத்தனை போராட்டக் களங்களிலும் பங்கேற்றவர். தமிழ்நாடு மாநிலக் குழுவின் செயலாளராகப் பணிபுரிந்தார்.
பொது வாழ்க்கையில் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொள்வதற்கு முன்பு, அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணி புரிந்தார். வழக்குரைஞர் என்ற வகையில் நாடாளுமன்றத்தில் தமது வாதங்களைத் திறம்பட எடுத்து உரைத்தார். அரிய கருத்து உரைகளை நிகழ்த்தினார்.
உலகத் தமிழ் மக்களின் உள்ளங்களில் என்றும் அழியாத இடம் பெற்றுள்ள தோழர் தா. பாண்டியன் அவர்களுக்கு கனடியத் தமிழர்களின் சார்பில் எமது இறுதி மரியாதையை செலுத்துகிறோம்.
நன்றி
மேலதிக தொடர்புகளுக்கு:
கனடியத் தமிழர் தேசிய அவை - NCCT
தொலைபேசி: 416.830.7703 | மின்னஞ்சல்: