புரட்சிக்கு முன்:
வில்மா எஸ்பின் கில்லோயிஸ் 1930 ஏப்ரல் 7 அன்று கியூபாவில் உள்ள சாண்டியாகோவில் வசதிமிக்க குடும்பத்தில் தந்தை ஜோஸ் எஸ்பினுக்கும், தாயார் மார்கரிட்டா கில்லோயிஸுக்கும் மகளாகப் பிறந்தார். வில்மாவின் தாய் பிரெஞ்சு மரபைச் சேர்ந்தவர். வில்மாவின் தந்தை ’பகார்டி ரம்’ நிறுவனத்தில் வழக்கறிஞராகப் பணி புரிந்தார். அவர்களுக்கு லிலியானா, வில்மா, நில்சா, ஐவன், சோனியா, ஜோஸ் அலெஜான்ட்ரோ என ஆறு குழந்தைகள்.
அவர்கள் குழந்தைகளைத் தங்களைப் போலவே சமூக, இன, மதத் தடைகள் கருதாதவர்களாகவும், அதிக உணர்திறன் உள்ளவர்களாகவும், இயற்கையை நேசிப்பவர்களாகவும், வாசிக்கும் பழக்கமுடையவர்களாகவும், கலாச்சார மேம்பாட்டிலும் விளையாட்டிலும் ஆர்வமுடையவர்களாகவும் வளர்த்தனர். கார்ல் மார்க்சின் மருமகனும், பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனருமான பால் லாபர்கு வில்மாவின் மூதாதையர்களில் ஒருவர். வில்மா தன் பள்ளிக் கல்வியைத் தனது ஊரிலுள்ள பெரெஸ் பேனா அகாடமியிலும், சாக்ராடோ கொராஸானிலும் படித்தார். 1940களில் அசோசியசியன் புரோ-ஆர்டே கியூபானோவில் பாலே நடனமும், இசையும் பயின்றார்.
மாணவர் போராட்டங்கள்:
வில்மா சாண்டியாகோவில் ஓரியண்டெ பல்கலைக்கழகத்தில் 1954இல் வேதியல் பொறியியலில் பட்டம் பெற்றார். கியூபாவில் இந்தத் துறையில் பட்டம் பெற்ற முதல் இரண்டு பெண்களில் வில்மாவும் ஒருவர். பல்கலைக்கழக குரலிசைக் குழுவின் ஒரே உச்சக் குரல் பாடகராக இருந்த வில்மா சிறு வயதிலிருந்தே பாலே கற்றதால் நடனக் குழுவிலும் இருந்தார். பல்கலைக்கழகக் கைப்பந்து அணியின் தலைவராகவும் இருந்தார்.
ஓரியண்டெ பல்கலைக்கழகத்தில் வில்மாவின் அரசியல் கல்வியும் தொடங்கியது. ஓரியண்டெ பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பின் போராட்டங்களில் வில்மா ஆர்வத்துடன் பங்கேற்றார், சாண்டியாகோவின் தெருக்களில் நடைபெற்ற அனைத்து ஆர்ப்பாட்டங்களிலும் தனது பொறியியல் பள்ளிக்குரிய கொடியுடன் முன்னணியில் பங்கேற்றார்.
1952 மார்ச் 17 ஆட்சிக் கவிழ்ப்பிற்குப் பிறகு சர்வாதிகாரி பாத்திஸ்டாவிற்கு எதிரான போராட்டங்களில் வில்மா தீவிரமாகப் பங்கேற்றார். ஓரியண்டெ பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பு அரசியலமைப்பு மீட்கப்படும் வரை கல்லூரிகளைப் புறக்கணித்தது. 1940 அரசியலமைப்பை மீண்டும் நிர்மாணிக்கக் கோரி, "கிழக்கிலிருந்து மாண்டுவாவுக்கு அரசியலமைப்புப் படையெடுப்பு" என்ற அரசியல் இயக்கத்தில் வில்மா பங்கேற்றார், சாண்டியாகோ நகரம் முழுவதும் அதற்கான பிரகடனங்களை விநியோகித்தார். 1952 ஜூன் 8ஆம் தேதி பல்கலைக்கழகத்திற்குச் சென்று தேசப்பற்றை மறுவுறுதி செய்யும் கூட்டத்தில் கலந்து கொண்டு, 50ஆம்ஆண்டு சுதந்திர தின விழாவைக் கொண்டாடுமாறு மக்களைக் கேட்டுக் கொண்டார்.
