பெருமளவில் மக்கள் பயன்பாட்டில் அருகருகே இருந்த சுரங்க நடைபாதைகள் இரண்டும் பராமரிப்புப் பணிகள் என்று சொல்லி ஒரே நேரத்தில் மூடப்பட்டு ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாகிறது.

இச்சுரங்க நடைபாதை அமைந்துள்ள இடமானது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பழவேற்காடு போன்ற சிற்றூரோ, தகடூர் (தர்ம்புரி)-யின் பென்னாகரம் போன்ற வளர்ச்சியடையாத புறக்கணிக்கப்பட்ட பகுதியோ அல்ல.நம் தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னையின் இதயப் பகுதி என்றழைக்கப்படும் அண்ணா சாலையில் ஆயிரம் விளக்குப் பகுதியில்தான் இந்த இரண்டு சுரங்க நடைபாதைகளும் (1.சர்ச்சு பார்க்கு பள்ளி எதிரில், 2.ஆயிரம் விளக்கு அங்காடி எதிரில் ) இருக்கின்றன.

subway in thousand lights 1அண்ணா சாலையின் போக்குவரத்தைத் தடுத்து நிறுத்தி சாலையின் குறுக்கே பெரும் பள்ளம் ஏதும் தோண்டப்பட்டு பணிகள் நடைபெறவில்லை.

பெருமழைக் காலங்களில் இச்சுரங்க நடைபாதையினுள் வழக்கமாக தேங்கி நிற்கும் மழை நீர் தேங்காமல் புதிய வகையில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் என்று பார்த்தால் அதுவும் செய்யப்படவில்லை.

சுரங்க நடைபாதை முழுவதும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு புதிய சுரங்க நடைபாதையும் கட்டமைக்கப்படவும் இல்லை. மக்கள் அதிகளவில் பயன்படுத்துகிறார்கள் என்று நல்லெண்ண அடிப்படையில் சுரங்கத்தின் நீள அகல அளவுகளும் அதிகரிக்கப்பட்டதா என்றால் அதுவும் நடக்கவில்லை. காலம் மாறுவதற்கேற்ப சுரங்க நடைபாதையில் நகரும் மின் ஏணி, மின்தூக்கி, திசை காட்டும் மின்னியல் அறிவிப்புப் பலகைகள் போன்ற புதிய வசதிகள் ஏதேனும் அமைத்திருப்பார்கள் என்று எண்ணினால் அதுவுமில்லை.

இப்படி மேம்படுத்தப்பட்ட எந்த ஒரு புதிய மாறுதலேதும் உருவாக்கப்படாத இந்த இரண்டு சுரங்க நடைபாதைகளை எதற்காக இரண்டரை ஆண்டுகள் மூடி வைத்து மக்களை வஞ்சித்தார்கள் என்று இன்று வரையிலும் விளங்கவில்லை.

ஏறத்தாழ ஐம்பதாண்டுகளுக்கு மேலாக மக்கள பயன்பாட்டில் இருந்த வந்த இந்த இரண்டு சுரங்க நடைபாதைகளின் சுவர்களைப் பெயர்த்து எடுத்து விட்டு புதிய பைஞ்சுதை (சிமெண்ட்) பூசப்பட்டு, புதிய தரை அமைக்கப்பட்டு, சுண்ணாம்பு அடித்து, மேற்கூரைகளை பழுது பார்த்து, இரும்புக் கதவுகள் அகற்றப்பட்டு புதிய கரந்தியல் சாத்தி (ரோலிங் சட்டர்) அமைக்கப்பட்டுள்ளது. பழைய பக்க வாட்டு சுவர்கள் அகற்றப்பட்டு கண்ணாடிகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

சுண்ணாம்பில் எழுதப்பட்ட பழைய நெடுஞ்சாலைத் துறை எனும் பெயர்ப் பலகை பெயர்த்தெறியப்பட்டு மின் விளக்கில் ஒளிரும் புதிய பெயர்ப் பலகை அமைக்கப்படுள்ளது. இந்த பராமரிப்புப் பணிகளை செயல்படுத்த இரண்டரை ஆண்டு காலம் ஆகுமா என்பதை விடயமறிந்தவரகள்தான் விளக்க வேண்டும் என்று பகுதி மக்கள் கேட்கின்றனர்.

இந்த பராமரிப்புப் பணிகளுக்காக சுரங்க நடைபாதைகள் திடீரென்று அடுத்தடுத்து முன்னறிவிப்பின்றி மூடப்பட்ட போதிலும் மக்கள் சாலையைக் கடப்பதற்கான முறையான சரியான மாற்று ஏற்பாடுகள் குறித்து எவ்விதத் திட்டமிடலும் இல்லை.

