சமீபத்தில் 'ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு 10 லட்சம் மக்களைத் திரட்டிய 18 இளைஞர்களுக்கு பாராட்டு விழா' என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. நாமும் அந்த மாபெரும் 18 புரட்சியாளர்கள் யார் என்று தெரிந்து கொள்ள ஆவலோடு காத்திருந்தோம். ஆனால் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ‘விழாக் கமிட்டி’ என்ன நினைத்ததோ, ஏது நினைத்ததோ தெரியவில்லை அந்த 18 லெனின்களையும், ஸ்டாலின்களையும், மாவோக்களையும், சேகுவேராக்களையும், பிடல் காஸ்ட்ரோக்களையும் தமிழ் கூறும் நல்லுலகிற்கு அறிமுகப்படுத்தி அதகளப்படுத்தாமல் தவிர்த்து விட்டது. ஒருவேளை இவர்களை அறிமுகப்படுத்துவதில் ஏதாவது சர்வதேசப் பிரச்சினை இருந்ததா என்று தெரியவில்லை. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இருப்பினும் இந்த மெரினா புரட்சி பற்றி சமீப காலமாக சில அரசியல் விற்பன்னர்கள் பொது மேடைகளில் பேசும்போது ‘மீண்டும் ஒரு மெரினா புரட்சி வெடிக்கும்’ என்ற சொல்லை சேர்த்தே பேசி வருகின்றார்கள். அவர்கள் தெரிந்துதான் பேசுகின்றார்களா, இல்லை தெரியாமல் பேசுகின்றார்களா என்பது உண்மையில் நமக்கு தெரியவில்லை. ஆனால் உண்மையைத் தெரியப்படுத்த வேண்டிய அவசியம் நமக்கு உள்ளது. உண்மையிலேயே ‘மெரினா புரட்சி’ என்ற ஒன்று நடந்ததா?
அப்படியான ஒன்று நடக்க வேண்டும் என்ற அபிலாசைகள் சில அமைப்புகளுக்கும், சில தனிப்பட்ட நபர்களுக்கும் இருந்தது என்னவோ உண்மைதான். ஆனால் சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும். அத்தி வரதரை தரிசிக்க இதுவரை 70 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்திருக்கின்றார்கள் என்பதால், பிஜேபி'காரனோ', ‘காரியோ’ தமிழ்நாட்டில் மெஜாரிட்டியாக ஆட்சியைப் பிடித்து விடுவோம் என்று சொன்னால், அது எப்படி விழுந்து விழுந்து சிரிக்கும் அளவிற்கு சிரிப்பாய் சிரித்துவிடுமோ, அதே போலத்தான் எந்தவித அரசியலும் இன்றி மொக்கையாக கூடிய கூட்டத்தை வைத்துக் கொண்டு, புரட்சிக்குத் திட்டம் தீட்டியதும். ஜல்லிக்கட்டுக்காக கூடிய கூட்டத்தை வைத்தே இந்தியாவில் இன்ஸ்ட்டென்டாக ஒரு மினி புரட்சி செய்து, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைக் கொண்டு வந்து விடலாம் என மனப்பால் குடித்தவர்களும், கூட்டத்தில் இருந்த இளைஞர்களை அப்படியே நம்ம கட்சிக்கு தூக்கி வந்துவிடலாம் என்று களத்திலே போய் நின்றவர்களும், கொண்டுபோன பதாகைகளை மெரினாவில் போட்டுவிட்டு ஓடும்படி காவல் துறையால் மரியாதை செய்யப்பட்டு 'அனுப்பி' வைக்கப்பட்டார்கள் என்பதுதான் உண்மை.
எத்தனை எத்தனை அரசியல் கோரிக்கைகள் தமிழகத்தில் இருந்ததோ, அனைத்தையும் போராட்டக் களத்திலே நம்ம திடீர் புரட்சியாளர்கள் வைத்தார்கள். நமக்குத் தெரிந்து தமிழ்நாட்டை சாதி அடிப்படையில் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை மட்டும் தான் அப்போது போராட்டக் களத்தில் வைக்கப்படவில்லை. ஜல்லிக்கட்டுக்காக உட்கார்ந்த கூட்டம் நாளாக, நாளாக நாட்டு மாடுகள் பாதுகாப்பு என்ற கோரிக்கையுடன் இயற்கை விவசாயம், சிறுதானிய உணவு, அழிந்து போன தன்னுடைய பால்யகால விளையாட்டுகள் என அனைத்தையும் நினைத்து, நினைத்து பொருமி பொருமி பெருமூச்சுவிடும் நிலைக்குச் சென்றது. பீட்டாவை தடை செய்வதன் மூலமும், ஜல்லிக்கட்டை நடத்துவதன் மூலமும் இழந்த தனது பழம் பெருமைகள் அனைத்தையும் மீட்டெடுக்க முடியும் என அது கனவு கண்டது. ஆனால் போராட்டக் களத்தில் இருந்தவர்களின் நோக்கம் தெளிவானது. அது ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும், தடைக்குக் காரணமான பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்பதுதான்.