அந்த நாள் மாணவர்களையும், ஆசிரியர்களையும் 1940 அரசியலமைப்பின் மீது உறுதிமொழியேற்க அழைத்தது. வில்மா எஸ்பினும், மாணவர் அமைப்பும் அதில் பங்கேற்று சர்வாதிகாரத்தின் மீதான தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும் பனாமா கால்வாய்க்கும் இடையே கடல்போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் கியூபாவை இரண்டாகப் பிரிக்கும் விதமாக கியூப வழிக் கால்வாய் திட்டம் பாத்திஸ்டா அரசால் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தை எதிர்க்கும் அமைப்பிலும் வில்மா அங்கம் வகித்தார்.
1953ல், ஃபிராங்க் பயஸ் என்பவர் ஓரியண்டே புரட்சிகரச் செயல்பாட்டமைப்பை (ARO) நிறுவினார்.இவ்வியக்கம் பின்னர் ஜூலை 26 இயக்கத்துடன் ஒன்றிணைந்தது. ஃபிராங்க் பயஸுடன் வில்மா இணைந்து செயல்பட்டார். வில்மாவின் தங்கை நில்சா அவருக்கு முன்பே ஃபிராங்க் பயஸின் செயற்குழுவில் போராளியாகி வேலை செய்ய ஆரம்பித்து விட்டார்.
வில்மா மன்கடா தாக்குதலின் போது சர்வாதிகாரப் படைகளிடமிருந்து தப்பி வந்த போராளிகளுக்கும், காயமுற்றவர்களுக்கும் உதவி புரிந்தார். வில்மாவின் புரட்சிகர நடவடிக்கைகளால் அவருக்கு ஆபத்து நேரிடும் என அஞ்சிய அவர் தந்தை, வில்மா அமெரிக்கா சென்றால் அவரின் அரசியல் செயல்பாடுகள் தடைபடும் என்ற நம்பிக்கையில் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (எம்ஐடி) முதுகலைக் கல்வி பெற வில்மாவை அமெரிக்காவிற்கு அனுப்பினார்.
வில்மா 1955ல் ‘எம்ஐடி’யில் முதுகலைப் பட்டம் பெற்றார். அமெரிக்காவில் ஏழைகளும் கறுப்பின மக்களும் ஒடுக்கப்படுவதை நேரில் கண்டார். வில்மாவின் அமெரிக்க அனுபவம் அமெரிக்க அரசின் மீதான எதிர்ப்பை மேலும் தீவிரப்படுத்தியது. அவர் அமெரிக்காவிலிருந்து மெக்ஸிகோ வழியாக கியூபாவுக்குத் திரும்பும் வழியில் ஜூலை 26 இயக்கத்தின் போராளிகளைச் சந்தித்தார்.
கியூபாவில் தலைமறைவாக இருக்கும் போராளிகளுக்கான வழிமுறைகளையும். கியூபாவுக்குத் திரும்பி பாத்திஸ்டாவைத் தோற்கடிப்பதற்கான தங்கள் திட்டங்களை விவரிக்கும் கடிதங்களையும் வரைபடங்களையும் ஃபிடல் காஸ்ட்ரோவிடமிருந்து பெற்று அவற்றை ஃபிராங்க் பயஸிடம் ஒப்படைக்கும் பொறுப்பை ஏற்றார்.
புரட்சியில்:
1956 நவம்பர் 30இல் ஃபிராங்கின் உத்தரவுப்படி கியூபாவின் சுதந்திரத்திற்கான போராட்டத்தைத் தொடர மெக்ஸிகோவிலிருந்து ஃபிடல் மற்றும் ஜூலை 26 இயக்கப் போராளிகளை அழைத்து வந்த கிரான்மா படகு தரையிறங்குவதை ஆதரிப்பதற்காக சாண்டியாகோவில் எழுச்சியை ஏற்படுத்தியதில் வில்மா முக்கியப் பங்காற்றினார். வில்மாவின் வீடு இதற்கான தயாரிப்பு மையமாகச் செயல்பட்டது.
1957 ஜூலை 30இல் தலைசிறந்த புரட்சியாளர் ஃபிராங்க் பயஸ் 22 வயதில் படுகொலை செய்யப்படுவதற்கு முன்னரே வில்மாவை ஜூலை 26 இயக்கத்தின் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளராக நியமித்தார். ஜூலை 30 ஃபிராங்க் பயஸின் நினைவு தினம் கியூபாவில் தியாகியர் தினமாக போற்றப்படுகிறது.
