கடந்த சில ஆண்டுகளாக உலகளவில் உள்ள அனைத்து பொருளாதாதார வல்லுனர்களாலும் கேட்கப்படும் கேள்வி -சீனா மேலை நாடுகளை மீறி பொருளாதார வல்லரசாக மாறுமா என்பதாகத் தான் இருக்கும். இன்றைய உலகப் பொருளாதாரத்தில் நடப்பது தான் என்ன? சீனாவின் இன்றைய உண்மையான நிலை தான் என்ன? 1970 வரை சீன கம்யூனிச தலைவர்களுக்கும் மேலை நாடுகளுக்கும் சரியான உறவில்லை. ஆனால் மா.சே.துங்கிற்குப் பிறகு சீனாவின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது.

அந்த கால கட்டத்தில் தான் அமெரிக்காவும் (ஓரளவுக்கு?) தங்கம் கையிருப்பு அடிப்படையில் டாலரை அச்சடிப்பதை நிறுத்தி விட்டு சந்தையின் தேவைகேற்ப டாலரை அச்சடிக்கத் தொடங்கியது. டாலரின் மதிப்பை நிலை நிறுத்த அரபு நாடுகளிடம் பெட்ரோலை டாலருக்கு மட்டும் விற்க ஒப்பந்தமிட்டது. இதன் மூலம் மேலை நாட்டு பொருளாதார நிறுவனங்கள் (வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், Investment bank போன்றவை) குறைந்த வட்டிக்கு அதிக பணத்தைப் பெற்று பன்னாட்டு கம்பெனிகளின் அசுர வளர்ச்சிக்கு உதவியதோடு, உலகளவில் பெரும் சொத்துக்கள் இந்தப் பொருளாதார நிறுவனங்கள் மற்றும் சில ஆயிரம் பணக்காரர்களின் கைக்கு மாறியது.

மேலை நாடுகளில் பொருளாதார வளர்ச்சி இருந்த அளவு மக்கள் தொகை வளர்ச்சி இல்லை. பொருளாதார வளர்ச்சி மற்றும் பணத்தின் புழக்கம் நாட்டு மக்கள் அனைவரிடமும் அதிகமாக இருந்தால் பண வீக்கம் அதிகமாகி, அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விலையும் அதிகமாகக் கூடும்.

பொருளாதார வளர்ச்சி அதிகம் இருக்க வேண்டும். அப்போது தான் பெரும் நிறுவனக்களின் லாபம் அதிகம் இருக்கும். ஆனால் சாதாரண மக்களிடம் வளர்ச்சியின் முழு பயனும் செல்லாமல் முதலீட்டாளர்களிடம் பெரும் பங்கு செல்ல வேண்டும். சாதாரண மக்கள் இதனால் அதிகம் பாதிப்படையாமல் இருக்க அவர்கள் வாங்கும் பொருட்களின் விலை குறைவாக இருக்க வேண்டும். அதற்கு பொருட்களை மலிவாக உற்பத்தி செய்ய வளரும் நாடுகளின் உதவி தேவைப்பட்டது. அப்போது அமெரிக்க அரசு மற்றும் பன்னாட்டு கம்பெனிகளின் கண்ணில் பட்டதுதான் சீனா. சீனாவில் சர்வதிகாரம் கம்யூனிசத்தின் பெயரில் வலுவாக இருந்ததால் ஒரு முடிவை எடுத்து பெரிய அளவில் எந்த எதிர்ப்பும் இல்லாமல் விரைவில் செயல்படுத்துவது வசதியாக இருந்தது. சீனாவும் அதிக மக்கள் தொகையை விவசாயத்திலிருந்து உற்பத்தித் துறைக்கு மாற்ற வேண்டிய கட்டயத்தில் இருந்ததால், அந்நாட்டு விவசாயிகளை அமெரிக்காவிற்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்ய தொழிற் துறைக்கு மாற்றத் தொடங்கியது. இதன் மூலம் நாட்டின் தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் அதிகரித்தது.