அண்ணா சாலையில் விரைந்தோடும் ஊர்திகளின் வேகத்தை கணிக்க முடியாமல் சாலையை கடக்க முற்பட்டு நேர்ச்சியில் சிக்கி அவதிப்பட்டோர் பலர். ஊர்தி ஓட்டிகளிடம் வசைமொழியை பரிசாகப் பெற்றவர்கள் பலர். இதிலிருந்து தப்பிக்க நீண்ட தூரம் சென்று அண்ணா மேம்பாலத்தை சுற்றிக் கொண்டு காலம் தாழ்த்திச் சென்று பணியிடத்தில் தத்தமது உயர் அலுவலரிடம் வாழ்த்துப் பெற்று நொந்து போனோர் பலர்.

இந்த இரண்டு சுரங்க நடைபாதைகள் ஆண்டுக் கணக்கில் மூடப்பட்டதால் அங்கு கட்டிட இடிடபாடுகள் நிரம்பி குப்பைக் கூளத்துடன் அவல நிலையில் சாலையைக் கடந்து செல்வோர் மட்டுமின்றி, சுரங்க நடைபாதையை ஒட்டிய சாலையில் கூட நடந்து செல்லத் தகுதியற்ற இடமாக இருந்ததையும் குறிப்பிட வேண்டும். இப்படி சொல்லொணா துயரங்களை வரிசைப் படுத்தினால் இடம் போதாது.

பள்ளி மாணவர்கள், கல்லூரி செல்வோர், அங்காடிக்குச் செல்வோர், பணிக்குச் செல்வோர், சிறு வணிகர்கள், மருத்துவமனைக்குச் செல்வோர், அமெரிக்க தூதரகம் செல்வோர், அரசுப் பணிக்குச் செல்லும் ஊழியர்கள் என பகுதி வாழ் மக்கள், பணி நிமித்தம் வந்து செல்லும் மக்களுமென காலை முதல் இரவு வரை பரபரப்பாக பலரும் பயன்படுத்தி வந்த இந்த இரண்டு சுரங்க நடைபாதைகளும் 'பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது' என்று சொல்லப்பட்டு மூடப்பட்டது. இவற்றை விரைந்து பழுது பார்த்து மக்கள் பயன்பாட்டிற்கு உடனே திறக்க வேண்டி சென்னை மாநகராட்சி ஆணையர், முதல்வர் தனிப்பிரிவு, மாநில நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு மின்னஞ்சல் வழியிலும், தொலைபேசி வழியிலும் புகார் தெரிவித்தும், பிற்பாடு தமிழ் நாளிதழ்களில் முகங்கொடுத்து செய்தி வெளியிடச் செய்து தொடர்ந்து அழுத்தம் கொடுத்தும் கூட பணிகள் விரைவுபடுத்தப்படவில்லை என்பது வருத்தத்திற்குரிய விடயமாகும்.

subway in thousand lights 1அரசு நிர்வாக ஏந்துகள் கையசைவில் பணி செய்ய வாய்ப்பிருக்கும் நாட்டின் தலைநகரின் மையப்பகுதியில் இந்த அளவிற்கு அரசுப் பணிகள் மெத்தனமாக நடைபெறுகிறதென்றால் இதன் தொடக்கத்தில் குறிப்பிட்டிருந்த பகுதிகளான பழவேற்காடு, பென்னாகரம் போன்ற தமிழ்நாட்டின் மற்ற வளர்ச்சியடையாத சிற்றூர்ப்புறங்களின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களின் நிலை என்னவாக இருக்கும் என்கிற கேள்வியை முன்வைத்து சிந்திக்க தூண்டுமேயானால், அதுவே இக்கட்டுரை வரைந்ததன் பயனை அடைகிறது என்கிற அளவில் இக்கட்டுரையை நிறைவு செய்கிறோம்.

[பின்குறிப்பு:- இந்த இரண்டு சுரங்க நடைபாதைகளும் மக்கள் பயன்பாட்டுக்கு என்று இக்கட்டுரை தீட்டும் நாளான இன்றைய நாள் (03.12.2019) வரையிலும் திறக்கப்படவில்லை.]

இணைப்பு:-

https://m.dinamalar.com/detail.php?id=2168011 (தினமலர் நாளிதழ் இணையச்செய்தி-13.12.2018)

https://m.dinamalar.com/detail.php?id=2068537 (தினமலர் நாளிதழ் இணையச்செய்தி-25.07.2018)

- அசுரன் வேணுகோபால், எண்ணூர்

Pin It