modi inaugurates sardar sarovar dam

மோடி அரசு பதவியேற்றது முதல் இந்நாள் வரை இந்தியாவை உலகத் தரத்தில் முதல் இடத்தில் நிறுத்தப் போவது போன்ற கூச்சலை எழுப்பிக் கொண்டு, ‘புதிய இந்தியா பிறக்கிறது’ என மக்களைக் குழப்பிக் கொண்டு, பல இன்னல்களுக்கு ஆளாக்கிக் கொண்டிருக்கிறது. டிஜிட்டல் இந்தியா எனக் கூறிக் கொண்டு நம் வாழ்வாதாரங்களை அழித்துக் கொண்டிருக்கிறது. பண மதிப்பிழப்பால் எளிய மக்களை அலைக்கழித்து, பல உயிர்களைப் பலி வாங்கியது. நீட் தேர்வால் கல்வியில் கூட எளிய மக்கள் முன்னுக்கு வந்துவிடாதபடி கவனமாகத் தன் நரித்தந்திரத்தை அரங்கேற்றி வருகிறது. நாட்டின் முன்னேற்றத்திற்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதாகப் பிதற்றிக் கொண்டு நம் அடிப்படை வாழ்வாதாரங்களையும், அடித்தட்டு மக்களின் வாழ்வையும் சிதைத்து கார்ப்பரேட் கம்பெனிகளையும், பண முதலைகளையும் தீனி போட்டு வளர்த்துக்கொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில் உலகின் இரண்டாவது பெரிய அணையை இந்தியாவில் கட்டி சாதித்து விட்டதாகவும், அதைத் தன் பிறந்த நாள் பரிசாக நாட்டுக்கு அர்ப்பணிப்பதாகவும் முழங்கினார் மோடி. தங்கள் ஆட்சியல் செய்து விட்ட மிகப் பெரிய சாதனை போன்று விளம்பரம் தேடிக் கொள்ளும் இந்த அணைக்கட்டின் உண்மை வரலாறு என்ன? இந்த அணைக்கட்டால் அதிக லாபம் யாருக்கு? என்பதை ஆராய்ந்தால் இந்த சாதனையாளர்களின் உண்மை முகம் வெளிப்படும். இரத்தமும், வியர்வையும் சிந்தி தியாகத்தில் இந்த அணைக்கட்டு உருவானதாகச் சொன்னார் மோடி. அது யாருடைய இரத்தமும், வியர்வையும்? பல அப்பாவி மலைவாழ் மக்களின் உயிர்கள் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் நரபலி கொடுக்கப்பட்டது இந்திய மக்கள் அறியாத ஒன்றா? மோடி அணைக்கட்டை நாட்டுக்கு அர்ப்பணித்த நிகழ்விற்கு சம்பந்தப்பட்ட மத்திய பிரதேசம், மகாராஷ்ட்ரா, ராஜஸ்தான் மாநில முதல்வர்கள் பங்கேற்கவில்லை என்பது அந்த அணைக்கட்டிற்கு மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு இருப்பதையே காட்டுகிறது.

கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக மேத்தா பட்கர் என்ற பெண்மணி இந்த அணைக்கட்டை எதிர்த்து குரல் கொடுத்து பல போராட்டங்களைச் சந்தித்து வருகிறார். தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடும் நம் நாட்டிற்கு அணைக்கட்டு நல்லது தானே, அதை எதிர்த்து அவர் ஏன் போராட வேண்டும் என்ற கேள்வி உண்மை விவரம் அறியாத பலருக்கும் எழக் கூடும். இந்த அணைக்கட்டினால் பயனைடையும் நகரங்களின் எண்ணிக்கை குறைவாகவும், கிராமங்களின் எண்ணிக்கை அதிகமாகவும் ஒரு கணக்கை கூறினார்கள். ஆனால் உண்மையில் அணைக்கட்டின் பயன்பாடு அதிகமாக நீரைத் தேக்கி அதிலிருந்து மின்சாரம் எடுத்து அதனை பெரிய கம்பெனிகளுக்கும் நகரங்களின் மின்சாரத் தேவைக்கும் வழங்குவது. குடிநீரும் பெரிய நகரங்களுக்கே அதிகம் வழங்கப்படும். இந்த அணைக்கட்டினால் நூற்றுக்கணக்கான கிராமங்களும், விவசாய நிலங்களும் தண்ணீருக்குள் மூழ்கி விட்டன. சுற்றுச்சூழல் பெருமளவு பாதிக்கப்பட்டுவிட்டது.

இயற்கையோடு சார்ந்து வாழ்ந்து விவசாயத் தொழில் மட்டுமே செய்து வாழ்ந்த மலைவாழ் கிராம மக்கள் விவசாயமே செய்ய முடியாத தண்ணீர் கிடைக்காத களர் நிலத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இன்னும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இருப்பிடத்தை இழந்து, வேறு இடத்திலும் குடியமர்த்தப்படாமல் அல்லலுறுகின்றனர். தங்கள் வாழ்வாதாரத்தைக் கைவிட மாட்டோம் எனப் போராடிய மக்களுக்கு நிவாரண நிதி என மிகக் குறைந்த தொகையைக் கொடுத்து ஏமாற்றி புறம்போக்கு இடத்திற்கு அனுப்ப, அவர்கள் அத்தொகையை வைத்து சிறிய இருப்பிடத்தைக் கட்டிக் கொண்டதோடு, அதற்கு மேல் அப்பகுதியில் தண்ணீர், மின்சாரம் போன்ற எந்த வசதியுமின்றி, தங்களின் அடிப்படைத் தொழிலையும் செய்ய முடியாது அல்லலுறுகின்றனர். இந்த மக்களுக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்து பல ஆண்டு காலமாகப் போராடிய மேத்தா பட்கர் தலைமையில் போராடிய பலர் இந்தப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை இழந்தனர்.

உண்மையிலேயே நம் நாட்டில் விவசாயத் தொழிலை மேம்படுத்தி கிராமங்களின், நகரங்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி அடையச் செய்ய வேண்டுமெனில் அதற்கு அணைக்கட்டு தேவையில்லை. ஓடிக்கொண்டிருக்கும் நதிநீரை சிறு சிறு மதகணைகளில் தேக்கி அவ்வப்போது விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்படுத்தினால் போதுமானது. சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவது தவிர்க்கப்பட்டு, கிராமங்களும் விவசாய நிலங்களும் அழிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டிருக்காது. வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு நம் நாட்டை தாரை வார்த்துக் கொடுத்து அவற்றின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்வதற்காக அப்பாவி மக்களின் இரத்தம் சிந்தப்பட்டு, உயிர்கள் பலியாக்கப்பட்டு இயற்கை வளத்தையும் சுற்றுச் சூழலையும் சீரழித்து உருவாக்கப்பட்டதே இந்த உலகின் இரண்டாவது பெரிய அணைக்கட்டு. மோடியால் இந்தியாவிற்கு ஒரு நன்மையா? அது கனவிலும் நடக்காது.

- எழிலரசி, தூத்துக்குடி

Pin It