பாத்திஸ்டாவின் கொடுங்கோன்மைக்கு எதிரான போராட்டத்தில் தங்கள் உயிரைக் கொடுத்த ஆயிரக்கணக்கான புரட்சிகரப் போராளிகளின் தைரியம், நல்லொழுக்கங்கள், மகத்துவம் என அனைத்திற்கும் எடுத்துக்காட்டாக ஒரு மனிதரை காண்பது எளிதல்ல. அந்த மனிதர் ஃபிராங்க் பயஸ் என்பதைத் தயக்கமின்றி காண முடியும் என வில்மா கூறியுள்ளார்.
ஃபிராங்க் பயஸின் மறைவுக்குப் பிறகு கிழக்கு கியூப நகர்ப்புறத் தலைமறைவுக் கிளர்ச்சி இயக்கத்தின் தலைவராக வில்மா பொறுப்பேற்றார். அவரது வீடு அதன் தலைமையகமானது. பாத்திஸ்டா படையினரின் தேடுதல் வேட்டையின் போது அவர் வீட்டுக் கூரையில் ஏறி தப்பி ஓடியுள்ளார்.
சியரா மிஸ்ட்ராவில்:
நகர்ப்புற இயக்க வேலைகளின் போது சர்வாதிகாரப் படைகளால் வில்மா தொடர்ந்து அச்சுறுத்தப்படுவதன் காரணமாக, சியரா மேஸ்ட்ரா மலைகளில், குறிப்பாக ஃபிராங்க் பயஸ் இரண்டாம் முன்னணியின் கிளர்ச்சிப் படையில் சேர வேண்டும் என்று இயக்கம் முடிவு செய்தது. வில்மா ஸ்பானியம், ஆங்கிலம் இரண்டும் சரளமாகப் பேசும் திறன் கொண்டவர் என்பதால் சர்வதேச அளவில் புரட்சிகர இயக்கத்தைக் கொண்டுசேர்க்கும் பிரதிநிதியாக முக்கியப் பங்காற்றியுள்ளார்.
1957ஆம் ஆண்டில் நியூயார்க் டைம்ஸ் நிருபர் ஹெர்பர்ட் மேத்யூஸ், பிடல் காஸ்ட்ரோ இடையிலான நேர்காணலுக்கு அவர் மொழிபெயர்ப்பாளராகச் செயல்பட்டார், இது புரட்சி குறித்த செய்திகளைப் பரப்புவதற்கும், கியூபர்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் காஸ்ட்ரோவின் மரணம் குறித்த பாத்திஸ்டாவின் கூற்றுகள் பொய்யானவை என்பதை உறுதி செய்வதற்கும் உதவியது. அமெரிக்கப் பத்திரிகையாளர்கள் கெரில்லாப் போராளிகளைப் பற்றி எழுத மலையேறி வந்த சமயங்களில் வில்மாதான் மொழிபெயர்ப்பாளராக உதவியுள்ளார்.
வில்மா ஒரு வேதியல் பொறியியலாளராக இயக்கத்திற்கான வெடிகுண்டுகளைத் தயாரித்துள்ளார். கெரில்லாப் படைத் தூதர்களின் தகவல் தொடர்புக்காக வில்மா சிறந்த முறையில் தகவல்களை குறியாக்கம் செய்வதிலும், மறைவிலக்கம் செய்வதிலும் உதவினார். கெரில்லாப் படைகளுக்குத் தேவையானவற்றைப் பெற்று வழங்கும் பொறுப்பும் அவருக்கு அளிக்கப்பட்டது.
லூஸ், அலிசியா, மோனிகா, டெபோரா என்று பல புனைப்பெயர்களுடன் அவர் போராட்டப் பணிகளில் ஈடுபட்டார். ஃபிராங்க் பயஸ் இரண்டாம் முன்னணியின் சார்பாக 11 மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களைப் பராமரிப்பதற்கு பொறுப்பான நிர்வாக வலையமைப்பை ஏற்படுத்துவதிலும், 100 பள்ளிகளை உருவாக்குவதிலும் வில்மா சிறப்பாக செயல்பட்டார்.
புரட்சிக்குப் பின்:
ஃபாத்திஸ்டாவை கியூபாவிலிருந்து வெற்றிகரமாக துரத்தியடித்த பின் 1959, ஜனவரி 26ல் கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் தற்போதைய முதன்மை செயலாளரும், ஃபிடல் காஸ்ட்ரோவின் சகோதரருமான ராவுல் காஸ்ட்ரோவை வில்மா மணம் புரிந்தார். அவருக்கு டெபோரா, மரியெலா, நில்சா, மற்றும் அலெஜான்ட்ரோ காஸ்ட்ரோ எஸ்பான் என நான்கு குழந்தைகள் பிறந்தனர். வில்மாவுக்கு எட்டு பேரக்குழந்தைகள் உள்ளனர். அவரது மகள் மரியெலா காஸ்ட்ரோ தற்போது கியூபாவின் பாலியல் கல்விக்கான தேசிய மையத்தின் தலைவராக உள்ளார், அவரது மகன் அலெஜான்ட்ரோ காஸ்ட்ரோ எஸ்பான் உள்துறை அமைச்சகத்தில் படைத்தலைவராக உள்ளார்.