சீனர்கள் பொதுவாகவே சேமிப்புக்கு பெயர் போனவர்கள். மக்களின் சேமிப்பு அதிகமானது. கடந்த சில ஆண்டுகளாக உலகமயமாதல் உச்சத்திற்கு சென்றபோது அமெரிக்காவுக்கு சீனா செய்த ஏற்றுமதியின் அளவு மிகவும் அதிகரிக்க ஆரம்பித்தது. அதன் விளைவாக சீனாவின் டாலர் கையிருப்பு பில்லியனிலிருந்து சில டிரில்லியனுக்கு உயர்ந்தது. மறுபுறம் போர், ஆயுத உற்பத்தி மற்றும் பிற காரணிகளால் அமெரிக்க அரசின் பற்றாகுறையும், ஏற்றுமதியை விட இறக்குமதி குறைந்து வணிப பற்றாக்குறையும் அதிகமாகியது. இந்த பற்றாக்குறையை சரி செய்ய வெளி நாடுகளிடம் கடன் வாங்க வேண்டும். உலக சேமிப்பு நாணயமாக டாலர் இருப்பதாலும், சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிடம் கையிருப்பாக டாலர் அதிகம் இருந்ததாலும், அமெரிக்காவிற்கு குறைந்த வட்டிக்கு டாலரை சீனா கொடுக்க ஆரம்பித்தது.

சீனாவின் வளர்ச்சியை பாராட்டுபவர்கள் அமெரிக்க அரசாங்கமே சீனாவை நம்பி தான் உள்ளது, எனவே சீனா தான் மிகப் பெரிய பொருளாதார சக்தி என்பார்கள். ஆனால் இந்த வளர்ச்சியின் மறுபுறத்தையும் பார்க்க வேண்டும். சீனா அமெரிக்காவிடம் நடை பெரும் வாணிபத்தை பார்த்தால், சீனாவின் ஏற்றுமதி இறக்குமதியை விட மிக அதிகமாக உள்ளது. சீனாவின் நாணயமான யுவானின் மதிப்பை சந்தையின் காரணிகளால் கட்டுபாடற்ற முறையில் நிர்ணயிக்கப்பட்டால் (floating exchange rate), அதன் மதிப்பு மிக அதிகமாகி இருக்கும். அவ்வாறு யுவானின் மதிப்பு அதிகமானால் அமெரிக்காவிடம் இவ்வளவு மலிவாக பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியாது. தற்போது சீனாவின் பொருளாதாரத்தில் ஏற்றுமதியின் பங்கு 40 சதம் உள்ளது. சீனாவின் ஏற்றுமதி குறைந்தால் உள் நாட்டில் மாபெரும் வேலையில்லாத் திண்டாட்டம் உண்டாகி , பெரிய சமூக பிரச்சனைகளை உருவாக்கும்.

இதை சீனா தடுத்தே ஆக வேண்டும். அதற்கு யுவானின் மதிப்பை ஓரளவு கட்டுப்பாடான முறையில் நிர்ணயித்துள்ளது. இவ்வாறு குறிபிட்ட மதிப்பை பராமரிக்க சந்தையில் குவியும் டாலர் சொத்துக்களான அமெரிக்க அரசு பத்திரம் போன்றவற்றை வாங்கியே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

தற்போதைய நிதி நெருக்கடியை அடுத்து அமெரிக்கா அரசின் பற்றாகுறை பெரிய அளவில் அதிகமாவதாலும், அதிக அளவு டாலரை அச்சிட்டு வருவதாலும் டாலரின் மதிப்பு குறையுமோ என்ற அச்சம் சீனாவுடம் எழுந்துள்ளது.

சீனாவின் சேமிப்பு செல்வத்தில் 70 சதவிதம் டாலர் சார்ந்த சொத்துக்களாக உள்ளது. டாலரின் மதிப்பு குறைந்தால் அது அந்நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக இருக்கும். அதனாலேயே சீனா மிகவும் கலக்கம் அடைந்து உள்ளது. இதிலிருந்து தப்பிக்க டாலர் மதிப்பு நன்கு இருக்கும் போதே தன் டாலர் சொத்துக்களை விற்று விடலாம் என நீங்கள் எண்ணத் தோன்றும். தற்போது உள்ள சூழ்நிலையில், சீனா அவ்வாறு டாலர் சொத்துக்களை சர்வதேச சந்தையில் விற்க ஆரம்பித்தால், டாலரின் மதிப்பு வேகமாகக் குறைந்து சீனாவுக்கு இழப்பு தான் ஏற்படும். அது மட்டுமன்றி சீனாவின் ஏற்றுமதியும் பாதிக்கப்படும்.

