ரோகித் வெமுலா என்ற பெயரை இதற்கு முன் எங்கேயும் கேள்விப்பட்டதில்லை. ஒரு வேளை இந்த சமூகத்தில் மரணம் மட்டும்தான் ஒருவனின் பெயரை எடுத்துச் செல்வதற்கான ஊர்தியாக இருக்குமோ?. பொய்யர்களையும், புரட்டர்களையும் மட்டுமே புரட்சியாளர்களாகப் பார்த்த எங்கள் இளைய தலையமுறைக்கு உம்மைப் போன்றவர்களை இழப்பது என்பது அதி தீவிரமான மனவலியை ஏற்படுத்துகின்றது. ஓர் அறிவியல் எழுத்தாளனாக பரிணமிக்க அதுவும் குறிப்பாக கார்ல் சாகனைப்போல வரவேண்டும் என்று பெருவிருப்பம் கொண்டிருந்தாய். என் இனிய தோழனே, நடைமுறை சார்ந்த பெரும் போராட்டங்களை நடத்தத் தெரிந்த உனக்கு நடைமுறை சார்ந்த மனித மனங்களை அறிந்து கொள்ள முடியாமல் போய்விட்டதே....!

rohith vemulaஉன்னுடைய மரணச் செய்தியை அறிவிப்பதில் போட்டி போட்ட ஊடகங்கள் ஏனோ நீ உயிருடன் இருக்கும் போது உன்னைப் பற்றியும், உனது போராட்டங்கள் பற்றியும் எந்த துண்டு துக்கானி செய்தியையும் வெளியிடவில்லை. ஒருவனின் மதிப்பு உயிருடன் இருக்கும்போதை விட மரணிக்கும்போது பன்மடங்கு கூடுகின்றது. அதுவும் அந்தப் பிணத்தின் மீது ஒரு அரசியல் சாயம் ஒட்டி இருந்தால் சொல்லவே தேவையில்லை. உயிரோடு இருக்கும் போது உன்னை அலட்சியப்படுத்தியவர்கள் கூட இன்று உன் பெயரை விண் அதிர முழங்குகின்றார்கள். உன்னை சிலர் தலித் என்கின்றார்கள், சிலர் உன்னை தோழன் என்றார்கள், சிலரோ ரோகித் என் சகோதரரைப் போல என்று கண் கலங்கினார்கள்.

நீ கடைசியாக எழுதிய அந்தக் கடிதத்தைப் படித்துக் கொண்டே இருக்கின்றேன். ஆனால் பலமுறை படித்தும் என்னால் மீண்டும் மீண்டும் படிப்பதை நிறுத்த முடியவில்லை. உயிரை விடுவதற்கு சில மணித்துளிகளுக்கு முன் அந்தக் கடிதத்தை நீ எழுதி இருக்கின்றாய். மரணத்தைப் பற்றிய எந்த ஒரு சிறு பயமும் அந்தக் கடிதத்தில் காணமுடியவில்லை. பகத்சிங்கைப் போல மிக இயல்பாக மரணத்தை எடுத்துக் கொண்டு இருக்கின்றாய். என்ன, பகத்சிங் வெள்ளை ஏகாதிபத்தியத்திடம் இருந்து நாட்டைக் காப்பாற்ற ஒரு பிரச்சார மேடையாக தன்னுடைய உடலையும், உயிரையும் பயன்படுத்திக் கொண்டான். நீயோ சாதிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து உன்னைக் காப்பற்றத் தவறிய இந்தச் சாதிய சமூகத்தை அம்பலப்படுத்த உன்னுடைய உடலையும், உயிரையும் கொடுத்திருக்கின்றாய்.

கார்ல் சாகன் போல ஒரு அறிவியல் எழுத்தாளனாக வர ஆசைப்பட்டாய். ஆனால் நீயே உன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டதைப் போல “ஒரு மனிதனின் மதிப்பு அவனது பிறப்பு அடையாளங்களால் நிர்ணயிக்கப்படுகின்றது. சில நேரங்களில் வாக்காளனாக, சில நேரங்களில் வெறும் எண்ணிக்கையாக, சில நேரங்களில் பொருட்களாகக்கூட அடையாளம் காணப்படுகின்றான். ஒரு மனிதன் எப்போதாவது அவனது ஆன்மாவின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகின்றானா என்றால், நிச்சயம் இல்லை”. நீ ஒரு மிகச்சிறந்த அறிவியல் புனைக்கதையை எழுதி அதை வெளியிட முயன்றிருந்தால், அதற்காக ஒரு தலித் நடத்தும் பதிப்பகத்தை தேடி நீ அலைய நேரிட்டிருக்கலாம். ஒரு வேளை தோழர்கள் நடத்தும் பதிப்பகத்தைப் பற்றிய நம்பிக்கையில் அங்கு போய் உன்னுடைய அறிவியல் புனைகதையை கொடுத்திருந்தாய் என்றால் உடனே அந்தத் தோழர் ‘நீங்கள் எந்தச் சாதியைச் சேர்ந்த தோழர்’ என்று அவருக்கே உரித்தான மார்க்சிய மொழியில் இயல்பாக கேட்டிருப்பார். நீ இறந்துவிட்டதால்தான் உன்னுடைய கடிதம் இன்று பார்ப்பன பத்திரிக்கைகளில் கூட வெளியிடப்பட்டு இருக்கின்றது.

