நீட் தேர்வு குறித்த விவாதங்கள் உருவாகியிருக்கும் வேளையில் கல்வியில் தரம் மற்றும் பாடத்திட்டத்தைத் தரப்படுத்துதல் உள்ளிட்ட குரல்கள் எழுந்துள்ளன.
நீட் குறித்தும், தரமான கல்வி குறித்தும், அத்துடன் சமூக மாற்றத்திற்காக உழைக்கும் கல்வியாளர்களின் எதிர்பார்ப்புகள் குறித்தும் யோசிக்க வேண்டியுள்ளது.
1962 ல் தோற்றுவிக்கப் பட்ட சிபிஎஸ்இ என்பது, கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா, தனியார் பள்ளிகள், மற்றும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் பயன்படுத்தப்பட்டு வரும் பாடத்திட்டத்தைக் கொண்டது.
குறிப்பாக, மத்திய, மாநில அரசு ஊழியர்களின் குழந்தைகள், மேல்தட்டுப் பிரிவினர் ஆகியோரை மனதில் வைத்து இந்தப் பாடத்திட்டம் உருவாக்கப் பட்டது. மாநிலப் பாடத்திட்டங்கள் கிராமப்புற மாணவர்களையும் மனதிற்கொண்டு, உள்ளூர்ச் சிந்தனைகளுக்கேற்ப உருவாக்கப் பட்டவை.
பாட அறிவு ஏறத்தாழ ஒன்றேதான். ஆனால் அளவும் பதில்களைத் தேடும் அணுகுமுறையும் வேறுபட்டதாக இருக்கும்.
இந்த இரு வேறு பாடத்திட்டத்தில் பயின்ற குழந்தைகளுக்கு நீட் என , சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு பொதுத் தேர்வு நடத்தினால் அது யாருக்குச் சாதகமாக இருக்கும் என்பது மிக எளிமையாக யூகிக்கக் கூடிய ஒன்று.
சிபிஎஸ்இ என்பது தரமான பாடத்திட்டம் என்றும் மாநிலப் பாடத்திட்டம் மட்டமானது என்கிற பார்வையும் வர்க்க அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுச் சிந்தனையில் எழுவதுதான். இந்த அடிப்படைகளைப் புரிந்து கொள்ளாதவர்களே நீட் போன்ற பொதுத் தேர்வுகளை ஆதரிக்கின்றனர்.
உண்மையில், நமது கல்வி முறை தரப்படுத்தப் பட்டாக வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால் அது சிபிஎஸ்இ யை ஒப்பிட்டு அல்ல. அரசியலையும் அரசியல்வாதிகளையும் விமர்சித்த அளவு கல்வித் துறையையும் ஆசிரியர்களையும் நாம் ஆய்வு செய்வதில்லை.
ஏன் இந்தத் தலைமுறை இப்படி இருக்கிறது என நொந்து கொள்வோர் ஒரு தலைமுறை உருவாக்கத்தில் கல்வி வகிக்கும் பாத்திரத்தைக் கவனிக்கத் தவறுகின்றனர்.
கல்வியில் தனியார்மயம் என்பதை தனியார் பள்ளிகளுடன் இணைத்துப் பார்ப்பதுடன் நிறுத்திக் கொள்கிறோம். அது ஆசிரியர்கல்வி பட்டயப் படிப்பு(DTE), இளங்கலைக் கல்வியியல்(B.Ed) உள்ளிட்ட ஆசிரியர்களை உருவாக்கும் புலங்களும் தனியார்மயப் பட்டதை உள்ளடக்கியது.
ஒரு நாட்டின் அறிவுசார் கட்டமைப்பை நிறுவுவதில் ஆசிரியர்களுக்கு நேரடியாகவோ மறைமுகவோ ஒரு முக்கியப் பங்கிருக்கிறது. அறிவுசார் சமூகம் என்றவுடன் மருத்துவர், பொறியாளர், வழக்கறிஞர் ஆகியோரை மனதில் கொண்டு அவர்களை உருவாக்கும் ஆசிரியர்களை வாழ்த்திடப் புறப்பட்டு விட வேண்டாம்.
