இஸ்லாம் கல்வியை பெரிதும் வலியுறுத்துகிறது. முகம்மது நபியவர்கள் கூட பலமுறை தன் மனைவியிடம் ஆலோசனை கேட்பவராக இருந்திருக்கிறார்கள். யாரொருவர் இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்று அன்பாக நடந்து கொள்கிறார்களோ அவர்கள் சுவர்க்கத்தில் நுழைவார்கள் என்பது நபிமொழி. இந்த எல்லா மேற்கோள்களுமே இஸ்லாம் பெண்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறது என்பதை உணர்த்துகிறது.

muslim children 402ஆனால் உலகின் பல பகுதிகளில் இதற்கு எதிர்மறையாக பல விடயங்கள் நடப்பதை உணர முடிகிறது. நவீன கல்வி முறையில் இந்தியாவில் முஸ்லிம்கள் நிலையும் இதே. முஸ்லிம் பெண்கள் கல்வியில் பின்தங்கியிருக்கும்போது கண்டிப்பாக முஸ்லிம் சமூகம் அநாதையாகவும், சபிக்கப்பட்டதாகவும் மாறி விடும். குரானை தவறாகப் புரிந்து கொண்டவர்களாகத் தான் நாம் இருக்கிறோம்.

இது நம்மை தற்பரிசோதனை செய்ய வேண்டிய காலம். நம்மை நாம் தான் பார்த்துக் கொண்டாக வேண்டும். யூதர்கள், சீக்கியர்கள், பாரசீகர்கள் இந்த நாட்டில் உள்ள உண்மையான சிறுபான்மையினர்கள். ஆனால் அவர்கள் இந்தியாவின் அனைத்து துறைகளிலும் பங்கு கொள்கிறார்கள். காரணம், அவர்கள் உயர்கல்வி படித்தவர்கள்.

முஸ்லிம்கள் உட்பட எல்லோருக்கும் ஆன்மிக போதனை மிக முக்கியமானது தான். ஆனால் அதனை விட மிக முக்கியமானது உலகக் கல்வி. ஆன்மிகம் எப்போதும் கல்வியின் ஒரு பகுதி தான். இது நமது ஜகாத்தையும், வக்ஃபை சொத்துகளையும் முறைப்படுத்த வேண்டிய காலம். இது பல கோடிக்கணக்கில் சொத்துகளைக் கொண்டிருக்கும் கருவூலம். இதனை முறையாகப் பயன்படுத்தினாலே நமது சமூகத்தை மாற்றியமைக்க முடியும்.

இதனை யார் செய்வது?.. நம்மால் தனியாக இதனை செய்திட முடியும். நாம் தான் செய்திடவும் வேண்டும். அமைச்சரவையோ, சிறுபான்மைகளுக்கான விவகாரத் துறையோ அல்லது MP, MLAக்கள் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அளவுகடந்த வக்ஃப் வருமானங்களை முஸ்லிம்களே கையாடல் செய்வதும் கூட நடந்து கொண்டு தானே இருக்கிறது.

வக்ஃப் உடைய சொத்துக்களே முஸ்லிம்களை ஏழ்மை நிலையிலிருந்து உயர்த்தவும், முஸ்லிம்களின் கல்வியில் பெரிய புரட்சியை உருவாக்கவும் போதுமானது. இந்த அமைப்புகளுக்கெல்லாம் தலைமை தாங்குபவர்கள் என்ன செய்கிறார்கள்? இதற்கும் மோடி தான் காரணம் என்று சொல்வோமா?

