கேள்வி: தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களும் சாதி வெறியோடு நடந்து கொள்கிறார்களே. மற்ற சாதியினரைப் போல் தானே அவர்களும் தங்கள் சாதிப் பெருமையை வெளிப்படுத்துகின்றனர். அவர்களை முற்போக்காளர்கள் விமர்சிப்பதில்லையே? தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னுதாரணமாக வாழ வேண்டாமா?
பதில்: தாழ்த்தப்பட்ட மக்களுக்கென தனியாகப் பேச சாதிப் பெருமை எதுவும் இல்லை, ஆனால் சாதியின் இயங்குநிலை அனைத்து மக்களையும் தனது பிறப்பு சார் சாதி சார்ந்தே சிந்திக்க, செயல்பட, வாழ நிர்ப்பந்திக்கிறது. சாதி தனக்கு எதிராக இருந்தாலும் அந்த சாதி அடையாளத்தோடு தான் வாழ வேண்டிய கொடுமை உள்ளது. ஏனெனில் அது பிறப்போடு தொடர்புடையதாக இருக்கிறது. விரும்பினாலும் கூட தாழ்த்தப்பட்ட மக்களால் சாதி அடையாளத்திலிருந்து வெளிவர இயலாது. மதம் மாறினால் கூட வாய்ப்பு குறைவு தான். சாதியும் வேண்டாம், மதமும் வேண்டாம் என அனைத்தையும் கைவிட்டு 'நாத்திகராக' மாறினால் கூட தாழ்த்தப்பட்ட சாதியை விட்டு அம்மக்களால் விலக முடிவதில்லை. இதுதான் சாதி.
சாதியின் மூலம் கிடைக்கும் அனைத்து பெருமைகளும் நன்மைகளும் உயர்சாதியினருக்கே. சாதியின் மூலம் கிடைக்கும் அனைத்து இழிவுகளும், தீமைகளும் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கே. ஆனால் சாதி என்ற உணர்வு அல்லது மன நோய் (அம்பேத்கர் அதை Notion of Mind என்றார்) அனைவரிடமும் இருக்கிறது. ஆனால் ஒரு வித்தியாசம் உண்டு. உயர்சாதியினரிடம் இருப்பது ஆதிக்க உணர்வு. தாழ்த்தப்பட்ட சாதியினரிடம் இருப்பது விடுதலை உணர்வு, ஆதிக்க எதிர்ப்பு. சாதிகள் இருக்கும் வரை, சாதிகளுக்குள் ஏற்றத்தாழ்வு இருக்கும் வரை இந்த உணர்வு நிலைபெறும்.
'நீ என்னடா என்னை இழிந்த, தாழ்ந்த சாதி எனச் சொல்ல? உனக்கு நான் சமம் தான். நானும் உன்னைப் போல் உயர் சாதி தான். உன் பிறப்பைப் போல் என் பிறப்பும் உயர்வானது தான். எனக்கும் உன்னைப் போல் உணர்வுகள் உண்டு' எனச் சொல்லும் ஆதிக்க எதிர்ப்பு உணர்வு.
ஓர் எடுத்துக்காட்டு மூலம் இதை விளக்குகிறேன்.
ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்டபோது அவர்களை எதிர்த்து இந்திய உணர்வு அல்லது இந்தியப் பெருமிதம் உருவானதல்லவா. அது ஆங்கிலேயர்களுக்கு எதிரானதல்ல, ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிரானது. ஆங்கிலேயர்கள் நம்மை விட்டுப் போனபோது இந்தியர்கள் ஆங்கிலேயர்களை அடிமையாக்க நினைக்கவில்லை.
சமமாக நடத்தும் ஆங்கிலேயர்களைப் பெருமதிப்போடும் பெருமரியாதையோடும் நடத்துகின்றனர்.
அதுபோல் ஆதிக்க உணர்வைக் கைவிடுவது உயர்சாதியினரின் கடமை. வருங்காலங்களில் தம்மைப் பிறர் மதிக்க வேண்டுமெனில் உயர்சாதியினர் மற்றவர்களைச் சமமாக நடத்த வேண்டும், சாதிப் பாகுபாடு பார்க்கக் கூடாது. இவ்வாறு செய்யும்வரை சாதியினால் தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக் குரல் ஓங்கும், கலகம் அதிகரிக்கும். ஆகவே பொறுப்பும் கடமையும் உயர்சாதியினருக்கே உண்டு. தாழ்த்தப்பட்ட சாதியினரைச் சமமாக நடத்தாதவரை இந்த சமுகமே அதற்கு வெட்கப்பட வேண்டும். அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.
’ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு வருந்துகிறோம்’ என 100 ஆண்டுகள் கழித்து மன்னிப்பு கேட்டது பிரிட்டன். சமீபத்தில் நியூசிலாந்தில் கிரிக்கெட் விளையாடச் சென்ற இங்கிலாந்து அணியைச் சேர்ந்த ஜோப்ரா ஆர்ச்சர் என்ற கறுப்பின வீரரை கிரிக்கெட் பார்க்க வந்த ஒரு நியூசிலாந்து பார்வையாளர் ஆர்ச்சரின் நிறத்தை வைத்து நிறவெறி தொடர்பான கோஷங்களை எழுப்பினார். இந்த சம்பவம் நடந்த தருணத்திலேயே நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் மன்னிப்பு கேட்டது. அதனைத் தொடர்ந்து நியூசிலாந்து கேப்டன் கனே வில்லியம்சனும் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இந்தியச் சமுகம் என்ன செய்துள்ளது இதுவரை? தாழ்த்தப்பட்ட மக்களை மேன்மேலும் அவமானப்படுத்துவதும், அவர்களை ஒடுக்குவதும் உயர்சாதியினரின் முக்கிய வேலையாக இருந்து வருகிறது. இது கண்டு நாம் வெட்கித் தலை குனிய வேண்டாமா? நம்மில் ஒரு பிரிவினரை இழிவாக நடத்தும் மக்கள் இருக்கலாமா? மாற வேண்டியதும் மன்னிப்பு கேட்க வேண்டியதும் உயர்சாதியினரே.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இருக்கிற ஒரே கடமை தம்மீது சுமத்தப்பட்ட சாதி இழிவினை அகற்றுவது மட்டுமே.
- சு.விஜயபாஸ்கர்