உலகலாவிய இசுலாமிய எதிர்ப்பு என்பதுதான் இந்த நூற்றாண்டின் முற்போக்கு சிந்தனை என வல்லரசு நாடுகளும், இந்தியா போன்ற அமெரிக்க அடிமை நாடுகளும் ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிரான தொடர் தாக்குதல்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் நிகழ்த்திய வண்ணம் உள்ளனர்.

உலக கொடுங்கோலன் ஜார்ஜ் புஸ், தீவிரவாத எதிர்ப்பு என்ற பெயரில் இஸ்லாமிய எதிர்ப்பினை இன்னொரு சிலுவை யுத்தம் என பிரகடனப்படுத்தி முடுக்கிவிட்ட பணி, இன்று உலகம் முழுவதும் அமெரிக்க நட்பு நாடுகளின் முதல் முக்கிய பணியாக செயல்படுத்தப்படுகிறது.

அமெரிக்க மற்றும் அடிமை நாடுகளில் ஒரு மதத்தினருக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்படும் பேரழிவு வேலைகளை நியாயப்படுத்தும் விதமாக தீவிரவாத ஒடுக்குமுறை, நாட்டின் பாதுகாப்பு என்ற வேறு பெயர்களில் மனித உரிமைகள் மீறப்படுகிறது. இந்த பிரச்சாரங்களினால் நடுநிலையாளர்களையும், முற்போக்குவாதிகளையும் வெகுஜனங்களையும் தனது நிலை குறித்து நியாயப்படுத்துகின்றனர். இதற்காகவே உலகலாவிய செய்திகளும் தயாரிக்கப்படுகின்றது. இந்தத் தொடர் பிரச்சாரங்களால் பொதுமக்கள் மத்தியில் ஒரு வித அச்ச உணர்வுகளை உற்பத்தி செய்து இசுலாமியர்களின் மேல் வெறுப்பு அலைகள் உருவாக்கப்படுகிறது.

இசுலாமியர்களை மட்டும் தனி சோதனை எனும் பெயரில் பொது இடங்களில் சிறப்பு சோதனைக்கு உட்படுத்தி மன அளவில் காயப்படுத்துவது என்பது அமெரிக்கா தொடங்கி இன்று எல்லா நாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

புவி வெப்பமயமாதலை விட மிக முக்கிய அச்சுறுத்தலாக இசுலாமியப் பெண்கள் அணியும் புர்கா - பாரம்பரிய உடைகளை மேலை நாடுகள் தடை செய்கின்றன. புர்கா அணியும் பெண்கள் எல்லோருமே உடம்பில் வெடிகுண்டுடன் இருப்பவர்கள், தொப்பி, தாடி வைத்திருக்கும் ஆண்கள் எல்லோருமே தீவிரவாதிகள் என்பது போன்ற உணர்வினை மக்கள் மத்தியில் திட்டமிட்டே எல்லா ஊடகங்களும் செய்து வருகின்றன. ஒரு மதத்தைச் சார்ந்த குழந்தைகளின் அருகில் தங்கள் குழந்தைகளை அமர்த்த வேண்டாம் என பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தில் கேட்பது இப்பொழுது வாடிக்கையாகிவிட்டது. பள்ளி குழந்தைகளிடம் கூட மதத்தின் பெயரால் பகைமை பாராட்டுவது என்பது எத்தனை இழிசெயல்.

இது ஒரு மதத்தவரை மட்டும் சமுக ஓட்டத்திலிருந்து பிரித்து அன்னியப்படுத்தும் முயற்சியாகும். அவர்களின் மத சம்மந்தப்பட்ட எந்த ஒரு அடையாளமும் சமுகத்தின் அச்சுறுத்தலாக கருத வைப்பது, அவர்களை சுய குற்றவுணர்வு உள்ளவர்களாக்கி ஒட்டுமொத்த மக்களின் பார்வையிலும் மிகவும் கீழ்த்தரமானவர்கள் என்ற நிலைக்கு உட்படுத்துவது தான் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் நோக்கமாகும்.

இந்த முயற்சி இந்தியாவிலும் இந்துத்துவா எனும் உட்கருவுடன் நாட்டின் கட்டமைப்புகளில் எல்லா நிலைகளிலும் இசுலாமிய அழிப்பு வேலைகளை செய்து வருகிறது. அதை நம் நாட்டில் நடக்கும் போலி என்கவுண்டர்கள், ஆள்கடத்தல்கள், மதக்கலவரங்கள், வழிபாட்டு நிலையங்களை அபகரித்தல், நீதி மறுத்தல், இட ஒதுக்கீட்டில் புறக்கணித்தல், வாழ்வுரிமை மறுக்கப்படுதல் என ஒரு மதத்திற்கு எதிராக பல்முனை தாக்குதல்கள் நடந்த வண்ணம் இருப்பதை நாம் அனைவரும் அறிந்ததே.