ஞானபீட விருது வென்ற ஜெயகாந்தன் முறையான பள்ளிக் கல்வியை முடிக்காதவர். அது குறித்துச் சிறிதும் அலட்டிக் கொள்ளாதவர். நல்லவேளை ஆசிரியர்களிடமிருந்து தப்பித்தேன் என நிம்மதி அடைந்தவர்.
குழந்தைகளின் மனங்களை, ஆளும் வர்க்கத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வடிவமைக்க உதவும் கருவிகளாகத் திறம்பட இயங்குவது ஆசிரிய சமூகமே. ஒரு கல்வி முறையால் ஒரு மாணவனின் படைப்புத்திறனை, சுயசிந்தனையை, பகுத்தறிவை ஒழித்துக் கட்ட முடியும் என்பதை பலரும் உணர்ந்து கொள்வதில்லை.
புத்தகப் பாடங்களுக்கு விளக்கம் கூறும் ஆசிரியர்கள் தத்தமது சொந்த நம்பிக்கைகளை, புரிந்து கொள்ளல்களையே மாணவர்கள் முன்னால் வைக்கிறார்கள். அவ்வகையில் ஒரு பாடத்தின் நோக்கத்தை உயர்த்துவதும் தரந்தாழ்த்துவதும் ஆசிரியர்களின் கையிலும் உள்ளது.
அடிப்படைவாதச் சிந்தனைகள் , முற்போக்குச் சிந்தனைகள் என்பவை குறித்த வேறுபாடும் தெளிவுமற்ற ஒரு ஆசிரியர் தன்னிடம் வரும் மாணவர்களை என்னவாக்கி அனுப்புவார் என்பது குறித்துக் கவலை கொள்வதை விட, நல்ல மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சி பெறச் செய்வதுடன் ஒரு ஆசிரியரின் பணியும் கடமையும் முடிந்து விடுவதாகவே பலரும் கருதுகின்றனர்.
பின்லாந்து கல்வி முறையில் ஒருவர் ஆசிரியராவது அத்தனை சுலபமல்ல. கடுமையான தரக்கட்டுப்பாட்டு சோதனைகள் நிகழ்த்தப் படுகின்றன. பகுத்தறிவு மற்றும் உரிமைசார் கருத்தியல்களில் ஆசிரியரின் உளவியல் அளவிடப் படுகிறது. அங்கு ஆசிரியப் பணி மிக உயர்ந்ததாகவும் அரசினால் மிகுந்த கவனத்துடன் பராமரிக்கப் படுவதாகவும் உள்ளது.
இங்கு , ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் போட்டித் தேர்வு என்பது, கல்விப் புலத்தில் அவர்களின் திறனை மட்டுமே அளவிடுவதாக உள்ளது. அதற்கு ஏதுவாக ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு பதிலளிக்கச் செய்கின்றர். அதில் தேர்ச்சி பெற்றாலே சிறந்த ஆசிரியரைத் தேர்வு செய்து விட்டதாக முடிவுகட்டிக் கொள்கின்றனர்.
சமூக நீதி, குழந்தைகள் உரிமை, இட ஒதுக்கீடு, பெண்கள் உரிமை, பகுத்தறிவு, மாற்றுப் பாலினம், பாலின சமத்துவம், அறிவியல் மனப்பான்மை, பாலியல் விழிப்புணர்வு, சமூக மாற்றம் உள்ளிட்ட பல்வேறு முற்போக்குச் சிந்தனைகளில் ஆசிரியர்களின் தேர்ச்சியை அளவிட்டால் நாம் பெரிய ஏமாற்றத்தையே சந்திக்க நேரும்.
குடியரசு என்கிற தலைப்பில் ஒரு பாடம் எழுதப்படுகையில் , அதில் அரசியலமைப்புச் சாசனத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கரின் பெயரையே தவிர்த்து விட்டு அந்த பாடத்தை எழுத முடியும் என்கிற சிந்தனை ஆபத்தானதே.
ஆக, இவ்வாறான ஒரு பாடத்திட்டத்தில் பயின்று வெளியே வரும் மாணவர்கள் சமூக நீதி மற்றும் சமூக மாற்றம் குறித்த சிந்தனைகளில் மிகவும் பின்தங்கியிருப்பது இயல்பாகி விடுகிறது.
