“கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு                        

மாடல்ல மற்றை யவை” (குறள்:400)

 இந்த உலகத்தில் கல்வியைத் தவிர அழிவற்ற வேறு சிறந்த செல்வம் எதுவும் கிடையாது என்று சொன்னார் திருவள்ளுவர். அப்படிப்பட்ட கல்வியை இன்றும்கூட பெற முடியாமல் பல ஏழைக் குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்களாய், கொத்தடிமைகளாய் தங்களது கனவுகளை எல்லாம் தொலைத்துவிட்டு ஒருவேலை சோற்றுக்காக டீக்கடைகளிலும், கல்குவாரிகளிலும், சாயப்பட்டறைகளிலும், பாட்டாசு தொழிற்சாலைகளிலும் இன்னும் எத்தனையோ சிறு சிறு கடைகளிலும் வேலை செய்து கொண்டு இருக்கின்றார்கள். அவர்களுக்கும் மற்ற குழந்தைகளைப் போல கல்வி கற்று தங்களை இந்தச் சமூகத்தில் நிலைநிறுத்திக்கொள்ள ஆசைதான். ஆனால் சமூகம் அனைவருக்கும் அந்த வாய்ப்பை வழங்கிவிடுவதில்லை.

school students 379 கல்வி என்பது விற்பனைச் சரக்காய் ஆனபின்பு காசு இருந்தால் தான் தரமான கல்வி கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்ட பின்பு, ஒரு ஏழை தன்னுடைய குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவது என்பதே பெரும்பாடாய் இருக்கின்றது. இந்தியா சுதந்திரம் அடைந்து ஏறக்குறைய 70 ஆண்டுகள் ஆகப்போகின்றது. ஆனால் அரசுப் பள்ளிகளில் கல்வி கற்க வரும் பெரும்பாலான குழந்தைகள் முதல் தலைமுறை மாணவர்களாகவே இன்றும் இருக்கின்றார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து இப்போதுதான் அவர்கள் கல்வி நிலையங்களின் வாசல்படியே மிதித்து இருக்கின்றார்கள். அவர்கள் எல்லாம் கற்ற அறிவார்ந்த அப்பாக்களுக்கும் அம்மாக்களுக்கும் பிறக்கவில்லை. அவர்கள் வயிற்றை நிரப்புவதற்காக மட்டுமே தங்களது வாழ்க்கை அர்ப்பணித்துக்கொண்ட அன்றாடம்காய்ச்சிகளின் பிள்ளைகள்.

 அவர்களின் பரம்பரையில் இப்போதுதான் கல்வியே தலை காட்டி இருக்கின்றது. தன்னுடைய மகனோ, மகளோ தன்னைப்போல ஒரு கேவலமான வாழ்கையை வாழாமல் ஒரு கெளரவமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற ஆசையில் அந்த ஏழைப் பெற்றோர்கள் தன்னுடைய பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்புகின்றனர். ஆனால் பள்ளிகளில் நிலவும் மோசமான பண்பாடால் அவர்கள் திரும்ப குழந்தைத் தொழிலளர்களாகவோ, கொத்தடிமைகளாகவோ போகும் சூழ்நிலை உண்டாகியிருக்கின்றது.

 இந்தச் சமூகத்தின் மிக உன்னதமான பணிகளில் ஒன்று ஆசிரியர் பணி. அதற்கு இணையாக வேறு பணிகளை நம்மால் ஒப்பிட முடியுமா என்று தெரியவில்லை. ஒரு ஐந்து வயது நிரம்பிய குழந்தையைக் கையைப் பிடித்து ‘அ’ ‘ஆ’ என்று எழுத சொல்லிக் கொடுக்கும் போது ஒரு மிகப்பெரிய அறிவுப் புரட்சி நடக்கின்றது. கைநாட்டுப் பரம்பரையில் இருந்து ஒரு கவிஞனனோ, கலைஞனோ, அறிவியல் ஆராய்ச்சியாளனோ அந்தக் கணத்தில் பிறப்பெடுக்கின்றான். அறியாமை என்ற பேர் இருளின் மீது ஒளி பாய்ச்சப்படுகின்றது. அந்தக் கணம்தான் இந்த உலகத்தின் மிக உன்னத தருணமாக பரிணமிக்கின்றது. அதுவும் முதன் முறையாக தன்னுடைய குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பும் ஒரு பெற்றோருக்கு இருக்கும் மகிழ்ச்சி இருக்கின்றதே அதை வேறு எந்த ஒரு மகிழ்ச்சிக்கும் ஈடாக்க முடியாது.