நிர்வாகப் பொறுப்புகள்:
புரட்சியின் வெற்றிக்குப் பின் ஜூலை 26 இயக்கத்தின் முன்னணி உறுப்பினராக, புரட்சிகர அரசின் நிர்வாகத்தில் வில்மா பல முக்கியப் பொறுப்புகளை ஏற்றார். உணவுத் தொழில்துறையின் தொழில்துறை மேம்பாட்டு இயக்குநராக வில்மா பணியாற்றினார். 1967 முதல் 1971 வரை சமூக தடுப்பு ஆணையத்தின் தலைவராகவும், 1969 இல் உணவு அமைச்சகத்தின் தொழில்துறை மேம்பாட்டு இயக்குநராகவும் பணியாற்றினார்.
1971ல் குழந்தைகள் பராமரிப்பு அமைப்பின் தலைவராகவும், குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான கியூபா நாடாளுமன்ற ஆணையத்தின் தலைவராகவும், மற்றும் பாலியல் கல்வி தொடர்பான தேசிய குழுவின் தலைவராகவும் செயல்பட்டார். கியூப இளம் தலைமுறையினருக்கு பயிற்சி அளிப்பதிலும் நாட்டின் விஞ்ஞான வளர்ச்சியை மேம்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளிலும் பங்கேற்றார்.1976ல் கியூப மக்களவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கியூப மேலவையின் உறுப்பினராகவும் செயல்பட்டார் வில்மா 1965 முதல் 1989 வரை கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராக செயல்பட்டார். . 1980 முதல் 1991 வரை கியூப ஆட்சிக்குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையிலும் கியூபாவின் பிரதிநிதியாகவும் பணியாற்றினார்.
கியூபப் பெண்கள் கூட்டமைப்பு:
கியூபப் பெண்களை ஒருங்கிணைத்து அமைப்பாக்கும் பணியை வில்மா ஏற்றுக் கொண்டார். 1960 ஆகஸ்ட் 23இல் கியூபாவின் அனைத்துப் புரட்சிகரப் பெண்கள் குழுக்களையும் ஒன்றிணைக்கும் அமைப்பாக கியூபப் பெண்கள் கூட்டமைப்பு நிறுவப்பட்டது. வில்மா இவ்வமைப்பின் தலைவராகச் செயல்பட்டார். பெண்களுக்குக் கல்வி கற்பிப்பதும், அவர்கள் வேலைவாய்ப்பு பெறத் தேவையான திறன்களை வழங்குவதும், எல்லாவற்றிற்கும் மேலாக அனைத்து அரசியல், சமூக, பொருளாதார நடவடிக்கைகளிலும் கியூபப் பெண்கள் சம பங்கு ஏற்க ஊக்குவிப்பதுமே இவ்வமைப்பின் முதன்மைக் குறிக்கோள்கள். கியூப மகளிர் கூட்டமைப்பின் (எஃப்எம்சி) தலைவராக மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட வில்மா தன் இறுதி நாள் வரையிலும் அத்தலைமைப் பொறுப்பில் பணியாற்றியுள்ளார். ஆண்களும் பெண்களும் சம வாய்ப்புகளையும் உரிமைகளையும் வழங்கும் சமத்துவமிக்க, நீதியான சமுதாயத்தை உருவாக்குவதற்கான போராட்டத்தில் கியூபப் பெண்களை அவர் வெற்றிகரமாக வழிநடத்தினார். வில்மா கியூபாவில் பாலின சமத்துவத்தை நிலைநாட்டப் போற்றுதற்குரிய வகையில் பெரும்பங்கு ஆற்றியுள்ளார். கியூபப் பெண்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த 100,000 பெண்கள் கியூபாவெங்கும் 10 இலட்சம் மக்கள் எழுத்தறிவு பெற உதவினர். 1960இல், பன்றி வளைகுடாப் படையெடுப்பிற்கு முன்னர் கியூபா முழுதும் சர்க்கரை ஆலைகளும் கரும்பு வயல்களும் தாக்குதலுக்கு உள்ளான போது, கியூப மகளிர் கூட்டமைப்பு அவசர மருத்துவ உதவிக்கான படைப்பிரிவுகளை உருவாக்கியது.