இந்த வலையிலிருந்து சீனாவால் மீளவே முடியாதா? இதிலிருந்து தப்பிக்க சீனா என்னதான் செய்யப் போகிறது?

சீனா ஏற்படுத்தும் பொருளாதார சுனாமி

 உலகில் சேமிப்பு செல்வமாக உள்ள டாலரில் மூன்றில் ஒரு பங்கு தற்போது சீனாவிடம் உள்ளது. எனவே அது முள்ளின் மேல் விழுந்த துணியை கிழியாமல் பொறுமையாக எடுக்க வேண்டிய நிலையில் உள்ளது.

தற்போது சீனாவின் முக்கிய குறிக்கோள்

1. சிறிது சிறிதாக உலக அளவில் தனது நாணயத்தைப் பலப்படுத்தி உலக அளவில் பொருளாதார வல்லரசாக ஆக வேண்டும்

2. டாலரின் மதிப்பை உடனடியாக வீழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

3. சிறிது சிறிதாக டாலருக்கு இணையாக பிற நாணயங்களை உலக சேமிப்பு நாணயமாக கொண்டு வரவேண்டும் (அதே சமயத்தில் தனக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்).

4. ஆற்றல் வளம் (பெட்ரோல் போன்றவை), தாதுப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் ஏழை நாடுகளுக்கு கடனாக தன்னிடம் குவிந்து கிடக்கும் டாலரை கொடுத்து, எதிர்காலத்தில் சீனாவிற்கு மட்டும் அவற்றை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் இட்டுக் கொள்வது.

5. தன்னிடம் உள்ள டாலர் கையிருப்பைக் கொண்டு உலகில் உள்ள தாதுப் பொருட்கள் மற்றும் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களை முடிந்த அளவு வாங்கிக் குவிப்பது. தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக பல நிறுவனங்களின் மதிப்பு அடி மாட்டு விலைக்கு வந்துள்ளது சீனாவிற்கு மேலும் சாதகமாக உள்ளது

6. தன்னுடைய சேமிப்பு செல்வத்தில் டாலர் சொத்துக்கள் தவிர யூரோ, தங்கம் போன்றவற்றின் பங்கையும் அதிகரிக்க வேண்டும்.

சீனா தன் குறிக்கோளை எவ்வாறு நிறைவேற்றுகிறது என்று ஒவ்வொன்றாக பார்ப்போம்

சீனாவின் தங்கக் கையிருப்பு கடந்த சில வருடங்களில் 70% மேலாக அதிகரித்து 1000டன்னை தாண்டி விட்டது. இது வளர்ந்த நாடுகளின் தங்கக் கையிருப்பை ஒப்பிட்டுப் பார்க்கும் போது குறைவாக இருந்தாலும் அது தங்கத்தை வாங்கிக் குவிக்கும் வேகம் மிக அதிகமாகவே உள்ளது.

 சீனாவின் Shopping Mania

 தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி சீனாவுக்குப் பல நெருக்கடிகளை ஏற்படுத்தினாலும் அதுவே அவர்களுக்கு ஒரு பிரகாசமான வாய்ப்பாகவும் உள்ளது. இதில் என்ன வாய்ப்பு என்று நினைக்கிறீர்களா? கடந்த வருடம் சீனா நிதித் துறை சாராத பிற துறைகளில் வெளி நாடுகளில் செய்துள்ள முதலீட்டின் மதிப்பு சுமார் $41 பில்லியன். 2002ம் ஆண்டு மட்டும் இது சுமார் $143 மில்லியன் மட்டுமே! உலகிலேயே அதிக அளவு டாலரை சேமிப்பாக சீனா வைத்துள்ளது. இதன் மூலம்

1.தற்போதைய பொருளாதார நெருக்கடியில் பல நாடுகள் அன்னிய செலாவணி குறைவால் சிக்கித் தவிக்கின்றனர். ஆனால் அது போன்ற பல நாடுகளிடம் தாது பொருட்கள் மற்றும் எண்ணெய் வளம் குவிந்து உள்ளன. சீனாவோ உற்பத்தி துறையிலும், மக்கள் தொகையிலும் உலகளவில் முதலிடத்தில் உள்ளது. எனவே அதன் உற்பத்தித் துறைக்கும், வளரும் மக்கள் தொகைக்கும் தாதுப் பொருட்கள் மற்றும் எண்ணெய் வளம் அதிக அளவு தேவைப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையை நன்றாக பயன்படுத்தி பிற்கால எண்ணெய் மற்றும் தாது பொருட்கள் இறக்குமதியை உறுதி செய்து அதற்கிணையான கடனாக டாலரை தற்போது தேவையான நாடுகளுக்கு கொடுக்கிறது.