நீ அறிவியல் எழுத்தாளானகவோ அல்லது வேறு எந்த துறை சார்ந்த எழுத்தாளனாகவோ வரவேண்டும் என்று ஆசைப்பட்டாலும், அதற்கு முதலில் நீ செய்ய வேண்டியது உன்னுடைய தன்மானத்தை விட்டுவிடவேண்டும். உன்னுடைய எழுத்தில் அது இருக்கலாம்; ஆனால் அது உன்னிடம் ஒரு துளி கூட இருக்கக்கூடாது. அப்படி இருப்பதை மேட்டுக்குடி அறிவுஜீவி வர்க்கம் ஒரு போதும் விரும்புவது கிடையாது.

இங்கே நீ என்ன எழுதுகிறாய் என்பதைவிட எந்த சாதிக்காரனாக இருந்து அதை எழுதுகிறாய் என்பது மிக முக்கியம். உணர்ச்சியே இல்லாத செத்த பிணம்போன்ற படைப்புகளைக்கூட நீ எழுதலாம். ஆனால் நீ மேல்சாதியாக இருக்கும் பட்சத்தில் அது இந்த உலகிலேயே மிகச்சிறந்த படைப்பு என்று பெயர் சூட்டப்பெற்று கொண்டாடப்படும். அதுவே நீ ஒரு கீழ் சாதியாக இருக்கும் பட்சத்தில் மேற்சொன்ன நிகழ்ச்சி தலைகீழாக நடக்கும். உன் படைப்பு கணினியின் குப்பைத்தொட்டியில் மீளா உறக்கத்திற்குத் தள்ளப்படும். நீ ஏன் என்று அவர்களிடம் கேள்வி கேட்டால் அதற்கான விடை ‘ஒழித்துவிடுவேன் ஜாக்கிரதை’ என்பதுதான்.

என் அன்புத்தோழா... உன்னை மரணத்தில் இருந்து காப்பாற்ற முடியாத எங்கள் இழிநிலையை எண்ணி வெட்கப்படுகின்றோம். ஒரு வேளை 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை உனக்கு கிடைக்கும்படி செய்திருந்தால் ஒரு புரட்சியாளனை இந்தப் பூமியின் மீது அவனது கனவுகளோடும், லட்சியங்களோடும் வாழ விட்டிருக்கலாம். நாங்கள் மிகப்பெரிய தவறு செய்துவிட்டோம். இருப்பினும் சுயமரியாதையின் பாற்பட்ட உன் மனம் அடுத்தவர்களின் உதவியை நிராகரித்திருக்கின்றது. உன்னால் ஒருவரை மட்டும்தாம் இந்த உலகத்தில் ராம்ஜியாக பார்க்க முடிந்திருக்கின்றது.

உன்னை தலித் என்று திரும்ப திரும்ப அழுத்தம் திருத்தமாக ஊடகங்களால் சொல்லப்படுகின்றது. அதன் மூலமாக அவர்கள் சொல்ல வருவது நீ ஒரு தலித் புரட்சியாளன், எனவே உனது மரணத்தை அவ்வளவு பெரியதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்பதுதான். உனக்காக நாட்டின் பிரதமர் கண்ணீர் சிந்துகின்றார். உன்னுடைய தாய் ராதிகாவின் வலியை தான் உணர்வதாக உணர்ச்சி மேலிட உரையாற்றுகின்றார். இறுதியாக இந்திய தலித் மாணவர்கள் வாழ்க்கையில் எப்படி முன்னேற வேண்டும் என்று தனது கட்சியின் நிலைப்பாடான “அம்பேத்கர் போல அவமானங்களை எதிர்கொண்டு முன்னேற வேண்டும்" என்று சொல்லி முடிக்கின்றார். இந்திய சமூகத்தில் ஒரு தலித் அவமானங்களைச் சந்திக்காமல் முன்னேற முடியாது என்பதுதான் இதனுள் உட்பொதிந்திருக்கும் வரலாற்று உண்மை. இதை மோடி சொன்னது எங்கே என்று தெரியுமா? உத்திரப் பிரதேசத்தின் லக்னோவில் உள்ள அம்பேத்கர் மத்திய பல்கலைக்கழகத்தில்!.