பணிபுரியும் பெண்களுக்கு உதவியாக ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளைக் கவனிக்கும் ஒரு நிறுவனத்தை உருவாக்கும் பணி, ஃபிடல் காஸ்ட்ரோவால் கியூப மகளிர் கூட்டமைப்புக்கு அவ்வமைப்பின் முதலாவது பேராயத்தின் இறுதி அமர்வில் வழங்கப்பட்டது. பகல்நேரப் பராமரிப்பு மையங்களின் வலையமைப்பை உருவாக்கும் பணியை வில்மா சிறப்பாகச் செயல்படுத்தினார். 1961 ஏப்ரல் மாதம் அவை செயல்பாட்டிற்கு வந்தன.
1968இல் வில்மா குழந்தைகளுக்கான நிறுவனத்தை உருவாக்கினார். இது அதிகாரபூர்வமாக 1971 மே 31இல் நிறுவப்பட்டது - இது பள்ளி முன்பருவக் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிப்பதற்கும் உதவுவதற்குமான அரசுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் பொறுப்புடைய நிறுவனம் ஆகும். .
கியூப அரசும், மகளிர் கூட்டமைப்பும் பெண்களைத் தொழிலாளர் படையில் சேர ஊக்குவித்தன, 1975ஆம் ஆண்டு வில்மாவின் முன்முயற்சியால் கியூப குடும்ப நெறிமுறைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் வேலை செய்யும் தாய்மார்களுக்கான பணிச்சுமைகளை குறைக்கும் விதத்தில் வீட்டு வேலைகளையும், குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்புகளையும் ஆண்கள் பகிர வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
குழந்தை பராமரிப்பிலும், வீட்டு கடமைகளிலும் “உதவி" என்ற சொல்லை நாம் பயன்படுத்தினால், அவை பெண்களின் பொறுப்புகள் என்றே நாம் ஏற்றுக்கொள்கிறோம், ஆனால் அது அவ்வாறு இல்லை: நாம் “பகிர்” என்று சொல்கிறோம் ஏனென்றால் அவை ஒரு குடும்ப பொறுப்பு என்று வில்மா குறிப்பிட்டுள்ளார்.
1976 ஆம் ஆண்டில் தொழிலாளர் அமைச்சகம் உடல்நலக் கேடுகளை விளைவிக்கும் என்ற பெயரில் கிட்டத்தட்ட 300 வகை வேலைகளில் இருந்து பெண்களை தடைசெய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்த 300 வகை வேலைகளை இறுதியில் வில்மாவின் கடும் முயற்சியால் 30 ஆகக் குறைக்கப்பட்டது. மாற்று பாலினத்தவர், ஓரினச் சேர்க்கையாளர்கள் மீதான பாகுபாடுகளையும், ஒடுக்குமுறைகளையும் நீக்க வில்மா தொடர்ந்து போராடியுள்ளார்.
சர்வதேச அரங்கில் வில்மாவும், அவர் பெற்ற விருதுகளும்:
சர்வதேச அளவில், அவர் ஒரு சிறந்த அரசியல் தலைவராக கருதப்பட்டார். அவர் பல்வேறு சர்வதேச நிகழ்வுகளில் கியூபாவை பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.
செப்டம்பர் 1959 இல் சிலியில் நடந்த சர்வதேச ஜனநாயக பெண்கள் கூட்டமைப்பின் பேரவையில் கலந்து கொண்ட கியூப பிரதிநிதிகளுக்கு வில்மா தலைமை தாங்கினார். சர்வதேச பெண்கள் மாநாடுகளுக்கான கியூப பிரதிநிதிகளுக்கும் தலைமை தாங்கினார்.
1963-ல்கியூப தலைநகரில் நடைபெற்ற அமெரிக்காவின் மகளிர் பேராயத்தில் வில்மா கியூபாவை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
1969-ஜூன் மாதம் ஹெல்சின்கியில் நடைபெற்ற உலக மகளிர் பேராயத்திற்கு தலைமை தாங்கினார்.
1970-வியட்நாமிய பெண்கள் கூட்டமைப்பின் அழைப்பின் பேரில் வியட்நாம் ஜனநாயகக் குடியரசுக்குச் சென்ற கியூப தூதுக்குழுவிற்கு வில்மா தலைமை தாங்கினார். அதே காலகட்டத்தில் தான் ஆசிய நாட்டிற்கு எதிரான அமெரிக்க குண்டுவெடிப்பு தாக்குதல்களை மீண்டும் தொடங்கியது.