உதாரணமாக ஈக்வெடார் நாடு $1 பில்லியன் பணத்தை முன் பணமாக பெற்று சீனாவுக்கு அடுத்த இரு ஆண்டுகளுக்கு 69 மில்லியன் பேரல்கள் கொடுக்க சம்மதிதுள்ளது. ரஸ்யாவில் உள்ள எண்ணெய் கம்பெனிகளுக்கு கடனாக $25 பில்லியன் டாலர்களை சீனா தற்போது கொடுத்து அதற்கு இணையான எண்ணெயை பிற்காலத்தில் சீனாவிற்கு இறக்குமதி செய்ய ஒப்பந்தமிட்டுள்ளது.

2. தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக தாது பொருட்களின் விலை அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்ற பழமொழிக்கேற்ப, சீனா தன் பிற்காலத் தேவைக்கு தாது பொருட்களை இப்போதே குறைந்த விலைக்கு வாங்கி குவிக்க ஆரம்பித்துள்ளது.

உதாரணமாக சென்ற காலாண்டில் சீனாவின் இரும்பு இறக்குமதி 41 சதம் அதிகமாகவும் (தற்போதுள்ள மோசமான பொருளாதார நிலையிலும்!), காப்பர் இறக்குமதி 148 சதம் அதிகமாகவும், நிலக்கரி இறக்குமதி 300 சதம் அதிகமாகவும், அலுமினியம் இறக்குமதி 400 சதம் அதிகமாகவும் ஆகி உள்ளது.

இந்த அளவு தாதுப் பொருட்களை இறக்குமதி செய்து வைத்திருப்பதால், உலகப் பொருளாதாரம் மீண்டும் சூடு பிடிக்கும் போது தாதுப் பொருட்களின் விலை உலக மார்கெட்டில் அதிகரித்தாலும் குறைந்த விலைக்குப் பொருட்களை உற்பத்தி செய்து மற்ற நாடுகளின் போட்டியைத் தவிர்த்து உற்பத்தித் துறையில் உலக அளவில் மோனோபோலி ஆக முடியும்.

3.எண்ணெய் வளம் மற்றும் இயற்கை வளம் அதிகம் கொண்ட நாடுகள் பலவற்றில் மூலதனம் மற்றும் தொழில் நுட்பம் குறைவாக உள்ளது. இந்த நிலை மற்றும் பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றால் மேல்நாட்டு கம்பெனிகளிடம் வேறு நிறைய விட்டு கொடுத்து உதவி பெரும் நிலையில் உள்ள இந்த நாடுகள் மற்றும் அங்கு உள்ள கம்பெனிகளிடம் சீனா ஒரளவு அவர்களுக்கும் ஆதாயமாக இருக்கும்படி ஒப்பந்தங்கள் இட்டு, அந்தக் கம்பெனியின் பங்குகளை வாங்கி, அவற்றை விரிவாக்கி அதிலிருந்து கிடைக்கும் தாதுப் பொருட்களை சீனாவிற்கு கொண்டு செல்ல முயற்சி செய்கிறது.

உதாரணமாக வெனிசூலா எண்ணெய் நிறுவனங்களுக்கு $33.5 பில்லியன் டாலர்கள் உதவி செய்ய உள்ளது. பிரேசில் நாட்டின் பெட்ரோபாஸ் நிறுவனத்திற்கு $10 பில்லியன் டாலர் தற்போது கடனாக கொடுத்து விட்டு அடுத்த 10 வருடங்களுக்கு 2000000 பேரல்கள் ஒரு நாளைக்கு சீனாவிற்கு இறக்குமதி செய்ய ஒப்பந்தம் இட்டுள்ளது. அது மட்டுமன்றி கனிமப் பொருட்களை எடுக்கும் உலகின் பல கம்பெனிகளின் பங்குகளையும் வாங்கி உள்ளது.