உன்னைப் போலவே உனது குடும்பத்தைச் சார்ந்தவர்களும் தங்களின் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள். பல்கலைக்கழகம் உனது மரணத்திற்காக கொடுத்த 8 லட்சத்தை வாங்க மறுத்து காறி உமிழ்ந்திருக்கின்றார்கள். நீ உயிரோடு இருக்கும்போது உனக்கு வரவேண்டிய 1 லட்சத்தி 75 ஆயிரத்தை கொடுக்காத வறுமையில் வாடும் இந்தியா, நீ இறந்தபோது 8 லட்சத்தை கொடுக்க முன்வந்திருக்கின்றது. இங்கே ஒவ்வொரு சாதிக்கும் ஒரு மரியாதை இருப்பது போன்று அதற்கொரு விலையும் இருக்கின்றது!.

நீ உன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்டு விட்டாய், அதனால் இங்கே என்ன நடந்துவிடப்போகின்றது. வழக்கம் போல சாதி வெறியர்களும், மதவெறியர்களும் தங்களுடைய ராஜாங்கத்தை வெற்றிகரமாக நடத்திக்கொண்டுதான் இருக்கப் போகின்றார்கள். நம்முடைய முற்போக்குவாதிகளுக்கோ அடுத்த பிணம் விழும்வரை அவர்கள் பேசுவதற்கான கருப்பொருளை மிகத் தாராளமாக நீ விட்டுச் சென்றிருக்கின்றாய். பண்டாரு தத்தாத்ரேயா, அப்பாராவ், ஸ்மிருதி இராணி, அகில பாரதிய வித்யார்த்திய பரிஷத் போன்ற கெட்ட வார்த்தைகள் சமூகப் போராளிகளால் திரும்ப திரும்ப ஆக்ரோசத்துடன் விண்ணதிர ஒலிக்கப்படுகின்றன. ஆனால் அது திரும்ப எதிரொலியாக அவர்கள் காதுகளையே வந்து காயப்படுத்துகின்றது.

அகிம்சை முறையில் வளர்க்கப்பட்ட புரட்சியாளர்களான நம்மால் வேறு எதையும் இந்த இந்திய சாதி சமூகத்தில் செய்ய முடியாது. சமூகத்திற்காக எழுவதும், பேசுவதும் கூட சில சாதிக்காரர்களால் மட்டுமே செய்ய முடிந்த பணியாக கருதப்படுகின்றது. ஒரு தலித் முற்போக்கு பேசுவதைவிட ஒரு பார்ப்பனன் பேசும் முற்போக்கிற்கு மவுசு அதிகம். ரோகித் பெர்முலா உன்னைப்போலத்தான் நானும் பெரும்பாலான சமயங்களில் உணர்ந்திருக்கின்றேன். நீ எழுதி இருந்தாய் அல்லவா “இந்த உலகம் மீதான எனது புரிதல் தவறாக இருக்கலாம். அன்பு, வலி, வாழ்க்கை, மரணம் இவற்றின் மீதான என் புரிதல்கூட தவறானதாக இருக்கலாம். எனக்கு எந்த அவசரமும் இல்லை; ஆனால் நான் எப்போதுமே அவரசரப்பட்டுக் கொண்டே இருந்திருக்கின்றேன். வாழ்க்கையைத் தொடங்குவதற்கும் வழி தெரியா தேடலுக்கான அவசரம்” என்று.

எனக்கு கூட அவசரம் தான் உன்னைப்போலவே, என் தமிழ் சமூக மக்களை சுயமரியாதை உள்ள மனிதர்களாக மாற்ற வேண்டும், பார்ப்பனிய சித்தாந்தத்தின் பிடியில் இருந்தும், முதலாளித்துவத்தின் பிடியில் இருந்தும் அவர்களை மீட்டெடுக்க வேண்டும் என்று. ஆனால் உன்னை ஒரு புரட்சிக்காரனாக பார்க்காமல் இந்த சமூகம் எப்படி ஒரு தலித்தாக மட்டுமே அடையாளப்படுத்த முயற்சிக்கின்றதோ, அதே போல இங்கே இருக்கும் சில சாதி இந்துக்கள் அவர்களுக்கு எதிராக எழுதுபவர்களை எல்லாம் தமிழின துரோகிகள் என்று முத்திரை குத்துகின்றார்கள்.

என்ன செய்வது என் அருமை தோழா, இங்கே பெரும்பாலான நேரங்களில் மரணம் தான் நம்முடைய கோரிக்கைகளை சொல்வதற்கும் நாம் நேர்மையானவர்கள் என்று நிரூபிப்பதற்கும் ஒரே வழியாக இருக்கின்றது. உனக்காக என்னால் எதுவுமே செய்ய முடியாமல் போய்விட்டதே தோழா...! நட்சத்திரங்களை நோக்கி கால வெளியில் பயணப்பட்டுக் கொண்டிருக்கும் உனக்குக் கொடுத்தனுப்ப என்னிடம் சில சொட்டு கண்ணீர்த் துளிகள் மீதமிருக்கின்றது. எப்போதாவது உனக்குத் தேவைப்பட்டால் மறக்காமல் வந்து வாங்கிக்கொள். ஜெய் பீம்.

- செ.கார்கி

Pin It