1975-ல் அவருக்கு அனா பெட்டான்கோர்ட் விருது வழங்கப்பட்டது. அதே ஆண்டு அக்டோபரில், அவர் பெர்லினுக்குப் பயணம் செய்தார், அக்டோபர் 20 முதல் 24 வரை நடைபெற்ற உலக மகளிர் பேராயத்தில் கியூப தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கினார்.
1977-பிப்ரவரி 20 அன்று, பல்கேரியா மக்கள் குடியரசின் மாநில கவுன்சிலால் இராணுவ உறவுகளை வலுப்படுத்தியதற்கான விருது வில்மாவுக்கு வழங்கப்பட்டது. அதே ஆண்டில் மார்ச் 8 ஆம் தேதி, கியூப புரட்சிகர ஆயுதப்படைகளின் 20 வது ஆண்டு நினைவு பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டது. அதே ஆண்டு, வில்மா ஜனநாயக பெண்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1978-பிப்ரவரியில், அவர் ஜமைக்கா சென்றார், அங்கு லத்தீன் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களை ஆர்வத்துடன் பங்கேற்கச் செய்வதற்கான பிராந்திய துணைக்குழுவின் முதல் கூட்டத்தில் கலந்து கொண்டார். மே மாதம், மாஸ்கோவில் நடைபெற்ற உலக ஜனநாயக பெண்கள் கூட்டமைப்புத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
1979-ஏப்ரல் மாதம், அவருக்கு லெனின் சர்வதேச பரிசு வழங்கப்பட்டது. மக்களிடையே சமாதானத்தை வலுப்படுத்த அவர் ஆற்றிய பங்களிப்புக்காக உலக ஜனநாயக பெண்கள் கூட்டமைப்பு டிசம்பர் 27 அன்று அவருக்கு அப்பரிசை வழங்கியது.
1981-செப்டம்பர் 8 ஆம் தேதி, பாரிஸில், கியூப பெண்களின் திறன்களை மேம்படுத்துவதில் கியூப மகளிர் கூட்டமைப்பு ஆற்றிய பணிக்காக யுனெஸ்கோ வழங்கிய நாதேழ்தா க்ருப்ஸ்கலா பரிசை வில்மா பெற்றார்.
1982- வேளாண் தொழிலாளர்கள் சங்கத்தால் வழங்கப்பட்ட மார்கோஸ் மார்த்தி சிறப்பு விருதையும், புரட்சி பாதுகாப்பு குழுக்களால் வழங்கப்பட்ட செப்டம்பர் 28 விருதையும் பெற்றார்.
1983-ஜனவரியில் வில்மா ஐ.நா. மகளிர் நிறுவனத்தின் ஆலோசகர் குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அடுத்த ஆண்டும் அவர் அதே பதவிக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1985- ஜூலை மாதம், பெண்களின் நிலைமை குறித்த ஐ.நா மாநாட்டில் கலந்து கொண்டார். அதே ஆண்டு, ஆகஸ்ட் 23ல் கியூப மகளிர் கூட்டமைப்பின் 25 வது ஆண்டு நிறைவு விழாவின் போது வில்மாவுக்கு மரியானா கிராஜல்ஸ் விருது வழங்கப்பட்டது. அக்டோபரில் செக்கோஸ்லோவாக்கியாவின் கம்யூனிஸ்ட் கட்சி பாசிசத்திற்கு எதிரான வெற்றியின் 40 வது ஆண்டு நினைவு பதக்கத்தை வில்மாவுக்கு வழங்கியது.
1987-மாஸ்கோவில் நடந்த உலக பெண்கள் பேராயத்தில் கலந்து கொண்டார்.
1989-பிப்ரவரியில் லாவோஸ் ஜனநாயக குடியரசின் அமைச்சர்கள் குழு அவருக்கு நட்பிற்கான விருதை வழங்கியது. நிகரகுவாவில் உள்ள சாண்டினிஸ்டா தேசிய விடுதலை முன்னணி அவருக்கு சாண்டினிஸ்டா புரட்சியின் 10 வது ஆண்டு நினைவு விருதை வழங்கியது.
1991-மார்ச் மாதம் அவர் வெனிசுலா பெண்களின் 2 வது பேராயத்தில் வில்மா பங்கேற்றார்.