 அப்படி மாணவர்களின் அறியாமையைப் போக்கி அவர்களின் வாழ்க்கையையே மாற்றியமைக்கப் போகும் அந்த ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டும்? தன்னுடைய பணியின் பொறுப்பு என்ன என்ற குறைந்தபட்ச அறிவாவது அந்த ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டுமா? வேண்டாமா? ஆனால் இப்போது ஆசிரியர்கள் இருக்கும் நிலையைப் பார்த்தால் நிச்சயம் இன்னும் பல நூற்றாண்டுகள் ஆனாலும் இந்தச் சமூகம் உருப்படுவதற்கு வாய்ப்பில்லை என்றே சொல்லத் தோன்றுகின்றது.

 இரண்டு நாட்களுக்கு முன்னால் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 4 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 13 பேர் பாடங்களைச் சரியாக படிக்கவில்லை என்று அந்தப் பள்ளியின் ஆசிரியர் வைஜெயந்திமாலா கற்பூரத்தால் சூடுவைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. ஒரு எட்டு, ஒன்பது வயது நிரம்பிய குழந்தைகள் சரியாக படிக்கவில்லை என்று சூடுவைக்கின்றார் என்றால் அந்த ஆசிரியரின் மனநிலை எப்படி இருக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள். எந்தவித மனித விழுமியங்களும் அற்ற ஒரு மனநோயாளியாகவே அந்த ஆசிரியை இருக்க வேண்டும். இல்லை என்றால் நெஞ்சு பதறும் இப்படி ஒரு இழிசெயலை செய்திருக்கமாட்டார்.

 படிக்கவில்லை என்பதும், மதிப்பெண் வாங்கவில்லை என்பதும் அவ்வளவு பெரிய கொடிய குற்றமா? ஒருவகுப்பில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் உட்கிரகிக்கும் தன்மையும், அதை வெளிப்படுத்தும் தன்மையும் நிச்சயம் மாறுபட்டுதான் இருக்கும். இதற்கு குடும்பச் சூழ்நிலை, பாடத்திட்டத்தின் புரியாத தன்மை அல்லது மாணவனுக்குப் பாடத் திட்டம் சார்ந்த கருத்து அன்னியமாக இருப்பது, மாணவனின் புரிதல் மட்டத்திற்கு இறங்கி அவனுக்கு விளங்கவைக்க ஒரு ஆசிரியருக்குத் தெரியாமல் இருப்பது என பல்வேறு காரணிகள் இருக்கலாம். அதனால் அதைக் கண்டுபிடித்து அந்த மாணவனை கைதூக்கிவிடுவதுதான் ஒரு நேர்மையான ஆசிரியரின் பணியாக இருக்க முடியும்.

 ஆனால் இன்று பெரும்பாலான ஆசிரியர்களிடம் அந்த நேர்மை என்பது கிஞ்சித்தும் கிடையாது என்பதுதான் உண்மை. பிற்போக்குத் தனமான சமூக அமைப்பில் இருந்து படித்து முடித்து ஆசிரியராக மாறும் இவர்கள் எந்த வகையிலும் தன்னுடைய பழைய பிற்போக்குத்தன்மையை மாற்றிக் கொள்வது கிடையாது. இந்தச் சமூகம் அவர்கள் மிது திணித்திருக்கும் சாதி, மதம், ஆபாசம் என அனைத்தையும் ஒரு சேர கடைபிடிக்கும் இழிநிலையிலேயே அவர்களின் செயல்பாடுகள் உள்ளன.

  நெல்லை மாவட்டத்தில் உள்ள களக்காடு உயர்நிலை பள்ளியில் படிக்கும் 17 தலித் மாணவர்களை அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் கழிப்பறையைச் சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தியதையும், பெரம்பூர் மாவட்டம் அகரம்சிகூரில் உள்ள சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 14 வயது மாணவனை அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் சிறுநீர் குடிக்கச் சொல்லி அடித்து உதைத்ததையும், ராமநாதபுரம் மண்டபத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஒரு மாணவியை அந்தப் பள்ளியின் ஆசிரியர் மது அருந்திவிட்டு வந்து அந்த மாணவியைப் பலாத்காரம் செய்ய முயன்றதும், ஜோலார்பேட்டை அருகே சின்னூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பள்ளிக்குப் படிக்க வரும் மாணவர்களை மதுகுடிப்பதற்கு வறுகடலை வாங்கி வரச்சொல்லி மிரட்டியதையும் நாம் ஏற்கெனவே பார்த்திருப்போம். இதெல்லாம் எதைக் காட்டுகின்றது?