இசுலாமியர்களின் சமுக உரிமைகளில் இந்திய நீதித் துறையின் நிலைபாடுகளும் பல இடங்களில் விஷத்தைக் கக்குவதாகவே உள்ளது.

"பிரதியும் சாவான், வாதியும் சாவான் ஆனால் வழக்கு மட்டும் தலைமுறை கடந்து நிலுவையில் இருக்கும்” என கேலி செய்யும் அளவிற்கு நாட்டில் எத்தனையோ லட்சம் வழக்குகள் நிலுவையில் தீர்க்கப்படாமல் இருக்கும்போது, சில நீதிபதிகள் எப்பொழுதாவது அரசுக்கு அறிவுரை கூறுவதும் உண்டு. அதில் ஒன்றுதான் கட்டாய திருமணச் சட்டம். ஏற்கனவே திருமணங்களைப் பதிவு செய்யும் இசுலாமிய சமுகத்தினர் இதை எதிக்கும் அவசியம் என்ன இதுவும் பிறப்பு ,இறப்பு சான்றிதழ் போலத்தானே என சில கற்றறிந்தவர்களும் கூறிவருகின்றனர்.

உண்மை தான் பிறப்பும், இறப்பும் எந்த ஒரு மாற்றம் இல்லாதது. ஒருவன் இந்த உலகத்தில் பிறந்து விட்டான் என்றால் அதில் எந்த சந்தேகமும் இல்லை, அதை போல் ஒருவன் இந்த உலகத்தை விட்டு மரணித்தாலும் அதையும் யாராலும் மறுக்க முடியாது. இந்த இரண்டு விசயங்களுக்கும் கட்டாயப் பதிவுகள் இருப்பதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்காது. ஆனால் திருமண உறவுகளுக்கு பதிவு சட்டங்கள் என்பது அதில் உள்ள நடைமுறை சிக்கல்களையும், அவசரமாக சட்டம் அமுலாக்கப்பட்டதன் நோக்கத்தினையும் மனதில் கொண்டு யோசிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

இந்த சட்ட அறிவுரைகளை உடனடியாக அமுல்படுத்திய மாநிலங்களில் முதன்மையானது இசுலாமியர்களைப் பொது எதிரியாய்க் கருதும் மோடியின் குஜராத் தான். இதில் தமிழ்நாட்டிற்கு ஏன் இந்த அவசர ஆர்வம் எனத் தெரியவில்லை.

ஒரினச்சேர்க்கைவாதிகளும் திருமணம் செய்துகொள்ளலாம் என சட்டம் இயற்றபடுகிறது. விரைவில் மிருகத்திற்கும் மனிதனுக்கும் திருமணம் செய்யலாம் எனவும் சட்ட்ங்கள் தீட்டலாம். ஆனால் மிகவும் பண்பாட்டுடன் மற்ற எல்லாருக்கும் முன் மாதிரியாய் நடக்கும் இசுலாமிய தனியார் திருமண சட்டத்தினால் பெரிய பேரிழப்பு வருவதுபோல கட்டாய பதிவுச் சட்டம் உடனடியாக அமுலாக்க வேண்டும் என்ற அவசர ஆர்வம்தான் ஏன்?

மணமகன், மணமகள், தாய், தந்தை சாட்சிகள், உறவுகள் என எல்லாரும் கூடி அரசு காஜியின் பதிவு ஒப்பந்தத்துடன் பதிவு செய்து நடத்தி வைக்கப்படும் ஒரு திருமணத்தை ஒரு சார்பதிவாளர் சரிபார்த்து இந்தத் திருமணம் செல்லும், செல்லாது என தீர்மானிக்கும் அதிகாரம் யார் கொடுத்தது? லஞ்சம், அலட்சியம், அதிகாரம் என ஊறிப்போய் உள்ள அதிகாரிகளுக்கு இந்த அதிகாரம் கொடுக்கப்பட்டால் என்னவாகும் நிலைமை? ஏற்கனவே போதிய கல்வி இல்லாத, பொருளாதாரத்தில் தாழ்வு நிலையில் இருக்கும் இசுலாமிய சமுகம் இதை எப்படி எதிர் கொள்ளும்?