1992-- ஜனவரி மாதம் அவர் பிரேசிலின் நிடெரோய் நகரில் நடைபெற்ற கியூபாவுடனான ஒருமைப்பாட்டிற்கான நிகழ்வின் இறுதி அமர்வில் வில்மா கலந்து கொண்டார். 31 ஆம் தேதி ரியோ டி ஜெனிரோ மாநிலத்தில் பிரேசில் நகரத்தின் மரியாதைக்குரிய மகள் என்று பெயரிடப்பட்டார். நகராட்சி அரசால் உலகின் சிறந்த ஆளுமைகளை கௌரவிக்கும் அரரிபோயா நோ கிரெயின் விருது அவருக்கு வழங்கப்பட்டது. பிப்ரவரியில், அவர் ஜெனீவாவுக்குச் சென்றார், அங்கு பெண் விவசாயிகளின் நிலைமை குறித்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். நவம்பர் 20 ஆம் தேதி, அவர் மீண்டும் பிரேசிலின் நைட்ரோய் சென்றார், அங்கு கியூபாவின் நன்கொடையாக ஒரு குடும்ப மருத்துவர் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
1994-செப்டம்பரில், அர்ஜென்டினாவில் நடைபெற்ற உலக ஜனநாயக பெண்கள் கூட்டமைப்பின் இரண்டாவது பிராந்திய கூட்டத்தில் கலந்து கொண்டார். அவர் அர்ஜென்டினாவைச் சேர்ந்த பெண் சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தார் மேலும் லத்தீன் அமெரிக்காவிற்கான ஐ.நா. பொருளாதார ஆணையம் (செபால்) ஏற்பாடு செய்த பெண்கள் குறித்த ஆறாவது பிராந்திய மாநாட்டிலும் பங்கேற்றார்.
1995 – ஐ.நாவால் அறிவிக்கப்பட்ட உலக குடும்ப ஆண்டின் வெற்றிக்கு வில்மா அளித்த பங்களிப்புக்காக ஐ.நா அவரை சிறப்பித்தது.
1998 செப்டம்பரில் அவர் சிலியில் நடைபெற்ற அமெரிக்காவின் முதல் பெண்கள் மற்றும் பெண் சட்டமன்ற உறுப்பினர்களின் 7 வது மாநாட்டில் கியூபாவை பிரதிநிதித்துவப்படுத்தினார். பினோசே சர்வாதிகாரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் கூட்டமைப்பை அவர் சந்தித்தார்.அக்கூட்டமைப்பு அவருக்கு "அவர்கள் எங்கே" என்ற மனித உரிமைகள் குழுவால் வழங்கப்பட்ட மிக உயர்ந்த சிறப்புக்குரிய பதக்கத்தை வழங்கியது.
2000-அவர் பனாமாவில் பெண்கள் தொடர்பான கொள்கைகளை பின்பற்றுவதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் பொறுப்பேற்ற பெண் அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அந்த ஆண்டு பனாமாவில் நடைபெற்ற 5 வது ஐபரோ-அமெரிக்க உச்சிமாநாட்டிற்கான ஏற்பாடுகளின் போது இந்த சந்திப்பு நிகழ்ந்தது. ஜூன் 6 ஆம் தேதி, ஐ.நா பொதுச் சபையின் அசாதாரண அமர்வுகளின் இரண்டாம் நாளில் அவர் கலந்து கொண்டார், இது 1995 முதல் 2000 வரையிலான காலகட்டத்தில் பெண்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்கான முடிவுகளை ஆய்வு செய்தது. அந்த சந்தர்ப்பத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் புதிய தாராளமயக் கொள்கைகள். பெண்களின் நிலைமையில் எதிர்மறையான தாக்கம் செலுத்துவதை வில்மா கண்டித்தார். கியூபா மீதான அமெரிக்க விரோதக் கொள்கையைப் பற்றிக் குறிப்பிடுகையில், தங்கள் இறையாண்மையையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்கான கியூப மக்களின் தீர்மானத்தை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
2001-மார்ச் மாதத்தில், லத்தீன் அமெரிக்க தேசத்தின் தேசிய மகளிர் நிறுவனத்தின் அழைப்பை ஏற்று வெனிசுலாவுக்கு சென்றார். லத்தீன் அமெரிக்க பெண்களின் உரிமைகளுக்கான போராட்டத்தில் அவரின் சிறந்த பங்களிப்பிற்காக அவ்வமைப்பு அவருக்கு ஆர்கெலியா லயா என்ற விருதை வழங்கியது. ஹியூகோ சாவேஸ் வில்மாவிற்கு "பிரான்சிஸ்கோ டி மிராண்டா" விருதை வழங்கி சிறப்பித்தார்.
