காவல்துறைக்கு கழகம் நேரில் மனு

விநாயகன் அரசியல் ஊர்வலங்களில் சட்டமீறல் விதிமுறைகளை அனுமதிக்கக் கூடாது என்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் காவல்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு மனு அளிக்கப்பட் டுள்ளது.

திருப்பூர் : விநாயகர் சதுர்த்தியை ஒட்டி வைக்கப்படுவதற்காக தடைசெய்யப்பட்ட இரசாயன பூச்சு பூசப்பட்ட, பிளாஸ்டர் ஆப் பாரிசால் செய்யப்பட்ட, சுட்ட களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை கண்டறிந்து பறிமுதல் செய்யவேண்டும்; சட்டவிரோதமாக ஒலி பெருக்கிகளை அலறவிடும் கோயில் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது மோட்டார் வாகன சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், இந்து அறநிலையத்துறை ஆணையர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரிடம் கழகப் பொருளாளர் துரைசாமி  தலைமையில் மனு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் முகில் ராசு, தோழர்கள் தனபால், மாப்பிள்ளைசாமி, முத்து, கார்த்திக், கமலக்கண்ணன்,  பரிமளராசன், மாணவர் கழகத்தின் மணிகண்டன், ஹரீஷ்குமார் ஆகிய தோழர்கள் கலந்து கொண்டனர்.

ஆனைமலை : பொள்ளாச்சி-ஆனைமலை திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் வருகின்ற 5ஆம் தேதி இந்துமத வெறியர்களால் மற்ற சமூகத்தாரின் வன்மத்தை தூண்டுவதுபோல் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த விதிகளுக்கு மாறாக செயல்படுவதை கண்டித்தும் விநாயகர் சிலைகளை மக்கள் பயன்படுத்துகின்ற நீர் நிலைகளில் கரைப்பதும் வாகனங்களில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் செல்வதும் காவல்துறைகளின் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதை தடுக்கக் கோரி காவல் துறை துணை கண்காணிப்பாளரிடம் 20க்கும் மேற்பட்ட தோழர்களால் மனு வழங்கப்பட்டது

கோவை : விநாயகர் சிலை கரைப்பது தொடர்பாக சுற்றுச் சூழலுக்கு மாசு விளைவிக்காமல் தடுக்கக் கோரி 25.08.2016 (வியாழக்கிழமை) காலை 11:00 மணியளவில் கோவை மாநகர காவல்துறை ஆணையாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், இந்து சமய அறநிலையத்துறை, மாசுகட்டுபாட்டு வாரியம், கோவை மாநகராட்சி அதிகாரிகளிடம் கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக மனு வழங்கப்பட்டது.

நேருதாஸ் தலைமையில் நிர்மல் குமார்-செயலாளர், இராமச்சந்திரன்-புறநகர் மாவட்ட தலைவர், சூலூர் பன்னீர்செல்வம் -சூலூர் ஒன்றியம், மாநகர அமைப்பாளர் ஜெயந்த், பொருளாளர் கிருஷ்ணன், வடவள்ளி ஸ்டாலின், விக்னேஷ், சித்தன், சங்கர், அன்ட்ரோஸ், கணேஷ், வெங்கட், விஜயபாரதி, கனி ஆகிய மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை: சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் சார்பாக செப்டம்பர் 5 அன்று நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் வேதி பொருளில் செய்யப்படும் விநாயகர் சிலைகளை தடை செய்ய வேண்டும் என்றும், சரக்கு வாகனங்களில் மனிதர்களை ஏற்றிக் கொண்டு போக்குவரத்து விதிக்கு எதிராகவும் இடைஞ்சலாகவும் ஊர்வலம் வருவதை தடை செய்யவும், ஒலிபெருக்கி விதிமுறைகளை கடுமையாக பின்பற்றக் கோரியும் சென்னை மாநகர காவல்துறை ஆளுநரிடம் 24.8.2016 அன்று காலை 11 மணிக்கு தரப்பட்டது. தோழர் தபசி குமரன் தலைமையில் தோழர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Pin It