4.அதுமட்டுமன்றி ஆப்ரிக்க, ஆசிய மற்றும் தென்னமரிக்க நாடுகளிடம் பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் நிலத்தை சீனா பணம் கொடுத்து வாங்கிக் குவித்துள்ளது. தனது வளரும் மக்கள் தொகைக்கு உணவிட இப்போதே திட்டமிட்டு செயல்படுகிறது.

சீனாவின் பிற்காலத்திற்குத் தேவையான அளவு இந்தியாவிற்கும் மூலப் பொருட்கள் தேவையே. இந்தியா ஒரு சில சிறிய முயற்சி எடுத்தாலும் சீனாவைப் போல் பெரிய அளவு முயற்சி எடுக்க வில்லை. இந்த நிலை தொடர்ந்தால் பிற்காலத்தில் சீனாவிடம் எந்தத் துறையிலும் போட்டி இட முடியாமல் இந்தியர்களின் வளர்ச்சியும் வாழ்க்கைத் தரமும் அதல பாதாளத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது

சீனா தற்போது செய்துவரும் செயல்முறைகள் அனைத்தையும் பன்னாட்டு கம்பெனிகள் பல ஆண்டுகளாக அதை விட அதிக அளவே செய்து வருகின்றனர். ஆனால் தற்போது ஒரு அரசாங்கமே அவ்வாறு செய்வதால் ஏற்படும் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

 சீனாவின் பிரம்மாஸ்த்திரம்

 உலகில் எந்த ஒரு நாடும் பொருளாதார வல்லரசாக ஆக வேண்டுமானால் அதற்கு தேவைப்படும் முக்கிய தகுதி, அந்நாட்டின் நாணயம் உலக நாடுகளிடம் இருக்கும் சேமிப்பு செல்வத்தில் முக்கிய பங்காக இருக்க வேண்டும். உலக சேமிப்பு நாணயமாக இருப்பதன் மூலம் அந்த நாணயத்தின் தேவை உலக சந்தையில் மிகவும் அதிகமாக இருக்கும். வியாபார பரிவர்த்தனைக்கும், நாடுகளின் சேமிப்பிற்கும் அந்த நாணயம் தேவையாக இருப்பதால் அந்நாணயத்திற்கு அதிக கிராக்கி ஏற்படுகிறது.

 சீனாவின் அடுத்த குறி, உலக சந்தையில் யுவானை சேமிப்பு நாணயமாக ஆக்க முயற்சி செய்வதாகத் தான் இருக்கும். ஒரு நாணயத்தை உலக சேமிப்பு நாணயமாக மாற்றுவது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அதுவும் சீனா போன்ற மூடிய பொருளாதார  கொள்கை கொண்ட நாடுகளின் கரன்சியை பொது நாணயமாக ஆக்குவது மிகவும் கடினமே. ஆனால் சீனா அதற்கான ஆய்த்த வேலையில் தற்போதே இறங்கத் தொடங்கி விட்டது.

 உலக சேமிப்பு செல்வத்தில் தற்போது டாலரின் பங்கு 65%. அதே போல் உலக டாலர் சேமிப்பு செல்வத்தில் 30%க்கும் மேலாக சீனாவிடம் உள்ளது! எனவே டாலரின் மதிப்பு உடனடியாக  குறையாமல், சீனா சிறிது சிறிதாக யுவானின் பங்கை உலக வர்த்தகத்தில் அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