அதே ஆண்டு, கியூபாவின் மேலவை அவருக்கு கியூப குடியரசின் கதாநாயகி பட்டம் அளித்தும் பிளாயா கிரோன் விருது வழங்கியும் சிறப்பித்தது.
2002-ல் லெபனானின் பெய்ரூட்டில் நடைபெற்ற உலக ஜனநாயக பெண்கள் கூட்டமைப்பின் 13 வது மாநாட்டில் கலந்து கொண்டார்.
வில்மாவின் நினைவில்:
புற்று நோயால் பாதிக்கப்பட்ட வில்மா 2007ஆம் ஆண்டில் ஹவானாவில் இறந்தார். அவர் இறந்த மறுநாள் ஹவானாவில் உள்ள கார்ல் மார்க்ஸ் அரங்கில் கியூப கம்யூனிஸ்ட் கட்சி அவருக்கு இறுதி மரியாதை செலுத்தியது. கியூப அரசு அவரை "நம் நாட்டிலும் உலகளவிலும் பெண்களின் விடுதலைக்கு மிகவும் பொருத்தமான போராளிகளில் ஒருவராக" வில்மாவைப் புகழ்ந்து அறிக்கை வெளியிட்டது. அவரது உடல் தகனம் செய்யப்பட்டு கியூபாவின் சாண்டியாகோ மாகாணத்தில் உள்ள இரண்டாவது பிராங்க் பாஸ் கிழக்கு முன்னணி கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. சாண்டியாகோவில் உள்ள அவரது வீடு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.
ஃபிடல் காஸ்ட்ரோ வில்மாவுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக “வில்மாவின் போராட்டங்கள்” என்ற தலைப்பில் தன் மனப்பதிவுகளை பகிர்ந்துள்ளார். அதில் அவர் “வில்மாவின் உதாரணம் முன்பை விட இன்று மிகவும் அவசியம். கியூபாவில் பெரும்பாலானோர் உலகின் பிற பகுதிகளைப் போலவே, மதிப்புக்குரிய புரட்சிகர விதிவிலக்குகளுடன், பாகுபாட்டை எதிர்கொண்ட போது, அவர் தனது முழு வாழ்க்கையையும் பெண்களுக்காக போராடுவதற்கு அர்ப்பணித்தார். ”
“புரட்சி வெற்றிபெற்றதும், கியூபப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக அவரது தடுத்து நிறுத்த முடியாத போர் தொடங்கியது, இது கியூபப் பெண்கள் கூட்டமைப்பை அமைப்பதற்கு வழிவகுத்தது. எந்தத் தேசிய அல்லது சர்வதேசக் கூட்டங்களிலும் அவை எவ்வளவு தூரத்திலிருந்தாலும் அவர் கலந்து கொள்ளத் தவறியதே இல்லை; தனது முற்றுகையிடப்பட்ட தாயகத்தையும் புரட்சியின் உன்னதமான நீதி இலட்சியங்களையும் அவர் பாதுகாத்தார்.
"கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் வில்மாவின் போராட்டங்களுக்கு நான் சாட்சியாக இருந்தேன். சியரா மேஸ்ட்ராவில் ஜூலை 26 இயக்க கூட்டங்களில் அவரை என்னால் மறக்க முடியாது. இறுதியாக இரண்டாம் கிழக்கு முன்னணியில் ஒரு முக்கியப் பணிக்காக அவர் தலைமையால் அனுப்பப்பட்டார். எந்த ஆபத்திற்கும் வில்மா பின்வாங்கமாட்டார்" என்றும் ஃபிடல் காஸ்ட்ரோ நினைவு கூர்ந்துள்ளார்.
2013 ஏப்ரலில் ஃபிடல் காஸ்ட்ரோ ஹவானாவில் வில்மா எஸ்பின் 83ஆவது பிறந்த நாளில் வில்மாவின் நினைவாக ஒரு தொடக்கப் பள்ளியைத் திறந்து வைத்தார்.
கியூபாவில் 85 சதவீதப் பெண்கள் கியூபப் பெண்கள் கூட்டமைப்பின் உறுப்பினர்களாக உள்ளனர். உலகளவில் பெண்களின் விடுதலைக்கான போராட்டத்தில் போற்றுதற்குரிய ஒரு முன்னுதாரணமாக வில்மா திகழ்ந்துள்ளார். பெண் விடுதலைக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்துப் புரட்சிக்குள் புரட்சி செய்த வில்மா எஸ்பினை, கியூபப் புரட்சி வரலாற்றில் நீக்கமற நிறைந்த அந்தப் புரட்சிப் பெண்ணை நம் செயல்பாடுகளால் போற்றிடுவோம்.
- சமந்தா