திருமணமாகிய 90 நாட்களுக்குள் முறைப்படி திருமணச் சான்றிதழ் பெறவேண்டும், அப்படி இல்லையென்றால் அந்தத் திருமணம் செல்லாது என சார்பதிவாளரால் அறிவிக்கப்பட்டால், திருமணமாகிய 90 நாட்களில் புது தம்பதிகள் குடும்பம் நடத்தி, மணப்பெண்ணும் கருவை சுமக்கும் நிலையில், ஒரு பதிவாளர் இந்தத் திருமண உறவு செல்லாது எனக் கூறிவிடமுடியுமா? இல்லை கருவில் இருக்கும் குழந்தையின் தகப்பன் இவன் இல்லை என்று கூறிவிடமுடியுமா?

ஒரு நடுத்தர வர்க்கத்து குடும்பத்தில் சாதாரணமாக ஒரு ரேசன் கார்டு பதிய வேண்டும் என்றோ, இல்லை உறுப்பினர் நீக்கவோ, சேர்க்கவோ நாம் படும்பாடு நமக்குத்தான் தெரியும். ரேசன் கார்டில் ஆரம்பித்து, சாதிச் சான்றிதழ், பிறப்பு, இறப்புச் சான்றிதழ் என அரசு அலுவலகங்களுக்கு அலைந்து, அலைந்து நாம் ஒரு வழியாகிவிடும் சூழலில், போதாக்குறைக்கு திருமணப் பதிவு சட்டம் வேறு.

இப்பொழுது தாராளமாக சாட்சிக் கையெழுத்து போட முன்வரும் இசுலாமிய சமூகத்தார்கள் இந்த சட்டம் வருமேயானால் சாட்சி கையெழுத்துப் போட தயக்கம் காட்டுவார்கள். சார்பதிவாளர் இந்தத் திருமணத்தை அங்கீகரிக்கும் வரைக்கும் மணமக்கள், பெற்றோர்களுடன் சேர்ந்து சாட்சி கையெழுத்துப் போட்டவனும் இது சரியில்லை, அது சரியில்லை என பதிவாளர் அலுவலகம் நோக்கி அழைய வேண்டிவரும்.

பெண் குழந்தைகள் அதிக விகிதாச்சாரம் உள்ள, வறுமை சூழலில் இருக்கும் சமுகம் திருமணப் பந்தங்களை மணமகன், மணமகளின் உடல் மன முதிர்சியின் அடிப்படையில் திருமணங்களை நடத்தி வைக்கின்றனர். இதில் சில நேரங்களில் அரசாங்கம் சொன்ன வயது வரம்பினை அடைவதற்கு முன்னமே திருமணங்கள் நடக்கும் சூழலும் உள்ளது. பொதுவாக அதிக பெண் குழந்தைகள் இருக்கும் வறுமையான குடும்பங்களில் வயதான பெற்றோர்கள் மற்ற பெண் பிள்ளைகளின் வாழ்க்கையை மனதில் கொண்டு அரசு நிர்ணயம் செய்த திருமண வயதிற்கு முன்னமே திருமணம் செய்யும் பழக்கங்கள் மற்ற மதத்தினர் போலவே இசுலாமியர்கள் மத்தியிலும் உள்ளது.

கட்டாய திருமணப் பதிவு சட்டம் என்று கொண்டு வந்தால் அதன் மூலம் இது போன்று முடிந்த திருமணங்களை செல்லாது என அறிவித்து விடுமா? பலதார மணம் புரியும் இசுலாமியர்களுக்கு எத்தனை முறை பதிவுகள் நடக்கும்? பொது சட்டத்தினை ஏற்றுக் கொண்டு வாழும் இந்திய இசுலாமியர்கள் திருமணம், சொத்துரிமை, வாரிசு, மண விலக்கு, அனாதைகள் பேணுதல், பொது நிதி சம்பந்தபட்ட 10 வகையான விசயங்களில் மட்டும் இசுலாமிய தனியார் சட்டத்தினைப் பேணுகின்றனர்.

ஒரு இசுலாமியர்களின் தனிமனித ஒழுக்கம் சார்ந்த வாழ்க்கையில் மட்டும் கடவுளின் சட்டங்கள் எனக் கருதும் இந்த 10 விதமான சட்டதிட்டங்களை சுமார் 1341 வருடங்களாக எந்த காலகட்டத்திலும் ஒரு சிறு மாற்றம் கூட இல்லாமல் கடைபிடித்து வருகின்றனர். சுதந்திர இந்தியாவிற்கு முன்னதாகவே ஆங்கிலேயன் காலத்திலேயே இசுலாமியர்கள் அவர்கள் மத வழி தனியார் சட்டங்களை கடைபிடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டு, சுதந்திரத்துக்குப் பிறகும் தனியார் சட்டங்களைத் தொடர்ந்து கடைபிடிக்கவும் இந்திய சட்டங்கள் இசுலாமியர்களுக்கு வழிவகை செய்துள்ளது.