 இதன் முதல் முயற்சியாக சீனாவின் மத்திய வங்கி தலைவர், டாலருக்குப் பதிலாக உலக நிதி நிறுவனத்தின் SDRஐ(Special Drawing Right) சேமிப்பு கரன்சியாக்க வேண்டும் என்று குரல் எழுப்பி உள்ளார். SDR என்பது ஒரு நாட்டின் நாணயம் அல்ல. இது  டாலர், யூரோ, பவுண்ட் மற்றும் யென் ஆகிய நாணயங்களை கூட்டாகக் கொண்ட ஒரு கணக்கீட்டு அலகு. தற்போது டாலரின் பங்கு தான் இதில் முக்கியமாக இருக்கிறது. ஆனால் சீனா தற்போது இந்த SDRல் யுவான் உள்பட பிற நாணயங்களையும் சேர்க்க வேண்டும் என்று போர்க் கொடி எழுப்பி உள்ளது. இதன் மூலம் யுவானையும் சிறிது சிறிதாக உலக சந்தையில் கலக்க முடியும். இதன் மூலம் நாடுகள் டாலர் சேமிப்புகளை சர்வதேச நிதி இணையத்திடம் கொடுத்து SDR வாங்கிக் கொள்ளவும் கோரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் சீனாவும் தன்னிடம் உள்ள டாலர் சொத்துக்களை இழப்பின்றி விடுவிக்க முடியும். ஆனால் தற்போது SDR  சார்ந்த பாண்டுகளை மத்திய வங்கிகள் தான் வாங்கி விற்க முடியும். தனியார் நிதி நிறுவனங்கள் இவ்வர்த்தகத்தில் ஈடுபட முடியாது.

 அடுத்ததாக உலக வர்த்தகத்தில் டாலரின் தேவையைக் குறைத்து யுவானின் தேவையை அதிகரிக்கத் தேவையான யுக்திகளை எடுத்து வருகிறது. இதன் முதல் கட்டமாக சீனாவின் சில கம்பெனிகளின் வெளிநாட்டு வர்த்தகத்திற்கு (முக்கியமாக ஹாங்காங், ஆசியான் ஆகிய பகுதிகளுக்கு) யுவானை உபயோகிக்க அனுமதி அளித்துள்ளது. இதனால் வெளி நாடுகள் தங்களுக்குத் தேவையான யுவானை சீனாவிடமிருந்து கடனாகவோ அல்லது வாங்கவோ முடியும்.

 ரஸ்யாவும் சீனாவும் தங்களுக்கிடையான வர்த்தகத்தில் தங்கள் சொந்த நாடுகளின் நாணயத்தை உபயோகிக்க முடிவு செய்துள்ளது. பிரேசிலுடனும் இவ்வாறு சொந்த நாணயத்தில் வர்த்தகம் செய்ய முயற்சி செய்து வருகிறது. இதனால் டாலரின் தேவை சிறிதளவு உலக வர்த்தகத்தில் குறைய வாய்ப்புள்ளது. அது மட்டுமின்றி அர்ஜென்டினா, பெலாரஸ், இந்தோனேசியா, மலேசியா, தென் கொரியா போன்ற நாடுகளிடம், டாலருக்குப் பதில் யுவானில் வர்த்தகம் செய்ய வசதியும் செய்து கொடுத்துள்ளது. அதன் மூலம் யுவான் பணத்தை கடனாக சீனாவிடம் இந்நாடுகள் வாங்க முடியும்.

 ஒரு சில பொருளாதார வல்லுனர்களின் கணிப்புப்படி 2012ல் உலக வர்த்தகத்தில் $2 டிரில்லியன் மதிப்பு யுவான் அடிப்படையில் நடைபெற வாய்ப்புள்ளது.

 ஆனால் யுவானை சேமிப்பு நாணயாமாக்க சீனா தன் பொருளாதாரத்தில் பல மாறுதல்கள் செய்ய வேண்டும். முக்கியமாக வெளிநாட்டினர் சீன சொத்துக்களில் எளிதாக முதலீடு செய்வது போலவும், அதில் கிடைக்கும் லாபத்தை எளிதாக வெளியில் எடுத்துச் செல்லவும் அனுமதிக்க வேண்டும். அது மட்டுமன்றி யுவான் அடிப்படையிலான பாண்டு மார்க்கெட் அரசு கட்டுப்பாடு இன்றி எளிதில் வர்த்தகம் செய்யக் கூடியதாக இருக்க வேண்டும். கம்யூனிச அரசால் இது போன்ற முடிவுகளை அவ்வளவு எளிதில் எடுக்க முடியுமா என்பது சந்தேகமே. அமெரிக்காவின் மொத்த உற்பத்தி சீனாவை விட 3 மடங்கு அதிகம் என்பதையும் மறந்து விடக் கூடாது.

 எனவே யுவான் சேமிப்பு நாணயமாகும் காலம் வெகு விரைவில் இல்லை என்றாலும் அந்த மாற்றத்தின் தொடக்கம் ஆரம்பித்து விட்டதாகவே தோன்றுகிறது.

- சதுக்கபூதம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It