எல்லா உழைக்கும் மக்களுக்கும் ஒரு புரட்சி தேவைப்படுகிறது. அவர்களுக்கு உத்தரவாதமான வேலை, சம்பளம் தேவைப்படுகிறது. அதற்காக கடுமையாக உழைக்கத் தயாராகவே இருக்கிறார்கள்.

leninஆனால் ஆளும் ஆட்சியாளர்கள் அவர்களை உழைப்பிலிருந்து அன்னியமாக்குகிறார்கள். அதற்காக சில சலுகைகளை விட்டெறிகிறார்கள். எதிர்ப்பு வராமல் இருக்க சில எடுபிடிகளையும் வைத்து சமாதானம் செய்கிறார்கள்.

ஆனாலும் வாழ்க்கை தங்கள் கைவிட்டுப் போகும் போது அடிமையாக, பரதேசிகளாக, அகதிகளாக வாழ விரும்பாத பாட்டாளிவர்க்க மக்கள் கூட்டம் புரட்சியை நேசிப்பார்கள். 

CCTV, GPS +++ இருந்த போதும் பாலியல் கொடூரம், வங்கிக் கொள்ளை, திருட்டு நின்றாவிட்டது?

அப்படி தனிநபர் அல்லது சிறு கும்பலே சட்டத்தை மீறும் போது, உன்னால் செய்வதைச் செய் என்ற துணிவு உழைக்கும் வர்க்கத்திற்கு வராமலா போகும்...?

ஒவ்வொரு சமூக வளர்ச்சி மாற்றங்களும், இது போல சாத்தியமே இல்லை என்ற காரணங்களை உடைத்து சுக்கு நூறாக்கி விட்டுத்தான் நடந்திருக்கிறது. கிடைத்த நல்வாய்ப்புகளைப் பயன்படுத்தி சுகப்பிரசவமாக எந்த சமூக மாற்றமும் நடந்துவிடவில்லை என்பதுதான் இதுவரை நாமறிந்த வரலாற்று உண்மை. ஆனால் இதற்கு நேர் எதிராக இருக்கிறது இப்போதைக்கு புரட்சி வருமா என்று சலித்துக் கொள்வது.

ஸ்பார்ட்கஸ் என்ற ஒரு மாவீரன் தோன்றுவான் என்பது அன்றைய வரலாற்றுக் கட்டத்தில் எதிர்பாராத அதிசயம்தான். அவன் அடிமைகளின் எழுச்சிக்கு தலைமை தாங்குவான், அது அடிமையுடமை சமுதாயத்தையே நிர்மூலமாக்கி அடுத்த கட்ட சமுதாய வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும் என்பது, அந்த காலகட்டத்தில் மாற்றவே முடியாது என்ற சூழலை உடைத்து எறிந்து விட்டுத்தான் நடந்தது.

ஒவ்வொரு சமூக கட்டத்திலும் அன்றைய ஆளும் வர்க்கம் தனது அதிகாரத்தை, தொழில்நுட்பத்தை, ராணுவ பலத்தை முழுமையாகப் பயன்படுத்தி மாற்றத்திற்கான சக்திகளை ஒழித்துக் கட்டவே முயற்சிக்கும்.

ஆளும் வர்க்கத்தைப் போலவே அதனை எதிர்த்துப் போராடும் வர்க்கமும் தங்களை சகல துறைகளிலும் ஆயுதபாணியாக்கிக் கொண்டுதான் போராடியாக வேண்டும்.

வாய்ப்புகள் குறைவாக இருக்கலாம். உடனடி சாத்தியம் இல்லாமலும் இருக்கலாம். அதற்கேற்ப உத்திகளை வகுத்து செயல்பட வேண்டும். அதற்கு அடிப்படையாக அரசியலும் அமைப்பு முறையும்தான் முக்கியமானது.

அதுதான் விவாதிக்க வேண்டிய பிரச்சனை. யாருக்கு வேண்டும் புரட்சி, புரட்சி நடக்குமா என்பது பற்றியது இல்லை.

- தருமர், திருப்பூர்

Pin It