இசுலாமியர்கள் தங்கள் வாழ்க்கை முழுவதுமாக இறைவனின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டதாக வாழும் சூழலில் இது போன்ற திடீர் திடீர் தலையிடுகள், சட்ட மறுபரிசிலனை போன்றவைகள் தங்களின் மத உரிமைகள் அனைத்தையும் பறித்து பொது சிவில் சட்டம் என்ற நிலைக்குள் இட்டுச் சென்றுவிமோ என்ற அச்சம் இயல்பாகவே உள்ளது.

இன்றைய சூழலில் இந்துத்துவா வர்க்கவாதிகளின் கோரிக்கையும் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதேயாகும். அதன் பிரதிபலிப்புகள் சில சமயங்களில் பார்ப்பனிய சாயம் உள்ள எல்லா கட்டமைப்புகளிருந்தும் இசுலாமிய எதிர்ப்பினை பல்வேறு முனைகளில் நடத்திக் கொண்டுள்ளது.

சுமார் 800 வருட இசுலாமிய ஸ்பெயின் நாட்டில் இன்று ஒரு இசுலாமியாரும் இல்லாமல் அழிக்கப்பட்ட வரலாற்றுப் பின்னணியில் முதன் முதலில் இயற்றப்பட்ட சட்டமே திருமண சட்டம் தான். இதற்குப் பின்னர் 70 வருடங்களில் ஸ்பெயினில் ஒருவர் கூட இசுலாமியர்களாய் இல்லை எனும் அளவிற்கு அந்த நாட்டிலிருந்து முற்றிலுமாக துடைத்து எறியப்பட்டனர். பார்ப்பன ஆரியன் ஆளப்போகும் அகண்ட பாரத கனவிற்கு ஸ்பெயினை முன்னுதாரணம் எடுத்தால், இந்திய முசுலிம்களும் அதே ஸ்பெயினில் இருந்து படிப்பினை பெறத்தான் வேண்டும்.

கட்டாய திருமணச் சட்டம் இசுலாமிய கூட்டு சமுகத்தினை தகர்க்கும் முயற்சி. சாட்சிக்கு மட்டும் ஆளிருந்தால் போதும் பதிவாளர் முன்னிலையில் திருமணம் செய்து கொள்ளலாம் என பள்ளிவாசலுக்கும் இசுலாமியனுக்குமான உள்ள தொடர்பை துண்டிக்கும் செயல். அரசியல் கட்டமைப்புகளில் எந்த அதிகாரத்திலும் இல்லாத ஒரு சமுகத்திற்கு ஜமாத் என்ற சமுக கூட்டமைப்பின் மூலமாகத்தான் ஒற்றுமையுடன் தங்களது வாழ்வுரிமைகளை பாதுகாத்து வருகின்றனர். இந்த கூட்டமைப்பும் தகர்க்கப்படுமானால் இசுலாமியர்கள் இந்த நாட்டில் முழுவதுமாய் சிதறடிக்கப்பட்டு, வாழத் தகுதியற்ற சமுகமாய் ஆகிவிடும். இல்லையென்றால், பாதிக்கப்பட்டு நம்பிக்கை இழந்த இளைஞர்களால் நாடு அமைதியின்மையை எதிர்கொள்ள நேரலாம். இந்த அச்சம் மிகைபடுத்தப்பட்டதாகத் தோன்றினாலும், சம காலத்திய தொடர் நிகழ்வுகளின் ஒருங்கிணைந்த போக்கு இந்த அச்சங்களை உறுதிசெய்கிறது.

சட்டசபையில் இந்த சட்டம் கொண்டுவரும்போது அதை எதிர்த்து கருத்து சொல்லக்கூட முடியாத ஒரு சமுகமாகத்தான் இருந்தது. ஆனால் ஜமாத் எனும் சமுக கூட்டமைப்பின் தொடர் முயற்சியால் முதல்வர் அவர்கள் மறுபரிசீலனை செய்வதாக சமீபத்தில் கூறியுள்ளது சற்று ஆறுதலான செய்தியாகும்.

இசுலாமிய சமுகம் அரசியல்,அதிகார கட்டமைப்புகளுக்குள் நுழையாதவரை இது போல பல அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து சந்திக்க வேண்டிவரும்.

-இராசகம்பீரத்தான் மால்கம் X (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It