அதைத் தாண்டி இந்தப் பெருங்கூட்டம் சேருவதற்குக் காரணமாக இருந்தவர்களுக்கு எந்த அரசியலும் இல்லை, ஆட்டுக்குட்டியும் இல்லை. அதனால்தான் ஜல்லிகட்டுக்காகப் போராடிய இளைஞர்களை, தங்களது காரியங்களை சாதித்துக் கொண்டு ஊரைவிட்டு ஓட ஓட விரட்டி அடித்தார்கள் அலங்காநல்லூர் முக்குலத்தோர்கள். ஆனாலும் ஜல்லிக்கட்டுக்குள் சாதி இல்லை என்று இன்னமும் ஒரு கூட்டம் பரப்புரை செய்துகொண்டு இருக்கின்றது. அதை ஒரு கூட்டம் ஆராய்ந்து பார்க்க மூளை இன்றி நம்பிக் கொண்டும் இருக்கின்றது. அது இருந்துவிட்டுப் போகட்டும், ஆனால் ஜல்லிக்கட்டுக்காக உயிரையும் கொடுப்போம், மயிரையும் மழிப்போம் என்று கருவித் திரிந்த கருங்காலிகளில் ஒன்று கூட, போராட்டத்தின் கடைசி நாளன்று காவல்துறை திட்டமிட்டு தாக்குதல் நடத்தியபோது அவர்களுக்காகப் போராட வந்த இளைஞர்களுக்கு எந்தவித உதவியும் செய்யவில்லை என்பதோடு, போராட்டக்காரர்கள் மீது தமிழக காவல் துறையால் நிகழ்த்தப்பட்ட வன்முறைகளில் இருந்து அவர்களை மீனவ மக்கள் காப்பாற்றியபோது, அவர்கள் மீது தொடுக்கப்பட்ட கொடூரமான தாக்குதலுக்கும் எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மையில் ஜல்லிக்கட்டுப் போராட்டம் தன்னெழுச்சியாக நடைபெற்றதாக ஏன் இவர்கள் இன்றுவரையிலும் பொய்யுரைத்து வருகின்றார்கள்? இந்தப் போராட்டம் அதிமுகவின் நிரந்தர ஓட்டுவங்கியாய் இருக்கும் முக்குலத்தோருக்காக நடத்தப்பட்டது. ஜல்லிக்கட்டுத் தடையால் முக்குலத்தோர் மத்தியில் சரிந்துபோன தங்களுடைய செல்வாக்கை மீட்டெடுப்பதற்காக தமிழக காவல்துறையையும், சில என்.ஜி.ஓக்களையும் தங்கள் கைகளில் போட்டுக் கொண்டு ஒபிஎஸ், சசிகலா உட்பட முக்குலத்தோர் செய்த மிகப்பெரிய சதிதான் செயற்கையாக ஊதிப் பெருக்கப்பட்ட ஜல்லிக்கட்டுப் போராட்டம். ஸ்டெரிலைட்டை மூட வேண்டும் என்று போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரை கொன்றுபோட்ட காவல்துறை, 10 லட்சம் பேரை புரட்சி செய்ய அனுமதித்தது என்று நம்புவன் உண்மையில் முட்டாளாகத்தான் இருக்க முடியும்.