கிறிஸ்துவர்கள் உலகத் தரத்தில் கல்வியைத் தருகிறார்கள். அதனால் தான் அனைத்து சமூகத்தைச் சார்ந்தவர்களும் தங்கள் குழந்தைகளை கிறிஸ்துவர்கள் நடத்தும் பள்ளிகளுக்கு அனுப்ப விரும்புகிறார்கள். உலகம் முழுக்க இருந்து வருடம் 200 கோடி ரூபாய் ஜகாத் பணம் வசூலாகிறது. இதில் பெரும் பகுதி இந்தியாவில் இருந்து வரக்கூடியது. இதனை ஒருங்கிணைத்தால் போதும், முஸ்லிம்கள் பெருமளவில் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

முஸ்லிம்களில் ஒரு சாராரின் குழந்தைகள், பெரிய கான்வண்ட் பள்ளிகளில் படிக்கும் போது பெரும்பாலான முஸ்லிம் குழந்தைகள் மதராசாக்களில் மோசமான கல்வித் தரத்தின் கீழ் பயில்கிறார்கள். தான் விரும்பியதை தன் சகோதரருக்கும் விரும்புங்கள் என்பது தான் நபிமொழி. இந்தியாவில் சில மாநிலங்கள் மதராசக்களுக்கும் உருது ஆசிரியர்களுக்கும் அதிக சலுகைகள் தருகிறது. ஒரு மாநிலம் இமாம்களுக்கு தனி வீடுகளையே ஒதுக்கியிருக்கிறது. இதுவெல்லாம் முஸ்லிம் சமூகத்துக்கு உதவி செய்கிறதா? இல்லை, முஸ்லிம்களில் சிலர் முன்னேறியிருக்கும்போது சாதாரண முஸ்லிம்கள் ஏழைகளாகவும், படிப்பறிவு அற்றவர்களாகவுமே இருக்கிறார்கள்.

இஸ்லாம் தூய்மை மற்றும் அனைவருக்கும் தரவேண்டிய மரியாதையான நடத்தைகளைப் பற்றி அதிகமாகப் பேசுகிறது. இஸ்லாம் கூறும் நட்பு நேர்மையாகப் பின்பற்றப்பட்டால், அனைத்து சாதிகள் மற்றும் சமூகத்திற்கு இடையே எந்த மோதலும் இருக்காது.

நாம் பள்ளிவாசல்களை பெரிய ஏசி அறைகளுடனும், பிரமாண்டமாகவும் கட்டுகிறோம். ஆனால் அருகிலேயே முஸ்லிம் பெண்கள் தன் குழந்தைகளின் பள்ளிச் செலவுக்குப் பணம் கொடுக்க முடியாமல் கஷ்டப்படுபவர்களாக இருக்கிறார்கள். நாம் உண்மையிலேயே குரானை சரியான அர்த்தத்துடன் தான் படிக்கிறோமா? ஆம் என்றால் ஏன் தேவையில்லாத, அர்த்தமற்ற விவாதங்களுக்கு முன்னுரிமை தருகிறோம்? குரானில் தலையில் தொப்பி அணிவதைப் பற்றி எதுவும் இல்லாதபோதும் கூட, அதை ஏன் பெரிய கௌரவப் பிரச்சனையாகக் கருதுகிறோம்?..

முஸ்லிம்கள் இந்தியாவின் பலம். யார் எது வேண்டுமானாலும் சொல்லட்டும், எவராலும் இந்தியாவின் மீதுள்ள முஸ்லிம்களின் விசுவாசத்தைக் குறை கூற முடியாது. நாம் ஒன்று சேர்ந்து கல்வியிலும், பொருளாதாரத்திலும் பலப்படும் முயற்சிகளை மேற்கொள்வோம். முகம்மது நபியவர்கள் சொல்லிக் கொடுத்த வழிகாட்டுதலுடன் நம் வாழ்வை மேற்கொள்வோம்.

இது முஸ்லிம்கள் சிந்திப்பதற்கும், தற்பரிசோதனை செய்து கொள்வதற்கும், தங்கள் வாழ்வை கையில் ஏந்துவதற்குமான காலம். நாம் இதை செய்யத் தவறிடும்போது, நம்முடைய தோல்விக்குக் காரணம் சொல்ல மோடி, ஷா, யோகி ஆதித்யநாத் போன்ற அரசியல்வாதிகள் எப்போதும் இருப்பார்கள்.

- பௌசான் அலாவி (article publshed in Times Of India 18.08.19)

மொழிபெயர்ப்பு: அபூ சித்திக்

Pin It