கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 இன்னுயிர்கள் பறிபோய் விட்டன. இறந்தவர்கள் அனைவரும் அன்றாடக் கூலி வேலை செய்து பிழைக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள்.

சாவிற்குக் காரணமான சுவரை எழுப்பியவர் சக்ரவர்த்தி துகில் மாளிகை என்ற மிகப்பெரிய துணிக்கடை உரிமையாளர். இவர்கள் முதலியார் சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது.

Wall collapse in mettupalayamதாழ்த்தப்பட்ட மக்களின் காற்று கூடப் படக் கூடாது என்பதற்காகவே இவ்வளவு உயர சுற்றுச் சுவர் (22 அடி) கட்டியுள்ளனர். இந்த சுவர், கட்டுமான விதிகளுக்கு எதிரான சட்ட விரோதமானதாகும்.

இந்தச் சுற்றுச் சுவர் தங்களது குடியிருப்பு பகுதியில் விழுந்து விடும் ஆபத்து உள்ளது எனக் குடியிருப்பு மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்ததோடு நேரிலும் முறையிட்டுள்ளனர்.

ஏழை தாழ்த்தப்பட்ட மக்களின் குரல் அதிகார வர்க்கத்தின் காதுகளில் ஏறவில்லை. மக்களின் வேண்டுகோளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த விபத்து நடந்து இருக்காது. எனவே இது எதிர்பாராத விபத்தல்ல... அரசு அதிகாரிகளின் ஆணவத்தால் ஏற்படுத்தப்பட்ட விபத்தாகும்.

மேட்டுப்பாளையம் என்பது நீலகிரி மலையின் அடிவாரத்தில் பெரும் மழை பெய்யும் பகுதியாகும் (Heavy Rain Zone). பெருமழை பெய்தால் இது போன்ற மிக உயர்ந்த சுவர்கள் நனைந்து விழும் அபாயம் கொண்டது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும்.

இந்த சுவற்றின் உரிமையாளர் ஏன் இந்த சுவரைப் பற்றிக் கவனிக்காமல் இருந்தார்? நகராட்சி கட்டுமானப் பிரிவினர் என்ன செய்துகொண்டிருந்தனர்?

எனவே இது எதிர்பாராத விபத்தல்ல, அலட்சியத்தால் ஏற்பட்ட விபத்தாகும்.

சாவுக்கு ஆளாகப் போவது கூலிக்காரர்கள் என்பதாலும், அதிலிலும் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதாலுமே அரசு அலட்சியம் காட்டியுள்ளது.

இந்தக் கோர விபத்துக்குக் காரணமான வீட்டின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், உரிய இழப்பீடு கேட்டும் பல்வேறு அமைப்பினர் பாதிக்கப்பட்ட மக்களோடு இணைந்து போராட்டம் செய்துள்ளனர்.

17 இன்னுயிர்களை இழந்த பதைபதைப்பில் நியாயம் கேட்டு ஜனநாயக வழியில் போராடிய மக்களை போலீஸ் படை கடுமையான தாக்குதல் நடத்தி விரட்டியுள்ளது. தமிழ்ப் புலிகள் அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் நாகை.திருவள்ளுவன் அவர்களைக் குறிவைத்து கடுமையாக காவல் துறையினர் தாக்கியுள்ளனர். நிகழ்வைப் பதிவு செய்த காணொலிப் பதிவுகள் இதை உறுதிப்படுத்துகின்றன.

அத்தோடு தடியடி நடத்தி பலரையும் காவல்துறை வெறிகொண்டு தாக்கியுள்ளது. பலருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளது. 26 பேர் மீது வழக்குப் பதிவும் செய்துள்ளனர்.

ஒரு பக்கம் ஆதிக்க சாதி முதலாளிகளின் அலட்சியத்தால் 17 பேர் கொடூரச் சாவு, இன்னொரு புறம் காவல்துறையின் வன்முறைத் தாக்குதல் என மக்கள் சொல்லவொண்ணா துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கூலி ஏழைகளான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பில் இந்த அரசமைப்பு இல்லை என்பதையே தொடர் நிகழ்வுகள் புலப்படுத்தி வருகின்றன. அரசு நிறுவனங்களின் இந்த அலட்சியப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

# மேட்டுப்பாளையம் கோரச் சம்பவத்திற்கு காரணமான துணிக்கடை உரிமையாளர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்!

# பாதிக்கப்பட்ட மக்களின் மீது வன்முறைத் தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து விசாரணை நடத்த வேண்டும்!

# 26 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்!

# நடூர் பகுதியிலுள்ள அனைத்து மக்களுக்கும் நல்ல பாதுகாப்பான வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும்!

# பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ 25 இலட்சம் இழப்பீடு கொடுக்க வேண்டும், அரசு வேலை வழங்க வேண்டும்.

# இந்த விபத்திற்குக் காரணமான நகராட்சி அதிகாரிகள் மீது குற்ற வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!

- கி.வே.பொன்னையன், தலைவர், தற்சார்பு விவசாயிகள் சங்கம்