சமூக ஊடகங்களில் இளைஞர்களும் மகளிரும் சாதிவெறியும் மத அடிப்படைவாதமும் பேசுபவர்களாக உலா வருவதற்கு இதுவே காரணம்.
கல்வி சுய சிந்தனையை வளர்தெடுக்காவிடில் அங்கு அடிப்படைவாதமே தலைதூக்கும்.
சட்ட நுணுக்கங்களில் தேர்ச்சி பெற்ற ஒருவர் மட்டமான பெண் ஒடுக்குதல் பார்வையோடு தீர்ப்பு வழங்குவார். படைப்புத் திறனில் மேம்பட்ட ஒரு இயக்குனர் சாதிப் பெருமிதவாதம் பேசுவார்.
சமூக ஏற்றத் தாழ்வை உணராத ஒரு மருத்துவர் சுரண்டலில் கவனமாக இருப்பார். அரசியல் களத்தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கும் ஒரு ஊடகவியலாளர் அடிப்படைவாதச் சிந்தனைகளில் மூழ்கியிருப்பார்.
ஆக. . ஆளும் வர்க்கம் எந்த வகைக் கொள்கை நிலைப்பாடுகளை எடுப்பதாக இருந்தாலும் சமூகத்தை அதற்கேற்றாற்போல் வடிவமைப்பதில் முதலில் வெற்றிகாணும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
தவிரவும் கல்வித் துறையில் நிகழும் மாற்றங்களை வெறும் சமூகநீதிப் பிறழ்வாக மட்டுமே அணுக முடியாது.
கல்வியை சர்வதேச அளவில் விற்பனைப் பண்டமாக்கும் முனைப்புகள் குறித்து எந்தக் கவலையுமற்றுப் பெரும்பான்மைச் சமூகம் நகர்வது கவலைக்குரியது.
உயர்கல்வித் துறையில் படிப்படியாக அதற்கான மாற்றங்கள் நிகழத்துவங்கி விட்டன. கொள்கைகள் அதற்கேற்றாற்போல் திருத்தப் பட்டு வருகின்றன என்பதைக் கல்வியாளர்கள் பலரும் சுட்டிக் காட்டுகின்றனர்.
GATT, NEET இரண்டிற்கும் நேரடியான தொடர்பு இருக்கிறது. நாடு முழுவதும் ஒற்றைக் குடையின் கீழ் குவிக்கப் படுவது என்பது, வணிகச் சந்தையை உலகமயப்படுத்தியதின் நீட்சியே.
வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் தமது கிளைகளை இந்தியாவில் நிறுவும்போது இங்கு இட ஒதுக்கீட்டுச் சிந்தனைகள் மழுங்கடிக்கப் பட்டிருக்கும்.
தகுதி, திறமை உள்ளிட்ட சொல்லாடல்கள் தாராளமயத்துடன் இந்த வகையில்தான் இணைக்கப்படுகின்றன. போட்டிகளில் வெல்வோர் வாய்ப்புகளை அடைவதே நியாயம் என்கிற கருத்தாக்கம் வலிமை பெறும்.
தகுதி , திறன் மேம்படுத்துவது என்பது தனியார் கோச்சிங் நிறுவனங்களின் பணியாக்கப் படும்.
உயர்கல்வியில் அந்நிய முதலீடுகள் எனும் போக்கு விரிவடையத் துவங்குகையில் நம் மாணவர்கள் சிதறடிக்கப் பட்டிருப்பார்கள். அரசு தனது பொறுப்புகளிலிருந்து பெருமளவு விலகிக் கொண்டிருக்கும்.
அவ்வகையில், ஒரு தலைமுறையின் சிந்தனைகள், சமூக மதிப்பீடுகள் யாவும் சந்தை மயப்பட்ட ஒரு கல்வி முறையில் வடிவமைக்கப் படுகையில் அதன் தாக்கம் மோசமானதாக இருக்கும்.
எனவே, சமூக மாற்றத்திற்கான ஒரு நோக்கில் கல்வியைத் தரப்படுத்த வேண்டியிருக்கிறது. அது சந்தை லாபவெறிக்கும் பிற்போக்குத் தனங்களுக்கும் எதிரானதாகச் செயல்படத் தூண்டுவதாயிருக்கும்.
- ஜீவகன்