 ஒரு மாணவனை நேர்மையான மனிதனாக மாற்ற வேண்டிய ஆசிரியர்கள் சாதிவெறியர்களாகவும், பாலியல் வக்கிரம் பிடித்தவர்களாகவும், குழந்தைகளை கொடுமைசெய்து அதில் சுகம் காணும் மனநோயாளிகளாகவும் இருந்தால் அந்த மாணவனின் எதிர்காலம் எப்படிப்பட்ட பேரழிவுக்கு உள்ளாகும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சமூகத்தில் இருக்கும் அவலங்களுக்கு எதிராக மாணவர்களை போராட கற்றுக் கொடுக்க வேண்டிய ஆசிரியர்களே அந்த மாணவர்களை பண்பாட்டுச் சீரழிவுக்கு உட்படுத்தும் அயோக்கியர்களாக இருக்கும் போது அந்த மாணவனின் சமூகம் சார்ந்த அக்கறை சிறுவயதிலேயே காயடிக்கப்பட்டு விடுகின்றது.

 எந்தவித சமூக அக்கறையும் அற்ற பிற்போக்குவாதிகளும், அற்பவாதிகளும் சுயநலவாதிகளும் தான் ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு அரசு வைக்கும் தகுதி தேர்வுகளில் வெற்றிபெற்று பள்ளிகளுக்கு ஆசிரியர்களாக வருகின்றார்கள். இவர்கள் எல்லாம் மாணவர்களை நல்ல சமூகம் சார்ந்த மனிதர்களாக, சிந்தனைவாதிகளாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் எல்லாம் ஆசிரியர் பணிக்கு விரும்பி வருவதில்லை. ஆசிரியர் பணிக்கு வந்தால் நிறைய சம்பளம் கிடைக்கும், விடுமுறை கிடைக்கும், தனி வகுப்புகள் எடுத்துக் கல்லா கட்டலாம் என்ற நோக்கத்திலேயே இவர்கள் ஆசிரியர் பணியை விரும்பி தேர்வு செய்கின்றார்கள். இப்படி வேலைக்கு வந்த சில ஆண்டுகளில் இவர்களின் வாழ்நிலை என்பதே முற்றிலும் மாறிவிடுகின்றது. பல ஆசிரியர்கள் கந்துவட்டி தாதாகளாகவும், தனியார் கல்வி நிறுவனங்களின் பங்குதாரர்களாகவும் மாறிவிடுகின்றார்கள். இப்படி தனது வருமானத்தைப் பல மடங்கு பெருக்கிக் கொள்கின்றார்கள்.

 இப்படிப்பட்ட ஆசியர்களிடம் இருந்து மாணவர்களுக்கு நாம் என்னத்தை எதிர்பார்க்க முடியும். எனவே மாணவர்களின் மீதான ஆசிரியர்களின் வன்முறையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றால் நிச்சயம் அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளாக மாற்றப்பட வேண்டும். அப்போதுதான் சாதிவெறியர்களும், மதவெறியர்களும், கீழ்த்தரமான சிந்தனை உடைய நபர்களும் ஆசிரியர்கள் என்ற போர்வையில் உள்நுழைவதை தடுக்க முடியும். அவர்கள் மீது தீவிரமான கண்காணிப்புகள் செலுத்தப்பட வேண்டும்.தவறு செய்யும் பட்சத்தில் அந்த ஆசிரியர்களின் ஆசிரியர் பணியைப் பறித்து அவர்களை வெளியேற்ற வேண்டும். ஆனால் இது போன்று எல்லாம் செய்வதற்கு நம் ஆட்சியாளர்களுக்கு நேர்மையும், துணிவும் வேண்டுமே!. ஒவ்வொரு பணியிடத்துக்கும் இவ்வளவு பணம் என்று வாங்கிக் கொண்டு ஆட்களை நியமிக்கும் இந்தக் குற்றக்கும்பலிடம் இருந்து இது போன்ற சீர்திருத்தங்களை நாம் எப்படி எதிர்ப்பார்ப்பது?

- செ.கார்கி

Pin It