எங்காவது புரட்சி செய்யபவர்களுக்கு உணவும், தண்ணீரும், காவல்துறை பாதுகாப்பும் கொடுக்கப்பட்டிருக்கின்றதா? ஆனால் இத்தனை கூத்துக்களும் போராட்டக் களத்தில் அரங்கேற்றப்பட்டதை பார்த்த யாரும் அதைப் புரட்சி என்று அல்ல, போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று கூட சொல்லத் துணிய மாட்டார்கள். பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுப்பு எடுத்துக்கொண்டு ஏதோ சுற்றுலா செல்வது போலத்தான் இளைஞர்களும், இளைஞிகளும் மற்றுமுள்ள நண்டு சிண்டுகளும், பொடுசுகளும், பெருசுகளும் அனைவருமே ஆனந்தமாக சென்று வந்தார்கள். அப்படி சென்று அங்கே வயிறாரக் கிடைத்ததை தின்று விட்டுவிட்டு வந்த பல பேர், தான் ஏதோ சமூக மாற்றத்திற்காக வெட்டி முறித்துவிட்டது போலவும், கிண்டி கிழங்கெடுத்தது போலவும் இன்றுவரையிலும் சொல்லிக் கொண்டு திரிவதை நம்மால் பார்க்க முடிகின்றது. ஒருவேளை காவல்துறை குண்டாந்தடிகளை போராட்டத்தின் கடைசி நாளில் எடுத்ததற்குப் பதிலாக முதல் நாளிலேயே எடுத்திருந்தால், வழக்குகள் பாயும் என்ற நிலை இருந்திருந்தால் ஒரு ஈ, காக்கை கூட இல்லாமல் போராட்டக் களம் காத்து வாங்கிக் கொண்டு இருந்திருக்கும். சும்மா போய் அட்டனன்ஸ் போட்டுவிட்டு வந்தாலே சோறு, தண்ணீரோடு புரட்சியாளன் பட்டமும் இனாமாகக் கிடைத்தது என்பதால்தான் பல நாட்களுக்கு போராட்டம் நீடிக்க முடிந்தது. ஒவ்வொரு நாளும் அத்திவரதரை தரிசிக்க சாரை சாரையாய், மந்தை மந்தையாய் கூட்டம் செல்வது போல ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடந்த இடங்களுக்கு கூட்டம் சென்று வந்தது.
அது ஒரு கும்பல் மனோபாவம். நம் ஊரில் கூட்டத்தோடு சேர்ந்து கும்மி அடிப்பது, கோயிந்தா போடுவது என்பார்களே அது போன்றதுதான் அது. அதனால்தான் அதற்குப் பிறகான தமிழ்நாட்டின் முக்கியமான சுற்றுச்சூழல், வாழ்வாதாரம் சம்மந்தப்பட்ட எந்த ஒரு போராட்டத்திலும் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் முஸ்டியை முறுக்கிய கூட்டத்தைக் காண முடியவில்லை. ‘பாத்ரூமில் வழுக்கி விழுந்து கையை உடைத்துக் கொள்ள யார்தான் விரும்புவார்கள்?’. அதிமுக அரசால் திட்டுமிட்டு உருவாக்கப்பட்ட கூட்டம் என்பதால்தான் இந்தப் போராட்டத்தில் அரசியல் கட்சிகளைப் புறக்கணித்துவிட்டு போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டார்கள். ஒருவேளை அரசியல் கட்சிகளின் தலைமையை ஏற்றுக் கொள்கின்றோம் என்று ஒத்துக் கொண்டிருந்தால் இதற்காகவே கண்கொத்திப் பாம்பாக காத்துக் கொண்டிருந்த அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் அலேக்காக ஆட்களைத் தூக்கி இருந்திருப்பார்கள். ஜல்லிக்கட்டு நடப்பதற்கே தாங்கள்தான் காரணம் என்று சொல்லி இந்நேரம் தமிழ்நாட்டின் பிரதான இயக்கமாகவோ, அரசியல் கட்சியாகவோ மாறி இருப்பார்கள். ஆனால் அப்படியான ஒன்று நடந்துவிடக் கூடாது என்று திட்டமிட்டுதான் அதிமுக அரசு என்.ஜி.ஓக்களை களத்தில் இறக்கிவிட்டது. அரசியல் கடந்து பெருங்கூட்டமும் கூட வேண்டும், அதே சமயம் முழுப் பெயரையும் தாமே அறுவடை செய்ய வேண்டும் என்று பன்னீர் & கோ தீட்டிய திட்டம் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது.
எளிமையாகப் பார்த்தால் இதுதான் நடந்தது. கைப் புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை என்பதால், இந்த மெரினா புரட்சி என்ற கூத்தைப் புரிந்து கொள்வது அவ்வளவு ஒன்றும் சிக்கலானது அல்ல. அரசு, என்.ஜி.ஓ மற்றும் அரசியலற்ற இளைஞர்கள் இவ்வளவுதான் மெரினா ‘புரட்சி’. இதைத் தாண்டி அதில் ஏதாவது அரசியல் இருக்கும் என ஆராய்ச்சி செய்து யாராவது எழுதினால் அதற்கப்புறம் ஏன் அதே போன்ற ‘புரட்சிகள்’ தமிழ்நாட்டில் நடக்கவில்லை என்பதையும் எழுத வேண்டும். அதே மோடி தலைமையிலான பாசிச பிஜேபி அரசு, அதே அதிமுக அடிமை அரசு, தமிழ்நாட்டை அழித்தொழிக்கும் அதே பாசிசத் திட்டங்கள், ஆனால் எங்கே மெரினா புரட்சி?
அதனால் நாம் சொல்ல வருவதும், புரட்சி என்று சொல்பவர்களைக் கேட்க விரும்புவதும், ‘எங்கடா புரட்சி நடந்தது?’ என்பதைத்தான்.
- செ.கார்கி